13-01-2018
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார்.
படத்தில் நாயகனாக சூர்யாவும், நாயகியாக கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் ரம்யா கிருஷ்ணன், சுதாகர், பிரம்மானந்தம், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், கார்த்திக், செந்தில், நந்தா, சத்யன், யோகி பாபு, நிரோஷா, ஆனந்த்ராஜ், வினோதினி, ஆர்.ஜே.பாலாஜி, நடன இயக்குநர் சிவசங்கர், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – விக்னேஷ் சிவன், இசை – அனிருத் ரவிச்சந்தர், ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன், பாடல்கள் – தாமரை, மணி அமுதவன், விக்னேஷ் சிவன், படத் தொகுப்பு – ஷ்ரிகர் பிரசாத், கலை இயக்கம் – டி.ஆர்.கே.கிரண், சண்டை இயக்குநர் – திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன், சிறுத்தை கணேஷ், உடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி, தீபாளி நூர், கிராபிக்ஸ் – VFX Wala, Lorven, கலர் – Knack Studios, விளம்பர வடிவமைப்பு – 24 AM, கபிலன், ஸ்டில்ஸ் – முருகன், ஒப்பனை – முருகன், தயாரிப்பு நிர்வாகம் – மயில்வாகனன், பி.ஏ.சுரேந்தர், பின்பணி தயாரிப்பு நிர்வாகம் – கே.வி.தினேஷ் குமார், தயாரிப்பு – ஸ்டூடியோ கிரீன், தயாரிப்பாளர் – கே.ஈ.ஞானவேல்ராஜா.
2013-ம் ஆண்டில் ஹிந்தியில் வெளிவந்த ‘Special 26’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம்.
ஹிந்தியில் அக்சய்குமார் நடித்த ஹீரோ கேரக்டரில் சூர்யாவும், காஜல் அகர்வால் நடித்த கேரக்டரில் கீர்த்தி சுரேஷும், அனுபம் கெர் நடித்த கேரக்டரில் ரம்யா கிருஷ்ணனும், மனோஜ் வாஜ்பாய் நடித்த கேரக்டரில் கார்த்திக்கும் நடித்துள்ளனர்.
தமிழுக்காக கதையில் பல மாற்றங்களை செய்திருக்கிறார்கள். ஹிந்தியில் கதைதான் ஹீரோ என்று இருந்த நிலையில், தமிழில் அதனை முற்றிலுமாக ஹீரோயிஸ படமாக மாற்றி எடுத்திருக்கிறார்கள்.
சி.பி.ஐ. ஆபீஸராக வேண்டும் என்கிற ஒற்றைக் கனவோடு இருப்பவர் சூர்யா. அதற்காக முதல் கட்டத் தேர்வில் வெற்றி பெற்று இரண்டாம் கட்டமாக நேர்முகத் தேர்வுக்கு செல்கிறார். அங்கே அவரிடம் நேர்காணல் செய்பவர் சி.பி.ஐ.யில் உயரதிகாரியாக இருக்கும் சுரேஷ் மேனன்.
சுரேஷ் மேனனுக்கும், அதே சி.பி.ஐ.யில் செக்சன் கிளார்க்காக வேலை செய்த சூர்யாவின் அப்பாவான தம்பி ராமையாவுக்கும் இடையில் ஒரு பிரச்சினை. ஒரு பெரிய புள்ளியின் வீட்டில் சி.பி.ஐ. சோதனைக்குச் சென்றபோது அந்தப் புள்ளியிடம் பல லட்சம் ரூபாயை லஞ்சமாக வாங்கிக் கொண்டு சோதனையைக் கைவிடுகிறார் சுரேஷ் மேனன்.
அந்தச் சோதனையின்போது உடனிருந்த தம்பி ராமையா இதைப் பார்த்து அதிர்ச்சியானவர், இது பற்றி உயரதிகாரிகளுக்கு கடிதம் மூலமாக தகவல் தெரிவிக்கிறார். இதனால் சுரேஷ் மேனன் தம்பி ராமையா மீது கொலை வெறியில் இருக்கிறார்.
இந்த நேரத்தில் அவருடைய மகனான சூர்யா அதே அலுவலகத்தில் வேலை கேட்டு வந்திருக்க சூர்யாவை தேர்வு செய்ய முடியாது என்று நேருக்கு நேராகச் சொல்லி சூர்யாவைத் திருப்பியனுப்புகிறார் சுரேஷ் மேனன்.
இதனால் பெரும் ஏமாற்றமாகிறார் சூர்யா. இதே சமயம் இவருடைய நெருங்கிய நண்பரான கலையரசனுக்கு போலீஸ் வேலை கிடைக்காமல் போகிறது. பணம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலையில் பணமில்லாமல் தவிக்கிறார் கலையரசன். வேலைக்கு போகாமல் இருந்த கலையரசனை பார்த்து அவருடைய மனைவியே கரித்துக் கொட்டுகிறார்.
இதனால் மனமுடைந்து போன கலையரசன் சூர்யாவின் கண்ணெதிரிலேயே தற்கொலை செய்து கொள்கிறார். இது எல்லாமும் சேர்ந்து சூர்யாவை தவறான பாதைக்குக் கொண்டு செல்கிறது.
வரிசையாக ஏழு பெண் குழந்தைகளைப் பெற்று வைத்திருக்கும் ரம்யா கிருஷ்ணன், சிவசங்கர், செந்தில், சத்யன், ஆகிய நால்வரையும் துணைக்கு வைத்துக் கொண்டு சி.பி.ஐ.யில் இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்வாரோ, அதையெல்லாம் இல்லீகலாக செய்யத் துவங்குகிறார் சூர்யா.
இதன் முதல்படியாக முறைகேடாக ஊழல் செய்து பணம் சம்பாதித்து வைத்திருக்கும் மாநில அமைச்சர் குத்தாலிங்கத்தின் காரைக்குடி வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தி பெரும் தொகையை கைப்பற்றுகிறது சூர்யாவின் டீம்.
இது போர்ஜரியான சோதனை என்பதை கண்டறியும் சுரேஷ் மேனன், சூர்யா டீமை கண்டுபிடிக்க முனைகிறார். இந்தக் காரைக்குடி சோதனைக்கு பாதுகாப்புக்காக சென்ற காரைக்குடி நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான நந்தாவையும், பெண் போலீஸான விநோதினியையும் உடன் வைத்துக் கொண்டு தேடுதல் வேட்டையைத் துவக்குகிறார் சுரேஷ் மேனன்.
அடுத்து சூர்யா டீம் ஹைதராபாத் பறந்து சென்று அங்கேயிருக்கும் ஒரு மார்வாடியின் கடையைத் துழாவியெடுத்து பணம் மற்றும் நகைகளுடன் பறக்கிறது. இதையும் கண்டறியும் சுரேஷ் மேனன், எப்படியாவது இந்தக் கும்பலை பிடிக்க வேண்டுமே என்றெண்ணி மாநில போலீஸாருடன் கலந்தாலோசிக்கிறார்.
அவர்களோ குறிஞ்சி வேந்தன் என்னும் கார்த்திக்கை விசாரணை அதிகாரியாய் நியமித்து அனுப்பி வைக்கிறார்கள். பழைய குற்றவாளிகள் பட்டியலைத் துழாவியதில் ரம்யா கிருஷ்ணனின் புகைப்படம் மட்டுமே சிக்குகிறது. இதையடுத்து ரம்யா கிருஷ்ணனின் வீட்டு போன் ஒட்டுக் கேட்கப்படுகிறது.
இதையறியாத சூர்யா, ரம்யா கிருஷ்ணனுடன் போனில் பேசி அடுத்தக் கட்ட சோதனைக்கு அச்சாரம் போடுகிறார். தனக்கு ஸ்கெட்ச் போடப்பட்டுவிட்டதை போலீஸ் மூலமாகவே அறிந்த சூர்யா, தனது அப்பாவை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு வீ்ட்டில் இருந்து எஸ்கேப்பாகி மற்ற கூட்டாளிகளை சந்திக்கிறார்.
அடுத்து நகரின் மிகப் பெரிய ஜூவல்லரி கடையில் சோதனையிடப் போவதாகச் சொல்லி அதற்காக மெகா திட்டம் ஒன்றை அரங்கேற்ற நினைக்கிறார் சூர்யா. இதற்காக சி.பி.ஐ.யில் வேலை இருப்பதாகச் சொல்லி பேப்பரில் விளம்பரம் கொடுத்து நட்சத்திர ஓட்டலுக்கு நேர்காணலுக்கு அழைக்கிறார் சூர்யா.
வந்தவர்களிடத்தில் ஸ்மார்ட்டாக இருப்பவர்களை தேர்வு செய்து நாளைய தினமே ஒரு சோதனை முயற்சியில் அவர்களும் ஈடுபட வேண்டும் என்று சொல்லி வைக்கிறார் சூர்யா.
அன்றைய தினம் இரவிலேயே சூர்யாவின் அனைத்து நண்பர்களையும் சி.பி.ஐ. சுற்றி வளைக்கிறது. இதுவரையிலும் இவர்கள் செய்த குற்றச் செயல்களுக்கு ஆதாரம் இல்லை என்பதால் நாளைய தினம் நடக்கவிருக்கும் சோதனையில் கையும், களவுமாக இந்தக் கும்பலை பிடிக்க நினைக்கிறார் கார்த்திக். இதற்காக அவரும் சுரேஷ் மேனனும் ஒரு திட்டம் தீட்டுகிறார்கள். சூர்யாவோ தனது திட்டத்தில் இருந்து வழுவாமலேயே இருக்கிறார்.
இறுதியில் ஜெயித்தது யார் என்பதுதான் இந்த சுவையான, சுவாரஸ்யமான திரைப்படத்தின் கதை.
உண்மையில் இது நடந்த கதைதான். 1986-ம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அந்தாண்டின் குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதியன்று காலை புதுதில்லி அக்பர் சாலையில் இருந்த ஒரு மூத்த அமைச்சரின் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று சி.பி.ஐ. சோதனை என்று சொல்லி பெரும் பணத்தையும், நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றது.
வெளியில் சொன்னால் வெட்கக்கேடு என்பதால் பகிரங்கமாக சொல்லாமலேயே அந்தக் கும்பலை சி.பி.ஐ.யும், டெல்லி போலீஸும் வலைவீசி தேடினார்கள். இதே கும்பல் பின்பு கொல்கத்தாவில் பிரபலமான நிதி நிறுவனத்தில் இதே பாணியில் கொள்ளையடித்தது. மறுபடியும் மும்பையில் ஒரு வைர வியாபாரியின் நகைக் கடையில் கொள்ளையடித்துவிட்டு, இன்றுவரையிலும் காணாமலேயே போய்விட்டது அந்தக் கும்பல்.
இந்த உண்மைக் கதையைத்தான் பாலிவுட் இயக்குநர் தீரஜ் பாண்டே மிக அழகான, சுவாரஸ்யமான திரைக்கதையில் ‘ஸ்பெஷல் 26’ என்கிற பெயரில் திரைப்படமாக உருவாக்கினார். 42 கோடியில் உருவான இந்தப் படம் 140 கோடி ரூபாய் வரையிலும் வசூலித்துக் கொடுத்தது.
தமிழில் ஹீரோயிஸத்திற்காக பல்வேறு மாற்றங்களை செய்திருக்கிறார்கள். ஹிந்தியில் பள்ளி ஆசிரியரான காஜல் அகர்வால் ஹீரோ அக்சய்குமாரின் அபார்ட்மெண்ட்டில் வசிப்பவர். பார்த்தவுடன் காதலாகிறது. காதலுக்கு அப்பா கடும் எதிர்ப்பைக் காட்ட இறுதியில் வீட்டில் இருந்து வெளியேறி காதலரைத் தேடிப் பிடித்து இணைகிறார்.
இதில் கீர்த்தி சுரேஷ் ஒரு புகைப்படக் கலைஞராக சூர்யாவின் கூட்டணியில் ஒரு ஆளாக ரம்யா கிருஷ்ணனால் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டு வரப்படுகிறார். இங்கேயே சூர்யாவால் காதலிக்கப்படுகிறார். கடைசியில் இவர் என்னவானார் என்பதையே சொல்லாமல் படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர். படத் தொகுப்பாளரின் கத்திரியில் அது காணாமல் போயிருக்கும் என்று தெரிகிறது.
ஹிந்தியில் மனோஜ் பாஜ்பாய் ஒருவர்தான் அக்சய் கும்பலை தேடியலைவார். ஆனால் இதில் சுரேஷ் மேனனுடன், கார்த்திக்கும் சேர்ந்து கொண்டு தேடியலைகிறார்.
படத்தில் சிறிது நகைச்சுவையையும் சேர்த்திருப்பதால் பல காட்சிகளில் வாய் விட்டுச் சிரிக்க முடிகிறது. ‘லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்பேன்’ என்று சொல்லும் ஒரு பெண்ணின் பெயர் ‘சசிகலா’ என்று ஒலித்தவுடன் தியேட்டரே அதிர்கிறது..!
இதேபோல் கீர்த்தி சுரேஷுக்காக உடல் ஊனமுற்றோர் வேடமிட்டு நடிக்கும் காட்சியிலும் ஹைதராபாத்தில் சோதனையிடப் போய் அங்கே ஏற்கெனவே சி.பி.ஐ.யினர் இருப்பதை பார்த்து திகைத்துப் போய் நிற்பதும், சிவசங்கர் அப்போது இடையில் புகுந்து காப்பாற்றுவதும் கலகலப்பான காட்சிகள்.
கிளைமாக்ஸில் கார்த்திக்கிடம் இருந்து துப்பாக்கி முனையில் சூர்யாவும், சத்யனும் தப்பிக்கும் காட்சி இன்னொரு மெகா டிவிஸ்ட் அண்ட் காமெடி.
சூர்யா படம் முழுவதும் யூத்தாகவே இருக்கிறார். இந்தப் படத்திற்காக மேக்கப்பில் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. சுரேஷ் மேனனிடம் “தனி ஆளாக பிடுங்க முடியாது. எல்லாரும் சேர்ந்து போனா நிச்சயமா பிடுங்கலாம் ஸார்…” என்று தயக்கத்துடன் சொல்லும் ஒரு இளைஞனாகவும் பேசுகிறார்.
இன்னொரு பக்கம் துரை சிங்கம் டைப்பில் நாட்டு அரசியல், லஞ்சம், ஊழல், மெரிட், படிப்பு, படிப்புக்கேற்ற வேலை என்று அனைத்தையும் பேசும் உண்மை இந்தியனாகவும் தனது அறச்சீற்றத்தை காட்சிக்கு காட்சி காட்டியிருக்கிறார்.
கீர்த்தியுடனான காதலை ரம்யா கிருஷ்ணனிடம் சொல்ல முடியாமல் தவிப்பவர், கீர்த்தி சுரேஷின் கிடுக்கிப்பிடி கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் தவித்துவிட்டு பின்பு மாப்பிள்ளையே அமைந்த பின்பு அவர் போடும் அவசர டிராமாவிலும் சூர்யாவின் நடிப்பை ரசிக்க முடிந்திருக்கிறது.
கீர்த்தி ‘ரெமோ’வில் இருந்ததைவிடவும் குறைவான அழகிலேயே தெரிகிறார். ஏனென்று தெரியவில்லை. ரொம்ப அப்புராணியாக சில வேலைகளைச் செய்து ஸ்கோர் செய்துவிட்டுப் போகிறார். டிரெஸ்ஸிங் சென்ஸில் அமர்க்களப்பட்டிருப்பதால் பாடல் காட்சிகளில் கூடுதல் அழகுடன் ஜொலிக்கிறார். இவரது கேரக்டரை கடைசியில் அப்படியே விட்டிருக்கிறார்கள். ஏனென்றுதான் தெரியவில்லை.
உண்மையில் அறிமுகமாகும் முதல் காட்சியில் ஜான்சி ராணி ஐ.பி.எஸ். அதிகாரியாகவே தனது கம்பீரமான தோரணையுடன் நடிப்பைக் கொட்டியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். வரிசையாக ஏழு பிள்ளைகளைப் பெற்றுவிட்டு, “14 வயசுலேயே கல்யாணம் ஆயிருச்சுடா.. அப்போ கரண்ட்டும் இல்லை. டிவியும் இல்லை.. நான் என்ன செய்றது..” என்று ரம்யா கிருஷ்ணன் சொல்லும் சாக்குப் போக்கு ரசிக்கும்படியாகத்தான் உள்ளது.
சத்யன்தான் அவ்வப்போது காமெடிகளை அள்ளிவீசி இடையிடையே கலகலப்பாக்கியிருக்கிறார். செந்திலின் பெட்ரோமாக்ஸ் லைட் காமெடியை இங்கேயும் வைத்து லைட்டாக சிரிக்க வைக்கிறார்கள். யோகிபாபு ஒரு காட்சி என்றாலும் கவுண்ட்டர் டயலாக்குடன் கவனத்தில் கொள்கிறார்.
சூர்யாவின் அப்பாவாக ஒரு காட்சியில் கண் கலங்க வைக்கும் அளவுக்கு நடிப்பைக் காட்டி தனது இருப்பைக் காட்டியிருக்கிறார் தம்பி ராமையா. அவர் கதவைப் பூட்டிக் கொள்ளும் காட்சியில் ஒரு நிமிடம் பரபரப்பை ஏற்றியிருக்கிறார் என்பது உண்மை.
நவரச நாயகன் கார்த்திக் இதில் அநியாயத்திற்கு வீணடிக்கப்பட்டிருக்கிறார். ஹிந்தியில் இருந்ததை போன்று ஒரேயொரு அதிகாரியாக சுரேஷ் மேனனையே இதில் பயன்படுத்தியிருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சியில் “நவரச நடிப்புல எனக்கேவா..?” என்று கார்த்திக் குத்தலாக கேட்பதற்கும், “வயசாயிருச்சுல்ல அப்புறம் எதுக்கு இந்த வேலை..?” என்று சூர்யா நக்கல் செய்வதற்கும், இதற்கு கார்த்திக் பதிலடியாக கவுண்ட்டர் அட்டாக் கொடுப்பதற்கும் மட்டுமே இவரது கேரக்டர் பயன்பட்டிருக்கிறது..!
அமைச்சர் குத்தாலிங்கமாக நடித்திருக்கும் ஆனந்த்ராஜின் நடிப்பு அந்தக் காட்சியின் வேகத்தை பெரிதும் கூட்டியிருக்கிறது. அதோடு அவரது மனைவியான நிரோஷாவும் சேர்ந்து கொள்ள.. அந்தக் குடும்பத்தின் கதையை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
சுரேஷ் மேனன் முதல் முறையாக வில்லனாகியிருக்கிறார். ஆனால் இவருடைய வசனத்தை கெளதம் வாசுதேவ் மேனன் பேசியிருக்கிறார். சுரேஷ் மேனன் டிபிகல் சினிமா வில்லன் கிடையாது என்பதால் சினிமாத்தனம் இல்லாமல் ரசிக்க வைத்திருக்கிறார்.
நேர்காணலின்போது பழமொழி சொல்லி சூர்யாவை போகச் சொல்வதில் இருந்து கிளைமாக்ஸில் சூர்யாவிடம் பல்பு வாங்கி தோற்பதுவரையிலும் அவருடைய கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். வெல்டன் ஸார்..!
‘கிழக்கே போகும் ரயில்’ சுதாகர் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போயிருக்கிறார். சிவசங்கர், எதுவுமே தெரியாத அப்பிராணி போலீஸ் கான்ஸ்டபிளாக வினோதினி, கூடவே இருந்து குழி பறிக்கும் போலீஸ்காரனான ‘மாங்கா மடையன்’ நந்தா என்று பலரும் சொல்லி வைத்தாற்போல் கில்லியாய் நடித்திருக்கிறார்கள்.
கதை நடக்கும் வருடம் 1986 என்பதால் பெரும்பாலான காட்சிகள் செட்டுக்களுக்குள் எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் உண்மைத் தன்மைக்காக நிறையவே செலவு செய்து எடுத்திருக்கிறார்கள். கலை இயக்குநர் நிச்சயமாக பெரும் பாராட்டுக்குரியவர். அக்கால வசதிகள் மட்டுமே ரசிகனின் கண்ணில் பட வேண்டும் என்பதற்காக நிஜமாகவே கடுமையாக உழைத்திருக்கிறார் கலை இயக்குநர். பாராட்டுக்கள்..!
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம் எனலாம். ‘சொடக்கு’ பாடல் காட்சியிலும், ‘பீலா பீலா’ பாடல் காட்சியிலும் கேமிரா சுழன்றடித்திருக்கிறது. கீர்த்தியையும், ரம்யா கிருஷ்ணனையும் அழகாக காட்டியிருப்பதற்காக இன்னும் ஒரு பாராட்டு கேமிராமேனுக்கு..!
அனிருத்தின் இசையில் ‘சொடக்கு’ பாடல் ஹிட்டடித்துவிட்டது. கூடுதலாக ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘பீலா பீலா’ பாடல்களும் வரிசையில் நிற்கின்றன. ஆனால் கேட்க கேட்கத்தான் பிடிக்கும் என்கிற அளவில் இருக்கின்றன. ஹிந்தி படத்தில் பின்னணி இசை மிக பிரமாதம் என்று அத்தனை விமர்சகர்களும் சொல்கிறார்கள். ஆனால் இதில்..? ம்ஹூம்.. அதில்தான் கோட்டை விட்டிருக்கிறார் அனிருத்..!
ஒட்டு மொத்தமாய் ஒரு நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக இது உருவாகியிருந்தாலும் உள்ளுக்குள் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகளை வைத்திருக்கிறது.
சி.பி.ஐ.க்கு முதலிலேயே ரம்யா கிருஷ்ணனை அடையாளம் தெரிந்துவிட்டது என்பதால் “உடனேயே அவரை கைது செய்து தொடர்ச்சியாக மற்றவர்களையும் பிடித்திருக்கலாமே..?” என்கிறார்கள்.
ஆனால் நிஜத்தில் இவர்கள் கொள்ளையடித்த வீட்டுக்காரர்கள்… மந்திரி உட்பட யாருமே புகார் அளிக்க முன் வரவில்லை. இதனால் எஃப்.ஐ.ஆர். போடாமல் அவர்களை கைது செய்து விசாரிக்க சி.பி.ஐ.யும் முன் வரவில்லை.
இன்னொரு முறை தவறு செய்யும்போது கையும், களவுமாக பிடிக்கலாம் என்பதற்காகத்தான் விட்டு வைத்தார்கள். அதுவே தவறாகிவிட்டது. இறுதிவரையிலும் அந்தக் கும்பலை பிடிக்க முடியாமலேயே போய்விட்டது.
இது நடந்த கதை என்பதால் நடந்ததைத்தான் எடுக்க முடியும். அந்த வகையில் இந்தத் திரைக்கதை சரியானதுதான்..! ஆனால் இல்லாத ஒன்றாக தமிழுக்காக மாற்றப்பட்ட திரைக்கதையில்தான் சில குழப்பங்கள்.
தான் செய்தது எதையும் தவறு என்று சூர்யா ஒத்துக் கொள்ளாதது முதல் நெருடல். அதிகாரிகளால் வஞ்சிக்கப்படும் இளைஞன் இதைத்தான் செய்வான் என்று சூர்யா சொல்வதும் ஏற்க முடியாத வாதம்.
லஞ்சம், ஊழல் இவற்றால் பாதிக்கப்படும் மாணவர்களும், இளைஞர்களும் இதேபோல் சட்டத்தைக் கையில் எடுத்து தவறான பாதையில் சென்றால் கடைசியில் அது அரசியல்வாதிகளுக்கு சாதகமாகத்தான் போய்ச் சேரும்.
அதேபோல் தான் கொள்ளையடித்து சம்பாதித்த பணத்தை வைத்து அதே குறுக்கு வழியில் போலீஸ் வேலைக்கு சரியான நபர்களை சேர்த்துவிடும் சூர்யாவின் செயலும் நாணயமற்றதுதான்..! அரசுகள் தவறு செய்யலாம். ஆனால் அதைத் தட்டிக் கேட்டு, சரி செய்ய மற்ற அமைப்புகளைத் தூண்டி அதன் மூலம் நிவர்த்தி செய்வதுதான் உண்மையான ஜனநாயகம்.
தனி ஒருவனாக அரசு அமைப்புகளை எதிர்த்து நின்று ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தால், அதையும் நியாயமான வழியில், ஜனநாயக வழியில் செய்வதுதான் சிறந்த வழிகாட்டும் பண்பு கொண்ட தலைவனுக்கு அழகு. அந்த அழகு இந்தப் படத்தின் ஹீரோவுக்கு இல்லை என்பதுதான் உண்மை.
இயக்குநர் தனது கருத்தை மாற்றியமைத்து அவர்களைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை என்பதாகவே அமைத்திருந்தால்கூட படம் இதைவிடவும் நன்றாகத்தான் இருந்திருக்கும்.
|
Tweet |
0 comments:
Post a Comment