04-12-2016
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘ஆ’ என்கிற மர்ம நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் இது.
அந்த நாவலில் இருந்து சில அடிப்படையான விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு மீதியை, தற்போதைய தமிழ்ச் சினிமாவுக்கேற்றபடியாக திரைக்கதை அமைத்து தயாரித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.
அமெரிக்காவின் சோஷியல் நம்பர் ஆக்ட்டை உருவாக்கும் நிறுவனத்திற்கு புரோகிராமிங் கோடிங்கை எழுதிக் கொடுக்கும் அளவுக்கு ஆற்றல்மிக்க கணிப் பொறியியலாளர் தினேஷ் என்னும் விஜய் ஆண்டனி.
எந்நேரமும் அலுவலகம், வேலை என்று மும்முரமாக இருப்பவருக்கு ஐஸ்வர்யா என்னும் அருந்ததி நாயருடன் திருமணமாகிறது. திருமணம் முடிந்து ஹனிமூனுக்கு போன இடத்தில் தினேஷுக்கு திடீரென்று யாரோ தன்னுடன் பேசுவது போல தோன்றுகிறது. இந்த நிகழ்வு அடிக்கடி நிகழ தினேஷை சுற்றிலும் பல அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன.
இந்த்த் தொல்லையால் அவர் தற்கொலை முயற்சிவரைக்கும் போக.. அவருடைய நண்பரான ரவி தினேஷை காப்பாற்றுகிறார். இதனால் பயந்து போகும் தினேஷ் மருத்துவரை சந்திக்க ஒத்துக் கொள்கிறார். மருத்துவரை சந்திக்கப் போகும்போது நடக்கும் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறார் தினேஷ்.
அங்கே சிகிச்சை முடிந்த பின்பும் அவரது மனநிலை மாற்றமாகியிருக்க.. அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் தலைவர் தினேஷை மனநல மருத்துவரிடம் அழைத்து வருகிறார். அந்த மருத்துவர் தினேஷை ஆழ்மனநிலைக்கு கொண்டு போய் நடந்த நிகழ்வுகளை கேட்கிறார்.
இப்போது தன்னுடைய முந்தைய பிறவியின் கதையை தினேஷே சொல்கிறார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தஞ்சாவூரில் தமிழ் ஆசிரியராகவும், பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றுகிறார் ஷர்மா என்னும் விஜய் ஆண்ட்டனி. 40 வயதைத் தாண்டியும் திருமணமாகவில்லை. கோபாலன் என்னும் சிறுவனை தத்துப் பிள்ளையாக எடுத்து வளர்க்கிறார்.
இந்த நேரத்தில் தனது தந்தையுடன் அந்த ஊருக்கு வரும் ஜெயலட்சுமி என்னும் அருந்ததி நாயர் தனக்கு ஏதாவது வேலை கொடுக்கும்படி ஷர்மாவிடம் கேட்கிறார். ஷர்மாவும் தான் பணிபுரியும் பள்ளியிலேயே ஜெயலட்சுமியை ஆசிரியையாக நியமிக்கிறார்.
ஜெயலட்சுமியின் பணிவையும், கோபாலனை கவனித்துக் கொள்ளும் பாங்கையும் பார்த்த ஷர்மா, ஜெயலட்சுமியைப் பிடித்துப் போய் அவரையே திருமணமும் செய்து கொள்கிறார். இருவருக்கும் ஒரு குழந்தையும் பிறக்கிறது. இந்த நேரத்தில் அந்தப் பள்ளிக்கு கணிதப் பாட ஆசிரியராக வரும் இளைஞன், ஜெயலட்சுமியை கவர நினைக்கிறான். இதற்கு ஜெயலட்சுமியும் உடன்படுகிறாள்.
இந்தச் சூழலில் எதிர்பாராதவிதமாக இவர்களின் கைக்குழந்தை தவறி கீழே விழுந்து இறந்து போகிறது. இதைத் தொடர்ந்து ஜெயலட்சுமி, அந்த இளைஞனுடன் ஓடிப் போகிறாள். இடிந்து போகிறார் ஷர்மா. தொடர்ந்து சில நாட்களிலேயே வீடு திரும்பும் ஜெயலட்சுமி தான் திருந்திவிட்டதாகவும், தன்னை மன்னித்துக் கொள்ளும்படியும் சொல்கிறாள். வேறு வழியில்லாமல் ஜெயலட்சுமியை ஏற்றுக் கொள்கிறார் ஷர்மா.
அன்றொரு நாள் பவுர்ணமி வெளிச்சத்தில் கரைபுரண்டோடும் காவிரி கரையோரம் நிலா சோறு சாப்பிட்டு ஜெயலட்சுமியுடன் சந்தோஷமாக இருக்கிறார் ஷர்மா. ஆனால் ஜெயலட்சுமியோ தனது கள்ளக் காதலனை அந்த நேரத்தில் வரவழைக்கிறாள். இருவரும் சேர்ந்து தாக்கியதில் ஷர்மாவும், சின்னப் பையனான கோபாலனும் உயிரை இழக்கிறார்கள். இந்தக் கொலையைச் செய்துவிட்டு ஜெயலட்சுமியும், அவளுடைய கள்ளக் காதலனும் காணாமல் போய்விடுகிறார்கள்.
இப்போது அந்த ஜெயலட்சுமிதான், தினேஷ் என்னும் விஜய் ஆண்ட்டனிக்கு நினைவில் இருக்கிறாள். அவளைப் பார்க்க வேண்டும் என்று துடிக்கிறார் தினேஷ். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளித்தும் தினேஷுக்கு சகஜ நிலைமைக்கு வராமல் பைத்தியம் போல் இருக்க.. இந்த நேரத்தில் தினேஷின் மனைவியான ஐஸ்வர்யா ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு ஆஸ்பத்திரியில் இருந்து மாயமாய் மறைகிறாள்.
தொடர் சிகிச்சையால் ஓரளவு சரியாகும் தினேஷ், வீடு திரும்பியவுடன் ஐஸ்வர்யாவை தேடுகிறார். அவள் கிடைக்காமல் போக.. வருத்தப்படுகிறார். ஆனாலும் இன்னமும் அவருக்குள் அந்த மிருகம் இருந்து ஆட்டி வைக்க.. திடீரென்று வீட்டில் சொல்லாமல் தஞ்சாவூருக்கு டிரெயின் ஏறி வருகிறார்.
அங்கே ஜெயலட்சுமியையும், ஷர்மாவையும், கோபாலனையும் தேடுகிறார். அவர்களைப் பற்றி தெரிந்த சாருஹாசன் அவர்களது கதையை தினேஷுக்கு எடுத்துச் சொல்கிறார். அவர் கொடுக்கும் புகைப்படத்தில் ஜெயலட்சுமி அப்படியே அச்சு அசலாக தினேஷின் மனைவி ஐஸ்வர்யா போலவே இருக்க… சென்னை வந்த கையோடு தனது மனைவி ஐஸ்வர்யாவை வலைவீசி தேடுகிறார் தினேஷ்.
ஷர்மா-ஜெயலட்சுமி கதை உண்மைதானா..? ஐஸ்வர்யா கிடைத்தாரா..? தினேஷ் கதி என்ன ஆனது..? என்பதெல்லாம் திரில்லர் கலந்து சுவையான திரைக்கதை. தியேட்டரில் பார்த்து தெரிந்து கொள்ளலாமே..?
தமிழில் சைக்காலஜிக்கல் அடிப்படையில் அமையும் திரைக்கதைகளுக்கு என்ன வரவேற்பு கிடைக்குமோ, அதேதான் இந்த ‘சைத்தானு’க்கும் கிடைத்திருக்கிறது. படத்தின் இறுதியில்தான் உண்மை நிலவரம் தெரிவதால் அதுவரையிலும் புரியாமலேயே அமர்ந்திருந்த மக்கள் ‘ப்பூ இவ்ளோதானா?’ என்றபடியே எதுவும் சொல்லாமல் போகிறார்கள். இது நாவலாக படிக்க ஓகேதான். ஆனால் சினிமாட்டிக்.. திரைக்கதைக்கு தலைகீழ் மாற்றம் செய்திருக்க வேண்டும்.
இதற்கு முன்னர் தமிழில் வெளியான சைக்காலஜிக்கல் படங்களெல்லாம் ‘பேய் பிடிச்சிருச்சு’ பாணியிலேயே சொல்லியிருந்ததால் மக்களுக்கு நெருக்கமான கதையாடலாக அமைந்திருந்தன. இது சற்று விஞ்ஞானப்பூர்வமாக அலசி, ஆராய்ந்திருப்பதால் கவன ஈர்ப்பு செய்ய கடினமாக இருக்கிறது என்பது ரசிகர்களின் கணிப்பு.
விஜய் ஆண்ட்டனிக்கு மிகவும் பொருத்தமான கேரக்டர். இரண்டு கேரக்டர்களிலும் வாழ்ந்து காட்டியிருக்கிறார். ஷர்மாவைவிடவும் தினேஷ் கேரக்டரில்தான் காட்சிகளும், நடிப்புத் திறனை காண்பிக்கும் வாய்ப்புகளும் அதிகம். அதையும் சரியாகவே செய்திருக்கிறார் விஜய் ஆண்ட்டனி.
டாக்டர் கிட்டியுடன் உரையாடுவதில் துவங்கும் முதல் ஷாட்டில் இருந்து அவ்வப்போது வந்து, வந்து செல்லும் அந்த ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் காட்சிகளில் அவரது நடிப்பும், வசன உச்சரிப்புமே அவரது கேரக்டர் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.
மனைவியின் ரொமான்ஸை புரிந்து கொள்ளாமல் பேசுவது.. இரட்டை குரல் பேச்சில் குழப்பமடைவது.. தற்கொலைக்கு சென்று திரும்பியவுடன் வீட்டை நினைத்து வருத்தப்படுவது.. மீண்டும் அந்தக் குரலுக்கு அடிமையாகி பழைய நினைவுகளுக்குள் மூழ்குவது என்று அடுத்தடுத்து தொடர்ச்சியாக விஜய் ஆண்ட்டனி ஒன் மேன் ஷோவை காட்டி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இவரை இந்த அளவுக்கு அழுத்தமாக நடிக்க வைத்திருக்கும் இயக்குநருக்கும் ஒரு ஷொட்டு..!
அருந்ததி நாயர் நிஜமாகவே அசத்தியிருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் அவரது நடிப்பும், வசனம் பேசுகிற பாங்கும், முத்தம் கொடுத்தும்விதமும்.. அமைதியாக பேசி கணவரைக் கவர நினைப்பதும்.. பின்பு கிளைமாக்ஸில் உண்மையைச் சொல்லி மன்னிப்பு கேட்பதுமாக ஹீரோயின் கேரக்டருக்கு வஞ்சகமில்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
அம்மாவான மீரா கிருஷ்ணன், அலுவலக பாஸாக ஒய்.ஜி.மகேந்திரன், தஞ்சையில் இருக்கும் பெரியவராக சாருஹாசன், மருத்துவர் கிட்டி.. நண்பன் ரவியாக ‘ஆடுகளம்’ முருகதாஸ்.. என்று படத்துடன் சம்பந்தப்பட்ட அனைவருமே தங்களது பங்களிப்பை திருப்தியாகவே செய்திருக்கிறார்கள்.
திரைக்கதையை மிக நீட்டாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். படத்தின் துவக்கத்திலேயே கதையைச் சொல்லிவிடுவதால் இடையிடையே வரும் முன் பின் காட்சிகள் குழப்பமில்லாமல் புரிகின்றன.
படுக்கையின் கீழேயிருந்து கண்டெடுக்கும் அந்த மருந்து பொடியின் மூலம்தான் இத்தனையும் நடக்கிறது என்பதை சிறிய குறிப்பு மூலம், முன்கூட்டியே சொல்லியிருந்தால் சஸ்பென்ஸ் போயிருக்கும்தான். ஆனால் காட்சிகளில் இன்னமும் ஆர்வம் வந்திருக்கும்..
மருந்து கம்பெனிகள் மருந்துகளை பரிசோதித்து பார்க்க மக்களை பயன்படுத்துவதை பற்றி சென்ற ஆண்டிலும், இந்தாண்டிலும் சில படங்கள் வெளிவந்துவிட்டன. அவர்கள் அத்தனை பேருமே இந்தக் கதைக் கருவை கிரெடிட் கொடுக்காமலேயே ஆசான் சுஜாதாவிடமிருந்து சுட்டிருக்கிறார்கள் என்பதும் புரிகிறது..!
ஐஸ்வர்யாவை கடத்தி வைத்திருப்பவன் ஒய்.ஜி.மகேந்திரனிடம் தற்செயலாக சிக்குவதைத் தவிர வேறெங்குமே திரைக்கதையில் வலிந்து திணிக்கப்பட்ட எதுவுமே இல்லை. எல்லாமே நேர்க்கோட்டில் நூல் பிடித்தாற்போன்று சுவையாக எழுதப்பட்டிருக்கிறது.
பிரதீப் கலிபுரயத்தின் ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். அத்தனை காட்சிகளும் அழகுணர்ச்சியோடு படமாக்கப்பட்டிருக்கிறது. பின்னணி இசையில் வித்தை காட்டியிருக்கிறார் விஜய் ஆண்ட்டனி. பாடல் காட்சிகளை ரசிக்க முடிந்ததற்கு காட்சிகள்தான் காரணமே ஒழிய.. இசை காரணமில்லை என்பதுதான் உண்மை.
இது போன்று திரில்லர் டைப் படங்களுக்கேற்ற வகையிலேயே இந்தப் படமும் இறுக்கமான வகையிலயே படத் தொகுப்பு செய்யப்பட்டிருக்கிறது. வீர செந்திலின் கைவண்ணத்தில் படத்தொகுப்பை சிறப்பாகச் செய்து சண்டை காட்சிகளிலும், விபத்து ஏற்படும் காட்சிகளிலும், தினேஷ் மாறுதல் அடையும் காட்சிகளிலும் பரபரப்பை ஊட்டப்பட்டிருக்கிறது. வெல்டன் செந்தில் ஸார்..!
‘ஆ’ நாவலைப் படித்தவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்காது. படிக்காமல் செல்பவர்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும்.
இந்த ‘சைத்தான்’ அதற்கேற்ற பெயர்ப் பொருத்தமில்லாமல் அனைவருக்கும் பிடித்த சைத்தானாக இருப்பதுதான் உண்மை. ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் ஒரு சுவையான, பரபரப்பான திரைக்கதையோடு அமைந்திருக்கும் இந்தப் படம் விஜய் ஆண்ட்டனிக்கு நிச்சயம் வெற்றிப் படம்தான்.
படக் குழுவினருக்கு நமது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்..!
|
Tweet |
0 comments:
Post a Comment