தியா - சினிமா விமர்சனம்

29-04-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ‘கரு’. ஆனால் வேறு ஒரு தயாரிப்பாளர் இதே பெயரை தன் படத்திற்காக பதிவு செய்து வைத்திருந்ததால் பெயர் பிரச்சினை சர்ச்சையானது. உச்சநீதிமன்றம்வரையிலும் பிரச்சினை சென்றது.
இடையில் தங்களுடைய பெயர் அதிலிருந்து வித்தியாசமானது என்பதைக் காட்ட படத்தின் தலைப்பை ‘லைகாவின் கரு’ என்றுகூட மாற்றினார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் இதற்கும் தடை விதித்துவிட்டது.
படத்தை வெளியிடும் நாள் நெருங்கிவிட்டதால், வேறு வழியில்லாமல் படத்தின் நாயகியான ‘தியா’வின் பெயரையே படத்தின் தலைப்பாகவும் மாற்றி வைத்து படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் மலையாள ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி நாயகியாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி நடிக்கும் முதல் தமிழ்த் திரைப்படம் இதுவேயாகும். சில தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் நாக ஷவ்ரியா ஹீரோவாக நடித்திருக்கிறார்.
மற்றும், ஆர்.ஜே.பாலாஜி, நிழல்கள் ரவி, ஜெய்குமார், ரேகா, சுஜிதா, குமாரவேல், டி.எம்.கார்த்திக், சந்தானபாரதி இவர்களுடன் பேபி வெரோனிகா ஆகியோரும் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – விஜய், தயாரிப்பு – லைகா புரொடெக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட், இசை – சி.எஸ்.சாம், ஒளிப்பதிவு – நீரவ் ஷா, படத் தொகுப்பு – ஆண்டனி, வசனம் – அஜயன் பாலா, பாடல்கள் – மதன் கார்க்கி, சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா, கலை இயக்கம் – ஜெயஸ்ரீ லட்சுமி நாராயணன், ஆடை வடிவமைப்பு – வினையா தேவ், சப்னா ஷா, எக்ஸ்கியூட்டிவ் புரொடியூஸர் – எஸ்.பிரேம், தயாரிப்பு நிர்வாகம் – கே.மணிவர்மா, தயாரிப்பு மேலாளர் – எஸ்.எம்.ராஜ்குமார், ஒலிப்பதிவு – எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன், ஒப்பனை – பட்டணம் ரஷீத், உடைகள் – மோதபள்ளி ரமணா, ஸ்டில்ஸ் – ராமசுப்பு, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, வி.எஃப்.எக்ஸ் – சரவணன் சண்முகம், ஒலி வடிவமைப்பு – சிங்க் சினிமா, நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.சிவசரவணன், பிரத்தியுஷா, விளம்பரம் – ஷ்யாம், விளம்பர வடிவமைப்பு – முகில் டிசைன்ஸ், பாடகர்கள் – ஸ்வாகதா, டி.எம்.கார்த்திக்.

“கருக் கலைப்பு செய்வது பாவச் செயல். அது எத்தகைய தருணத்தில் உருவான கருவாக இருந்தாலும் அதுவும் ஒரு உயிரே…” என்பதை போதிக்க வந்திருக்கிறது இத்திரைப்படம்.
2011-ல் வெளிவந்த தாய்லாந்து நாட்டு படமான ‘Unborn Child’ என்கிற படத்தைத் தழுவித்தான், இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது படத்தைப் பார்த்தால் புரிகிறது. தெரிகிறது.
துளசியும், கிருஷ்ணாவும் பள்ளிப் படிப்பை முடித்த நிலையிலேயே காதலிக்கிறார்கள். நெருங்குகிறார்கள். இதன் விளைவாய் துளசியின் வயிற்றில் கரு வளர்கிறது. விஷயம் தெரிந்து துளசியின் அம்மாவும், அவளது தாய் மாமனும் கொதிக்கிறார்கள். அதேபோல் கிருஷ்ணாவின் அப்பாவும், அம்மாவும் மகனைக் கண்டிக்கிறார்கள்.
ஆனாலும் அடுத்து ஆக வேண்டிய காரியத்தைப் பார்ப்போம் என்று யோசிக்கும்போது படிக்க வேண்டிய வயதில்.. அதுவும் மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைக்கும் சூழலில் துளசி பிள்ளை பெறக் கூடாது என்று சொல்லி அவளது கருவை அவளது அனுமதியில்லாமலேயே கலைக்கிறார்கள் இரு தரப்பு பெரியோர்களும்.
ஆனாலும் துளசிக்கும், கிருஷ்ணாவுக்கும் இன்னும் ஐந்தாண்டுகள் கழித்து திருமணம் செய்து வைப்பதாகவும் இரு தரப்பு பெற்றோர்களும் வாக்குறுதி அளிக்கிறா்கள். அதேபோல் கல்யாணமும் செய்து வைக்கிறார்கள்.
இ்ப்போது துளசி மருத்துவர். கிருஷ்ணா சிவில் என்ஜீனியர். துளசி தன் மனதுக்குள் தனக்குள் முதல் கருவாய் வளர்ந்திருந்த குழந்தை நினைப்பிலேயே இருக்கிறாள். அந்தக் குழந்தைக்கு ‘தியா’ என்று பெயர்கூட வைத்திருக்கிறாள்.
துளசியின் மனக்கண்ணிலேயே இருந்த அந்த ‘தியா’.. இப்போது பேயாய் மாறி குழந்தை உருவத்தில் அவளை பின் தொடர்கிறது. தான் தனது அம்மாவுடன் இருக்க முடியாமல் செய்தவர்களைப் பழி வாங்க முடிவெடுக்கிறது.
இதன் முதல் பழியாய் கிருஷ்ணாவின் தந்தை சிக்கி உயிரிழக்கிறார். இதன் பின்பு துளசியின் தாய் கொல்லப்படுகிறார். அடுத்து துளசியின் தாய் மாமனும் கொல்லப்படுகிறார். அடுத்து தனது கணவன் கிருஷ்ணாதான் கொல்லப்பட இருக்கிறான் என்பதை யூகிக்கும் துளசி இதனை தடுக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதில் அவர் ஜெயித்தாரா..? கிருஷ்ணாவை பேய் விட்டுவிட்டதா..? என்பதுதான் படத்தின் கதை.
குழந்தைகளை வைத்து பேய்ப் படம் என்றாலும் அதில் சஸ்பென்ஸ் இருக்க வேண்டும். இதில் கொலை செய்வதே பேய்தான் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டதால் படத்தின் மீதான சுவாரஸ்யமே போய்விட்டது. அதிலும் எப்படி சாகிறார்கள் என்பதைக்கூட கொஞ்சமும் சுவாரஸ்யப்படுத்தாமல் இயக்கியிருக்கிறார் இயக்குநர். இதனாலேயே படம் சஸ்பென்ஸ், திரில்லர் கேட்டகிரிக்குள் வரவேயில்லை.
‘பிரேம’த்தில் பார்த்து பிரேமம் கொண்ட சாய் பல்லவியை இதில் கொஞ்சம் மெச்சூர்டான அம்மா கேரக்டரில் பார்க்கும்போது எதுவும் தோன்றவில்லை. ஆனால் அழகாக நடித்திருக்கிறார். நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். இன்னும் எமோஷனாலான காட்சிகள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சாய் பல்லவிக்கே உரித்தான காட்சிகளை வைக்க முடியாத அளவுக்குக் கதைக் களன் இருப்பதால், அதுவே அவருக்கு மைனஸாகிவிட்டது.
ஹீரோவாக நாக சவுரியா நடித்திருக்கிறார். தமிழுக்கு புதுமுகம். ஹீரோவுக்கு ஏற்ற முகம் என்றாலும் இதில் ஆக்சனும் இல்லை.. நடிப்பும் இல்லாமல் சுமாரான காட்சிகளே இவருக்குக் கொடுக்கப்பட்டிருப்பதால் மென்மையாக நடித்திருக்கிறார்.
படத்தில் நடித்த மற்றவர்களான நிழல்கள் ரவி, ரேகா, ஜெயக்குமார், சுஜிதா என்று நால்வருமே அந்தந்த கேரக்டர்களுக்குரிய நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்லும்படியான காட்சிகளும், திரைக்கதையும் இல்லை என்பதால் எதுவும் சொல்ல முடியவில்லை.
குழந்தை தியாவாக நடித்திருக்கும் பேபி வெரோனிகாவுக்கு வசனமே இல்லை. ஆனால் முகத்தைக் காட்டியே நடித்திருக்கிறார். அந்த வெறுமை காட்டும் முகம் சோகத்தைக் காட்டியும், கொஞ்சம் ஏக்கத்தைக் காட்டியும் இருக்க.. குழந்தை வரும் காட்சிகளிலெல்லாம் கொஞ்சம் பரிதாபம் நமக்குள் எட்டிப் பார்க்கிறது என்பது மட்டும் உண்மை.
காமெடி சப்-இன்ஸ்பெக்டராக ஆர்.ஜே.பாலாஜியும், கான்ஸ்டபிள் குமாரவேலும் செய்யும் கூத்து ரொம்பவே ஓவர். இப்படியொரு அரைவேக்காடு சப்-இன்ஸ்பெக்டரை தமிழகத்தில் எங்கேயுமே பார்க்க முடியாது. இயக்குநர் விஜய் ஏன் இந்த அளவுக்கு இறங்கிப் போனார் என்று தெரியவில்லை.
விஜய்யின் இத்தனை படங்களில் காட்சிகளை இணைப்பதற்கான லின்க் ஷாட்டுகளாக சூரிய உதயத்தைக் காண்பித்திருப்பது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறோம். இந்த அரதப் பழசான டெக்னிக்கை இப்போது ஏன் விஜய் கைப்பிடித்திருக்கிறார் என்று தெரியவில்லை.
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கிறது. காட்சிக்குக் காட்சி அழகுற படமாக்கியிருக்கிறார்கள். சாய் பல்லவியின் அழகை மேலும் மெருகேற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். வீட்டுக்குள் நடக்கும் காட்சிகளின் பரபரப்பையும், இறுதியில் ஒரு நொடியில் சாய் பல்லவி அந்த லோகத்துக்குள் போய் தன் மகளைப் பார்த்துவிட்டு அவள் செய்யப் போகும் கொலையைத் தடுக்கும் காட்சியில் தோன்றிய பரபரப்பையும் கொஞ்சம் சிரத்தையுடன் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இந்த ஒரு காட்சிக்காகவே அவருக்கு நமது பாராட்டுக்கள்.
இதேபோல் கலை இயக்குநரும் பாராட்டுக்குரியவர். வீட்டுக்குள் இருக்கும் பொருட்களும், பேய் இருக்கா இல்லையா என்பதற்கான அடையாளமான ஒலிக்கும் அந்த ராட்டினம் டிஸைன் அழகுப் பொருளும் கலை வண்ணமயமாய் இருக்கின்றன.
சி.எஸ்.சாமின் இசையில் மதன் கார்க்கியின் பாடல்கள் ஒலிக்கின்றன. ‘ஆலாலிலோ’ பாடல் கேட்கும் ரகம். ஆனால் வரிகள் முழுவதும் கவிதையாச் சொட்டுவதால் தியேட்டர் ரசிகர்களின் மனதில் நிற்காது. ‘கொஞ்சலி’ பாடல் கொண்டாட்டத்துடன் காட்சிகளுடன் ஓடியதால் அந்த நேரத்தில் மனதுக்குப் பிடித்தமானதாக இருந்தது.
பேய்ப் படங்களுக்கே உரித்தான சஸ்பென்ஸ் என்று சொல்லப்பட்ட காட்சிகளும், அவசரத்தனமான திரைக்கதையும் இருப்பதால் இதற்கேற்றவாறு பின்னணி இசையை அமைத்துக் கொடுத்திருக்கிறார் சாம்.
இவருக்கு சற்றும் குறையாமல் தனது படத் தொகுப்பு திறமையைக் காட்டி படத்தை கனகச்சிதமாக வெறும் 106 நிமிடங்களிலேயே முடித்து வணக்கம் போட வைத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் ஆண்டனி. ஆனால் இன்னும் ஒரு 20 நிமிடக் காட்சிகளை படமாக்கியிருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது.
பேய் குழந்தை வடிவில் வந்து பழி வாங்குவதெல்லாம் ஏற்கெனவே வந்த கதைதான். ஆனால் கருவில் இருந்த குழந்தையே, உயிராய் வந்து பழி வாங்குவது தமிழ்ச் சினிமாவில் இதுதான் முதல் முறை என்று நினைக்கிறோம். பேய்ப் படத்தில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்றால் வேறு என்னதான் செய்வது..? இயக்குநரும் பாவமில்லையா..?! பொறுத்துக் கொள்வோம்.
படத்தின் மேக்கிங்கைவிட்டுவிட்டு பார்த்தால் படம் இறுதியாய் சொல்லும் நீதி பெரும் அநீதியாய் இருக்கிறது.
கருக்கலைப்பை தவறு என்கிறது திரைப்படம். இந்தக் கருத்தே தவறு என்பது இயக்குநருக்குத் தெரியவில்லை. இப்போதுதான் பல போராட்டங்கள் நடத்தி கருக்கலைப்பு செய்வது பெற்றோரின் உரிமை என்று சொல்லி அந்த உரிமையை பெற்றிருக்கிறார்கள்.
இப்போது வாடிகனின் பேச்சை ஆமோதிப்பதை போல ‘கருக்கலைப்பு பாவச் செயல். அதுவும் ஒரு உயிர். அதனை அழிக்காதீர்கள். அதன் மூலமாக பிறக்கப் போகும் உயிர் ஒரு அன்னை தெரசாவாகவோ, இந்திரா காந்தியாகவோ இருக்கலாம்’ என்றெல்லாம் பேசுவது அறிவிலித்தனம்.
இந்திய நாட்டில் கருக்கலைப்பு என்பது அந்தந்தக் குடும்பச் சூழலை முன்னிட்டுத்தான் செய்யப்படுகிறது. இதே படத்தில் சொல்லப்படும் நீதியின்படி பிளஸ்டூ முடித்த பெண், மருத்துவம் படிக்க எத்தனித்திருக்கும் பெண்.. எதிர்பாராமல் ஏற்பட்ட உறவினால் விளைந்த கருவைச் சுமப்பதனால்… படிக்க முடியாமல் போய்.. வாழ்க்கையும் போய் பிள்ளையை பெற்றுவிட்டு வீட்டில் உட்கார்வதுதான் தர்மமா.. சரியானதா..? இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை.
இப்படியான அரைவேக்காட்டுத்தனமான கருத்தை இந்தப் படத்தில் புகுத்தியிருக்கிறார் இயக்குநர் விஜய். இதற்காக நமது கடு்ம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மற்றபடி இயக்குநர் எப்போதும்போல தனது அழுத்தமான இயக்கத்தினால் அனைவரையும் சிறப்பாகவே நடிக்க வைத்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை. இருந்தும் படம் குடும்பப் படமா, பேய்ப் படமா என்கிற குழப்பத்தின் நடுவில் சிக்கிக் கொண்டதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
‘பிரேமம்’ மலர் டீச்சரை பார்த்த திருப்தி ஒன்றுதான், இந்தப் படத்தின் மூலமாய் நமக்குக் கிடைத்திருக்கிறது..!