ஒரு குப்பைக் கதை - சினிமா விமர்சனம்

28-05-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

Film Box Productions சார்பில் தயாரிப்பாளர்கள் என்.அரவிந்தன் மற்றும் முகமது அஸ்லம் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
தமிழ்ச் சினிமாவில் பல படங்களில் நடன இயக்குநராகப் பணி புரிந்து, தேசிய விருதைப் பெற்றிருக்கும் நடன இயக்குநர் தினேஷ் இந்தப் படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார்.  கதாநாயகியாக ‘வழக்கு எண்’ புகழ் மனிஷா யாதவ் நடித்துள்ளார்.
மேலும், யோகிபாபு, ஜார்ஜ், ஆதிரா பாண்டி லட்சுமி, சுஜோ மாத்யூஸ், கிரண் ஆர்யன், கோவை பானு, செந்தில் லலிதா  ஆகியோரும் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – காளி ரங்கசாமி, ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, இசை – ஜோஷ்வா ஸ்ரீதர், பின்னணி இசை – தீபன் சக்ரவர்த்தி, நடனம் – தினேஷ் மாஸ்டர், சண்டை பயிற்சி – பயர் கார்த்திக், தயாரிப்பு நிர்வாகம் – டி.ஆறுமுகம், இணை இயக்கம் – அண்ணாதுரை, சீகுட்டி, வ.முத்துக்குமரன், உடைகள் – மணி, ஒப்பனை – குமார், புகைப்படங்கள் – மோதிதால், மக்கள் தொடர்பு – ஜான், டிஸைன்ஸ் – Dot X Media Solutions.
இந்தப் படத்தை நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின். தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.
குப்பை மேட்டில் யாருக்கும் தெரியாமல் இருக்கும் சில கோமேதங்களைப் பற்றிய கதை இது. மன்னிப்பு என்பது வெறும் வார்த்தையல்ல.. அதுவும் ஒரு வாழ்க்கைதான் என்கிறது இத்திரைப்படம்.

நாயகன் தினேஷ் சென்னையில் கூவம் நதிக்கரையோரம் இருக்கும் குடிசைப் பகுதியில் தனது தாயுடன் வசித்து வருகிறார். சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளும் நூற்றுக்கணக்கான தொழிலாளிகளில் அவரும் ஒருவர்.
இவருக்குத் திருமணம் செய்து வைக்க இவரது அம்மா பெரும்பாடுகிறார். ஆனால் பொண்ணுதான் கிடைத்தபாடில்லை. குப்பை அள்ளுகிறார் என்பதாலேயே பெண் கிடைக்காமல் போகிறது. வேறு வழியில்லாமல் ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்பார்களே என்ற நினைப்பில் பொய் சொல்லியாவது திருமணத்தை நடத்தி வைக்கும் முடிவுக்கு வருகிறார்கள்.
வால்பாறையில் ஒரு பெண் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கே செல்கிறார்கள். அங்கே பூங்கொடி என்னும் மணிஷா யாதவை பார்த்த உடனேயே தினேஷுக்கு பிடித்துப் போய்விடுகிறது. மணிஷாவுக்கும்தான்.
ஆனால் தினேஷ் சென்னையில் ஏதோ கிளார்க் வேலை பார்ப்பதாக புரோக்கர் பொய் சொல்லியிருப்பதை அறியும் தினேஷ்  மணீஷாவின் அப்பாவை தனியே அழைத்து உண்மையைச் சொல்லி விடுகிறார். அவருடைய நல்ல மனதை எண்ணிய மணிஷாவின் அப்பா அவருக்கே தன் மகளைத் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். ஆனால் இந்த வேலை விஷயத்தை மட்டும் மகளிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறார்.
கல்யாணம் முடிந்து வேறு வழியில்லாமல் அந்தக் குடிசைப் பகுதியில் குடித்தனம் நடத்துகிறார் மணிஷா. ஒரு நாள் தற்செயலாக தினேஷ் குப்பை அள்ளுவதை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்து விசாரிக்கிறார் மணிஷா. அப்போதுதான் தினேஷின் உண்மையான வேலை பற்றிய விவரம் மணிஷாவுக்குத் தெரிய வருகிறது.
இதையடுத்து தன் வீட்டுக்குப் போக முடிவெடுக்கிறார் மணிஷா. அவருடைய அப்பாவின் ஆலோசனையின்பேரில்தான் அவளிடமிருந்து உண்மையை மறைத்தோம் என்ற உண்மையைச் சொல்லி, தற்காலிகமாக பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் தினேஷ்.
கர்ப்பமான மணிஷா குழந்தை பிறப்பிற்காக வால்பாறைக்குச் சென்றவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். ஆனால் திரும்பவும் சென்னைக்கு வர மறுக்கிறார். அந்தக் குடிசைப் பகுதியின் சூழல் என் குழந்தையை வளர்க்க ஏற்ற இடம் அல்ல என்கிறார் மணிஷா.
இதையடுத்து தினேஷ் தனது சூப்பர்வைஸரின் அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டில் வாடகைக்கு குடி போகிறார். அதே அபார்ட்மெண்ட்டில் எதிர் வீட்டில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்யும் அர்ஜூன், மணிஷாவின் அழகைப் பார்த்து ரசிக்கிறார். மணிஷாவுக்கு பிராக்கெட் போட்டு அவளது அழகு, தினேஷின் அழகில்லாத தன்மை, பொருத்தமில்லாத ஜோடி என்பதையெல்லாம் சொல்லி மணிஷாவின் மனதைக் கரைக்கிறார். அர்ஜூன் விரித்த வலையில் சிக்குகிறார் மணிஷா.
ஒரு சுபமுகூர்த்த நாளில் மணிஷாவும், அர்ஜூனும் ஊரைவிட்டு ஓசூருக்கு ஓடுகிறார்கள். அங்கே அர்ஜூனின் நண்பனின் வீட்டில் குடியேறுகிறார்கள். தன்னை நம்பி வந்த பெண்ணாக இருந்தாலும் மணிஷாவை தாலி கட்டாத மனைவியாகவே உடன் வைத்துக் கொள்ள அர்ஜூன் விரும்புகிறார்.
இன்னொரு பக்கம் மனைவி காணாமல் போன அதிர்ச்சியில் குடிகாரனாகிறார் தினேஷ். மணிஷாவை பல இடங்களில் தேடி அலைகிறார். இந்த மன உளைச்சலில் தினேஷின் தாயும் இறந்து போகிறார்.
ஒரு பக்கம் அர்ஜூனின் அரவணைப்பில் அடிமையாய் இருக்கிறார் மணிஷா. இன்னொரு பக்கம் மனைவியையும், குழந்தையையும் காணாமல் தேடுகிறார் தினேஷ். முடிவு என்ன ஆனது..? மணிஷாவையும், குழந்தையையும் கண்டுபிடித்தாரா இல்லையா..? என்பதுதான் இந்தக் குப்பைக் கதையின் திரைக்கதை.
வித்தியாசமான கதை, திரைக்கதையில் அழுத்தமான இயக்கத்தையும் கொடுத்திருக்கும் அறிமுக இயக்குநர் காளி ரங்கசாமி பெரும் பாராட்டுக்குரியவராகிறார்.
இந்தப் படத்தின் கதாபாத்திரத் தேர்வு கச்சிதமாக அமைந்திருக்கிறது. ஹீரோவாக இப்போது முன்னணியில் இருப்பவர்களில் யாரேனும் ஒருவரை நடிக்க வைத்திருந்தாலும்கூட இத்தனை யதார்த்தமான நடிப்பைத் திரையில் பார்த்திருக்கவே முடியாது. எப்போதும் இதுவரையிலும் பார்த்திராத ஒரு நாயகனின் நடிப்பை இந்தப் படத்தில் பார்க்கிறோம்.
நாயகனாக நடித்திருக்கும் தினேஷ் நடன இயக்கத்திற்காகவே தேசிய விருதினை பெற்றவர். 100 திரைப்படங்களுக்கும் மேலாக நடன இயக்கம் செய்திருக்கிறார். ஆனால், இந்தப் படத்தில் அமைதியான, அடக்கமான, சுற்றச் சூழலே தெரியாத ஒரு அப்பாவியாய் வாழ்ந்திருக்கிறார்.
உண்மையை பேச நினைக்கும் அப்பாவியாய் மாமனாரிடம் உண்மையை உடைத்துப் பேசுவதில் துவங்கி.. கடைசியாக போலீஸ் ஸ்டேஷனில் வந்து கத்தியைக் கொடுப்பதுவரையிலும் அவரது நடிப்பை காட்சிக்குக் காட்சி சிலாகிக்கலாம். எந்தக் காட்சியிலும் ஓவர் ஆக்ட்டிங்கோ, அல்லது ஹீரோயிஸ நடிப்போ தென்படவில்லை. மாறாக அந்த கேரக்டராகவே மாறியிருக்கிறார் தினேஷ்.
இதுவரையிலும் சில படங்களில் மட்டுமே நடித்திருக்கும் மணிஷா யாதவ்வுக்கு இந்தப் படத்தில் மிகச் சிறப்பான வேடம். அமைதியான, அழகான, இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் வால்பாறையில் பிறந்து வளர்ந்து வந்தவர், சென்னையில் கூவத்தின் அழகையும், குடிசைப் பகுதியின் அலங்கோலத்தையும் பார்த்து முகத்தைச் சுழித்தபடியே வருவதிலேயே இவரது அடுத்தடுத்த குணாதிசயங்களை தெரிய வைத்துவிட்டார் இயக்குநர்.
தன்னால் முடிந்த அளவுக்கு தனது கேரக்டருக்கு சிறப்பு செய்யும் அளவுக்கு நடித்திருக்கிறார் மணிஷா. எதுவும் தெரியாத அப்பாவியாய் அவர் வந்திருப்பதால்.. தன்னுடைய கணவன் குப்பை பொறுக்குபவன் என்கிற விஷயத்தையே அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்பதை சில காட்சிகளில் அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
அதேபோல் ஒவ்வொரு பெண்ணுக்கும், தனது கணவன்மார்கள் எப்படி அமைய வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்குமே.. அந்த எதிர்பார்ப்பு கிடைக்காமல் போகும்போது ஏற்படும் விரக்தி, ஏமாற்றத்தில் அது தானாக தேடி வரும்போது அதனை ஏற்றுக் கொள்ளும் அளவுக்குச் செல்வது இயற்கை என்பதையும் தனது நடிப்பிலேயே மிக அழகாக காண்பித்திருக்கிறார் மணிஷா.
கணவனிடமிருந்து கிடைக்காத பேச்சுக்கள், நடத்தைகள், வசதிகளை கொடுக்க வேறொருவன் வரும்போது அதனை ஏற்றுக் கொள்ள துடிக்கும் இரட்டை மனம் கொண்ட பெண்ணின் சங்கடத்தையும் படத்தில் நேர்மையாய் பதிவு செய்திருக்கிறார்கள். இதற்கும் மணிஷாவின் நடிப்பு பெரிதும் உதவியிருக்கிறது.
அர்ஜூனின் நண்பன் மணிஷாவிடம் அத்துமீறலுடன் நடந்து கொள்ளும்போது அவருடைய நடிப்பும் கிளைமாக்ஸில் அவருடைய மிக யதார்த்தமான குப்பை பொறுக்கும் காட்சிகளும் மணிஷாவுக்கு புகழ் சேர்க்கின்றன.
அர்ஜூனாக நடித்த சுஜோ மேத்யூஸ் தனது ஆண் திமிரையும், பணத் திமிரையும் அழகாகக் காட்டியிருக்கிறார். தினேஷின் அம்மாவாக நடித்த ஆதிரா, மணிஷாவின் பெற்றோர்கள் என்று அனைவருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
யோகிபாபு சில காட்சிகளுக்காக இழுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இருக்கும் காட்சிகளில் வஞ்சகமில்லாமல் காமெடியை வரவழைக்கிறார் யோகி பாபு. குடிக்கும் பழக்கமுள்ள பாட்டி, “சொந்த ஊர் பாண்டிச்சேரியா…?” என்று அதிர்ச்சியாய் கேள்வி எழுப்பும்போது தியேட்டரே கைதட்டலில் அதிர்கிறது. இதேபோல் “சிகரெட் பிடிச்சா… குழந்தையே பொறக்காதுன்னு சொல்வாங்களே.?” என்று மணிஷா அர்ஜூனிடம் கேட்க, “குழந்தையே பொறக்கக் கூடாதுன்னுதான் நாங்க சிகரெட்டே பிடிக்கிறோம்…” என்று அர்ஜூன் அலட்சியமாகச் சொல்லும்போதும் தியேட்டர் கலகலக்கிறது. 
கலை இயக்குநரின் கை வண்ணத்தில் குடிசை பகுதிகளை அத்தனை அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சின்ன குடிசைப் பகுதி இடத்தை தத்ரூபமாக படம் பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமிக்கும் நமது பாராட்டுக்கள். சில காட்சிகளே என்றாலும் வால்பாறையையும் மிக அழகாகக் காண்பித்திருக்கிறார். வழக்கமான படமாக இருந்தால் அந்த இடத்தில் ஒரு டூயட்டை வைத்திருப்பார்கள். ஆனால் இந்த இயக்குநர் அதைத் தவிர்த்திருப்பது பாராட்டுக்குரியது.
ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் ‘வாடா மச்சி’ துவக்கப் பாடலும் ‘விலகாதே என்னுயிரே’ பாடலும் சிச்சுவேஷனுக்கேற்ற மூடை கொடுக்கின்றன. கிளைமாக்ஸ் காட்சியில் பின்னணி காட்சியில் அமைதியாக இருந்து அந்தக் கனத்தை ரசிகர்களின் மனதில் ஏற்ற உதவியிருக்கிறார் இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி.
திடீரென்று மணிஷா ஓசூரில் இருப்பதாக சியர்ஸ் சொல்வதற்காக வந்த ஒருவன் தினேஷிடம் சொல்லும் காட்சி மட்டும் லாஜிக் மீறலாக இருக்கிறதே தவிர.. படத்தில் யதார்த்தம்தான் அதிகம் பளிச்சிடுகிறது.
இதேபோல் ஐ.டி. பசங்களும், பொண்ணுகளும் இப்படித்தான் இருப்பார்களோ என்கிற பாணியில் அவர்களை காமுகர்களாகவும், காமுகிகளாகவும் காட்டியிருப்பது ரொம்பவே டூ மச்சோ என்றும் சொல்லத் தோன்றுகிறது..!
மணிஷாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சில் அவர் நினைத்ததுபோல குடிசைப் பகுதியில் இல்லாமல் தனி அபார்ட்மெண்ட் வீட்டிற்கு வந்த பின்பும் அவர் எதிர் வீட்டு அர்ஜூனை பார்த்து சபலப்படுவது ஏன் என்பதுதான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கும் முக்கிய விஷயம். இந்த இடத்தில் மணிஷாவின் கேரக்டர் ஸ்கெட்ச் கொல்லப்பட்டது என்றாலும் மனம் ஒரு நிலையில்லாதது. எது கிடைத்தாலும் இன்னும் இன்னும் எதிர்பார்க்கும் என்பார்களே அது போலவே.. இந்த நேரத்தில் மணிஷாவின் மனமும் பிறழ்ந்துவிட்டது என்று நினைத்துக் கொள்வோம்.
பணம், கார் போன்ற வசதி வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும்போது அதில் வாழ்ந்தால்தான் என்ன என்று நினைக்கும் ஒரு சராசரி பெண்ணைப் போல நினைத்தவர் ஆணின் கவர்ச்சிகரமான பேச்சில் மயங்கி வீழ்கிறார். சரிவு அங்கேதான் துவங்குகிறது. பெண்ணின் மீதும் சரி பாதி தவறு இருக்கிறது என்று அழுத்தமாகக் காண்பித்திருக்கிறார் இயக்குநர்…!
மற்றபடி ஊரில் பல ஊர்களில் இதேபோல் பல சம்பவங்கள் மாதத்திற்கு ஒன்று நடந்து கொண்டேயிருப்பதால், இன்றைய சமூகத்தின் நிலைமையை கண்ணுக்கு எதிராகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் காளி ரங்கசாமி என்பதுதான் அப்பட்டமான உண்மை.
திருமணப் பொருத்தம் என்பது வெறுமனே ஆளை பார்த்தவுடனேயே முடிவாகுவதில்லை. இரு தரப்பினரின் குடும்பம், உறவுகள், பணம், செல்வாக்கு, வீடு எல்லாவற்றையும் பார்த்துதான் முடிவாக வேண்டும். அவசர கதியில் பெண்ணின் கனவை நிறைவேற்ற செய்யப்பட்டும் சடங்குகள் எல்லாம் சடங்கு தீர்ந்தவுடன் கானல் நீராகிப் போய் வெறுமையாகிவிடும்.
தினேஷின் அம்மா சொல்லும் பொய்யும், மணிஷாவின் அப்பா சொல்லும் பொய்யும் எப்படி அவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பெரியவர்கள் என்பதாலேயே அனைத்தையும் சொல்லாமல் முடிவெடுக்க அவர்களுக்கு உரிமையில்லையே..!?
இனி வெறுமனே பேச்சிலேயே திருப்தியடையாமல் எல்லாவித பொருத்தங்களையும் பார்த்தே திருமணம் செய்து வைப்பது ஆண், பெண்ணின் குடும்பத்தாரின் கடமையும்கூட.. இதற்கு ஒரு முன்னெச்சரிக்கை படமாகவும் இது அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
கடைசியாக படம் சொல்லியிருக்கும் மிகப் பெரிய விஷயம் ‘எந்தக் குற்றமும் மன்னிக்கக் கூடியதே’ என்பதுதான். தினேஷ் தனது மனைவியை இறுதியில் மன்னித்து ஏற்றுக் கொள்கிறார். அது அவளுக்காகவோ.. அல்லது அவரது குழந்தைக்காகவோ… எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் மன்னிக்கிறார் அல்லவா..! இதுதான் மனித நேயம். ‘திருந்தி வருபவர்களை மன்னித்து அரவணைப்புதான் சிறந்த மனிதப் பண்பு’ என்கிறார் இயக்குநர். இந்தக் கருவைச் சொல்வதற்கு இதைவிட சிறப்பாக கதை எழுதியிருக்க முடியாது..!
இந்தக் குப்பைக் கதையில் இருப்பது மாணிக்கக் கல்..!
பார்க்கத் தவறாதீர்கள்..!

0 comments: