05-03-2018
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
`வசந்தகாலப் பறவை’, `சூரியன்’, `ஐ லவ் இந்தியா’, `இந்து’, `திருமூர்த்தி’, `கல்லூரி வாசல்’, ‘மாட்டுத் தாவணி’ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் பவித்ரன். விஜய் நடித்த ‘மாண்புமிகு மாணவன்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை தயாரித்தவரும் இவரே. நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் இயக்கியிருக்கும் படம் ‘தாராவி”.
ஏ.ஆர்.எஸ். இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மும்பை நல்லரசன், பாலசுப்ரமணியன் இருவரும் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் முற்றிலும் புதுமுகங்களே நடித்துள்ளனர். சதிஷ் பாலா, மும்பை கிருஷ்ணா, பிரபு சதீஷ், லிங்கம் சினா, லியோ ஆகியோருடன் சைமன் சோமு, மாறன் நாயகம், கதிர், ஷ்யாம், லதா ஆகியோரும் நடிக்க கதாநாயகியாக சுனுலட்சுமி நடித்திருக்கிறார்.
மணிகண்டன் ஒளிப்பதிவையும், வி.டி.விஜயன் படத் தொகுப்பையும், மும்பை மாஸ்டரான அப்பாஸ் சண்டை பயிற்சியையும், பாரதி அகர்வால் நடன பயிற்சியையும் மேற்கொண்டுள்ளனர். பல விளம்பர படங்களுக்கு இசையமைத்துள்ள பவித்ரனின் மகனான அபய் பவித்ரன் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். புளியந்தோப்பு பழனி, பவித்ரன் இருவரும் பாடல்களை எழுதியுள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பவித்ரன்.
மும்பையில் தாராவி பகுதியில் கேபிள் டிவி உரிமையாளரிடம் வேலை பார்க்கும் ஐந்து இளைஞர்கள் பற்றிய கதைதான் ‘தாராவி’. இவர்களில் ஒருவனை அழகுப் பதுமையான கல்லூரி மாணவி காதலிக்கிறாள். அவளுடைய பெற்றோர் வசதி மிக்கவர்கள். ஆனால் இவர்களில் காதலுக்கு வேறொரு ரூபத்தில் பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையிலிருந்து நண்பர்கள் உதவியுடன் தப்பித்து மணம் முடித்தார்களா…? இல்லையா…? என்பதுதான் படத்தின் கதைக் களம்.
இப்படி சுருக்கமாகச் சொல்ல முடிந்த இந்தப் படத்தை கொலை, கொலையாய் குதறியெடுத்திருக்கிறார்கள். இயக்குநர் பவித்ரன் இன்னமும் 1990-95 காலக் கட்டத்தைவிட்டு வெளியில் வரவில்லை போலும். அத்தனை மொக்கையாய் படத்தை எடுத்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் இருந்து மும்பை தாராவிக்கு நாயகி சுனுலட்சுமி படிப்பதற்காக வருகிறார். அங்கு அவருடைய அண்ணன் வீட்டில் தங்கிப் படிக்கிறார். இவரைப் பார்ப்பதற்காகவே தமிழ்நாட்டில் இருந்து திருட்டு லாரியில் ஏறி மும்பை வந்து சேர்கிறார் ஹீரோ சதீஷ் பாலா. இருவரும் பால்ய கால நண்பர்கள்..!
ஹீரோ சதீஷின் ஊர்க்கார நண்பர்கள் தாராவி பகுதியில் ஒரு கேபிள் டிவி நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். அவர்களுடன் தங்கிக் கொண்டு தனது காதலியைத் தேடிப் போகிறார். கல்லூரி வாசலிலேயே சுனுலட்சுமியை பார்த்து பேசி விடுகிறார் சதீஷ்.
தற்செயலாக இதைப் பார்த்துவிடும் சுனு லட்சுமியின் அண்ணன் சதீஷையும் அவனது நண்பர்களையும் தனது வீ்ட்டிற்கு அழைத்து வந்து தனது கெஸ்ட் ஹவுஸில் தங்க வைக்கிறார். சுனு லட்சுமியை ஒன் சைடாக காதலித்து வரும் பாண்டா என்னும் லோக்கல் பார்ட்டி, சதீஷ் பற்றி சுனு லட்சுமியின் அண்ணனிடம் பற்ற வைக்கிறான்.
சுனு, சதீஷ் காதலிக்கிறார்கள் என்பதே இப்போதுதான் படம் பார்க்கும் ரசிகர்களுக்கே தெரிய வருகிறது. அண்ணன் சதீஷை அடித்து உதைத்து வீட்டைவிட்டு விரட்டி சுனுவை வீட்டுக் காவலில் வைக்கிறார். சுனு வீட்டில் இருந்து தப்பித்து சதீஷிடம் சரணடைகிறார். சதீஷ் தனது நண்பர்கள் துணையுடன் தனியாக சுனு லட்சுமியுடன் தங்குகிறார்.
இதே நேரம் மும்பை-புனே தேசிய நெடுஞ்சாலையில் சமீப காலமாக சரக்கு லாரிகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதைக் கண்டுபிடிக்க ஒரு ஸ்பெஷல் போலீஸ் டீம் அமைக்கப்படுகிறது. இந்த டீமின் விசாரணையில் சிக்குகிறார் சுனு லட்சுமியின் அண்ணன்.
இவருக்குப் பின் ஹீரோ சதீஷும் இந்த வழக்கிற்கு தேவைப்படுகிறார். அது ஏன் என்பதுதான் படத்தில் இருக்கும் சின்ன டிவிஸ்ட்.. இதுக்குத்தான் இத்தனை அக்கப்போர்..!
படத்தில் கதை இருக்கிறது. ஆனால் அரதப் பழசான கதை. திரைக்கதை இருக்கிறது. ஆனால் அதில் ஆயிரம், ஓட்டை உடைசலோடு கிழிந்து தொங்குகிறது. நடிப்பு இருக்குறது. அவர்கள் காட்டுவதுதான் நடிப்பு என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
நடிப்புதான் இப்படியென்றால் ஒளிப்பதிவு, இசை, படத் தொகுப்பு, பின்னணி கோர்ப்பு எல்லாவற்றிலும் படம் பல்லிளிக்கிறது. ஒளிப்பதிவு ஒரே ஷாட்டிலேயே போய், போய் வந்து கொண்டிருக்கிறது. பல நடிகர்கள் பேசும் வசனங்கள் டப்பிங்கில் சின்க் ஆகவே இல்லை. அவர்கள் வாயசைத்து முடித்தவுடன் வசனம் ஒலிக்கிறது.. காட்சி கோணங்கள் எங்கோ இருக்கோ.. கதாபாத்திரங்கள் எங்கயோ பார்த்து பேசுகிறார்கள்.
முதலில் சுனுவும், சதீஷும் காதலர்களா இல்லையா.. என்பதையே சொல்லாமலேயே படத்தை இடைவேளை வரைக்கும் கொண்டு வந்துவிட்டார் இயக்குநர். கல்யாணம் செய்து கொண்டார்களா இல்லையா என்பதையும் சொல்லாமல் அதையும் கடைசியில்தான் சொல்கிறார்.
படத்திலேயே பாடவதியான ஒரு கேரக்டர் என்றால் அது பாண்டே என்ற மும்பை லோக்கல் ரவுடி கேரக்டர்தான். பேசுறார்.. பேசுறார் பேசிக்கிட்டேயிருக்கார். படத்திற்கு ஏதாவது பைனான்ஸ் செய்திருக்கிறார் போலிருக்கிறது.. கடைசி காட்சிவரையிலும் உடன் வந்து கடுப்பு மேல் கடுப்பைக் கிளப்பியிருக்கிறார்.
நமக்குத் தெரிந்த முகம் அறம் சுனு லட்சுமிதான். இதில் அவர் முற்றிலும் வீணடிக்கப்பட்டிருக்கிறார். அவர் என்ன செய்வார் பாவம்.. இயக்குநர் பயன்படுத்தவில்லை. அவ்வளவுதான்..!
ஹீரோ, அவரது நண்பர்கள், சுனு லட்சுமியின் அண்ணன், அண்ணி, மாமியார், கேபிள் டிவி நடத்துபவர் என்று எல்லோருமே ஏதோ கேமிராவுக்கு முன்பாக சொல்லிக் கொடுக்கப்பட்ட வசனத்தை அப்படியே ஒப்பித்திருக்கிறார்கள். நடிப்பு.. ம்ஹூம்.. அதையெல்லாம் யார் கேட்டது..
இதைவிட அபாரமான நடிப்பைக் கொண்டிருப்பது மும்பை போலீஸில் துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் அன்பர்கள்தான். மும்பை போலீஸுக்கு இப்படியொரு கொடுமை நடந்திருக்கவே கூடாது..! டிவி சீரியலில்கூட அழகாக நடிக்க வைத்திருப்பார்கள்..!
பவித்ரனின் மகன்தான் இசையமைத்திருக்கிறார். சாலக்குடியில் ஒலிக்கும் பாடல் ஓகேதான். ஆனால் நடனம்..? இதுக்கு சாலக்குடி எதுக்கு..? பக்கத்துல சாலிகிராமத்துலேயே படமாக்கியிருக்கலாம்..!
மும்பையை அழகாகக் காட்டுவார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை. தாராவியின் பிரம்மாண்டத்தை காட்டுவதாகச் சொல்லி ஒரு சேஸிங் காட்சியை மட்டுமே பார்க்கும்படி படமாக்கியிருக்கிறார் இயக்குநர். மும்பையின் மிகப் பெரிய திருவிழாவான விநாயகர் ஊர்வலத் திருவிழாவிலும் ஒரு காட்சியை திணித்து படமாக்கியிருக்கிறார்கள். அவ்வளவுதான்..!
எல்லாவிதத்திலும் சொதப்பலைக் காட்டியிருக்கும் இந்தப் படத்தை உண்மையிலேயே பவித்ரன்தான் இயக்கினாரா அல்லது வேறு யாராவது அவரது பெயரை வைத்து இயக்கினார்களா என்று சி.பி.ஐ. விசாரணை வைத்து கண்டறிய வேண்டும். அந்த அளவுக்கு படம் அதி அசுர மொக்கையாக இருக்கிறது..!
ம்ஹூம்.. சொல்வதற்கு ஒன்றுமில்லை..!
|
Tweet |
0 comments:
Post a Comment