10-03-2018
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
“நாங்கள்
ஒரு படத்தின் மாஸ்டரிங் காப்பியை இலவசமாக செய்து தருகிறோம். சினிமா பிரதியை இலவசமாக அனைத்து தியேட்டர்களுக்கும் கிடைக்கச் செய்கிறோம். வருடக் கணக்காக தயாரிப்பாளரின் பிரதியை பத்திரமாக பாதுகாக்கிறோம்.. இதெல்லாம் நாங்கள் தயாரிப்பாளர்களுக்கு செய்து வரும் சேவைதானே..” என்கிறது க்யூப்.
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தமிழ்ச் சினிமாவின் உண்மையான நிலைமை கடந்த ஒரு வாரமாக தமிழகம்
முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒரு காட்சிக்கு 5 பேர், 10 பேர், 15 பேர் என்று வருவதால்
சில தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல தியேட்டர்களில் ஒரு நாள்
முழுவதுமே காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கெல்லாம் காரணம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்
‘புதிய திரைப்படங்களை வெளியிடக் கூடாது’ என்று விதித்த தடையுத்தரவுதான். புதிய திரைப்படங்கள்
இல்லாமல், ஏற்கெனவே சென்ற வாரம் வெளியான திரைப்படங்களே இந்த வாரமும் தொடர்ந்து திரையிடப்பட்டாலும்
அவற்றுக்கும் சுத்தமாக வரவேற்பில்லை.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த தடையுத்தரவுக்குக்
காரணம் தியேட்டர்களில் படங்களை திரையிடும் டிஜிட்டல் கம்பெனியான ‘க்யூப்’ என்ற நிறுவனத்தின்
திரையிடல் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கைதான்..!
க்யூப் நிறுவனம் இப்போது ஒரு படத்தைத் தியேட்டரில் திரையிட
ஒரு காட்சிக்கு 325 ரூபாய் வாங்குகிறது. இந்தக் கட்டணம் அதிகமானது என்று சொல்லி இதனைக்
குறைத்தாக வேண்டும் என்றும், படங்களின் இடையே காட்டப்படும் விளம்பரக் கட்டணத்தில் தங்களுக்கும்
பங்கு வேண்டும் என்று கோரியும்தான் தென்னிந்தியா முழுவதுமாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு,
ஆந்திரா, தெலுங்கானா என்று ஐந்து மாநில திரைப்பட துறையினரும் ஒன்று சேர்ந்து ‘மார்ச்
1-ம் தேதி முதல் புதிய படங்களை திரையிடுவதில்லை’ என்ற தங்களது போராட்ட முடிவை அறிவித்தன.
அனைத்து வகையான பட்ஜெட் படங்களுக்கும் க்யூப்புக்கான VPF
எனப்படும் கட்டணத் தொகை மிகப் பெரிய சுமையாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பினர் சொல்கிறார்கள்.
க்யூப் தரப்போ, “முன்பு திரைப்படங்கள் பிலிமில் தயாராகி பெட்டியில்
அடைக்கப்பட்டு ஊர், ஊராகக் கொண்டு செல்லப்பட்டு தியேட்டரில் ஓட்டப்பட்டு, அறுந்து போனால்
ஒட்டப்பட்டு… இப்படி மிகுந்த சிரமத்திற்கிடையில் படத்தை திரையிட்டு வந்தபோது கஷ்டமே
இல்லாமல் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய பலன் தரும்வகையில்தான் இந்த சிஸ்டத்தை நடத்தி
வருகிறோம். இதற்கு எங்களுக்கு ஆகும் நியாயமான கட்டணத்தைத்தான் வசூலித்து வருகிறோம்..”
என்கிறார்கள்.
“சினிமா தியேட்டர்களில் புரொஜெக்டரை வாங்கி வைத்திருப்பது
தியேட்டர்காரர்களின் கடமை. அது இருந்தால்தான் அது தியேட்டர். இதற்காக தியேட்டர்காரர்களிடத்தில்தான்
கட்டணம் வசூலிக்க வேண்டும். எங்களிடம் அல்ல…” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
“20 லட்சம், 30 லட்சம் என்று பணம் போட்டு க்யூப் சிஸ்டத்தை
வாங்கி வைக்க எங்களால் முடியவில்லை. அதனால்தான் ஒரு பைசாகூட முதலீடு இல்லாமல் செய்யப்பட்ட
இத்திட்டத்திற்கு நாங்களும் ஒத்துக் கொண்டோம். நாங்களே க்யூப் சிஸ்டத்தை விலைக்கு வாங்கி
வைப்பதென்பது நடவாத காரியம்…” என்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.
“ஹாலிவுட்டின் ஆங்கில சினிமாக்களுக்கு மட்டும் வெறும் பத்தாயிரம்
ரூபாயை ரவுண்ட்டாக வாங்கிக் கொண்டு ஆயுள் கால உரிமையைத் தருகிறீர்களே.. தமிழ்ப் படங்களுக்கு
மட்டும் ஏன் அந்தச் சலுகையைத் தர மறுக்கிறீர்கள்…?” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
“ஆங்கில படங்கள் குறைவான தியேட்டர்களில் குறைவான காலங்களில்
குறைவான எண்ணிக்கையில்தான் வெளியாகின்றன. அதனால்தான் அந்தச் சலுகை…” என்கிறது க்யூப்
நிறுவனம்.
“தமிழ்நாட்டில் க்யூப் சிஸ்டம் இருக்கும் தியேட்டர்களில்
1 கே மற்றும் 2 கே தொழில் நுட்பம் உள்ள தியேட்டர்களும் இருக்கின்றன. இதில் 1 கே தொழில்
நுட்பத்தில் திரையிடுவதற்கு கட்டணமாக 325 ரூபாயும், 2 கே தொழில் நுட்பம் உள்ள தியேட்டர்களில்
திரையிடுவதற்கான கட்டணமாக 500 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இரண்டிற்குமே ஒரே
தியேட்டர் கட்டணம்தான். தியேட்டரின் கட்டண சீட்டில்கூட அது குறிப்பிடப்படுவதில்லை.
ரசிகர்களுக்குக்கூட அதன் வித்தியாசம் தெரியாது. புரியாது.. பின்பு எதற்காக இந்த வித்தியாச
கட்டணம்..?” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
“2-கே தொழில் நுட்பத்திற்காக கொஞ்சம் கூடுதல் வசதிகள் செய்ய
வேண்டியிருக்கிறது. அதனால்தான் இந்தக் கூடுதல் கட்டணம்…” என்கிறது க்யூப் நிறுவனம்.
தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளரான தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.
இது பற்றி பேசுகையில், “அருவி’ போன்று 2 கோடி சின்ன பட்ஜெட்டில் தயாரான படத்தை தியேட்டரில்
வெளியிட திரையிடல் கட்டணமாக 50 லட்சம் செலவழிக்க வேண்டியிருந்தது. இதற்கு 10 முதல்
15 லட்சம் ரூபாய்தான் திரையிடல் கட்டணமாக இருந்திருக்க வேண்டும். 35 லட்சம் ரூபாய்
அதிகமாக கொடுத்திருக்கிறேன்.
இதேபோல் என்னுடைய நிறுவனமான ட்ரீம் வேரியர்ஸின் சார்பில்
இந்தாண்டு வெளியான 4 படங்களின் திரையிடல் கட்டணமாக மட்டுமே 2 கோடியே 20 லட்சம் ரூபாயை
செலுத்தியிருக்கிறேன். இதில் ஒன்றரை கோடி ரூபாய் சிலருடைய பாக்கெட்டுகளுக்கே போய்ச்
சேர்ந்திருக்கிறது. இந்தப் பணத்தில் இன்னும் ஒரு படத்தையே தயாரித்திருப்பனே..?” என்று
கோபப்படுகிறார்.
“2010-ம் ஆண்டில்
இருந்து கடந்த எட்டாண்டுகளாக க்யூப் நிறுவனம் இந்த கட்டணத்தின் மூலமாக கோடி, கோடியாக
சம்பாதித்துவிட்டது. இதன் ஒட்டு மொத்தக் கணக்கையும் சேர்த்துப் பார்த்தாலே 600 கோடியைத்
தாண்டிவிடும். அப்போது போட்ட முதலீட்டை க்யூப் நிறுவனம் எடுத்துவிட்டதாகத்தானே அர்த்தம்.
இனியும் அவர்கள் ஏன் கட்டணம் கேட்கிறார்கள்..? இனிமேல் இலவசமாக திரையிட அனுமதிக்கலாமே…?”
என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
“நாங்கள் அந்த அளவுக்கெல்லாம் சம்பாதிக்கவில்லை. எங்களுடைய
வருடாந்திர வரவு-செலவு 100 கோடி அளவுக்கு இருந்தாலும் அதில் தியேட்டர்காரர்களுக்கு
கொடுக்க வேண்டிய பங்களிப்பு, எங்களுடைய தொழிலாளர்களுக்கான சம்பளம், தொழில் நுட்ப வசதிகளுக்காக
வருடந்தோறும் நாங்கள் செய்யும் செலவுகள் எல்லாவற்றையும் கணக்கிட்டால் வருடத்திற்கு
30 கோடிதான் எங்களுக்கு கிடைக்கிறது. அதுவும் இப்போது கடந்த 3 ஆண்டாகத்தான் கிடைத்துள்ளது..
எனவே கட்டணத்தை அறவே நீக்க முடியாது…” என்கிறார்கள் க்யூப் நிறுவனத்தார்.
ஆனாலும், “இந்த க்யூப் வேண்டவே வேண்டாம்.. அதனைத் தூக்கியெறிந்துவிட்டு இதைவிட மிகக் குறைந்தக் கட்டணத்தில் இருக்கும் ஒரு புதிய நிறுவனத்தை நாம் ஆதரிப்போம். அதற்குக் கை கொடுங்கள்…” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
ஆனால் தியேட்டர்காரர்களோ, “எங்களுக்கும், க்யூப் நிறுவனத்திற்குமான ஒப்பந்தம் வலுவானதாக இருக்கிறது. அதை முறித்தால் நாங்கள் அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டஈடு கொடுக்கும்படி இருக்கும். அதனை எங்களால் தாங்கவே முடியாது…” என்கிறார்கள்.
ஆக மொத்தம்.. இரண்டு பக்கமும் இடியாப்பச் சிக்கலாய் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
இந்த நேரத்தில் இந்த க்யூப் கட்டணம் பற்றிய சில விஷயங்களை பார்ப்போம்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 1100 தியேட்டர்களில் 100 தியேட்டர்களில் க்யூப் சிஸ்டத்தை சொந்தமாகவே விலைக்கு வாங்கி வைத்திருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.
மீதமிருக்கும் 1000 தியேட்டர்களில் 100 தியேட்டர்கள் PXD மற்றும் வேறு டிஜிட்டல் முறைகள் உள்ள தியேட்டர்களாக இருக்கின்றன. மீதமுள்ள 900 தியேட்டர்களில் க்யூப் மற்றும் யுஎஃப்ஓ நிறுவனத்தின் சாப்ட்வேரின் மூலமாகத்தான் படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்த டிஜிட்டல் டெலிகேஸ்ட் சர்வீஸ் கடந்த 2011-ம் ஆண்டில்தான் கொஞ்சம், கொஞ்சமாக தமிழகத்தில் துவங்கியது. பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஊர், ஊராக அலைய முடியவில்லையே என்று நினைத்த தயாரிப்பாளர்களும் முதலில் இதற்கு ஒத்து ஊத.. மின்னல் வேகத்தில் மிக வேகமாகப் பரவி.. 2013-ம் ஆண்டிற்குள்ளாக க்யூப் நிறுவனம் தமிழகத்தில் முக்கால்வாசி தியேட்டர்களை ஆக்கிரமிப்பு செய்துவிட்டது.
க்யூப்புக்கு போட்டியாக இருந்த யுஎஃப்ஓ டிஜிட்டல் நிறுவனத்தையும் க்யூப் நிறுவனம் தற்போது கையகப்படுத்திவிட்டதால், அதனையும் சேர்த்து இப்போது கடந்த ஆண்டுவரையிலுமான கணக்கில் 900 தியேட்டர்களை தன் கையில் வைத்திருப்பதாக க்யூப் நிறுவனம் சொல்கிறது.
தயாரிப்பாளர்கள் தங்களது படம் திரையிடப்படும் திரையரங்கு என்ன டிஜிட்டல் பார்மெட்டில் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அந்தந்த டிஜிட்டல் நிறுவனங்களிடம் திரையிடல் கட்டணாக அவர்கள் கேட்கும் பணத்தைக் கட்ட வேண்டும்.
அதன் பின்புதான் அந்தந்த டிஜிட்டல் நிறுவனங்கள் அந்த சினிமாவின் மாஸ்டரிங் காப்பியை வாங்கிக் கொண்டு தங்களது ஹார்ட் டிஸ்க்கில் அவற்றை ஏற்றிக் கொண்டு எந்த ஊரில், எந்த தியேட்டரில் இது திரையிடப்பட வேண்டுமோ அந்தத் தியேட்டரில் இருக்கும் ஹார்ட் டிஸ்க்கில் படம் டவுன்லோடு ஆகச் செய்யும்படி செய்வார்கள். இதற்கென்று சில பார்மாலிட்டிகள், பாஸ்வேர்டுகளும் உண்டு.
தயாரிப்பாளர்கள் க்யூப்புக்கு கட்ட வேண்டிய தொகை ஒரு காட்சிக்கு 325 ரூபாய். இதனை ஒரு வாரத்திற்கு மொத்தமாக சேர்த்து 325 X 4 X 7 = 9.100 ரூபாயாகக் கட்ட வேண்டும்.
ஒரு படம் தமிழகம் முழுவதும் க்யூப் சிஸ்டம் இருக்கும் 100 தியேட்டர்களில் 4 காட்சிகளாக வெளியாகும்பட்சத்தில் 9100 X 100 = – 9 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை ஒரு வாரத்திற்கான திரையிடல் கட்டணமாக முன்கூட்டியே க்யூப் நிறுவனத்தில் செலுத்தியாக வேண்டும்.
இதே படம் முதல் வாரமே நல்ல வரவேற்பைப் பெற்று, அடுத்த வாரமும் அதே தியேட்டர்களில் ஓடும் என்பது உறுதியானால் அடுத்த வாரத்திற்கான பணத்தையும் அந்த வாரம் முடிவதற்குள்ளாக க்யூப் நிறுவனத்தில் செலுத்த வேண்டும்.
இரண்டாவது வாரமும் அந்தப் படம் தியேட்டரில் ஓடும்போது க்யூப் கட்டணம் குறைக்கப்பட்டு 300 ரூபாய் என்று கணக்கிடப்படுகிறது. அதற்கடுத்து மூன்றாவது வாரமும் தொடர்ந்தால் அது 275 ஆகவும், ஷிப்ட்டிங் முறையில் வேறு தியேட்டர்களுக்கு அந்தப் படம் மாற்றப்படும்போது இன்னும் 50 ரூபாய் குறைக்கப்பட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தப் பணத்தை அந்தந்த வாரம் முடிவதற்குள்ளாக கட்டினால்தான், க்யூப் படத்தை ஒளிபரப்பு செய்யும். இதான் தற்போதைய நடைமுறை..!
இதே வேளையில் சாதாரண தியேட்டர்களில் 1-கே தொழில் நுட்ப முறையிலும், ‘சத்யம்’, ‘அபிராமி’, ‘பி.வி.ஆர்.’, ‘ஐநாக்ஸ்’ போன்ற மால் தியேட்டர்களில் 2-கே தொழில் நுட்ப முறையிலும் க்யூப் நிறுவனம் தனது ஒளிபரப்பை செய்து வருகிறது.
மால் தியேட்டர்களில் அல்லது இரண்டு தியேட்டர்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட தியேட்டர்கள் கொண்ட காம்பளக்ஸில் ஒரு படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வேறு, வேறு ஸ்கிரீன்களில் ஷிப்ட்டிங் முறையில் ஓட்டுவதற்காக ஒரு தனி ஸ்கீமை க்யூப் நிறுவனம் வைத்துள்ளது.
இதன்படி ‘சத்யம்’, ‘அபிராமி’, ‘பி.வி.ஆர்.’, ‘ஐநாக்ஸ்’ போன்ற மால் தியேட்டர்கள், 27,500 ரூபாயை கட்டினால் அதே தியேட்டரில் உள்ள எத்தனை ஸ்கிரீன்களில் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அதே படத்தை திரையிட்டுக் கொள்ளலாம்.
இதேபோல் 2, 3 காம்ளக்ஸ் தியேட்டர்கள் கொண்ட ‘உதயம்’, ‘உட்லண்ட்ஸ்’, ‘தேவி’ தியேட்டர் போன்றவை 21,000 ரூபாயைக் கட்டினால் அதே தியேட்டரில் உள்ள எத்தனை ஸ்கிரீன்களில் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அதே படத்தை திரையிட்டுக் கொள்ளலாம்.
இந்தத் திரையிடல் கட்டணத்தை டிடியாகவோ, பணமாகவோ மட்டுமே கட்ட வேண்டுமாம். செக் வாங்குவதில்லையாம். தயாரிப்பாளர்கள் கொடுத்த சில செக்குகள் பவுன்ஸ் ஆன கதை நடந்திருப்பதால், அனைத்து டிஜிட்டல் நிறுவனங்களும் காசோலை வழி பரிவர்த்தனைக்கு முற்றிலுமாக தடை விதித்துவிட்டன.
இதனை கணக்காகவே கணக்கிட்டுப் பார்ப்போம்..!
க்யூப் நிறுவனம் இப்போது ஒரு தியேட்டருக்குரிய திரையிடல் கட்டணமாக ஒரு காட்சிக்கு வசூலிக்கும் தொகை = 325 ரூபாய்
தினமும் 4 காட்சிகள் என்றால் 1 நாளைக்கு = 325 X 4 = 1300 ரூபாய்
ஒரு வாரத்திற்கு என்றால் 7 நாட்களுக்கு = 1300 X 7 = 9,100 ரூபாய்
ஒரு மாதத்திற்கு என்றால் = 9,100 X 4 = 36,400 ரூபாய்
ஒரு வருடத்திற்கு என்றால் = 36,400 X 12 = 4,36,800 ரூபாய்.
இதன்படி பார்த்தால் ஒரு தியேட்டருக்கு, ஒரு வருடத்திற்கு திரையிடல் கட்டணமாக க்யூப் டிஜிட்டல் அமைப்பிற்கு தயாரிப்பாளர்கள் கொடுக்கும் கட்டணத் தொகை 4,36,800 ரூபாய்.
தமிழகத்தில் தோராயமாக இப்போது 900 தியேட்டர்களில் க்யூப் டிஜிட்டல் சிஸ்டம் இருப்பதால் ஒரு வருடத்திற்கான வாடகை கட்டணமாக மட்டுமே 4,46,800 X 900 = 39,31,20,000. – 39 கோடியே 31 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் க்யூப் டிஜிட்டல் நிறுவனத்திற்குக் கிடைக்கிறது.
க்யூப் தமிழகத்தில் கால் பதித்தது 2011-ம் வருடம் என்கிறார்கள். இப்போதைய 900 தியேட்டர்கள் இதன் கைக்கு கிடைத்திருக்க எப்படியும் 5 வருடங்களாவது ஆகியிருக்கும். அதனால் இதுவரையிலும் க்யூப் நிறுவனம் எவ்வளவு தோகையை திரையிடல் கட்டணமாக வசூலித்திருக்கும் என்பதைக் கணக்கிடுவது முடியாத காரியம்.
அதனால் கடைசி 5 ஆண்டுகளுக்கு என்று மட்டும் தோராயமாகக் கணக்கிட்டுப் பார்த்தால் 39,31,20,000 X 5 = 196,56,00,000 ரூபாய்களாகும். அதாவது 196 கோடியே 56 லட்சம் ரூபாயாகும்.
துவக்க நிலையில் 2 ஆண்டுகளுக்கான திரையிடல் கட்டணமாக இதில் பாதி தொகையை சேர்த்து பார்த்தாலும் இதுவரையிலும் கடந்த 7 ஆண்டுகளில் சேர்த்து மொத்தம் 250 கோடி ரூபாயை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களிடத்தில் இருந்து படத்தைத் திரையிடும் கட்டணத் தொகையாக க்யூப் நிறுவனம் பெற்றிருக்கும். இந்தத் தொகையில் கொஞ்சம் குறைவாகவும் இருக்கலாம். அல்லது கூடுதலாகவும் இருக்க வாய்ப்புண்டு.
இதன் கூடவே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களின் மூலமாகவும் க்யூப் நிறுவனத்திற்கு பண வரவு வருகிறது. 2 அல்லது 3 நிமிடம் கொண்ட டிரெயிலரை வெளியிட 60,000 ரூபாயை க்யூப் நிறுவனம் வசூலிக்கிறதாம். இப்படி கிடைக்கும் தொகையில் 60 சதவிகிதத் தொகை தியேட்டர்காரர்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு மேலும் படத்தைத் திரையிட்ட பின்பு காட்சிகள் சிலவற்றை சேர்த்தாலும், சிலவற்றை நீக்கினாலும் அதற்கென தனி சர்வீஸ் கட்டணமாக 50,000 ரூபாயை க்யூப் வசூலித்து வருகிறது.
எங்காவது படம் திருட்டு விசிடியாக வந்துவிட்டால் அது எந்தத் தியேட்டரில் இருந்து படமாக்கப்பட்டது என்பதை கண்டறிய அதற்கான கட்டணமாக 59,000 ரூபாயை க்யூப் நிறுவனம் வசூலித்து வருகிறது.
இதையெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் இந்த 7 ஆண்டுகளில் க்யூப் நிறுவனம் தோராயமாக 400 கோடி ரூபாயை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் மூலமாக பெற்றிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் தயாரிப்பாளர்களோ க்யூப் நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பண வசூல் செய்துவிட்டது என்கிறார்கள். அதற்கான வாய்ப்பில்லை என்றாலும், 400 கோடி அல்லது அதற்கு சற்றுக் கூடுதலாக மட்டுமே இருக்க வேண்டும் என்று சினிமா துறை வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
“அதான் 400 கோடியை வசூலிச்சாச்சே.. போதாதா..? அப்படியே விட்ரலாமே..?! இப்போதும் எதற்கு கட்டணம் வசூலிக்கிறீர்கள்…?” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
க்யூப் நிறுவனமோ, “இது பழைய புரொஜெக்டர் போன்று பிலிமை தூக்கி லூப்பில் மாட்டி அப்படியே சுத்திவிட்டு கோச்சிங்கில் நுழையவிட்டு பத்தியை பொருத்திவிட்டு அப்படியே ஓட்டிவிடக் கூடியதல்ல..
ஒரு புதிய படம் வந்தால் அதனை க்யூப் சிஸ்டத்துக்கேற்ற சாப்ட்வேரில் மேலும் மெருகேற்ற வேண்டும். க்யூப் சாப்ட்வேருக்கேற்றவாறு படத்தின் பிரதியை வடிவமைக்க வேண்டும். ஒவ்வொரு புதிய படத்திற்கும் இந்த மெருகேற்றல் தேவைப்படுகிறது. இந்த க்யூப் சாப்ட்வேரை படத்துக்கு படம் புதிதாக பயன்படுத்தியே ஆக வேண்டும் என்பதால் கட்டணம் எங்களுக்கு மிகவும் அவசியமாகிறது.
அதோடு க்யூப் சிஸ்டத்தை பராமரிக்க ஊருக்கு 2 நபர்களை வேலைக்கு வைத்திருக்கிறோம். இதன்படி பார்த்தால் தமிழகம் முழுவதும் எங்களுடைய நிறுவனத்திற்காக 700 பேர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு சம்பளம் தந்தாக வேண்டும். தியேட்டர்களில் இருக்கும் க்யூப் சிஸ்டத்தின் முழு பராமரிப்பையும் நாங்களேதான் மேற்கொள்கிறோம். தியேட்டர்காரர்களிடத்தில் சல்லிக் காசுகூட வாங்கவில்லை. இதற்கெல்லாம் தனியாக பணம் செலவாகிறது. இதற்கெல்லாம் கட்டணம் வாங்காமல் இருக்க முடியாது.
க்யூப் சிஸ்டம் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட வேண்டியது. கம்ப்யூட்டர் சாப்ட்வேர்கள் போல.. அதனால் அதனை அப்படியே தியேட்டர்காரர்கள் பொறுப்பில்விட்டுவிட்டு போக முடியாது. அப்படியே கொடுத்தாலும் எங்களுடைய தினசரி உதவியின்றி தியேட்டர்காரர்களால் அதனை பராமரிக்க முடியாது…” என்கிறார்கள்.
“அப்படியானால் நீங்கள் கழன்று கொள்ளுங்கள். நாங்கள் எங்களுக்கு ஏற்ற ஆளை வைத்து நடத்திக் கொள்கிறோம்…” என்கிறார்கள் தயாரிப்பாளர் சங்கத்தினர். “இதனை நீங்கள் தியேட்டர்காரர்களிடம் பேசிக் கொள்ளுங்கள். அவர்கள் ஒத்துக் கொண்டால் எங்களுக்குக் கவலையில்லை…” என்கிறார்கள் க்யூப் நிறுவனத்தார்.
தியேட்டர்காரர்களோ, “எங்களது தியேட்டரில் எந்த டிஜிட்டல் நிறுவனத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். வெளியாட்களுக்கு அதிலும் குறிப்பாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உரிமையே இ்ல்லை…” என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.
தியேட்டர்காரர்களை பொறுத்தவரையில் தயாரிப்பாளர் சங்கம் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை அவர்கள் விரும்பவில்லை. இது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபடியும் புரொஜெக்டர் அறையில் குழப்பம் செய்து தங்களுக்குத் தாங்களே சூனியம் வைத்துக் கொள்ளவும் அவர்கள் விரும்பவில்லை. அதனால் க்யூப் பக்கமே கை தூக்கி நிற்கிறார்கள்.
க்யூப் நிர்வாகமும் சொன்ன சொல் தவறாமல், கொடுத்த வாக்கை மீறாமல், தியேட்டர் உரிமையாளர்களுக்குரிய ஷேரை கண் கலங்க வைக்காமல் கொடுத்துவிடுவதால் தியேட்டர்காரர்களுக்கு க்யூப், இப்போது சகோதர நிறுவனம்போல் ஆகிவிட்டது. அதனை அவர்கள் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள் என்பது கண்கூடாகத் தெரிகிறது.
தயாரிப்பாளர் சங்கத்தில் குறிப்பாக அதன் தலைவரான விஷால், மும்பையில் இருந்து கே.எஸ்.எஸ். நிறுவனம் என்ற டிஜிட்டல் நிறுவனத்தின் ‘இ-சினிமா’ என்னும் சாப்ட்வேரை கொண்டு வர நினைக்கிறார். ஆனால் இதற்கு தியேட்டர்காரர்கள் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள். “எங்களுக்கு அது தேவையில்லை…” என்று ஆரம்பத்திலேயே மறுதலித்துவிட்டார்கள்.
“அந்த ‘இ-சினிமா’ டிஜிட்டல் சர்வீஸ் மும்பையிலேயே தோல்வியடைந்த திட்டம்” என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அந்த ‘இ சினிமா’ சிஸ்டத்தின் மூலமாக மிக எளிதாக திருட்டு டிவிடியை உருவாக்க முடியுமாம். காப்பி செய்யப்பட்டதை கண்டுபிடிக்கவே முடியாதாம். “இப்போதே இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தும் சில தியேட்டர்களில் திருட்டு டிவிடியில் படமாக்குகிறார்கள். இந்த லட்சணத்தில் அந்த ‘இ-சினிமா’வை இங்கே கொண்டு வந்தால் என்ன நடக்கும்…?” என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.
அதோடு தொழில் நுட்பமும் இப்போது மிக வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. திரைப்படங்களை வெளியிடும் டிஜிட்டல் முறையில் 1-கே, 2-கே, 4-கே என்று ஒளிப்பதிவின் தரம் அப்கிரேட் ஆகி வந்திருக்கிறது. இப்போது க்யூப் 4-கே அளவுக்கான ரிசல்யூஷனில் படத்தைத் திரையிடும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. ஆனால் அந்த மும்பை நிறுவனத்தின் ‘இ சினிமா’ டிஜிட்டல் சிஸ்டம் 1-கே அளவுக்குத்தான் ஒளிபரப்பு செய்யுமாம்.. “தொழில் நுட்பம் மேல போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் தயாரிப்பாளர் சங்கம் ஏன் சட்டையைப் பிடித்து கீழே இழுக்கிறது…?” என்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.
இப்போது கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகியவை இப்போதைய தொகையில் இருந்து 20 முதல் 21 சதவிகிதம்வரையிலுமான கட்டணக் குறைப்புக்கு ஒப்புக் கொண்டு ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றுவிட்டன. ஆனால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மட்டுமே இதற்கு ஒப்புக் கொள்ள மறுத்து இப்போதுவரையிலும் ஸ்டிரைக்கை நடத்தி வருகிறது.
இப்போது க்யூப் நிறுவனம் தமிழகத்தில் வாங்கி வரும் ஒரு காட்சிக்குரிய கட்டணமான 325 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக குறைப்பதாக இறங்கி வந்திருக்கிறது. இதன்படி பார்த்தால் ஒரு வாரத்திற்கான கட்டணமாக 6,000 ரூபாய்தான் இருக்கும்.
இதேபோல் மால்களுக்கான பேக்கேஜிங் கட்டணத்தை 27,500 ரூபாயில் இருந்து 21,000 ரூபாயாக குறைக்கவும், காம்ளக்ஸ் தியேட்டர்களின் பேக்கேஜிங் கட்டணத்தை 21,000 ரூபாயில் இருந்து 14,000 ரூபாயாக குறைக்கவும் க்யூப் நிறுவனம் ஒப்புக் கொண்டிருக்கிறது.
இந்த அளவுக்கான கட்டணக் குறைப்பையும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்து ‘ஸ்டிரைக் தொடரும்’ என்று அறிவித்திருக்கிறது. க்யூப் நிறுவனமோ, “இதற்கு மேலும் தங்களால் கட்டணக் குறைப்பை செய்ய முடியாது…” என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டது. இதனால்தான், “இனிமேல் திரையரங்கு உரிமையாளர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை…” என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது.
திரையரங்கு உரிமையாளர் சங்கமோ தயாரிப்பாளர் சங்கத்தை ஒரு பொருட்டாகவே கருதாமல், மாநில அரசிடம் பல கோரிக்கைகளை முன் வைத்து ‘அது தீர்க்கப்படாவிட்டால் மார்ச் 16 முதல் தாங்களும் தியேட்டர்களை மூடப் போவதாக’ எச்சரித்துள்ளது.
திரையரங்கு உரிமையாளர்கள் எப்படியும் தங்களுடன் பேச்சுவார்த்தை வரப் போவதில்லை என்பதை உணர்ந்திருக்கும் தயாரிப்பாளர் சங்கம், மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும்விதமாக, அதே மார்ச் 16-ம் தேதி முதல் ஒட்டு மொத்தமாக தமிழ்த் திரையுலகமே வேலை நிறுத்தம் செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
தற்போதைக்கு இரு தரப்பினரின் எதிர்பார்ப்பே, மாநில அரசு இதில் தலையிட்டு ஒரு சுமூகத் தீர்வை காண்பிக்க வேண்டும் என்பதுதான்.
தமிழக முதலமைச்சரும், அமைச்சர் பெருமக்களும்.. ‘நித்ய கண்டம் பூரண ஆயுசு’ என்பதைபோல தள்ளாடியபடியிருக்கும் தங்களது ஆட்சியை நினைத்து பயத்தில் உள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் வரவிருக்கும் எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லுமா.. செல்லாதா என்கிற தீர்ப்பை எதிர்நோக்கி பதட்டத்துடன் காத்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.
போதாக்குறைக்கு தமிழ்ச் சினிமாவின் இரண்டு சூப்பர் ஸ்டார்களும் கோட்டையை நோக்கி ஆயிரம் கனவுகளுடன் நகரத் தொடங்கிவிட்டதால் இந்த விஷயத்தில் மாநில அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்க வைக்கும் என்று ஏவி.எம். ஸ்டூடியோவின் எதிரில் இருக்கும் பரோட்டா கடையில் பரோட்டா மாஸ்டர்கூட நம்ப மாட்டார்..!
இதனை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினரும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினரும் நம்பியிருக்கிறார்கள் என்றால், எல்லாம் வல்ல முருகப் பெருமான் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நடப்பதை காண நாமும் காத்திருப்போம்..!
இதைவிடவும் நமக்கு வேறு வழியில்லை..!
|
Tweet |
0 comments:
Post a Comment