மாவீரன் கிட்டு - சினிமா விமர்சனம்

02-12-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் IceWear சந்திராசாமியின் ஆசியன் சினி கம்பைன்ஸ் மற்றும்  நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் டி.என்.தாய் சரவணன் மற்றும் ராஜீவன் ஆகியோரின் கூட்டு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் இது.
இதில், விஷ்ணு விஷால், பார்த்திபன், ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் நடித்துள்ளனர். இசை – D. இமான், ஒளிப்பதிவு – சூரியா, வசனம், பாடல்கள் – யுகபாரதி, எடிட்டிங் – காசி விஸ்வநாதன், கலை இயக்கம் – சேகர், நடனம் – ஷோபி, தயாரிப்பு மேற்பார்வை – கருணாகரன். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகள் ஆகியும் இந்தியாவில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் இன்னமும் சுதந்திரம் பெறவில்லை. இன்னமும் ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைகள் அவர்கள் மீது நீண்டு கொண்டேதான் இருக்கின்றன.
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்.. தீண்டாமை ஒரு பாவச்செயல்.. தீண்டாமை கூடாது என்று அனைத்து வகுப்பு பாடப் புத்தகங்களில் அச்சிட்டுக் கொடுத்தாலும் அது வெறும் பேச்சு என்கிற அளவில்தான் உள்ளது.
இந்தாண்டு ஜனவரி மாதத் துவக்கத்தில் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்த நாட்டில் எந்தளவுக்கு மரியாதை உள்ளது என்பதை நிரூபித்தது.
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள வழுவூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஊர் திருநாள்கொண்ட சேரி.
இங்கு தலித் மக்கள் 40 ஆண்டு காலமாகத் தங்களுக்கு சுடுகாட்டுப் பாதை வேண்டும் என்று போராடி வருகின்றனர். பொதுப் பாதையில் தலித் மக்களின் சடலத்தை எடுத்துச் செல்ல ஆதிக்கச் சாதியினர் தொடர்ந்து அனுமதி மறுப்பதால், அவர்களின் போராட்டமும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அவர்களுடைய குடியிருப்பிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சுடுகாட்டுக்குப் பொது வழியில் பிணத்தை எடுத்துச் செல்ல ஆதிக்க சாதியினர் அனுமதி மறுப்பதால், வயல் வழியாக சுற்றுப் பாதையில், வாய்க்கால் வரப்பு ஓரமாக, வயல்வெளிகளில் சுமாராக 4 மணி நேரம் நடந்து சென்றுதான் பிணத்தை எரிக்க வேண்டுமாம்.
மழைக் காலங்களில் வரப்புகளில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு ஈரமும், சேறுகளும் இருக்கும். அந்தக் கஷ்டத்தில்தான் பிணத்தைத் தூக்கிச் சென்று வருகிறார்கள். அதோடு கூடவே அக்கம் பக்கம் வயல்வெளிகளின் உரிமையாளர்களான ஆதிக்கச் சாதியினர் இதற்கும் தடைக்கல் போடுகிறார்கள். “எப்படி எங்களது வயல் வழியாக உங்கள் பிணத்தை எடுத்துச் செல்லலாம்..?” என்று கூறி, ஆதிக்கச் சாதியினரால் தலித்துகள் தாக்கப்பட்டும் வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 26.11.2015 அன்று குஞ்சம்மாள் என்கிற 85 வயது தலித் மூதாட்டி இக்கிராமத்தில் இறந்தார். அப்போது பெய்திருந்த மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் நிரம்பியிருந்ததால், குஞ்சம்மாள் சடலத்தைப் பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல தலித்துகள் முயன்றபோது, அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்கச் சாதியினர் தடுத்திருக்கின்றனர்.
குஞ்சம்மாளின் பேரன் கார்த்திக், “என் பாட்டியின் சடலத்தை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல ஆதிக்கச் சாதியினர் அனுமதி மறுக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுங்கள்…” என்று மாவட்ட ஆட்சியரிடமும், எஸ்.பி.யிடமும் புகார் கொடுத்துள்ளார்.
சாதி ரீதியாகத் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் ஆதிக்க சாதியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸார், அவர்களிடத்தில், ”தயவு செய்து பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதி கொடுங்கள்…” என்று கெஞ்சியிருக்கின்றனர். அப்போதும் மறுத்துவிட்டனர் ஆதிக்க சாதியினர்.
பிணம் அழுகிக் கொண்டிருந்த சூழலில், மீண்டும் தலித்துகளிடமே வந்து நிர்ப்பந்தப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் போலீஸார். ‘‘சடலத்தைத் தனிப் பாதையில் எடுத்துச் சென்று அடக்கம் செய்யுங்கள்; இல்லையேல் நாங்களே அடக்கம் செய்வோம்’’ என்று பேசியிருக்கிறார்கள்.
இந்த முறை தலித்துகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துவிட்ட சூழலில், மூன்று நாட்கள் கழித்து 29.11.2015 அன்று வலுக்கட்டாயமாக காவல் துறையினரால் மூதாட்டியின் பிணம் அபகரிக்கப்பட்டு அங்குள்ள உள்ளாட்சி ஊழியர்கள் மூலம் சுடுகாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
அடுத்த ஒரு மாதத்தில், இதே குஞ்சம்மாளின் கணவரான 100 வயது நிரம்பிய செல்லமுத்து என்பவரும் இறந்து போனார். ஏற்கெனவே குஞ்சம்மாளின் சடலத்தையே அடக்கம் செய்யும் உரிமையைக்கூட இழந்த கோபத்தில் இருந்த தலித் மக்கள், செல்லமுத்துவின் சடலத்தோடு சிதிலமடைந்த ஒரு வீட்டுக்குள் ஒன்று கூடி கதவைப் பூட்டிக் கொண்டனர்.
பொதுப் பாதையில் சடலத்தை கொண்டு செல்ல அனுமதிக்கும்வரை நாங்கள் எவரும் இந்த வீட்டை விட்டு வெளியே வர மாட்டோம் என்று உறுதியுடன் இருந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, சடலத்தைப் பொதுப் பாதையில் எடுத்துச் செல்லலாம் என்று உறுதியளித்திருக்கின்றனர் போலீஸார்.
அப்படியிருந்தும் ஆதிக்கச் சாதியினர் வன்முறையில் இறங்க எத்தனித்து பொதுப்பாதையை மறித்து நின்ற காரணத்தினால், காவல்துறையினர் இந்த முறையும் பலாத்காரம் செய்து செல்லமுத்துவின் பிணத்தைக் கைப்பற்றி தாங்களே சுடுகாட்டுக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
இந்தக் கொடுமையெல்லாம் இந்த 20-ம் நூற்றாண்டிலும் பெரியார் பிறந்த மண் என்று சொல்லிக் கொள்ளும் தமிழகத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருவதைப் பார்த்தால், ஜாதி என்கிற விஷம், எந்த அளவுக்கு தமிழர்களிடையே புரையோடிக் கிடக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் புயலைக் கிளப்பிய சூழலில் இதனை மையமாக வைத்துதான் முழுக்க, முழுக்க அரசியல் படமாகவே இதனை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.
அது 1987-ம் ஆண்டு. பழனி அருகேயிருக்கும் புதூர் என்றொரு கிராமம். அந்தக் கிராமத்தில் தீண்டாமை தலை விரித்தாடுகிது. தலித் மக்களுக்கும், மேல்சாதி மக்களுக்கும் வேறு, வேறு சுடுகாடுகள்.. தலித் மக்கள் இறந்தால் அந்தச் சடலம் பொது வழியில் எடுத்துச் செல்லவே முடியாது. ஊரைச் சுற்றி 9 மைல் தூரம் நடந்துதான் கொண்டு செல்ல வேண்டும்.
இந்தச் சூழலில் அந்த ஊரின் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்துவந்த காளிமுத்து ஐயா என்பவர் இறந்து போகிறார். அவரது உடலை பொது வழியில் கொண்டு போக நினைக்கிறார்கள் தலித் மக்கள். ஆதிக்கச் சாதியினர் இதனை எதிர்க்கிறார்கள்.  இவருக்கு அடுத்து தலித் மக்களுக்காக உழைத்து வரும் அதே ஊரைச் சேர்ந்த சின்ராசு என்னும் பார்த்திபனின் தலைமையில் தலித் மக்கள் போராட்டத்தில் குதிக்கிறார்கள்.
மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள். பொது வழியில் சடலத்தை கொண்டு செல்ல போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பாகிறது. உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் போலீஸ் அதனை நடைமுறைப்படுத்த தயங்குகிறது.
அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷனின் சப்-இன்ஸ்பெக்டரான செல்வராஜ் என்னும் ஹரிஷ் உத்தமன் அதே உயர் சாதியை சேர்ந்தவர். அதனால் அவர் உயர்சாதி மக்களுக்கே ஆதரவுக் கரம் நீட்டுகிறார்.
உயர் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடக்கிறது. உயர் சாதியினர் இதற்கு முடியவே முடியாது என்று மறுக்க.. பேச்சு வார்த்தை முறிகிறது. ஆனால் நேரம் ஓடிக் கொண்டேயிருப்பதால் காவல்துறையினர் பிணத்தைக் கைப்பற்றி தாங்களே ஊரைச் சுற்றிக் கொண்டுபோய் சுடுகாட்டில் கொண்டு வந்து எரிக்கிறார்கள்.
கோர்ட் அளித்த தீர்ப்பைகூட நடைமுறைப்படுத்த இயலாமல் செயலற்றதாகிறது மாவட்ட காவல்துறை நிர்வாகம். இது அந்தப் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுவிஷால் போன்ற தலித் இளைஞர்களுக்கு மிகப் பெரிய ஆறாத தழும்பாக மாறுகிறது.
இதே நேரத்தில்.. தங்கள் மீதான கோபத்தில் உயர்சாதி மக்கள் காலனிக்குள் வந்து செல்லும் பேருந்தை நிறுத்தியதால் தாங்களே தங்களது சொந்த செலவில் ஒரு பேருந்தை வாங்கி அரசு அனுமதியுடன் அதனை தங்களது ஊருக்குள் வந்து போகும் பேருந்தாக மாற்றிப் பயன்படுத்துகிறார்கள்.
அந்த வருடம் விஷ்ணு விஷால் பிளஸ்டூ வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக வருகிறார். அவரை ஐ.ஏ.எஸ். படித்து அவருடைய இனத்துக்கே பெருமை சேர்க்கும்படி பார்த்திபன் சொல்ல.. விஷ்ணுவிஷாலும் இதை ஏற்றுக் கொண்டு பழனி அரசு கலைக் கல்லூரியில் சேர்கிறார்.
அதே கல்லூரியில் உயர்சாதியைச் சேர்ந்த அதேசமயம் தலித் மக்களின் மீது பாசம் கொண்ட பெரைராவின் மகள் கோமதி என்னும் ஸ்ரீதிவ்யாவும் படித்து வருகிறார். ஒரு விஷயத்தில் ஸ்ரீதிவ்யாவுடன் மோதும் விஷ்ணுவிஷால் அவர் யார் என்பதை அறிந்து மன்னிப்பு கேட்க.. இருவருக்குள்ளும் பழக்கம் உண்டாகி.. அது காதலாக மாறுகிறது.
இதே நேரம் அதே கல்லூரியில் இவர்களுக்கு நண்பர்களாக இருக்கும் உயர்சாதி பெண்ணும், தலித் பையனும் காதலிக்க.. அவர்களுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார்கள் விஷ்ணுவிஷாலும் அவரது நண்பர்களும்.
அடுத்து அந்தப் பெண்ணை தேடி அவளது அப்பா ஓடி வந்து கதறுகிறார். அவருக்காக பரிதாபப்பட்ட பார்த்திபன் மணமக்களை வரவழைத்து தந்தையிடத்தில் காட்ட.. அந்த இடத்திலேயே கோபத்தில் தனது மகளை ஆணவக் கொலை செய்துவிட்டு போலீஸில் சரண்டராகிறார் அப்பா.
இதையடுத்து திவ்யாவின் அப்பாவான பெரைராவும் ஒரு நாள் இரவில் ஆதிக்க சாதியினராலேயே ‘துரோகி’ என்று பட்டப் பெயர் சூட்டப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலை பழி விஷ்ணுவிஷாலின் மீது விழுகிறது.
சப்-இன்ஸ்பெக்டர் ஹரீஷ் உத்தமன் இந்த வழக்கில் விஷ்ணுவிஷாலையும் ஒரு குற்றவாளியாகச் சேர்த்துவிடுகிறார். அவர் கைது செய்யப்படுகிறார். இதனால் அவரது ஐ.ஏ.எஸ். படிப்பு கேள்விக்குறியாகிறது. பின்பு ஜாமீனில் வெளியில் வந்து கல்லூரிக்கும் சென்று வருகிறார் விஷ்ணுவிஷால்.
ஆனாலும் அந்த ஹரீஷ் உத்தமன் தங்களை அவமரியாதை செய்ததையும் கையெழுத்திடச் செல்லும்போது அவமானப்படுத்துவதையும்,  நினைத்து நினைத்து அவர் மீது கோபப்படுகிறார்கள் விஷ்ணுவிஷாலும் அவரது நண்பர்கள்.
ஒரு நள்ளிரவில் சப்-இன்ஸ்பெக்டர் ஹரீஷ் உத்தமனை தாக்குவதற்காக திட்டம் தீட்டுகிறார்கள் மாணவர்கள். அந்தத் திட்டம் சொதப்பலாக விஷ்ணுவிஷால் மாட்டிக் கொள்கிறார். தன்னை கொலை செய்ய  வந்ததாக விஷ்ணுவிஷால் மீது புதிதாக ஒரு வழக்கினை பதிவு செய்துவிட்டு விஷ்ணுவிஷாலை லாக்கப்பில் வைத்து அடித்து நொறுக்குகிறார் ஹரீஷ் உத்தமன்.
விஷ்ணு விஷால் இரவில் வீட்டுக்கு வரவில்லை என்பதால் காலையில் பார்த்திபன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கேள்விகள் கேட்க.. அன்று காலையிலேயே விஷ்ணுவிஷாலை அனுப்பி வைத்துவிட்டதாகச் சொல்கிறார் ஹரீஷ் உத்தமன்.
விஷ்ணுவிஷாலை ஹரீஷ் உத்தமன் ஏதோ செய்துவிட்டதாகச் சொல்லி பார்த்திபனின் தலைமையில் தலித் மக்கள் அனைவரும் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்துகிறார்கள்.
நள்ளிரவில் அழைத்து வரப்பட்ட விஷ்ணுவிஷாலை உயிருடன் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். தலித் மக்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும். பொதுப்பாதையில் சடலத்தை கொண்டு போக அனுமதிக்க வேண்டும். தலித் மக்கள் மீது வன்மம் கொண்டு பொய் வழக்கு போடுவதையே வழக்கமாக வைத்திருக்கும் அராஜக சப்-இன்ஸ்பெக்டரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல கோரிக்கைகளுடன் போராட்டத்தில் குதிக்கும் தலித் மக்களை அந்த மாவட்ட நிர்வாகமும், மாநில நிர்வாகமும் எதிர்கொள்கிறது..!
முடிவு என்ன என்பதுதான் இந்த அருமையான, அற்புதமான திரைப்படத்தின் திரைக்கதை.
அங்கே, இங்கே என்று அரசியல் மேடைகளிலும், ஊர்ப் பஞ்சாயத்துக்களிலும் பேசி வந்த ஜாதி வெறிப் பேச்சுக்கள், மிரட்டல்கள் இன்றைக்கு நவீன மீடியாவையும் வளைத்துப் பிடித்தாட்டுகிறது.
முகநூல், வலைத்தளம், டிவீட்டர் தளம் என்று எந்த வடிவத்தில் சமூக வலைத்தளங்கள் பெருகினாலும், அங்கேயும் அவரவர் ஜாதிப் பெருமைகளைப் பேசும் விஞ்ஞானிகளும் நாட்டில் பெருகிவிட்டார்கள். உண்மையான மனித சமத்துவம் பேசும் அஞ்ஞானிகள் அருகிப் போய்விட.. தர்மம் பின் தங்கி அதர்மம் தலைதூக்கி ஆடிக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் இந்த மாதிரியான ஒரு படைப்பை வெளிக்கொணர்ந்தமைக்காக இயக்குநர் சுசீந்திரனுக்கு கை வலிக்கும் அளவுக்கு கை தட்டலாம். அத்தனை முழுமையான ஜாதிய எதிர்ப்பை தாங்கி வந்திருக்கிறது இந்தப் படம்.
நிச்சயமாக இதுவரையிலும் “தலித்தியம் பேசி, தலித் படங்களைத்தான் எடுத்திருக்கிறேன்..” என்று சொல்லும் ‘கபாலி’ படத்தின் இயக்குநரான ரஞ்சித் நிச்சயமாக தலித்தியம் பற்றி எதுவுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. இந்தப் படத்தில் நெத்தியில் அடித்தாற்போல் பேசப்படும் வசனங்களும், காட்டப்படும் காட்சிகளுமே அதற்கு சாட்சி.
பாம்பு கடித்துவிட்ட உயர்சாதிப் பெண்ணை தூக்குவது எப்படி என்ற கேள்வியெழும் காட்சி பொட்டில் அடித்தாற்போல் இருக்கிறது. அந்தக் காட்சியில் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லும் திட்டமும் அதற்கான பின்னணி இசையும் அழகும், கலகமும் சேர்ந்த ஒரு கலவை. மருத்துவமனையில் “என் சாதி பெண்ணை நீ எப்படிடா தூக்கலாம்?” என்று விஷ்ணுவை அடிப்பதும்.. அதை அவர் மிக எளிதாக எதிர்கொள்வதும் நிஜத்தில் நடப்பது இதுதாண்டா என்று சுசீந்திரன் மறைமுகமாகச் சொல்கிறார்.
படத்தின் பல காட்சிகளுக்கு சரியாக தீனி போட்டிருக்கிறார் வசனகர்த்தாவான பாடலாசிரியரும், கவிஞருமான யுகபாரதி.
காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தும் முதல் காட்சியிலேயே தனது கலகத்தை வசனத்தில் காட்டியிருக்கும் யுகபாரதி கடைசிவரையிலும் யதார்த்தமான, உண்மையான தனது வசனங்களால் இந்த்த் தமிழ்ச் சமூகத்தில் புரையோடிருக்கும் ஜாதிப் பற்று கொண்டு அலையும், ஜாதி வெறியர்களை தோளுரித்துக் காட்டியிருக்கிறார்.
“காமராஜர் சும்மா இல்லாமல் இவங்களை படிக்க வைச்சதால வந்த வினை இது..”
“அதிகாரத்துல உள்ளவங்களை தப்பானவங்கன்னு சொல்லல… அதிகாரமே தப்புன்னுதான் சொல்றோம்…”
“நாலு எழுத்து படிச்ச திமிர்ல இப்படியெல்லாம் பேசுறானுங்க..”
“எல்லா புரட்சிகளுமே துரோகத்தால்தான் தோற்று இருக்கிறது. நமக்கும் அந்த நிலைமையை தயவு செய்து கொண்டு வராதீங்க…”
“நம்ம முன்னாடி நிக்கக்கூட பயந்தவனுங்க.. இப்ப எதிர்த்து பேசவே ஆரம்பிச்சிட்டானுங்க..”
“சாதி வெறிக்காக பெத்து வளர்த்த மகளை கொன்னுட்டு, எந்த கவுரவத்த காப்பாத்த போறோம்…” என்று பல இடங்களில் கூராய்ந்த வேலினை போல, வசனத்தின் மூலம் வேல் பாய்ச்சியிருக்கிறார் யுகபாரதி.
விஷ்ணுவிஷாலின் நடிப்பு கேரியரில் இந்தப் படம் மிக முக்கியமான படமாக இடம் பிடித்திருக்கிறது. அடக்குமுறையிலேயே இருக்கும் இளைஞன்.. அதே சமயம் அதை மீறவும், கேள்வியெழுப்பவும் தயங்காதவன்.. இப்படிப்பட்ட கிட்டு கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார் விஷ்ணு விஷால்.
கல்லூரி மாணவர் கேரக்டர் என்றாலும் 1987-ம் வருடத்திய காலம் என்பதால் கொஞ்சம் அடக்கமாக.. கதையைச் சிறிதும் சிதைக்காதவண்ணம் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் விஷ்ணு.
சின்ராசு கேரக்டரில் நடித்திருக்கும் பார்த்திபன் வழக்கமான, தனது டிரேட் மார்க் வசனங்கள் எதுவுமே இல்லாமல், ஒரு இயக்குநருக்கேற்ற நடிகராகவே படம் முழுவதும் கருப்புச் சட்டையில் வலம் வந்து காண்பித்திருக்கிறார். “அவங்க ஒரு பொய்யைச் சொல்லித்தான் நம்மை சாய்ச்சிருக்காங்க. பதிலுக்கு நாமளும் ஒரேயொரு பொய்யை சொல்லி அவங்களை சாய்ப்போம்…” என்று திட்டமிட்டு அவர் நடத்தும் கிளைமாக்ஸ் டிராமா அபாரம்..! இதுவெல்லாம் போர்த் தந்திரம்தான். பலசாலி எதிரிகளை இப்படித்தான் வென்றாக வேண்டும். வேறு வழியில்லைதான்..!
“என் முன்னால் நீயொரு நாள் நிச்சயம் கை கட்டி நிற்க வேண்டி வரும்…” என்று ஹரீஷ் உத்தமனை எச்சரித்துவிட்டு அதேபோல் நிற்கும்போது, அதற்கொரு அலட்சிய சிரிப்பை உதிர்க்கிறார் பாருங்கள்.. இந்த ஒரு சிரிப்புதான் அந்த தலித் மக்களுக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும்..!
ஹீரோவுக்காக டூயட்டுகளில் ஆடிப் பாடி நடித்தே வலம் வந்து கொண்டிருந்த ஸ்ரீதிவ்யாவுக்கு இந்தப் படத்தில் ஹெவியான கேரக்டர். முதல்முறையாக தனது ஜாதிப் புத்தியைக் காண்பித்துவிட்டு பின்பு அதனை உணர்ந்து மன்னிப்பு கேட்டு.. விஷ்ணுவுடன் காதல்வயப்பட்ட நிலையில் அவரைக் காணாமல் துடித்துப் போய்.. எதிரிகளின் சூழ்ச்சிக்கு உள்ளாகி தவிக்கும் நிலையில் ஒரு இயல்பான காதலை காட்டியிருக்கிறார் ஸ்ரீதிவ்யா.
ஹரீஷ் உத்தமன் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். இன்னொரு பக்கம் சூரி தனது நெகிழ்ச்சியான கதாபாத்திரத்தின் மூலம் மனித வாழ்க்கையின் நெருக்கடியான காலக்கட்டத்தை உணர்த்தியிருக்கிறார். சபலம் ஒன்றே ஒரு மாபெரும் தத்துவத்தையும், ஒரு இயக்கத்தையும், ஒரு போராட்டத்தையும் வீழ்த்திவிடும் என்பதை சூரியின் கேரக்டர் மூலம் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
ஏ.ஆர்.சூர்யாவின் ஒளிப்பதிவில் காட்சிகளெல்லாம் அழகாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. கொடைக்கானல் மலைக் காட்சிகளும், பாடல் காட்சிகளும், ஒளிப்பதிவாளரின் திறமையை பறை சாற்றியிருக்கிறது.
இமான், யுகபாரதி கூட்டணி இந்தப் படத்தில் நூறு சதவிகிதம் வெற்றி பெற்றிருக்கிறது. ‘இணைவோம்’, ‘ஒண்ணா ஒண்ணா’ பாடல்கள் இனி மேடைக்கு மேடைக்கு ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதேபோல் ‘கண்ணடிக்கலை.. கை பிடிக்கலை..’ பாடல் அனைத்து பாடல் கச்சேரிகளிலும் நிரந்தரமாக ஓரிடத்தைப் பிடித்துவிடும். அதேபோல் ‘இளந்தாரி’ பாடலும் கேட்கும் ரகம். டூயட் பாடல் காட்சிகளை கச்சிதமாக இன்றைய இளைஞர்களுக்கும் பிடிப்பதுபோல காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.
கிளைமாக்ஸை நோக்கி படம் நகர்ந்து வரும் வேளையில் வரும் அந்த இரண்டு டூயட்டுகளும் தேவையற்றவிதத்தில் படத்தின் தன்மையைக் குறைக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் பாடல்கள் கேட்கும் ரகமாக இருப்பதால்தான் தியேட்டரில் அத்தனை ருசிப்பு..! இதனை இடைவேளைக்கு முன்பான பாடல்களாகவே வைத்திருக்கலாம்.
ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும், சில துணை கட்சிகளும்கூட இந்த ஜாதிப் பிரச்சினையில் தங்களுடைய நிஜமான அக்கறையைச் செலுத்தாமல் ஒப்புக்குச் சப்பாணியாக பேசி மக்களை ஏமாற்றி வருகின்றன. எந்த அரசியல் கட்சியும் வெளிப்படையான ஜாதியெதிர்ப்பு போராட்டாங்களை நடத்தாமல் தேர்தலுக்காகவே பதுங்கி பம்முகின்றன. அவர்கள் செய்திருக்க வேண்டிய வேலையை.. ஒரு தனி மனிதன்.. இயக்குநர் சுசீந்திரன் தனது படைப்பின் மூலமாக அற்புதமாக செய்திருக்கிறார்.
ஜாதி என்றால் என்ன..? ஜாதி பிரச்சனையின் ஆணி வேர் எது..? ஜாதிக்கள் எங்கேயிருந்து துவங்கின..? இதற்கு யார் காரணம்..? ஜாதி வெறியர்களின் இன்றைய ஆட்டத்திற்கு யார் பின்புலம்..? என்று எதுவுமே தெரியாமல் ஒரு தலைமுறை தமிழகத்தில் உருவாகியிருக்கிறது.
அவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால், ஒரு நிமிடமேனும் இந்தப் பிரச்சினையைப் பற்றி மற்றவர்களிடத்தில் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். இந்த விழிப்புணர்வை கொண்டு வந்தமைக்காகவே இயக்குநர் சுசீந்திரனுக்கு மிகப் பெரிய பூச்செண்டுடன் கூடிய வாழ்த்துகள்..!
தமிழகமே பார்த்து கொண்டாடப்பட வேண்டிய படம் இது. அவசியம் பாருங்கள் மக்களே..!

0 comments: