தமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..?!

25-03-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

டிஜிட்டல் நிறுவனத்தினரின் திரையிடல் கட்டணத்தை எதிர்த்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்திருக்கும் வேலை நிறுத்தப் போராட்டம் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. போராட்டம் துவங்கி 20 நாட்களுக்கு மேலாகியும் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை.
தற்போது நடைபெறும் போராட்டத்தினால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பது போல தியேட்டர்காரர்கள் தங்களது தியேட்டர்களை திறந்து வைத்து பழைய தமிழ்ப் படங்களையும், ஆங்கில படங்களையும், ஹிந்தி படங்களையும் வெளியிட்டு ஈயோட்டி வருகிறார்கள்.
தமிழக அரசோ இப்படியொரு பிரச்சினை இருப்பதே இதுவரையிலும் எங்களது கவனத்திற்கு வரவில்லை என்பது போலவே கண்டும் காணாமல் இருக்கிறது. இன்னொரு பக்கம் அவ்வப்போது சமரச பேச்சுவார்த்தை என்கிற தகவல்கள் மட்டும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தக் கட்டாய வேலை இழப்பினால் அன்றாடங் காய்ச்சிகளான சினிமா தொழிலாளர்கள் மட்டும் வயிற்றில் ஈரத் துணியோடு வீட்டில் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அடுத்து வரப் போகும் பள்ளியாண்டுக்காக குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்த மாத வீட்டு வாடகை கொடுக்க வேண்டும்.. திடீரென்று முளைக்கும் மருத்துவச் செலவுகளை சமாளிக்க வேண்டும் என்று மும்முனை போராட்டத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் சினிமா தொழிலாளர்கள்.
இன்னொரு பக்கம், “தியேட்டர்களுக்கு கூட்டம் வரவில்லை. இதனால் வெளியாகும் 99 சதவிகித படங்கள் தோல்வியடைகின்றன. இதனால் தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..” என்று பல சினிமா மேடைகளில் தமிழ்த் திரையுலகத்தினர் பலரும் புலம்பித் தள்ளுகின்றனர்.
முதலில் ஒரு விஷயத்தை திரைத்துறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.

சினிமா பார்ப்பதென்பது தமிழக மக்களுக்கு இருக்கும் பொழுது போக்குகளில் ஒன்றுதான்.. அதுவே அவர்களது வாழ்க்கையில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வாழ்க்கை முறை இப்போதில்லை. மக்களுக்கு பிரச்சினைகள் கூடிக் கொண்டே செல்கின்றன. பொழுது விடிந்து, பொழுது போனால்… ஏதாவது ஒரு பிரச்சினை வந்து அவர்களுடைய வாழ்க்கையை திசை திருப்பிக் கொண்டேயிருக்கிறது.
ஒரு குடும்பத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், குடும்பங்களின் பிரிவால் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இருக்கின்ற எல்லா பிரச்சினைகளையும் ஒரு குடும்பத் தலைவரோ, ஒரு தலைவியோ அல்லது ஒரு மகனோ, அல்லது ஒரு மகளோதான் சமாளித்தாக வேண்டும்.
இந்த சமாளிப்பில் அவர்களது பெரிய பிரச்சினையே பணம் சம்பாதிப்பதுதான். பணத்தை சம்பாதிக்கவே அவர்கள் அல்லலோகப்பட்டுக் கொண்டிருக்கும்போது வாரத்துக்கு 5 படங்களை வெளியிட்டுவிட்டு “அனைத்து படங்களையும் மக்கள் பார்த்தே தீர வேண்டும்…” என்று எதிர்பார்ப்பது நியாயமா..?
அப்படியே வந்தாலும் அவர்களால் அனைத்து படங்களையும் பார்க்க முடியுமா..? பார்க்கும் அளவுக்கு யார் இங்கே ஓய்வில் இருக்கிறார்கள்..? 
காலையில் 7 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினால் இரவில்தான் வீடு திரும்புகிறார்கள். ஒரேயொரு நாள்தான் விடுமுறை. அந்த தினத்தில் அவர்களது குடும்பப் பிரச்சினைகளைப் பார்ப்பார்களா அல்லது சினிமா தியேட்டர்களை நோக்கி ஓடி வருவார்களா..?
அப்படியே ஓடி வந்தாலும் அவர்களை அரவணைக்கும்விதமாகவா சினிமா தியேட்டர் கட்டணங்கள் இருக்கின்றன…? இப்போது சென்னை போன்ற பெருநகரங்களில் 4 பேர் கொண்ட குடும்பம் ஒரு சினிமா பார்ப்பதற்கே டிக்கெட் கட்டணம் மற்றும் நொறுக்குத் தீனி கட்டணங்களெல்லாம் சேர்த்து 1000 ரூபாய் தேவைப்படுகிறது.
இதில் ஒரு வாரத்தில் வெளியாகும் அனைத்து படங்களையும் பார்த்து முடிக்க வேண்டும் என்றால் ஒரு வாரத்தில் 5 படங்களுக்கென்று வைத்துக் கொண்டால் ஒரு குடும்பத்திற்கு 5000 ரூபாய் தேவைப்படுகிறது. இதுவே மாதத்திற்கு என்றால் 20000 ரூபாய் தேவை.
மாதம் 20000 ரூபாயை சினிமாவுக்கே செலவழிக்க வேண்டும் என்றால் அந்தக் குடும்பம் ஒன்று, கவலையே இல்லாத பணக்கார குடும்பமாக இருக்க வேண்டும். அல்லது சினிமா பார்ப்பதையே தொழிலாக கொண்ட குடும்பமாக இருத்தல் வேண்டும். நடைமுறையில் இது சாத்தியம்தானா..?
வாரத்துக்கு ஒரு படம் அல்லது நல்ல படம் என்று சொல்லப்படும் சினிமாவிற்கு மட்டுமே செல்வது என்கிற கொள்கையை தமிழக மக்கள் எடுத்து வெகு நாட்களாகிவிட்டது. இது சினிமாக்காரர்களுக்கு ஏன் இன்னமும் புரியவில்லை..?
சென்ற ஆண்டு வெளியான ‘பாகுபலி-2’ படத்தை தமிழகத்தில் குடும்பம், குடும்பமாக வந்து பார்த்தார்கள் என்றால் அந்தப் படம் பற்றிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அந்த அளவுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால்தான் அதுவரையிலும் சேமித்து வைத்திருந்த பணத்தை, இந்த ஒரு படத்துக்காகவே செலவழித்திருக்கிறார்கள் பெரும்பாலான குடும்பத்தினர்.
மேலும், ‘மாதத்திற்கு ஒரு முறைதான் சினிமாவுக்குச் செல்ல வேண்டும்’ என்ற கொள்கையில் இருக்கும் பல குடும்பத்தினரும், சில நல்ல படங்களை மட்டுமே கேள்விப்பட்டு.. ‘அறம்’, ‘அருவி’ போன்ற படங்களை தியேட்டருக்கு வந்து பார்த்து சந்தோஷப்படுகிறார்கள்.
இந்த மாதிரியான நல்ல படங்கள் தொடர்ச்சியாக வராதது மக்களின் குற்றமல்ல.. தமிழ்ச் சினிமா துறையினரின் குற்றம். ஆக.. இதில் பொது மக்களை குற்றம், குறை சொல்லி என்ன புண்ணியம்..?

தற்போது தமிழகத்தில் ஆதார் கார்டு பிரச்சினையே இன்னமும் முடியவில்லை. பல குடும்பங்களை ஆதார் அலைக்கழித்து வருகிறது. இது போன்று தினம்தினம் ஏதாவது ஒரு புதிய பிரச்சினை அரசுகளால் மக்கள் மீது திணிக்கப்பட்டு வருகிறது.
இந்த மூச்சுமுட்டும் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க நினைத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, இப்போதைய தேவையே பைசா காசு செலவழில்லாமல் கொஞ்சம் ரிலாக்ஸாக இருத்தல் வேண்டும் என்பதே.
இப்போது சென்னையில் மெரீனா கடற்கரையில் கூட்டம் கூடுகிறது. தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணமே ஆயிரக்கணக்கில் எகிறுகிறது. எல்லாவற்றுக்கும் காரணம் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள்தான். முதலில் இதை புரிந்து கொள்ளாமல் “நான் படம் எடுத்திட்டேன். ரிலீஸ் பண்ணிட்டேன். பொதுமக்கள் அவசியம் வந்து பார்த்தே தீர வேண்டும்…” என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமில்லையா..?
பணத்தைச் சேமிப்பது என்பதும் இப்போதைக்கு நடுத்தர குடும்பங்களின் லட்சியமாக உள்ளது. இதனால் சினிமாவுக்கு போவதை குறைத்துக் கொண்டே போகிறார்கள் பொதுமக்கள். இதையும் தமிழ்ச் சினிமா துறையினர் இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதனால்தான் தங்களுக்குக் கிடைக்கும் மிக எளிதான வழிகளில் சினிமாக்களை பார்க்கிறார்கள் பொதுமக்கள். திருட்டு டிவிடிக்களின் ஆதிக்கம் அதிகமானதற்கு அடிப்படையான முதல் காரணமே சினிமா தியேட்டர் கட்டணங்கள்தான். இந்தக் கட்டணங்களை குறைக்காமல் “திருட்டு டிவிடியில் படம் பார்க்காதீர்கள்…” என்று சொல்வதற்கு, திரைத்துறையினருக்கு உரிமையே இல்லை.
தியேட்டர்காரர்கள் டிக்கெட் கட்டணம், பார்க்கிங் கட்டணம், தின்பண்டங்களின் கட்டணம் என்று எல்லாவற்றிலும் கொள்ளையடித்துவிட்டு “தியேட்டருக்கு ஆட்கள் வரவில்லையே… நாங்கள் என்ன செய்ய…?” என்கிறார்கள்.
தியேட்டர் உரி்மையாளர்கள் ஏற்கெனவே பெரும் லட்சாதிபதிகள்.. கோடீஸ்வரர்கள். அவர்கள் மேலும், மேலும் பணம் சம்பாதிக்கத்தான் நினைக்கிறார்கள். அந்த எண்ணத்தில்தான் தியேட்டர் தொழிலையே நடத்துகிறார்கள். மக்களின் பொழுது போக்கில் நாம் பங்கு பெறுவோம் என்கிற எண்ணமே தியேட்டர்காரர்களுக்கு இல்லை. முகமூடி போடாத கொள்ளைக்காரர்களாக இவர்கள் இருக்க.. இவர்களிடமிருந்து பங்கு பெற்று சாப்பிடும் இன்னொரு கொள்ளைக் கூட்டமாக விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.

இப்போதுகூட வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கும் திரைப்பட தயாரிப்பாளர்கள் “புரொஜெக்சனுக்கான கட்டணத்தை நாங்கள் கொடுக்க மாட்டோம். தியேட்டர் உரிமையாளர்கள்தான் கொடுக்க வேண்டும்..” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்களே ஒழிய.. “பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் தியேட்டர் கட்டணங்கள், பார்க்கிங் கட்டணங்கள், தின்பண்டங்களின் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும்…” என்ற பொதுமக்களின் பிரச்சினைக்காக போராடவில்லை.  பின்பு எப்படி பொதுமக்கள் இவர்களுக்கு ஆதரவளிப்பார்கள்..?
பொதுமக்களைப் பொறுத்தவரையில் இப்போது நடக்கும் போராட்டம் நடந்தாலும் ஒன்றுதான். நடக்காமல் இருந்தாலும் ஒன்றுதான். சுருக்கமாக சொல்லப் போனால் சினிமா தியேட்டர்கள் இருந்தாலும் ஒன்றுதான். இல்லாமல் இருந்தாலும் ஒன்றுதான் என்கிற எண்ணத்திற்கு மக்கள் ஏற்கெனவே வந்துவிட்டார்கள்.
இப்போதுவரையிலும் தியேட்டர்களை நோக்கி கொஞ்சமே வந்து கொண்டிருந்த கூட்டம், இந்த ஸ்டிரைக் முடிந்த பிறகு அப்படியே அள்ளிக் கொண்டு வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தியேட்டர்கள் மூடப்பட்ட காலத்தில் சேமிக்கப்பட்ட பணத்தை நினைத்துப் பார்த்து “இதையே இனிமேலும் ஃபாலோ செய்யலாமே…” என்று பொதுமக்கள் நினைத்துவிட்டால் தொலைந்தது.. தமிழ் சினிமா துறை அதோ கதியாக வேண்டியதுதான்..!
இப்போதைக்கு பெரிய ஹீரோக்கள், ரசிகர்கள் பட்டாளம் உள்ள ஹீரோக்களின் படங்களுக்கு மட்டுமே அவர்களது ரசிக மணிகள் முதல் நாள் முதல் ஷோவுக்கே வந்து குவிகிறார்கள். படம் நன்றாக இருந்தால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் வருகிறார்கள். இல்லாவிடில் அந்த ஹீரோவின் ரசிகர்கள் கொடுத்த கட்டணத்தோடு அந்தப் படம் பேக்கப்பாக வேண்டியதுதான்.
இதுவே சின்ன பட்ஜெட் என்றால் படம் நன்றாக இருந்து, பரவலாக விளம்பரம் செய்யப்பட்டு, அதிக தியேட்டர்களில் ரிலீஸாகியிருந்தால் படத்திற்கு கூட்டம் விரைந்து ஓடி வரும். இல்லாவிடில் தியேட்டரைவிட்டு படம் சீக்கிரமாக ஓடிவிடும். இதுதான் தொடர் கதையாய் நடந்து வருகிறது.
இத்தனை தூரம் சினிமாக்காரர்கள் பொதுமக்களிடம், “தியேட்டருக்கு வாங்க.. படம் பார்த்து எங்களைக் காப்பாத்துங்க..” என்று கூவி வருகிறார்களே.. இதனை முதலில் தங்களது குடும்பத்தினரிடமே திரைத்துறையினர் கேட்கலாமே..!?
வேறு மாதிரி யோசித்துப் பார்ப்போமா..?

பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துடன் இணைந்து 23 தொழிலாளர் சங்கங்கள் உள்ளன. அனைத்து சங்கங்களையும் உள்ளடக்கினால் கிட்டத்தட்ட 30,000 உறுப்பினர்கள் சென்னையில் உள்ளனர். குடும்பத்திற்கு 4 பேர் என்று கணக்கிட்டால்கூட மொத்தமாக 1,20,000 திரைத்துறை சார்ந்த குடும்பத்தினர் சென்னையில் இருக்கிறார்கள்.
சென்னையில் வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களையும் இந்த 1 லட்சத்து 20 ஆயிரம் பேரும், வாராவாரம் பார்த்தால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
ஒருவருக்கு சராசரியான நுழைவுக் கட்டணம் 75 என்றுகூட வைத்துக் கொள்ளுங்கள். 1,20,000 X 75 = 90,00,000. 90 லட்சம் ரூபாய் வருகிறது. இது ஒரு திரைப்படத்திற்கு. வாரந்தோறும் 5 திரைப்படங்களாவது வெளியாகின்றன. இதன்படி பார்த்தால் 90 லட்சம் X 5 = 4 கோடியே 50 லட்சம் ரூபாய் திரைத்துறையைச் சேர்ந்த மக்களால் ஒரு வாரத்திற்கு தமிழ்ச் சினிமாத் துறைக்கு கிடைக்கும்.
பெப்சி அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் அனைவரும் சென்னையில் வெளியாகும் அனைத்து படங்களையும் தங்களது குடும்பத்தினருடன் சென்று பார்க்க வேண்டும். மாதாமாதம் அவர்கள் பார்த்த படங்கள் ஓடிய தியேட்டர் டிக்கெட்டுக்களை அனைவரும் அவரவர் சங்கங்களிடம் ஒப்படைத்தல் வேண்டும். இதை செய்யாமல் போனால் அந்த ஊழியர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார் என்று நிபந்தனை விதித்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி பாருங்கள்.
இதனை செய்தால் ஒவ்வொரு படத்திற்கும் சென்னையில் மட்டும் தோராயமாக 90 லட்சம் ரூபாய் சினிமா துறை சார்ந்த குடும்பங்கள் மூலமாகவே கிடைக்கும். இது சின்ன பட்ஜெட் படங்களுக்கு மிகப் பெரிய தொகையாச்சே..? அவர்கள் மூச்சு விடுவதற்கு பேருதவியாக இருக்குமே..!?
அதிலும் பெப்சியில் அங்கம் வகிக்கவில்லையென்றாலும் தமிழ்ச் சினிமா துறையின் தலை போலிருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அவர்களது சக உறுப்பினர்களின் படங்களை அவர்களே பார்க்கவில்லையென்றால் எப்படி..?
தமிழ்த் திரையுலகத்தினர் இதனை ஏன் செய்து பார்க்கக் கூடாது..? பொது மக்களிடம் போய் “சினிமா பார்க்க வாங்க.. வாங்க…” என்று கூப்பாடு போடுவதற்கு முன்பாக, இதைச் செய்து காண்பித்தால், தமிழ்த் திரையுலகம் கொஞ்சமேனும் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளலாம்.
தமிழ்ச் சினிமா துறையை சினிமாவிற்குள் இருக்கும், சினிமாவால் வாழும் குடும்பத்தினர்களே காப்பாற்றவில்லையென்றால் வேறு யார் காப்பாற்றுவார்கள்..?

3 comments:

Paranitharan.k said...

உண்மையை பட்டவர்த்தனமா சொல்லிட்டிங்க சார்..

100% உண்மை...!

Arivarasu @ Ravi said...

நல்ல கட்டுரை.

Tamilus said...

சிந்திக்க வேண்டிய விடயம்தான்... நல்ல பதிவு வாழ்த்துக்கள்

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..
தமிழ்US