அபியும் அனுவும் - சினிமா விமர்சனம்

28-05-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சரிகம வழங்கும் யூட்லி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் பிரபல மலையாள இளம் ஹீரோவான டொவினோ தாமஸ் நாயகனாக நடித்து தமிழில் அறிமுகமாகிறார். நாயகியாக பியா பாஜ்பாய் நடித்திருக்கிறார். மேலும் பிரபு, சுஹாசினி, ரோகிணி, கலைராணி, தீபா ராமானுஜம், உதயபானு மகேஷ்வரன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை – உதயபானு மகேஷ்வரன், வசனம் – சண்முகம், படத் தொகுப்பு – சுனில்ஸ்ரீ நாயர், ஒளிப்பதிவு – அகிலன், இசை – தரண், தயாரிப்பு, இயக்கம் – பி.ஆர்.விஜயலட்சுமி.
அண்ணன் – தங்கை உறவு முறையில் வரும் இருவர் காதலித்துத் திருமணம் செய்து கொள்ள.. அது பிற்காலத்தில் அவர்களுக்கே தெரிய வரும்போது என்ன நடக்கும் என்பதுதான் இந்தப் படத்தின் அடிப்படை கரு.

நாயகன் ‘அபிமன்யூ’ என்னும் டொவினோ தாமஸ், சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு இளைஞர். இவருடைய தாய், தந்தை இருவரும் பிஸியான தொழிலதிபர்கள். நாடு நாடாய் சுற்றி வருபவர்கள்.
ஒரு நாள் முகநூலில் ஒரு வீடியோ பதிவில் இவரைக் கவர்கிறார் ஊட்டியில் இருக்கும் ‘அனு’ என்னும் பியா பாஜ்பாய். இயற்கை விவசாயம், கால்நடைகளின் மேல் பரிவு.. மற்றும் சமூகப் பிரச்சினைகளில் அக்கறையுள்ள பியாவின் முகநூல் பதிவுகளை தொடர்ந்து பார்க்கும் டொவினோவுக்கு, பியாவை ரொம்பவே பிடித்துப் போகிறது.
அதிலும் கேன்சர் நோய் பீடித்த குழந்தைகளுக்காக பியா தன் தலைமுடியை வெட்டிவிட்டு மொட்டையடித்த நிலையில் குழந்தைகளுடன் பேசி வெளியிட்ட வீடியோவை பார்த்தவுடன் டொவினோவுக்கு அவர் மேல் காதலே பிறந்துவிடுகிறது.
இருவரும் ஒருவருக்கொருவர் முகநூலிலேயே அறிமுகமாகிக் கொள்கிறார்கள். காதல் பிறக்கிறது. கொஞ்சுகிறார்கள். தொடர்ந்து பேசுகிறார்கள். பியாவை பார்க்க ஊட்டிக்கே வருகிறார் டொவினோ தாமஸ். அங்கே வைத்து திடீரென்று இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.
கழுத்தில் மாலையுடன் டொவினோ தனது பெற்றோர்களுக்கு ஸ்கைப் மூலமாக தனது திருமணம் குறித்து செய்தியளிக்கிறார். பியா தனது அம்மாவுக்குத் தகவல் சொல்லாமல் மறைக்கிறார். வீட்டிற்கு வரும் பியாவின் தாய் ரோகிணி இதைக் கேட்டு முதலில் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் வேறு வழியில்லாமல் அதனை ஏற்றுக் கொள்கிறார்.
பியாவை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வருகிறார் டொவினோ. இவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரபு- சுஹாசினி தம்பதிகள் இவர்களுக்கு உதவிகரமாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில் பியா கர்ப்பமடைய.. அவரைப் பார்த்துக் கொள்ள டொவினோவின் தாய், தங்களுக்குத் தெரிந்த கலைராணியை அனுப்பி வைக்கிறார்கள்.
கலைராணி டொவினோவின் வீட்டுக்கு வரும்போது அங்கே ரோகிணியை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அப்போதுதான் டொவினோ யார் என்பதே ரோகிணிக்குத் தெரிகிறது.
25 ஆண்டுகளுக்கு முன்பாக டொவினோவின் தாய் தீபா ராமானுஜத்திற்கும், அப்பா உதயபானு மகேஷ்வரனுக்கும் குழந்தை பிறப்பதில் சில சிக்கல்கள் இருந்ததால் அவர்களுக்காக டெஸ்ட் டியூப் பேபி மூலமாக குழந்தை பெற்றுக் கொடுத்தவர் ரோகிணி என்பது தெரிய வருகிறது.
இதையடுத்து டொவினோவும், பியாவும் அண்ணன் தங்கை உறவு முறை என்பதால் அவர்களின் திருமணமே செல்லாது என்றும், பியா தன் வயிற்றில் வளரும் குழந்தையை அழிக்குமாறும் டொவினோவின் தாய் சொல்கிறார்.
இந்தக் களேபரத்தில் திடீரென்று பியாவின் தாய் ரோகிணி காலமாகிறார். அந்தச் சோகத்திற்கிடையில் டொவினோ என்ன முடிவெடுக்கிறார்..? பியா கருவைக் கலைத்தாரா..? அல்லது இருவரும் சேர்ந்தே வாழ முடிவெடுத்தார்களா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
நாயகன் டொவினோ தாமஸுக்கு இதுதான் முதல் தமிழ்த் திரைப்படம். ஹீரோவுக்கேற்ற முகவெட்டும், உடல் தகுதியும், அழகும் இருக்கிறது. ஆனால் மலையாள வாடை கொஞ்சம் அடிப்பதுதான் குறை. தமிழில் எப்போதுமே அடிதடி நாயகர்களுக்குத்தான் மவுசு அதிகம் என்பதால், அடுத்தக் கதையில் நல்ல கமர்ஷியல் கம்மர்கட்டில் வலம் வந்தால் ஒரு இடத்தைப் பிடிக்க வாய்ப்புண்டு.
நடிப்பென்று பார்த்தால் குறையே இல்லை. மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் டொவினோ. அவருக்கும் மனோபாலாவுக்கும் இடையில் நடக்கும் அலுவலக சண்டைகள் சிரிக்க வைப்பவை. ஒரு காதலனாக.. ஒரு கணவனாக.. படம் பார்க்கும் ரசிகைகளையும் ஏங்க வைக்கிறார்.
பியா முற்பாதியில் கலகலப்பான பெண்ணாக வந்து நின்று பிற்பாதியில் கண் கலங்க வைக்கிறார். காதலை மறக்க முடியாமல் அவரும், டொவினோவும் தவிப்பதும்.. காலம் காலமான இந்திய சமூகத்தின் கட்டுப்பெட்டித்தனமான குடும்பச் சூழலில் உறவுகளை அற்றொழிப்பது முடியாத காரியம் என்பதால்… அதை நினைத்து கண்ணீர் விடும்போது “இனிமேல் என்னத்தய்யா செய்யச் சொல்றீங்க…?” என்று தியேட்டரில் நம்மையும் முணுமுணுக்க வைக்கிறார்கள்.
ஒரு மனைவியாக காலம் முழுவதும் உடன் இருக்க விரும்பிய பியா, அது முடியாமல் போய் இருக்கும் தருணத்தில் அதை நினைத்து கலங்குவதும், டொவினோ அவரைத் தவிர்ப்பதுமான காட்சிகள் மனதைத் தொடுகின்றன.
குழந்தையே பெற முடியாமல் தவியாய் தவித்து, கடைசியாக இப்போது கணவரையும் இழக்கப் போகும் உண்மை தெரிந்தும் எப்போதும் சிரித்த முகத்துடன் வளைய வரும் சுஹாசினியின் அந்தக் கேரக்டர் ஸ்கெட்ச் தேவையானதுதான். ஆனால் சுஹாசினியின் ஓவர் ஆக்ட்டிங்குதான் இடிக்கிறது.
ரோகிணி இருக்கும் சில காட்சிகளிலும் தன் பெயரை பதிவு செய்திருக்கிறார். தீபா ராமானுஜத்தின் அம்மா நடிப்பு இதில் பணக்காரத்தனமாகவே பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதிகம் கவனத்தை ஈர்க்கவில்லை. இத்தனை களேபரத்திலும் உடனடியாக ஊருக்குக் கிளம்பும் அவர்களது திரைக்கதை படத்தில் ஒட்டவில்லை.
அகிலனின் ஒளிப்பதிவில் ஊட்டி காட்சிகளும், டொவினோ வீட்டின் உட்புறக் காட்சிகளும் குளுமை. கலை இயக்குநருக்கு ஒரு ஷொட்டு. பாடல் காட்சிகளையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.
தரண் குமாரின் இசையில் ‘சரிகமப’ பாடல் மூலமாகவே திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார். அதுவே சுவாரஸ்யத்தைக் கொடுக்கிறது. இதேபோல் இரண்டு வித எமோஷன்களில் ஒலிக்கும் ‘எங்கடா போன’ பாடல் உருகவும் வைக்கிறது.. பாடவும் வைக்கிறது..!
எவ்வளவுதான் தொழி்ல் நுட்பத்தைக் கொட்டி அழகுபடுத்திக் காட்டினாலும் படத்தில் சரக்கு எனப்படும் கதை, திரைக்கதையில் ஓட்டையிருந்தால் படம் பற்றிய பேச்சே எழாது.. இது இந்தப் படத்திற்கும் பொருந்தியிருக்கிறது.
தமிழ்ப் படங்களில் ஆங்கிலத்தில் வசனம் பேசினாலும் அதை உடனே வேறொரு கேரக்டர் மூலமாக தமிழிலும் சொல்லிவிடுவது வழக்கம். இந்தக் காலத்திலும் தமிழ்ச் சினிமாவில் அப்படியொரு சூழல் இருக்கும்போது டெஸ்ட் டியூப் பேபி, குழந்தை பிறப்பு பற்றி மேலோட்டமாக சொல்லிவிட்டுப் போயிருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய குறை.
படம் பார்க்கும் பி அண்ட் சி ரசிகர்களுக்கு இது நிச்சயம் புரியாது. ஏனெனில் படத்திலேயே இது தெளிவாகச் சொல்லப்படவில்லை.
டொவினோ தாமஸ், அவரது தாய், தந்தையரின் உயிரணுக்களை பெற்று அது டெஸ்ட் டியூப்புக்குள் வைக்கப்பட்டு, அங்கே கருவாக உருவாக்கப்பட்டு, பின்பு அந்தக் கரு ரோகிணியின் வயிற்றில் இருக்கும் கர்ப்பப் பையில் வைத்து பிறக்க வைக்கப்பட்டார் என்பது பற்றி தெளிவாக வசனத்தில்கூட சொல்லாதது ஏன் என்று தெரியவில்லை.
டொவினோ தாமஸ் அவரது பெற்றோரின் உயிரணுக்களால்தான் பிறப்பிக்கப்பட்டார். கருப்பை மட்டுமே ரோகிணிக்கு சொந்தமானது என்பதை இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லியிருக்க வேண்டும்.
இதைவிட்டுவிட்டு அனைவரும் எழுந்து போய்க் கொண்டிருக்கும்போது கண நேரத்தில் மறைந்துபோகும்விதமாக  டைட்டிலில் இதற்கான விளக்கக் கார்டு போடுவதால் யாருக்கு என்ன லாபம்..? செய்வதை கொஞ்சம் திருந்தச் செய்திருந்தால் படம் குழப்பமில்லாத நிலைமையில் அனைவருக்குமே புரிந்திருக்கும்.
அதிலும் கரு உருவாகக் காரணமான சினை முட்டை ரோகிணியுடையது இல்லை என்றாலும் ரோகிணியின் வயிற்றில் வைத்துதான் டொவினோ பிறப்பிக்கப்பட்டிருக்கிறார். அப்போது சிந்திய ரத்தமும் ரோகிணியுடையதுதானே..? அதே ரத்தம்தானே அவருக்குப் பின்பு பிறந்த பியாவுக்கும் இருந்திருக்க வேண்டும்..! இந்தச் சின்ன தொடர்பு அவர்களது அண்ணன், தங்கை உறவை குறிக்காதா..?
இந்திய சமூகத்தில் அப்பாவின் தம்பி சித்தப்பா ஆகிறார். அண்ணன் பெரியப்பா ஆகிறார். அம்மாவின் தங்கை சித்தி ஆகிறார். அக்கா பெரியம்மா ஆகிறார். ஒரே அம்மா, அப்பாவுக்கு.. ஒரே வயிற்றில் பிறந்தவர்கள் என்பதால்… இதுதான் இங்கே குடும்பப் பழக்கம்.
வாடகைத் தாய் முறையில் தாயின் கருப்பை மட்டுமே 10 மாதங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதால் அதில் பிறக்கும் குழந்தைகள்… பின்னாளில் அந்தப் பெண்ணின் சொந்த கருவால் உருவாக்கப்பட்டு பிறக்கும் குழந்தைகளுக்கு உறவில்லை என்பதை ஆங்கில அலோபதி மருத்துவ முறை மட்டுமே சொல்கிறது. “இது மருத்துவ ரீதியான சொந்தம் கிடையாது.. அண்ணன், தங்கை கிடையாது..” என்று சொல்வதை பாமரத்தனமான மக்கள் எப்படி சட்டென்று ஏற்றுக் கொள்வார்கள்..?
மேலும், “காதல் திருமணம் செய்யுங்கள். ஆனால் கல்யாணத்திற்கு முன்பாக பெற்றோர்களிடத்தில் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள்…” என்கிற நீதியையும் இந்தப் படம் சொல்வதாக படத்தின் முடிவில் சொல்கிறார்கள். இது ‘காதல்’ என்னும் சப்ஜெக்ட்டையே சாகடிக்கும் விஷயம்.
இந்தியாவில் டெஸ்ட் டியூப் பேபிகள் தெருவுக்கு தெரு இல்லை. வாடகைத் தாய்களும் வார்டுக்கு வார்டு இல்லை. பின்பு எதற்கு இந்த வேண்டாத வேலை..?
அப்படியே காதலித்து கல்யாணம் செய்யும் முன்பு அவருடைய பெற்றோர்களின் ஜாதகமே அலசப்பட்டு ஆராயப்பட்ட பின்புதான் திருமணம் நடக்க வேண்டும் என்றால் நிச்சயமாக எல்லா கல்யாணங்களும் குழப்பத்தில்தான் துவங்கும். பிரச்சினைகளில்தான் முடியும்..! வேண்டாத சந்தேகங்களும், தேவையில்லாத பிரச்சினைகளும்தான் எழும்.
இப்போதுகூட வாடகைத் தாய் முறையில் குழந்தையைப் பெற்றெடுத்து கொடுத்த பின்பு “இனிமேல் அந்தக் குழந்தைக்கும் அந்தத் தாய்க்கும் எந்தவொரு உறவும் இல்லை. இனி வரும் காலங்களிலும் இருக்கக் கூடாது…” என்று ஒப்பந்தம் எழுதப்பட்டு இரு தரப்பாலும் கையொப்பமிட்டு, மருத்துவமனையின் நிர்வாகிகள் சாட்சி கையொப்பம் போட்ட பின்புதான் அந்த பிள்ளை பிறப்பே நடைபெறுகிறது.
இந்த வகையான பிள்ளை பிறப்பு என்பதே தற்போதைக்கு இந்தியாவில் ஒரு டீஸண்ட்டான பிஸினஸ் போலாகிவிட்டது. இதில் என்ன தாய்மை பிரச்சினை..? அண்ணன், தங்கை பிரச்சினை..? பாசப் போராட்டம் இருக்கிறது..?
பிறரின் உதவியோடு பெற்றெடுக்கப்பட்டு வளர்க்கப்படும், அல்லது தத்தெடுத்து வளர்க்கப்பட்ட மகனோ, மகளோ.. அவர்கள் மேஜரானவுடன் அவர்களது பிறப்பு பற்றி அவர்களிடத்தில் சொல்லிவிட வேண்டும்.  இதுதான் இப்போதை சூழலில் இது போன்ற பிரச்சினைகள் உள்ள குடும்பத்திற்கு நல்லது.
1983-ம் ஆண்டு இசைஞானி இளையராஜாவின் தயாரிப்பில், கவிப்பேரரசு வைரமுத்துவின் கதையில், பாலகிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன் இயக்கத்தில், பானுசந்தர், அஸ்வினி, கவுண்டமணி நடிப்பில் உருவான ‘ஆனந்தக் கும்மி’ திரைப்படமும் இது போன்ற ஒரு கதையைக் கொண்டதுதான்.
அருமையான இசையைக் கொண்ட பாடல்கள் படத்தில் இருந்தும் படம் படு தோல்வியைத் தழுவியது. காரணம், அண்ணன், தங்கை காதலை தமிழகத்து மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.. அதில் சொல்லப்பட்டிருந்தவிதம்கூட காதல்தான் முக்கியம் என்பதாக இருந்தது. இதனாலேயே படம் மிக அதிகமான விமர்சனங்களையும் எதிர்கொண்டது.
அதே அளவுக்கான மன நிலையில்தான் இன்றைக்கும் தமிழகம் இருந்து வருவதால், இது போன்ற ஷாக்கடிக்கும் கதைகளை அவர்கள் சட்டென ஏற்பார்களா என்பது சந்தேகம்தான்..!
அபியும், அனுவும் சேர்ந்து வாழ்வார்களா என்பதெல்ல இப்போதைய பிரச்சினை..! அப்படி அவர்கள் சேர்ந்து வாழ்ந்தால் மூன்றாம் மனிதர்களாகிய நாம் அதனை ஏற்றுக் கொள்ளலாமா.. வேண்டாமா.. என்பதுதான் பிரச்சினை..!
படத்தின் இறுதியில் காட்டப்படும் டைட்டில் கார்டில்கூட “டொவினோ தாமஸின் பிறப்பு டெஸ்ட் டியூப் பேபிதான் என்பதால் பயோலாஜிக்கலாக அவர் ரோகிணியின் மகன் கிடையாது. எனவே இவர்கள் சேர்ந்து வாழ்வதில் தவறில்லை…” என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் மட்டுமே போடுவதால் யாருக்கு என்ன புண்ணியம் இயக்குநரே..?
ஆக, படத்தின் இயக்குநரே, “இந்தக் கதையில் இவர்கள் அண்ணன்-தங்கை உறவுகள் இல்லை. ஆகவே இவர்களது காதலும், காதல் திருமணமும் செல்லும்…” என்கிறார்.
பின்பு எதற்காக இத்திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார்…? டெஸ்ட் டியூப் பேபிக்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பயமுறுத்தவா..? மருத்துவர்களை எச்சரிக்கவா..? அல்லது காதலர்களுக்கு கிலி ஏற்படுத்தவா..?
இயக்குநர்தான் சொல்ல வேண்டும்..!

0 comments: