07-01-2018
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
S Bioscope Productions சார்பில் தயாரிப்பாளர் ஜே.பி.ஆர்., தயாரித்து இயக்கியிருக்கும் படம் இது.
இந்தப் படத்தில் விஸ்வந்த், ரித்விகா, ஆடம்ஸ், ஏ.வெங்கடேஷ், விஜய் கிருஷ்ணராஜ், நித்யா ரவீந்தர், பேபி அம்ருதா, கேஸியான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – மகேஷ் கே.தேவ், இசை – ஆஷிஷ் உத்ரியன், பாடல்கள் – கார்த்திகேயன், ஜே.பி.ஆர்., படத் தொகுப்பு – தீபக், கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் – ஜே.பி.ஆர்.
கதையின் நாயகனான விஸ்வந்த் உடனேயே பணக்காரனாக வேண்டும் என்று துடிப்பில் உள்ளவர். இவருடைய அக்காள் நித்யாவின் கணவரான விஜய் கிருஷ்ணராஜ் பெரும் தொழிலதிபர். அக்கா வீடு உள்ளூரிலேயே இருந்தாலும் அவர்களுடன் இருக்காமல் தனியே வீடு எடுத்து தனது நண்பர்களுடன் இருக்கிறார் விஸ்வந்த்,
ஒரு நண்பருக்கு வாங்கிய கடன் தொகை மூன்று லட்சமாகி கழுத்தை நெறிக்கிறது. இன்னொரு நண்பனுக்கு அவனது அப்பாவின் மருத்துவ சிகிச்சைக்காக உடனடியாக மூன்றரை லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. இப்படியொரு இக்கட்டான சூழலில் தனது அக்காவின் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல அக்கா வீட்டுக்கு வருகிறார் விஸ்வந்த்.
அங்கே கட்டுக்கட்டாய் பணம் இருப்பதை பார்த்து சஞ்சலப்படுகிறார் விஸ்வந்த். அக்காவுக்குத் தெரியாமலேயே அக்கா பர்ஸில் இருந்து பணத்தைத் திருடிக் கொண்டு வீட்டுக்கு வருகிறார்.
இவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் ஏ.வெங்கடேஷ் அவர்களைப் பார்க்க வருகிறார். அவர் ஒரு பங்களாவில் வாட்ச்மேன் வேலை பார்க்கிறார். அந்த பங்களாவில் யாருமில்லை. உரிமையாளர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். இதனால் அந்த பங்களாவிற்கு அவ்வப்போது சென்று அனைவரும் மது அருந்துவது வழக்கம்.
அன்றைக்கும் அப்படியொரு பார்ட்டி மூடில் அங்கே கூடியிருக்கிறார்கள் நால்வரும். இப்போது திடீரென்று பணத்தின் தேவை குறித்து அவர்களிடையே பேச்சு எழுகிறது. எப்படியாவது பணத்தை சம்பாதிக்க நினைக்கும் விஸ்வந்த் தனது அக்காள் மகளை கடத்தி வந்து தனது அக்கா, மாமாவிடம் பணம் சம்பாதிக்கும் திட்டத்தைச் சொல்கிறார்.
ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் ஊரின் பெரிய ரவுடியின் தங்கையான ரித்விகாவை கடத்தி வந்து அந்தக் கடத்தல் சம்பவம் வெற்றி பெறாமல் போகவே ரித்விகாவை கொலை செய்து அதே பங்களாவின் தோட்டத்தில் புதைத்து வைத்திருக்கிறார்கள்.
இதைச் சொல்லிக் காட்டும் வெங்கடேஷ் மீண்டும் ஒரு விஷப் பரீட்சை வேண்டாம் என்று தடுக்கிறார். ஆனால் விஸ்வந்த் தனது கொள்கையில் உறுதியாய் இருக்க அனைவரும் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொள்கிறார்கள்.
அக்காவின் குழந்தையைக் கடத்தி முதலில் 3 கோடியைக் கேட்டு வாங்குகிறார்கள். பின்பு குழந்தைக்காக சொத்து முழுவதையும் தருவேன் என்று புலம்பும் அக்கா-மாமாவின் அழுகையைப் பார்த்து கூடுதலாக 10 கோடியை பெறுகிறார்கள்.
ஆனால் அன்றைய இரவில் கடத்தல்காரர்களுடன் தங்கியிருந்த விஸ்வந்தை குழந்தை பார்த்துவிடுகிறாள். இதையடுத்து என்ன செய்வது என்று யோசித்த மற்றவர்கள் குழந்தையையும் கொன்றுவிடுவதே தங்களுக்கு நல்லது என்று முடிவெடுக்கிறார்கள்.
விஸ்வந்த் தான் தூக்கியெடுத்து வளர்த்த பிள்ளை என்று அழுது, புரண்டும் கடைசியாக குழந்தையை கொலை செய்து ரித்விகாவின் புதைகுழிக்கு அருகிலேயே புதைக்கிறார்கள்.
முன்பு ரித்விகாவை புதைத்தவுடன் பேயாக எழுந்து வரக் கூடாது என்று நினைத்து அந்தப் புதை குழி மேல் பிள்ளையார் சிலையை வைக்கிறார்கள். ஆனால் குழந்தையின் புதை குழி மீது அது போன்று தெய்வச் சிலை எதையும் வைக்காமல் விட்டுவிடுகிறார்கள்.
இதனால் குழந்தை பேயாக மாறி வீட்டுக்குள் வந்து இவர்களை பழி வாங்கத் துடிக்கிறாள். பேயிடமிருந்து இவர்கள் தப்பித்தார்களா.. இல்லையா என்பதுதான் மீதமுள்ள திரைக்கதை.
படத்தின் துவக்கத்தில் இருந்து குழந்தை கடத்தல்வரையிலும்கூட ஒரு திரில்லர் படமாக வந்திருந்தது. ஆனால் குழந்தையைக் கொன்றவுடன் பேய்ப் படமாக உருவெடுக்க ஆரம்பித்துவிட்டது. அதுதான் படத்திற்கும் சவக்குழியைத் தோண்டிவிட்டது.
பேய் தொடர்பான காட்சிகளை பட்ஜெட் பற்றாக்குறையால் சொதப்பலாக படமாக்கியிருக்கிறார்கள். அதிலும் குழந்தை மற்றும் ரித்விகாவின் பேய் மேக்கப்பை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. இதுதான் படத்தின் மிகப் பெரிய பின்னடைவு.
அதோடு பேய் பழி வாங்குதல் காட்சிகள் முழுவதுமே ‘மொக்கை’ என்பதற்கு மிகப் பெரிய உதாரணமாகியிருக்கின்றன. பேய் தொடர்பான திரைக்கதையே இல்லாமல் கொண்டு போயிருந்தால்கூட நன்றாகத்தான் இருந்திருக்கும். இயக்குநரின் தவறு அவரது படைப்பை சிதைத்துவிட்டது.
சின்னச் சின்ன வேடங்களில் நடித்தும், ‘கபாலி’ படத்தில் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடித்திருக்கும் விஸ்வந்துதான் இதில் நாயகனாக நடித்துள்ளார். உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணமே இல்லாமல், எப்படியாவது குறுக்கு வழியிலாவது பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒரு கெட்ட எண்ணம் கொண்ட கேரக்டர் ஸ்கெட்ச்சில் அதற்கேற்ப நடித்திருக்கிறார்.
கெட்டவனாக நடிப்பது எத்தனை எளிது என்பதை இந்தப் படத்தில் விஸ்வந்தை பார்த்தே தெரிந்து கொள்ளலாம். குழந்தை தன்னை பார்த்துவிட்டது என்பதற்கு பிறகுதான் நிழல் உலகம் மறைந்து நிஜ உலகம் தெரிந்து தான் தூக்கி வளர்த்த பெண்ணாச்சே என்று அழுது, புலம்புகிறார். நல்ல நடிப்பு.
இவருக்கடுத்து வயதுக்கேற்ற நடிப்பைக் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஏ.வெங்கடேஷ். கடத்தல் திட்டத்திற்கு முதலில் ஒத்துக் கொள்ள மறுத்து பல லாஜிக் கதைகளைப் பேசும் ஏ.வெங்கடேஷ்தான் கடைசியில் குழந்தையைக் கொல்லச் சொல்கிறார். பணத்தைப் பார்த்தவுடன் மனம் மாறும் ஒரு மனிதனாக அழுத்தமாக தனது நடிப்பை பதிவு செய்திருக்கிறார். அஞ்சலி குழந்தையாக நடித்திருக்கும் பேபி அம்ருதா அழகு.. நடிப்பிலும் கொஞ்சியிருக்கிறார்.
விஜய் கிருஷ்ணராஜூம், நித்யாவும் அப்பா… அம்மாவாக.. எப்படி பாசமாக இருப்பார்களோ.. அது போல.. எப்படி அழுது புலம்புவார்களோ… அது போலவே நடித்திருக்கிறார்கள். இறுதியில் பாரிச வாயு தாக்கி ஒரு பக்கம் செயல் இழந்த நிலையில் வாழ்க்கைத் துணையையும் இழக்கும் விஜய் கிருஷ்ணராஜின் நிலைமை பரிதாபம்.
சின்ன பட்ஜெட் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிவது படத்தின் ஒளிப்பதிவினால்தான். இன்னும் கொஞ்சம் தரம் உயர்ந்த கேமிராவை பயன்படுத்தி கலர் கரெக்சனையும் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பின்னணி இசையில் மட்டுமே ஜொலிக்கிறார் இசையமைப்பாளர் ஆஷிஷ் உத்ரியன். இரண்டே பாடல்கள்.. இதயம் துடிக்கும் சப்தம் கேட்டேன் பாடல் குடும்ப சரிதத்தை ரசிக்க வைத்திருக்கிறது. கோடி கோடியாய் பணம் கேட்டேன் பாடல் அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைத்திருக்கிறது. மாண்டேஜ் காட்சிகளாக தொகுத்திருப்பதால் தப்பித்தார்கள்..!
தனது நிறுவனத்தையே நம்பி கொடுப்பதற்கு மாமா காத்திருக்கும் நேரத்தில் பேராசைப்பட்டு நிறையவே பணத்தை திருட வேண்டும் என்று நினைக்கும் விஸ்வந்தின் செயல் தவறு என்பதை அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சொல்லவில்லை. மாறாக.. பணத் தேவைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை போல இயக்குநர் அழுத்தமாக வசனங்களை வைத்திருக்கிறார். இது தவறான வழியை போதிப்பது போலத்தான் உள்ளது.
கொலை செய்துவிட்டு சமாதியின் மீது தெய்வச் சிலையை வைத்தால் பேயை நம்மை அண்டவிடாது தெய்வம் என்கிற குருட்டு நம்பிக்கையை இந்தப் படத்தில்தான் முதன்முதலாக காண்கிறோம். இந்த அளவுக்காக இயக்குநரிடம் கற்பனை வறட்சி இருக்கும்..?
இத்தனைக்கும் ஒரே காரணம் பணம்.. பணம் இல்லையேல் இங்கு எதுவும் இல்லை. யாருக்கும் மரியாதை இல்லை. மதிப்பும் இல்லை. உயிரும் இல்லை என்பதால்தான் வாலிப வயதில் பல இளைஞர்கள் வழி தவறிப் போகிறார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்ல வந்திருக்கிறது இத்திரைப்படம்.
ஆனால் முக்கால் கிணறு தாண்டியவுடன் கதை டிஸ்கஷனில் எந்த ‘மகாத்மா’ கதையைத் திசை திருப்பியது என்று தெரியவில்லை. படத்தின் தன்மையே மாறிவிட்டது..!
ஓநாய்கள் ஜாக்கிரதை..!!
|
Tweet |
0 comments:
Post a Comment