12-0-2018
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
க்யூப் கட்டணத்தை எதிர்த்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் நடத்தி வரும் போராட்டத்தில் ஒரு பகுதியாக எதிர்வரும் மார்ச் 16 முதல் படப்பிடிப்புகள் அனைத்தையும் நிறுத்தவதாக அறிவித்துள்ளனர்.
இதன் அடுத்தக் கட்டம் பற்றி விவாதிக்க இன்று மாலை 6 மணிக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் அவசரக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்த நிலைமையில் சற்று நேரத்திற்கு முன்பாக க்யூப் நிறுவனம் தமிழ்த் திரைப்படங்களை திரையிடும் கட்டணத்தைக் குறைத்து ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி சிங்கள் ஸ்கிரீன் மற்றும் 2, 3 தியேட்டர்கள் கொண்ட காம்ப்ளக்ஸ் தியேட்டர்களில் ஒரு படத்தை ஒரு காட்சிக்குத் திரையிட 290 ரூபாய் கட்டணம் என்று சொல்கிறது க்யூப். முன்பு இந்தக் கட்டணம் 325 ரூபாயாக இருந்தது.
மேலும் 2-வது வாரத்தில் இந்தக் கட்டணம் 250 ரூபாயாகவும், 3-வது வாரம் இந்தக் கட்டணம் 200 ரூபாயாகவும், 4-வது வாரம் இந்தக் கட்டணம் 100 ரூபாயாகவும், 5-வது வாரம் இந்தக் கட்டணம் 75 ரூபாயாகவும் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அல்லது ஒட்டு மொத்தமாய் ஒரு காட்சிக்கு 275 ரூபாயாக வசூலிக்கவும் திட்டம் உண்டு என்கிறது.
மேலும் இந்தத் தியேட்டர்களில் பேக்கேஜிங் கட்டணமாக இப்போது இருக்கும் 21000 என்பதை 20000 ஆக குறைக்கவும் ஒத்துக் கொள்கிறது.
மால் தியேட்டர்களில் ஏற்கெனவே இருக்கும் பேக்கேஜிங் கட்டணமான 27,500 ரூபாயில் இருந்து 21,750 ரூபாயாக குறைக்கவும் ஒத்துக் கொண்டுள்ளது.
இதேபோல் முதல் வாரம் இந்தத் தியேட்டர்களில் ஒரு காட்சிக்கான திரையிடல் கட்டணம் 500 ரூபாயில் இருந்து 450 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் மால் தியேட்டர்களின் பேக்கேஜிங் கட்டணத்தை முதல் வாரம் 10,750 என்றும், 2-வது வாரம் 8,550 என்றும் 3-வது வாரம் 6,350 என்றும், 4-வது வாரம் 4000 ரூபாய் என்றும் 5-வது வாரம் 2,000 என்றும் க்யூப் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
மேலும் இந்தக் கட்டணக் குறைப்பை சதவிகிதக் கணக்கில் பார்த்தால் முந்தையைக் கட்டணத்தில் இருந்து சுமார் 18-ல் இருந்து 23 சதவிகிதம்வரையிலும் குறைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது க்யூப் நிறுவனம்.
இந்தக் கட்டணக் குறைப்பை ஏற்றுக் கொண்டு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்று புதிய படங்களை தியேட்டரில் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று க்யூப் நிறுவனம் கேட்டுள்ளது.
மேலும் தாங்கள் எந்தவொரு புதிய டிஜிட்டல் நிறுவனத்திற்கும் எதிரியல்ல என்றும், யார் வேண்டுமானாலும் இந்தத் தொழிலில் எங்களுடன் போட்டியிட வரலாம் என்றும் அறிவித்துள்ளது. கடந்தாண்டுகூட 2 புதிய நிறுவனங்கள் தொழிலில் இணைந்துள்ளதை அந்த நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.
இன்னும் சில மணி நேரங்களில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இது பற்றி முடிவெடுக்க கூட்டம் நடத்தப்படவிருப்பதால் க்யூப் நிறுவனத்தின் இந்த முடிவு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது இன்றைக்கே தெரிந்துவிடும்..!
|
Tweet |
0 comments:
Post a Comment