26-01-2018
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சந்தோஷ் T.குருவில்லா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
2016-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ‘நிமிர்’ திரைப்படம்.
படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாகவும், நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் இருவரும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும், சமுத்திரக்கனி, இயக்குநர் மகேந்திரன், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், சண்முகராஜ், ஜார்ஜ், துளசி, கஞ்சா கருப்பு, சம்பத் ராம், இமான் அண்ணாச்சி, சென்றாயன், பினிஷ் கொடியேரி, ராஜ்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – என்.ஏகாம்பரம், இசை – தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத், சண்டை பயிற்சி – ராஜசேகர், எழுத்து, இயக்கம் – பிரியதர்ஷன்.
பிரபல இயக்குநர் ஆஷிக் ஆபு தயாரிப்பில் திலீஷ் போத்தனின் இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ திரைப்படம் வசூலையும் வாரிக் குவித்தது. விருதுகளையும் வாரிக் குவித்தது.
4.50 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் 20 கோடிக்கும் மேல் சம்பாதித்து கொடுத்தது. அதேபோல் 2016-ம் ஆண்டுக்கான சிறந்த மலையாள திரைப்படத்திற்கான தேசிய விருது, மற்றும் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் இத்திரைப்படம் பெற்றது. இதேபோல் 2016-ம் ஆண்டிற்கான கேரள மாநில அரசின் சிறந்த மலையாளத் திரைப்படத்திற்கான விருதையும், சிறந்த திரைக்கதைக்கான விருதையும் இத்திரைப்படமே பெற்றது.
மேலும் 2016-ம் வருடத்திற்கான விருதுகளில் தனியார் டிவி நிறுவனங்கள் வழங்கிய விருதுகள், பிலிம்பேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் இத்திரைப்படம் வாங்கிக் குவித்தது.
இத்தனை சிறப்பு பெற்ற திரைப்படத்தை அதன் அழகும், தரமும் கெடாமல் தமிழுக்கு ஏற்றவாறு சுவையான திரைக்கதையிலும், அழுத்தமான இயக்கத்திலும் செய்து தமிழில் சிறப்பான ஒரு படமாக இதனை வழங்கியிருக்கிறார் இயக்குநர் பிரியதர்ஷன்.
கேரளத்தின் எல்லையில் தாமிரபரணி புரண்டோடிக் கொண்டிருக்கும் அந்தக் கரையோரம் ஒரு சிற்றூர். புகைப்பட கலைஞராகவே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் பெரியவர் மகேந்திரனின் ஒரே மகன் ‘நேஷனல் செல்வம்’ என்னும் உதயநிதி.
அந்த ஊரிலேயே போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கிறார். அப்பா வழியில் ஏதோ தனக்குத் தெரிந்த அளவுக்கு புகைப்படம் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி. இவரது கடைக்குப் பக்கத்தில் போட்டோ லேமினேட் கடை வைத்திருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இவரும் மகேந்திரனும் பால்ய காலத்து நண்பர்கள்.
அதே ஊரில் வசிக்கும் சண்முக ராஜாவின் மகளான வள்ளி என்னும் பார்வதி நாயரை காதலித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி. கல்யாணத்துக்கு பணம் சேர்த்துவிட்டு வீடு தேடி வந்து பெண் கேட்பதாக காதலியிடம் சொல்லி வருகிறார் உதயநிதி.
அந்த காலை வேளையில்.. எங்கிருந்தோ வந்த ஆட்டோ டிரைவரான சென்றாயன் எம்.எஸ்.பாஸ்கருடன் கலகம் செய்ய.. இதைத் தட்டிக் கேட்க செல்கிறார் உதயநிதி. ஆனால் திடீரென்று ஆட்டோவில் இருந்து இறங்கும் லோக்கல் ரவுடியான சமுத்திரக்கனி, உதயநிதியை புரட்டியெடுத்துவிட்டு போகிறார்.
ஊர் நடுவில், பொதுமக்களின் மத்தியில், தனக்கிழைக்கப்பட்ட அவமானத்தால் துடித்துப் போகிறார் உதயநிதி. “என்னை அடித்தவனை ஒரு அடியாவது அடிக்காமல் நான் செருப்பு போட மாட்டேன்…” என்று அந்த இடத்திலேயே அப்போதே சபதமெடுக்கிறார் உதயநிதி.
பார்வதி நாயருக்கு வேறொரு இடத்தில் நல்ல மாப்பிள்ளை வந்திருப்பதால் அவளை மறந்துவிடும்படி உதயநிதியின் வீடு தேடி வந்து கெஞ்சுகிறார் பார்வதியின் அப்பா சண்முகராஜா. ஏற்கெனவே சொல்லிக் கொடுத்ததுபோல பார்வதியும் போனில் உதயநிதியிடம் தான் அவரைவிட்டு விலகிச் செல்ல முடிவெடுத்திருப்பதாகச் சொல்கிறார். யோசிக்காமல் தன் காதலுக்கு குட் பை சொல்கிறார் உதயநிதி.
எப்படியாவது சமுத்திரக்கனியை அடித்துவிட்டு காலில் செருப்பை போட்டுவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி. ஆனால் சமுத்திரக்கனியோ துபாயில் வேலை கிடைத்து சென்றுவிடுகிறார். ஆனாலும் அவர் வரும்வரையில் காத்திருந்து என் சபதத்தை முடிப்பேன் என்று திடமாக இருக்கிறார் உதயநிதி.
இதற்கிடையில் சமுத்திரக்கனியின் தங்கையான நமீதா பிரமோத், உதயநிதியின் கடைக்கு போட்டோ எடுக்க வருகிறார். வந்தவர் உதயநிதியின் அப்ரண்டிஸிப் வேலையை பார்த்து நொந்தவர், ஒரு வார்த்தையில் உதயநிதியை சாய்த்துவிட்டுப் போகிறார்.
‘உனக்கு புகைப்படமெடுக்க தெரியல..’ என்று நமீதா சொன்னது உதயநிதியின் மனதைக் குடைய ஆரம்பிக்க.. தனது அப்பாவின் அடிச்சுவட்டில் புகைப்படக் கலையை கொஞ்சம், கொஞ்சமாக கற்றுக் கொள்கிறார். நமீதாவுக்கே தெரியாமல் அவரை அழகாக படம் பிடித்து பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்க.. அந்த மாதத்திய ‘தங்க மங்கை’ பத்திரிகையில் அட்டைப் படமாக அது வருகிறது.
தன்னுடைய புகைப்படம் பத்திரிகையில் அட்டைப் படமாக வந்திருப்பதைப் பார்த்து நமீதா ஆச்சரியப்பட்டு பெருமைப்படுகிறார். கூடவே காதலும் பிறக்கிறது. எம்.எஸ்.பாஸ்கரின் மகளின் மூலமாக உதயநிதி யார் என்பதும், அவர் எடுத்திருக்கும் சபதம் பற்றியும் அறிகிறார் நமீதா.
உதயநிதி அடிக்கக் காத்திருக்கும் சமுத்திரக்கனியின் உடன் பிறந்த தங்கை நான் என்று உதயநிதியிடம் சொல்லும் நமீதா, “இப்போ உனக்கு உன் சபதம் முக்கியமா.. இல்லை காதல் முக்கியமான்னு நீயே முடிவு செஞ்சுக்க..” என்கிறார்.
இப்போது குழப்பமான மனநிலைக்கு ஆழ்கிறார் உதயநிதி. இறுதியில் அவர் எடுத்த முடிவென்ன..? எடுத்த சபதத்தை முடித்தாரா..? அல்லது காதலிக்காக சபதத்தை விட்டுக் கொடுத்தாரா…? என்பதுதான் படத்தின் சுவையான திரைக்கதை.
தமிழில் ஏற்கெனவே பல மொழி மாற்றுப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் பிரியதர்ஷனிடம் இந்தப் படத்தைக் கொடுத்தது தயாரிப்பாளரின் புத்திசாலித்தனம்..! குறையே வைக்காமல் படத்தின் தன்மையும் கெடாமல் மிக அழகாக கொணர்ந்திருக்கிறார் இயக்குநர் பிரியதர்ஷன். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள் ஸார்..!
உதயநிதி ஸ்டாலினுக்கு பெயர் சொல்லும் படம் இது. அவருடைய இயல்பான கேரக்டருக்கு ஏற்ற, பொருத்தமான வேடம் என்பதால் துணிந்து இறங்கியிருக்கிறார். கொஞ்சமும் குறை சொல்ல முடியாத நடிப்பைக் காட்டியிருக்கிறார் உதயநிதி.
‘சாதாரண அடிதடிக்காப்பா இப்படியொரு சபதம்’ என்கிற கேள்வியை புறந்தள்ளும் பொருட்டு, அந்த அவமானக் காட்சியை மனதைத் தொடும்வகையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். அது தொடர்பான காட்சிகளில் உதயநிதியை புதிதாய் பார்க்கிறோம்..!
இயக்குநர் தனது சிறப்பான இயக்கத்தினால் உதயநிதியின் இயல்பான நடிப்பையே வெறுமனே காட்சிப்படுத்தியிருக்கிறார். ஓவர் என்றோ, நடிக்கவே இல்லை என்றோ சொல்ல முடியாதபடிக்கு இயக்குநரின் திறமை இருப்பதால் உதயநிதிக்கு இந்தப் படம் நிச்சயமாக ஸ்பெஷல் திரைப்படம்தான்.
கேமிராவுக்கேற்ற முகம் இல்லையென்றாலும் அந்த நேட்டிவிட்டியோடு ஒத்துப் போவதால் வள்ளி கேரக்டரில் பொருந்துகிறார் பார்வதி நாயர். கடந்த காலத்தை நினைத்து வருத்தப்படுவதைவிடவும் கிடைக்கும் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்துவிட துடிக்கும் அந்த கேரக்டருக்கு ஓகே என்கிறவகையில் பார்வதியின் நடிப்புத் திறன் வெளிப்பட்டிருக்கிறது.
இரண்டாம் பாகத்தில் வரும் இன்னொரு நாயகியான ‘மலர்விழி’ என்னும் நமீதா பிரமோத் ரசிகர்களுக்கு இன்னொரு இன்ப விருந்தளித்திருக்கிறார். புதுமையான முகம்.. துள்ளலான நடிப்பு.. சிறப்பான தோற்றம், வேகமான நடனம் என்று அறிமுக ஹீரோயினுக்குரிய லட்சணத்துடன் தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகமாகியிருக்கிறார். வாழ்த்தி வரவேற்போம்.
புகைப்படம் எடுத்து முடித்தவுடன் உதயநிதியை முறைத்துப் பார்த்தபடியே அமர்ந்திருக்கும் அந்த ஒரு காட்சியிலேயே மனதை கவர்ந்துவிட்டார் நமீதா. இதேபோல் பேருந்தில் “ஏன் மடியிலேயே உக்காரேன்..” என்று ஒரு பெண் சொன்னவுடன் “இதை முன்னாடியே சொல்லியிருக்கலாமே…” என்று கேஷூவலாகச் சொல்லிவிட்டு அமரும் குசும்பில் ரசிக்க வைத்திருக்கிறார் நமீதா.
இவருக்காகவே பஞ்சு பொதிகளை பறக்கவிட்டு மறைந்திருந்து படம் பிடிக்கும் காட்சியில் கொள்ளை அழகாக இருக்கிறார் நமீதா. ஒரேயொரு காட்சி.. ஒரேயோரு ஷாட்டிலேயே தனது காதலை கண்களாலேயே சொல்லிவிட்டு காட்சியை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறார் நமீதா. வெல்கம் தோழி..!
தமிழ்ச் சினிமாவின் புதுமை இயக்குநரான மகேந்திரன் தனது அழுத்தமான கேரக்டர் ஸ்கெட்ச்சால் வித்தியாசமான நடிப்புடன் இயங்கியிருக்கிறார். தீவிர அழகியல் நிபுணராகவும், புகைப்படக் கலைஞராகவும்.. ஒரு புகைப்படத்தை எடுக்க தவம் செய்வது போல காத்திருந்து எடுக்கும் திறமையுள்ளவராகவும் படத்தில் காட்டப்பட்டிருக்கிறார்.
இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் மலையாள மண்ணுக்கே உரித்தானது. தமிழில் இத்தனை மெதுவாக வைத்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று தமிழ் இயக்குநர்கள் நினைப்பார்கள். ஆனால் இயக்குநர் பிரியதர்ஷன் மூலத்தில் இருந்து புள்ளி அளவுகூட மாற்றாமல் நடிக்க வைத்திருக்கிறார். ஏற்புடையதாய் இருக்கிறது.
மகேந்திரன் காணாமல் போய்விட்டதாக கருதி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கும் நேரத்தில் அவரைப் பற்றி அருள்தாஸும், எம்.எஸ்.பாஸ்கரும் சொல்லும் விஷயங்கள் உண்மையில் நுண்ணிய கலைத் திறன் சார்ந்தவை.
திருப்பதி பெருமாளின் சீரியல் லைட் ஒளிர்வதை பார்த்துவிட்டு கொல்லத்திற்கு சென்று கேபரே டான்ஸ் பார்த்தது மகேந்திரனின் நினைவுக்கு வருவதாகச் சொல்வது அந்தக் கேரக்டருக்கே சிறப்பு சேர்க்கும் காட்சி. எதை பார்த்தாலும் அதில் ஒரு அழகியல்.. அந்த அழகியலின் பின்புலத்தோடு தனக்கு இருக்கும் நெருக்கம்.. இதைத் தொடர்புபடுத்திக் கொள்ளும் அந்த முதிய கலைஞனின் வாழ்க்கையே ஒரு தனி சினிமாவாக எடு்க்கப்பட வேண்டிய கதை..!
சமுத்திரக்கனி கோபக்கார வில்லனாக நடித்திருக்கிறார். முதல் காட்சியில் ஒரு வார்த்தைகூட பேசாமல் கைகளாலும், கால்களால் மட்டுமே பேசியிருப்பவர், கிளைமாக்ஸில்தான் சில வசனங்களை பேசுகிறார். ஆனால் முகத்தில் காட்டும் துணிவு, கோபம்.. இதெல்லாம் சமுத்திரக்கனி சரியான தேர்வு என்பதையே காட்டுகிறது.
எம்,எஸ்.பாஸ்கர் சொல்லத் தேவையே இல்லை. வஞ்சகமில்லாமல் நடித்திருக்கிறார். உதயநிதி, பார்வதி நாயர் பேசுவதற்காக உதவி செய்வது போல் நெஞ்சு வலி வந்து துடிக்க. இதைச் சரி செய்ய அருள்தாஸும், அவரது ஆட்களும் செய்யும் செயல்களும் தாங்க முடியாமல் பாஸ்கர் உதறித் தள்ளிவிட்டு ஓடுவதும் தியேட்டரே அதிர்ந்து சிரிக்கும் காட்சிகள்..!
இமான் அண்ணாச்சியின் தென்னந்தோப்பை யார் கவனித்துக் கொள்வது என்கிற பிரச்சினையில் அருள்தாஸ் செய்யும் பஞ்சாயத்தும் அதைத் தொடர்ந்து நடக்கும் அக்கப்போர்களும் காமெடி கலாட்டா..!
இப்படி படத்தில் பல காட்சிகளில் நினைத்து நினைத்து சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். கடைசி உச்சக்கட்டமாக பார்வதியின் கணவர் “இப்படி என்னைய மாட்டிவிட்டுட்டு நீ தப்பிச்சிட்டியேடா…” என்று பொருமித் தள்ளுவது அட்டகாசம்..!
கருணாகரன் பாஸ்கரின் கடைக்கு வேலையாளாக வந்து பாஸ்கரின் மகளை காதலிக்கும் சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். மற்றும் படத்தில் நடித்த பலருமே மலையாள முகங்களாக அந்த நேட்டிவிட்டி மாறாதவர்களாக அமைந்திருப்பது சிறப்புதான்..!
இயற்கை எழில் கொஞ்சும் அக்கிராமத்தின் அழகையும், தாமிரபரணி ஆற்றின் பல்வேறு வடிவங்களையும், தெருக்களின் பிரம்மாண்டத்துடன் வீடுகளின் உள்ளடக்கத்தையும் சேர்த்தே படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.ஏகாம்பரம்.
இவருடைய ஏகாந்தமான கேமிராவின் கோணத்தில் பல காட்சிகளில் கவிதை நயம் தெரிகிறது. காட்சிகளில் நடிகர்களைத் தவிர மற்ற இயற்கை காட்சிகளும் ஒரு கேரக்டர் போல் சேர்க்கப்பட்டிருக்கிறது. நமீதா பிரமோத்தின் அழகை உதயநிதி படமாக்கும் காட்சியே ஒளிப்பதிவாளரின் திறமைக்கு சான்று..! ஒரு காதல் உணர்வை வெறுமனே காட்சிகளிலேயே சொல்ல வைத்திருக்கிறார் அண்ணன் ஏகாம்பரம்.
இறுதியான சண்டை காட்சியை வழக்கமான சினிமாத்தனமான சண்டையாக இல்லாமல், இயல்பாக நடப்பதுபோல காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இதனாலேயே அதனை ஏற்றுக் கொள்ள முடிகிறது.
தர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் தாமரையின் வரிகளில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். ஆனால் ஒரு முறைதான் என்பது வருத்தத்திற்குரியது. பாடல் காட்சிகளில் வரும் மாண்டேஜ் ஷாட்டுகளே படத்தின் கதையை நகர்த்திக் கொண்டே சென்றதால் பாடல் வரிகளின் மீதான கவன ஈர்ப்பு குறைந்து படத்தில் மூழ்கிவிட்டோம்..!
மிக எளிய கதை. சுவாரஸ்யமான திரைக்கதை.. அழகான ஒளிப்பதிவு. ஈர்ப்பான நடிப்பு.. மொத்தமாய் சிறப்பான இயக்கம்.. இத்தனையும் சேர்ந்து வந்திருப்பதால் இந்தப் படம் உதயநிதிக்கென்றில்லை.. தமிழ்ச் சினிமாவுக்கே ஒரு புதிதான கதைக் களனோடு வந்திருக்கிறது. சினிமா ரசிகர்களுக்கு நிச்சயமாய் பிடிக்கும்..!
அவசியம் பார்க்க வேண்டிய தமிழ்த் திரைப்படங்களில் இதுவும் ஒன்று..!
|
Tweet |
0 comments:
Post a Comment