விதி மதி உல்டா - சினிமா விமர்சனம்

07-01-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை ரைட் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தில் ரமீஸ் ராஜா, ஜனனி ஐயர் இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். 
மற்றும் டேனியல்  பாலாஜி,  கருணாகரன்,  சென்ட்ராயன்,  கு.ஞானசம்பந்தன்,  சித்ரா லட்சுமணன்,  குட்டி கோபி, லோகேஷ், ஆதித்யா கதிர் ஆகியோர் நடித்துள்ளனர். 
ஒளிப்பதிவு – மார்ட்டின் ஜோ, இசை – அஸ்வின் விநாயகமூர்த்தி, படத் தொகுப்பு -புவன் சீனிவாசன், பாடல்கள் – கபிலன், கலை – வனராஜ், நடனம் – நந்தா, தஸ்தா, மக்கள் தொடர்பு –பெருதுளசி பழனிவேல், தயாரிப்பு மேற்பார்வை – அகமது பஹாத், தயாரிப்பு நிர்வாகம் –ஆர்.செல்லதுரை, தயாரிப்பு – ரைட்  மீடியா  ஒர்க்ஸ்  பிரைவேட்  லிமிடெட், எழுத்து, இயக்கம் – விஜய் பாலாஜி.எஸ்.

மனிதனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் விதியை மதியால் மாற்ற முடியுமா.. முடிந்தால் என்ன நடக்கும்.. நாளை நடப்பதை இன்றே அறிந்து கொண்டால் வாழ்க்கை எப்படியிருக்கும்.. என்பதைத்தான் இந்தப் படத்தில் மிக, மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்..!
பட்டப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் வெட்டி ஆபீஸராக இருப்பவர் ஹீரோவான ஆதித்யா என்னும் ரமீஸ் ராஜா. வீட்டுக்கே ஒரே பிள்ளை. ஆனால் வீட்டில்கூட ஒரு வேலையும் செய்ய மாட்டார்.
இவருடைய கண்ணில் ஒரு நாள் படுகிறார் ஹீரோயின் ஜனனி. படு சோம்பேறி. கல்லூரியில் படிக்கிறார். இவரும் வீட்டுக்கு ஒரே பிள்ளை. இவரைப் பார்த்தவுடன் காதலிக்கத் தோன்றுகிறது ஹீரோவுக்கு.
தினமும் காலையில் ஜனனி கல்லூரிக்கு போகும்போதும், வரும்போதும் பின்னாலேயே சென்று வழியனுப்பி வைத்தும், வரவேற்றும் பொழுதைக் கழித்து வருகிறார் ஹீரோ.
ஹீரோவின் அப்பாவான கு.ஞானசம்பந்தன் செல்போன் கடை வைத்திருக்கிறார். அந்தக் கடைக்கான இடத்தை வாடகைக்குப் பிடித்துக் கொடுத்தமைக்காக புரோக்கரான சென்ட்ராயர் காசு கேட்டு 40-வது தடவையாக போன் செய்கிறார். இப்போதும் பணம் தர மறுக்கிறார் ஹீரோவின் அப்பா.
இதனால் கோபமடையும் சென்ட்ராயன், தனது முட்டாள் நண்பர்களை வைத்து ஹீரோவை கடத்தி வைத்து பெரும் தொகையை ஹீரோவின் அப்பாவிடமிருந்து கப்பமாக வசூலிக்க பிரம்மாண்டமாக திட்டம் தீட்டுகிறார்.
இதே நேரம் ஜனனியை கல்லூரியில் ஒருதலையாய் காதலிக்கிறார் பீட்டர். இவர் மிகப் பெரிய தாதாவான டேனி என்னும் டேனியல் பாலாஜியின் ஒரே தம்பி. தம்பியென்றால் உயிரையே விடுவார் அண்ணன். அந்த தைரியத்தில் ஜனனியைக் கடத்தி தன்னைக் காதலிக்க வைக்க திட்டம் தீட்டுகிறார் பீட்டர். ஆனால் அண்ணனுக்குத் தெரியாமல்..!
ஹீரோயினுக்கு செல்போன்கூட வாங்கித் தராத அப்பன் இருப்பதால் தானே முனைந்து ஹீரோயினுக்கு அப்போலோ பார்மசியில் பார்ட் டைம் வேலையும் வாங்கிக் கொடுத்து பாதி காசுக்கு செல்போனையும் வாங்கிக் கொடுத்து அவருடன் நட்பாகிக் கொள்கிறார் ஹீரோ.
இப்போது ஒரு நல்ல நாள் பார்த்து, முகூர்த்த நேரத்தில் ஹீரோயின் ஜனனியை நேரில் சந்தித்து தனது காதலைச் சொல்வதற்காக கையில் ரோஜாப்பூவுடன் வருகிறார் ஹீரோ ரமீஸ். அதே நேரம் பீட்டர் தனது அடியாட்களை வைத்து ஜனனியை, ஹீரோவின் கண் முன்பாகவே கடத்துகிறார்.
அதே சாலையின் இன்னொரு ஓரத்தில் தன்னைக் கடத்துவதற்காக காத்திருக்கும் சென்ட்ராயன் கும்பலிடமே ஓடி வரும் ஹீரோ, ஹீரோயினை கடத்திச் செல்லும் காரை பாலோ செய்யும்படி கெஞ்சுகிறார். மீன் தானாகவே வந்து வலையில் மாட்டுகிறதே என்று சந்தோஷத்துடன் அவரை அழைத்துக் கொள்ளும் சென்ட்ராயன் டீம், ஹீரோவை மயக்கத்தில் ஆழ்த்தி கடத்துகிறது.
ஹீரோ, ஹீரோயின் இருவரையும் ஒரு பாழடைஞ்ச தொழிற்சாலையில் பக்கத்து, பக்கத்து அறைகளில் ஒருவருக்கொருவர் தெரியாமலேயே கை, கால்களை கட்டிப் போட்டு அடைத்து வைக்கிறார்கள் கடத்தல்காரர்கள்.
இதே நேரம் ஒரு ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த குற்றத்திற்காக ஒன்றரை ஆண்டு காலம் சிறையில் இருந்துவிட்டு வெளியில் வருகிறார் கருணாகரன். உடன் அவரது சிறைத் தோழரும்தான்..!
நேராக தனது குருவான டேனியல் பாலாஜியிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கிவிட்டு நகைகளை பதுக்கி வைத்திருக்கும் அதே பாழடைந்த தொழிற்சாலைக்குள் வருகிறார் கருணாகரன்.
ஹீரோவும், ஹீரோயினும் தத்தமது கட்டுக்களை அவிழ்த்துவிட்டு அங்கேயிருந்து தப்பித்து ஓடுகிறார்கள். இவர்களை துரத்தும்போது அந்த இரண்டு குழுக்களும் எதிர்பாராதவிதமாக சந்தித்துக் கொள்ள அடிதடி ஸ்டார்ட் ஆகிறது. இந்த நேரத்தில் கருணாகரனும் அங்கே எண்ட்ரியாகிறார். மூன்று தரப்பினரும் ஒரு சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக சண்டை மூள்கிறது.
இப்போது நடக்கும் கசாமுசாவில் கருணாகரனின் துப்பாக்கிக் குண்டு, பீட்டரைத் தாக்கிக் கொல்கிறது. பீட்டரின் இறப்புக்குக் காரணம் ஹீரோவும், ஹீரோயினும்தான் என்று அவனது அண்ணன் டேனியிடம் கருணாகரன் போட்டுக் கொடுத்துவிட்டு தப்பிக்கிறார்.
இதனால் ஆவேசமடையும் டேனியல் ஹீரோவின் அம்மா, அப்பா, ஹீரோயினின் அப்பா, அம்மா நால்வரையும் கொலை செய்கிறார். கடைசியாக ஹீரோவை கொலை செய்யவும் முயல்கிறார்.
இப்போது சட்டென்று கனவில் இருந்து எழுகிறார் ஹீரோ. இதுவரையிலும் தான் கண்டதெல்லாம் கனவுதான் என்பது அவருக்கு புலனாகிறது. ஆனால் அந்தக் காலை பொழுதிலேயே அவருடைய கனவு உண்மையாக நடப்பதை அறிந்து பதற்றமாகிறார் ஹீரோ.
நிஜமாகவே ஹீரோவின் அப்பாவுக்கு போன் செய்யும் சென்ட்ராயன் புரோக்கர் காசை கேட்கிறார். அப்பா தர முடியாது என்கிறார். இதனைக் கேட்கும் ஹீரோ இது இப்படியே தொடர்ந்தால் முதலில் கடத்தல், பின்பு துப்பாக்கிச் சூடு, அதன் பின்பு இரண்டு குடும்பத்திலும் படுகொலைகள் நடக்குமே என்பதை நினைத்து பதறுகிறார்.
இதனை தடுக்க பிரயத்தனப்படுகிறார் நாயகன் ரமீஸ்.. விதியின் விளையாட்டை தனது மதியால் தடுத்து நிறுத்தப் பார்க்கிறார் ஹீரோ. அது அவரால் முடிந்ததா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.
“நாளை உனக்கு நடக்கவிருப்பது இதுதான். அது நடந்தே தீரும். அதுதான் விதி. அந்த விதியை மதியால் வெல்ல நினைக்கும் ஹீரோவின் செயல்பாடுகள்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.” அதனால்தான் விதி மதி உல்டா என்று தலைப்பு வைத்துவிட்டார் போலிருக்கிறது.
நல்ல கான்செப்ட்.. சிறந்த திரைக்கதை.. கொஞ்சம் நழுவினாலும் படம் ஒட்டு மொத்தமாய் சறுக்கலாகிவிடும்.. ஆனாலும் கவனமாய் பார்த்து, பார்த்து செய்திருக்கிறார் இயக்குநர். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
இடைவேளைக்கு பின்பு அடுத்து என்ன என்பதற்கான ஆர்வத்தைத் தூண்டும்வகையில் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர். விதியை வெல்லவே முடியாது என்கிற அர்த்தத்தில் திடீர் டிவிஸ்ட்டாக சில காட்சிகள் இடம் மாற.. கிளைமாக்ஸ் பரபரக்கிறது..!
ஹீரோ ரமீஸ் ராஜாவுக்கு பெரிதாக நடிப்புக்கென்று ஸ்கோப் இல்லை. ஆனால் இவருக்கு பதிலாக ஞானசம்பந்தனும், அவருக்கு மனைவியாக நடித்தவருமே மிக அழகாக நடித்திருக்கிறார்கள்.
சின்னச் சின்ன பதட்டங்கள், அவசரங்கள்.. இவற்றுடன் தனது காதல் போர்ஷனையும் நகர்த்திக் கொள்ளும்வகையில் நடித்திருக்கிறார் ரமீஸ். ஜனனியின் வீட்டில் போலீஸிடம் அடிவாங்கிய பின்பும் தன்மையாக தன்னைப் பற்றிச் சொல்லி தன் கேரக்டர் ஸ்கெட்ச் வழுவாமல் நடித்திருக்கிறார். ஓகேதான்..!
ஹீரோயின் ஜனனி ஐயருக்கு இது முக்கியமான படம். அவரை இவ்வளவு அழகாக வேறு எந்தப் படத்திலும் இதுவரையிலும் காட்டியதில்லை. அத்தனை அழகாக இருக்கிறார். பாடல் காட்சிகளில் க்யூட்டான உடை வடிவமைப்பில் இன்னமும் அழகு கூடியிருக்கிறது.
முதல்முறையாக ரமீஸை அழைத்துப் பேசி அவரது லட்சியம், வாழ்க்கை, படிப்பு பற்றிக் கேட்டுவிட்டு அவர் செல்போனை எடுத்தவுடன் பேச்சு மாறி கை கொடுத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அந்த துறுதுறு நடிப்பு மிகவும் பிடித்துப் போகிறது..!
கதைப்படி இவருக்கான முக்கியத்துவம் அதிகம் இல்லாமல், காதல் தொலைந்து போய் கடத்தலே முன்னிலை வகிப்பதால் ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் அதிகம் வேலையில்லாமல் மற்ற நட்சத்திரங்களே அதிகம் பங்கெடுத்திருக்கிறார்கள்.
பொறுப்பான அப்பாமார்களாக ஞானசம்பந்தனும், சித்ரா லட்சுமணனும், இருவரது திருமதிகளும் இன்னொருவிதமான அம்மாக்களாக நடித்திருக்கிறார்கள்.
டேனியல் பாலாஜி லோக்கல் கவுன்சிலரையும், போலீஸ்காரனையுமே கொலை செய்யும் அளவுக்கு கொடூரமான தாதாவாக இருக்கிறார். தம்பிக்காக கொலை செய்யவும் தயங்காத தன்மையுடன் சிடுசிடுப்புத் திலகமாக நடித்திருக்கிறார்.
சென்ட்ராயனும் அவரது இரண்டு முட்டாள் சீடர்களும் கடத்தலுக்கு பிளான் போடுவதும், அது சொதப்பலாகி ரிப்பேராவதும் மீண்டும் மீண்டும் முட்டாள்தனம் செய்வதுமாய் செம காமெடி. இவர்களை போலவே பீட்டரின் கோஷ்டியும் சின்னச் சின்ன தப்புக்களை செய்து காட்சிகளை சுவாரஸ்யமாக்கி நகைச்சுவையாக்கியிருக்கிறார்கள்.
இவர்கள் அனைவருமே ஒருவரையொருவர் கத்தியால் மடக்கிப் பிடிக்கும் காட்சியும், துப்பாக்கி முனையில் கருணாகரனிடம் மாட்டிக் கொள்ளும் காட்சியும் செம ரகளை. விறுவிறுப்பும், துடிப்புமாக அந்த தொழிற்சாலை காட்சிகளை படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது. ‘தாறுமாறா…’ பாடல் மற்றும் டூயட் காட்சிகளை மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறார். தொழிற்சாலைக்குள் நடக்கும் இரவு, பகல் கலந்த காட்சிகளை மிக மெல்லிய வெளிச்சத்திலேயே பார்க்கும்படியாக படமாக்கியிருக்கிறார்.
அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் ‘உன் நெருக்கம்’ பாடலும், ‘தாறு மாறா’ பாடலும் ஹிட்டடிக்க.. ‘அண்ணன்தாண்டா டானு’ பாடல் நடனத்திற்காகவும், ஒளிப்பதிவிற்காகவுமே பேசப்படுகிறது. அப்படியொரு வேகம்..!
சிறப்பான சண்டை பயிற்சி, சிறந்த கலை இயக்கம்.. சிறந்த படத் தொகுப்பு என்று பலவற்றுக்காகவும் இந்தப் படம் பாராட்டைப் பெறுகிறது..!
படத்தை ஒரு முறை பார்த்து சிரிக்கலாம் என்று சொல்ல வைத்திருக்கிறார் இயக்குநர். அதுவரைக்கும் சந்தோஷம்தானே..!

0 comments: