13-01-2018
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
K.J.R. ஸ்டூடியோஸ் சார்பாக கோட்டபாடி J.ராஜேஷ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ஆனந்த்ராஜ், முனிஸ்காந்த் ராமதாஸ், மன்சூர் அலிகான், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மதுசூதனராவ், யோகிபாபு, சத்யன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இசை – விவேக் – மெர்வின், ஒளிப்பதிவு – R.S.ஆனந்தகுமார், படத் தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி, சண்டை பயிற்சி – பீட்டர் ஹெயின், பாடல்கள் – பா.விஜய், கு.கார்த்திக், கோ.சேஷா. நடன இயக்கம் – ஜானி, கலை இயக்கம் – K.கதிர், நிர்வாக தயாரிப்பு – சௌந்தர் பைரவி. தயாரிப்பு மேற்பார்வை – P.சந்துரு. கதை, திரைக்கதை. வசனம், இயக்கம் – எஸ்.கல்யாண்.
நான்கு திருடர்கள் ஒன்று சேர்ந்து புதையலைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் கதை.
ஆதி காலத்து கதையில் புதிய திரைக்கதையை புகுத்தி, கொஞ்சம் நகைச்சுவையுடன் கமர்ஷியல் பார்முலாவை கலந்து உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.கல்யாண்.
சிலை கடத்தல் தொழிலில் கொடி கட்டிப் பறப்பவர் மன்சூரலிகான். இவரிடத்தில் கூலிக்கு வேலை செய்பவர்கள் பிரபுதேவாவும், யோகி பாபுவும்.
தாய், தந்தை இல்லாமல் பள்ளியில் படிக்கும் தங்கையுடன் வாழும் ஹன்ஸிகா இரவு நேரங்களில் பப்புகளுக்குச் சென்று அங்கேயிருக்கும் சபலிஸ்ட்டுகளிடத்தில் முடிந்தவரையில் ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர்.
வயது முதிர்ந்த ரேவதி, விலையுயர்ந்த கார்களை வைத்திருப்பவர்களிடம் நைச்சியமாக பேசி அந்தக் கார்களைத் திருடி விற்பவர்.
மதுசூனன் ராவ் தற்போது மெக்சிகோவில் வசிப்பவர். இவருடைய தாத்தா 1945-ல் சென்னையில் ஒரு பிரிட்டிஷ் துரையிடம் சேவகம் செய்து வந்தவர். துரை லண்டனுக்குக் கிளம்பும்போது கோடிக்கணக்கான விலையுள்ள வைரக் கற்களை கொண்டு செல்கிறார். இதையறியும் தாத்தா அந்தக் கற்களை திருடி பதுக்கி வைத்திருக்கிறார்.
ஒரு இரும்புப் பெட்டியில் அந்த வைரக் கற்களை வைத்து அந்தப் பெட்டியை தான் வாழ்ந்த ‘குலேபகாவலி’ என்னும் ஊரில் இருக்கும் கோவிலின் அருகில் ஒரு குழியைத் தோண்டி புதைத்து வைத்திருக்கிறார் தாத்தா.
இதனை மதுசூதனனிடம் சொல்லும் அவருடைய அப்பா ‘அந்த வைர புதையலை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சுக்கப்பா’ என்று சொல்லிவிட்டு செத்துப் போகிறார்.
இப்போது இந்த வைரப் புதையலைத் தேடும் பணியை சென்னையில் இருக்கும் தனது மைத்துனரான ஆனந்த்ராஜிடம் ஒப்படைக்கிறார் மதுசூதனன். இந்த வேலையை தன்னிடம் வேலையில் இருக்கும் முனீஸ்காந்த் ராமதாஸிடம் சொல்கிறார் ஆனந்த்ராஜ்.
இதற்காக ஹன்ஸிகாவின் தங்கையைக் கடத்தி வந்து வைத்துக் கொண்டு ஹன்ஸிகாவிடம் பிளாக்மெயில் செய்து, தங்களது வைரக் கடத்தலுக்கு உதவும்படி மிரட்டுகிறார் ஆனந்த்ராஜ்.
இன்னொரு பக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டரான சத்யனை முனீஸ்காந்த், ஹன்ஸிகா, ரேவதி மூவருமே ஒவ்வொரு விஷயத்தில் ஏமாற்றியிருக்கிறார்கள். இதனால் இவர்களை பழி வாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறார் சத்யன்.
ஹன்ஸிகாவை பப் வாசலில் பார்த்தவுடன் லவ்வாகி துடிக்கிறார் பிரபுதேவா. ஆனால் ஹன்ஸிகாவோ அந்தக் காதலை ஏற்காமல் தனது திருட்டுத்தனத்தைத் தொடரவே நினைக்கிறார்.
இதே நேரத்தில் ‘குலேபகாவலி’ ஊரில் இருக்கும் சாமி சிலைகளைத் திருடும் பணியை பிரபுதேவாவிடம் ஒப்படைக்கிறார் மன்சூரலிகான். இவர்கள் அந்த ஊருக்கு வந்த நாளில் ஊரில் சாமி கும்பிடுடன் கூடிய நிர்வாண பூஜை நடைபெறுகிறது.
புதையலை தேடியெடுக்க ஆனந்த்ராஜ் தனது ஆட்களுடன் காரில் அந்த ஊருக்கு வருகிறார். இந்த நேரத்தில் அந்த ஊர் வழியாக வந்து கொண்டிருந்த ஹன்ஸிகாவுக்கும் கார் டிரைவருக்கும் இடையில் மோதல் நடக்க.. ஹன்ஸிகா காரில் இருந்து இறங்கி நடந்து வருகிறார். அப்போது நிர்வாண பூஜைக்காக ஓடி வந்த உள்ளூர்காரர் ஒருவரை ஹன்ஸிகா பார்த்துவிட அவர் ஊரைக் கூட்டிவிடுகிறார். அதே நேரம் அந்த ஊர்க் கோவிலின் சாமி சிலைகளைக் தூக்கிக் கொண்டு செல்கிறார்கள் பிரபுதேவாவும், யோகி பாபுவும்.
அந்த நேரத்தில் ஹன்ஸிகாவை பிடித்துப் போய் பஞ்சாயத்தில் நிறுத்திவிடுகிறார்கள். கூடவே ஆனந்த்ராஜூம், முனீஸ்காந்தும்தான். கூட்டத்தில் ஆண் நிர்வாண பூஜையை நிறுத்திய காரணத்தினால், அடுத்த அமாவாசையன்று ஹன்ஸிகா ஊருக்காக நிர்வாண பூஜையை நடத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார் ஊர்த் தலைவரான வேல.ராமமூர்த்தி.
அந்த இடத்தில் ஹன்ஸிகாவை பார்த்து திகைக்கும் பிரபுதேவா அவரைக் காப்பாற்றுவதற்காக வேல.ராமமூர்த்தியை துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கலைக்கிறார். இதனால் அனைவரும் சிதறியோட.. ஆனந்த்ராஜ் தனது கூட்டாளிகளுடன் தப்பிக்கிறார். அவர்களிடமிருந்து முனீஸ்காந்த் மட்டும் வழி தவறிப் போய் பிரபுதேவாவுடன் காரில் ஏறி வருகிறார். இவர்களுடன் ஹன்ஸிகாவும் சேர்ந்து கொள்ள.. மறுநாள் காலை விடிந்ததும் அந்த வழியே காரில் வரும் ரேவதியின் காரை நிறுத்தி அதில் ஏறிக் கொள்கிறார்கள்.
இவர்கள் பேசும் பேச்சில் இருந்து வைரக் கற்கள் புதையலாக புதையுண்டு கிடப்பதை அறியும் ரேவதி தானும் அவர்களுடன் கூட்டணி வைக்கத் தயார் என்கிறார். வேறு வழியில்லாததால் அவரையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
அந்தப் புதையலைத் தேடியெடுத்தார்களா.. இல்லையா..? மன்சூரலிகானுக்கு அவர் தேடிய சிலைகள் கிடைத்தனவா இல்லையா..? ஹன்ஸிகா-பிரபுதேவா காதல் என்னவானது..? இன்ஸ்பெக்டர் சத்யன் அந்த நால்வரையும் பழி வாங்கினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி திரைக்கதை.
கொஞ்சம், கொஞ்சம் நகைச்சுவையோடு, லாஜிக் எல்லை மீறாத குழப்பமேயில்லாத திரைக்கதையில், சுவையான வசனங்களோடு படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.கல்யாண்.
இந்தக் கதையை இதற்கு முன் எத்தனையோ படங்களில் பார்த்திருந்தாலும் ரேவதியின் கேரக்டர் ஸ்கெட்ச், சத்யனின் கேரக்டர் இவையிரண்டுமே வித்தியாசமாகி படத்தில் ஒரு அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறது.
ரேவதிக்கு அவருடைய இயல்பான குணத்திற்கு எதிர்மாறான கேரக்டர். இதுவரையிலும் அவர் நடித்திருக்காத கேரக்டர் என்பதால் ஈர்ப்பாக இருக்கிறது. கிளைமாக்ஸில் தனக்கேற்பட்ட தர்மசங்கடத்தை முகத்தைப் பொத்திக் கொண்டு காட்டி, வெட்கப்படும்போது அவரது பண்பட்ட நடிப்பு தெரிகிறது..!
பிரபுதேவாவுக்கு வழக்கமான அடியாள் கேரக்டர்தான். ஆனால் புது வசனங்களும், திரைக்கதையும், இயக்கமும் இவரையும் காப்பாற்றிவிட்டது. ஹன்ஸிகாவுக்கு பெரிதான காட்சிகள் இல்லையென்றாலும் நிர்வாணமாக ஆணைப் பார்க்கும் காட்சிகளில் அதிகமாக நடித்தவர் ஹன்ஸிகாவாகத்தான் இருப்பார் போலிருக்கிறது. அத்தனையும் இவரைத் தேடித்தான் வருகிறது..! வயது கூடியிருப்பது முகத்தில் தெரிகிறது. ஆனால் அழகும் கூடவே வருவதால் இன்னும் சில ஆண்டுகளுக்கு ரசிக்கலாம்.
முனீஸ்காந்தின் நகைச்சுவையும், மன்சூரலிகானின் டான் பேச்சும், வேல ராமமூர்த்தியின் பஞ்சாயத்து தலைவர் பேச்சும், ஆனந்த்ராஜின் அதிகாரப் பேச்சும், மதுசூதனனின் பேராசைக் கனவுப் பேச்சும், படத்தில் இருந்தாலும் ‘படம் சூப்பர்’ என்று சொல்வதற்கு ஏதுமில்லை.
இடையில் தனி டிராக்காக வரும் மொட்டை ராஜேந்திரனின் அப்பா, அம்மா செண்டிமெண்ட் காட்சிகள்தான் கொஞ்சம் வாய்விட்டு சிரிக்க வைத்திருக்கின்றன. இந்தக் கதையை மெயின் கதையோடு இணைத்தவிதம் அருமை. திரைக்கதைக்காக மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது புரிகிறது. இயக்குநர் குழுவுக்கு நமது பாராட்டுக்கள்..!
ஆனந்த்குமாரின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் செம அழகு. ஹன்ஸிகா அதைவிட அழகு. இரவு நேரக் காட்சிகளிலேயே கதை அதிகம் டிராவல் செய்திருப்பதால் பெரிதாகச் சொல்ல ஏதுமில்லை. பீட்டர் ஹெயினின் சண்டை காட்சிகளுக்கு ஒரு சபாஷ்.
விவேக்-மெர்வின் இரட்டையரின் இசையில் ‘குலேபா’ பாடல் பரவலாக பேசப்பட்டுவிட்டது. அதேபோல் பாடல் காட்சியும் ரம்மியமாக இருக்கிறது. ’யு ஆர் தி ஒன்’ பாடல் நிஜமாகவே தமிழ்ப் பாடல்தானா என்கிற சந்தேகத்தை உருவாக்கிவிட்டது. ‘சேராமல் போனால்’, ‘ஹார்ட் புல்லா பச்சைக் குத்தியே’ ஆகிய பாடல்களும் படத்தில் இருக்கின்றன. ஆனால் எதிலும் சேர்த்தியில்லாமல்..!
இயக்கத்தில் குறைவில்லாமல்தான் செய்திருக்கிறார் இயக்குநர். சட், சட்டென்று காட்சிகள் மாறிக் கொண்டே செல்வதால் அதிகமான இழுவைகள் இல்லாமல் படத்தின் காட்சிகள் தொடர்ந்து கொண்டே செல்வதால் படத்தை கடைசிவரையிலும் பார்க்க முடிகிறது.
இருந்தாலும் அடுத்தக் காட்சிகள் எதுவாக இருக்கும் என்பதை யூகிக்கும்விதமாக இருக்கும் பழங்கால கதையும், திரைக்கதையும் படத்தை பெரிதாக சொல்லிவிட தடுக்கின்றன.
நான்கு குற்றவாளிகளையும் சந்திக்க வைக்கும் இடமும், அவர்களது சந்திப்புக்கான சிச்சுவேஷனை உருவாக்கிய திரைக்கதையும் சபாஷ் போட வைத்தாலும், கதையில் புதுமை ஏதுமில்லை என்பதால் சாதாரணமான திரைப்பட லிஸ்ட்டிலேயே இதுவும் சேர்ந்திருக்கிறது..!
|
Tweet |
0 comments:
Post a Comment