11-12-2016
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ் சார்பில் எஸ்.பி.சரணும், பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் ராஜலட்சுமி வெங்கட் பிரபுவும் இணைந்து தயாரித்துள்ள படம் இது.
இதில் ஜெய், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, வைபவ், இனிகோ, அஜய்ராஜ், விஜய் வசந்த், இளவரசு, டி.சிவா, மஹத், கார்த்திக், சுப்பு பஞ்சு, சந்தான பாரதி, விஜயலட்சுமி, கிருத்திகா, மகேஸ்வரி, சானா அல்தாப், கீர்த்தி அஞ்சனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சண்டை பயிற்சி – ஸ்டன்னர் சாம், கலை – விதேஷ், உடை வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர், உடைகள் – செல்வம், ஒப்பனை – குப்புசாமி, ஸ்டில்ஸ் – ஏ.எஸ்.அன்பு, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ஒலிப்பதிவு வடிவமைப்பு – டி.உதயகுமார், நடனம் – கல்யாண், அஜய்ராஜ், சரவணராஜன், ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ், இசை – யுவன் சங்கர் ராஜா, பாடல்கள் – மதன் கார்க்கி, நிரஞ்சன் பாரதி, வெங்கட் பிரபு, கருணாகரன், படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், தயாரிப்பு நிர்வாகம் – என்.சுப்பு, தயாரிப்பு மேற்பார்வை – நாகேந்திரன், தயாரிப்பு – எஸ்.பி.சரண், ராஜலட்சுமி வெங்கட் பிரபு, எழுத்து, இயக்கம் – வெங்கட் பிரபு.
2007-ம் ஆண்டு சின்ன பட்ஜெட் படமாக வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘சென்னை-600028’ படத்தின் அடுத்த பாகமாக இதனை உருவாக்கியிருக்கிறார்கள். முதல் பாகத்தில் இருந்த அதே கதாபாத்திரங்கள்தான் இதிலும் அணி வகுத்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் எப்படி கிரிக்கெட் விளையாட்டை முன்னிறுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டதோ, இதிலும் அப்படியே..! கூடுதலாக நகைச்சுவையும், காதலும் இணைந்து இரண்டரை மணி நேர பொழுது போக்கு படமாக உருவாகியிருக்கிறது..!
முதல் பாகத்தில் இந்தக் கூட்டணி இருந்த ஷார்க் அணியில் இருந்தவர்களில் பலரும் இந்த 9 வருட கால இடைவெளியில் முற்றிலும் மாறிவிட்டனர். சிலருக்குத் திருமணமும் ஆகிவிட்டது. ஜெய்யும், பிரேம்ஜியும் மட்டுமே இப்போதுவரையிலும் பேச்சுலராக இருக்கிறார்கள்.
மிர்ச்சி சிவா விஜயலட்சுமியை கல்யாணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு ஒரேயொரு மகன். நிதின் சத்யாவின் மனைவி கிருத்திகா. அஜய்ராஜின் மனைவி மகேஷ்வரி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். விஜய் வசந்த் செளகார்பேட்டையை சேர்ந்த மார்வாடி பெண்ணான அஞ்சனா கீர்த்தியை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இதில் நிதின் சத்யா வெளிநாட்டுக்கு வேலைக்கு போக முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இருக்கிறார். மிர்ச்சி சிவா இணையம் மூலமாக திரைப்படங்களை விமர்சனம் செய்து கொள்ளையடிக்கும் வேலையை செய்து வருகிறார். விஜய் வசந்த் டூவீலர் ஒர்க்ஷாப் வைத்திருக்கிறார்.
இந்த நண்பர்கள் அவ்வப்போது மனைவிகளுக்குத் தெரியாமல் சந்தித்துக் கொள்கிறார்கள். டாஸ்மாக்கில் சரக்கடிக்கிறார்கள். இதனாலேயே இவர்களது மனைவிகள் ‘நண்பர்களுடன் சேரக் கூடாது’ என்று சொல்லி மிரட்டுகிறார்கள். அவர்களை அவ்வப்போது சமாதானப்படுத்தினாலும் இந்த நண்பர்கள் கூட்டணி இன்னும் உடையாமல்தான் இருக்கிறது.
ஜெய் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். உடன் வேலை செய்து வரும் சானா அல்தாப்பை ஐந்தாண்டுகளாக காதலித்து வருகிறார். இவர்களது காதல் கல்யாணத்தில் முடியப் போகிறது. திருமண நிச்சயத்தார்த்தத்திற்காக மணமகள் வீடு இருக்கும் தேனிக்கு அனைத்து நண்பர்களும் தங்களது குடும்பத்துடன் செல்கிறார்கள்.
சென்ற இடத்தில் அரவிந்த் ஆகாஷை பார்க்கிறார்கள். அவர் சொந்த ஊரான தேனிக்கே திரும்பி ஏதோ வேலை பார்த்து வருவதாகவும், இங்கேயும் தான் ஒரு கிரிக்கெட் டீம் வைத்திருப்பதாகவும், டோர்ணமெண்ட் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இங்கே ஊர் மைனர் போல திரியும் வைபவ் கோஷ்டியுடன் மோதலில் இருப்பதாகவும் சொல்கிறார்.
பல வருடங்கள் கழித்து நண்பர்களை பார்க்கும் அரவிந்த் அடுத்த நாள் நடைபெறும் செமிபைனல் மேட்ச்சில் தன்னுடைய அணியில் சேர்ந்து விளையாடும்படி நண்பர்களைக் கேட்கிறார். ‘சரி.. வந்தது வந்துட்டோம். பிரெண்ட்டுக்கு கை கொடுப்போமே’ என்றெண்ணத்தில் இவர்களும் ‘சரி’யென்று சொல்லி களத்தில் குதித்து அந்த செமிபைனலில் ஜெயித்து கொடுக்கிறார்கள்.
இதனால் கோபமான வைபவ் டீம், இந்த வெளியூர் நண்பர்களை பதம் பார்க்க ஒரு திட்டம் தீட்டுகிறது. அன்றைய இரவில் செமிபைனல் வெற்றியைக் கொண்டாடும் டீம் ‘சொப்பன சுந்தரி’ என்னும் ஆட்டக்காரியுடன் செம ஆட்டம் ஆடுகிறது. அந்த இரவில் ‘சொப்பன சுந்தரி’யுடன் இரவைக் கழிக்கும் ஜெய்யை, ரகசியமாக புகைப்படம் எடுத்துக் கொள்கிறது வைபவ்வின் டீம்.
இதனை வைத்து அவர்களை மடக்குகிறது. இன்றைக்கு நடக்கும் பைனல் மேட்ச்சில் அவர்கள் தோல்வியடைந்தால் போட்டோக்களை அழித்துவிடுவதாகவும் இல்லையெனில் இதனை ஊர் முழுக்க பரப்பப் போவதாகவும் சொல்கிறார் வைபவ். இதனால் பயந்து போன நண்பர்கள் டீம் பைனல் மேட்ச்சில் தோல்வியடைய.. அரவிந்த் ஆகாஷ் இவர்களைத் திட்டித் தீர்க்கிறார்.
ஆனால் அதற்குள்ளாக சானா அல்தாப்பை ஒருதலையாய் காதலித்த அதே ஊர்க்கார நபர் அந்தப் புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் வெளியிட்டுவிட.. அது ஊர் முழுக்க பரவி கடைசியாய் மணமகள் வீட்டிலும் பரவிவிடுகிறது. இதனால் கோபமான மணமகளின் குடும்பத்தார் திருமணத்தை நிறுத்திவிடுகிறார்கள்.
நண்பர்கள் அனைவரும் சோகமாய் சென்னை திரும்புகிறார்கள். இங்கே ஜெய், தனது காதலி சானா அல்தாப்பை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அதோடு தன்னுடைய கல்யாணம் நின்று போனதற்கு தனது நண்பர்கள்தான் காரணம் என்று நினைத்து அவர்களைச் சந்திப்பதையும் தவிர்க்கிறார்..! நண்பர்களும் ஒன்று சேர முடியாமல் பரிதவிக்கிறார்கள். இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் இந்தச் சுவையான படத்தின் திரைக்கதை.
முதல் பாகத்தைப் பார்த்துவிட்டு அதன் தொடர்ச்சி என்கிற ஆர்வத்தில் வருபவர்களை ஏமாற்றாமல் சந்தோஷத்துடன் திருப்பியனுப்பியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.
முதல் பாகத்திற்கு பிறகு இடையில் 6 படங்களை இயக்கியிருந்து வேறு பாதையில் பயணித்திருந்தாலும், மீண்டும் கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்தக் கதையை வடிவமைத்திருக்கிறார். இதற்காகவே அவரை பெரிதும் பாராட்ட வேண்டும்.
இந்தப் பாகத்தில் நண்பர்களின் குடும்பம், மனைவி, பிள்ளைகளின் தொல்லை.. குடும்பப் பிரச்சினை.. கலாட்டாக்கள்.. டாஸ்மாக் அலப்பறை.. பணப் பிரச்சினை.. காதல்.. நட்பு, செண்டிமெண்ட்.. இது எல்லாவற்றையும் நகைச்சுவை கலந்து கொடுத்திருப்பதுதான் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம்.
தேனிக்கு போன இடத்தில் கிரிக்கெட் விளையாடும் சூழலை ஏற்படுத்தும் திரைக்கதை.. அந்தத் திரைக்கதையில் கிரிக்கெட்டை வானவாளவ புகழும் வசனங்கள்.. நட்புக்காகவே கிரிக்கெட் ஆடுவது.. அதே நட்புக்காகவே வேண்டுமென்றே தோற்பது.. என்று கிரிக்கெட்டையும் ஒரு கதாபாத்திரமாகவே இதில் இழுத்துவிட்டிருக்கிறார் இயக்குநர்.
படத்தில் இருக்கும் மொத்த கேரக்டர்களின் எண்ணிக்கையை எண்ண முடியவில்லை. ஆனால் அனைவருக்குமே ஓரளவுக்கு வசனங்களை கொடுத்து பேச வைத்து அவரவர் இருப்பை நியாயப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
முக்கியமான கட்டத்தில் அவர்களது மனைவிமார்களும் விஷயம் தெரிந்து ஊருக்கு வந்து சேர்ந்தவுடன் ஏற்படும் இன்னொரு கலாட்டாவும் படத்திற்கு செம கலகலப்பு. முந்தைய பாகத்தில் தங்களுடன் மோதிய அதே ராக்கர்ஸ் அணியை இந்த பாகத்திலும் நைச்சியமாக கலந்திருக்கிறார்கள். முந்தைய பாகத்தில் விஜய் வசந்திடமிருந்து பேட்டை லவட்டிக் கொண்டு போன ஹரி பிரசாந்திடமிருந்து, இந்த முறை பேட்டை விஜய் வசந்த் வாங்கிக் கொண்டது சிறப்பு.
மிர்ச்சி சிவாவின் கேரக்டர் மூலமாக இணையத்தில் சினிமா விமர்சனங்கள் செய்துவரும் சிலரின் முகத்திரையைக் கிழித்திருக்கிறார் வெங்கட்பிரபு. பணம் கொடுப்பதற்கு முன்பு படத்தைத் திட்டி வரும் விமர்சனமும், பின்பு பணம் அக்கவுண்ட்டில் போடப்பட்ட பின்பு அதே விமர்சனம் நல்ல விமர்சனமாக மாறுவதும் உண்மையை பட்டவர்த்தனமாகச் சொல்லும் காமெடிதான்..!
அதே நேரம் டிவிட்டரில் மட்டுமே விமர்சனங்களை தெரிவித்து வருபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அவர்களுக்கு இதே திரைப்படத்தில் ஒரு கேரக்டரும் கொடுத்து நடிக்க வைத்திருப்பது யாரை பேலன்ஸ் செய்ய என்று தெரியவில்லை.. இயக்குநர்தான் சொல்ல வேண்டும்..!
நடிப்பென்று பார்த்தால் ஜெய்தான் ஹீரோ போல நடித்திருக்கிறார். இவரைச் சுற்றித்தான் கதையே நகர்கிறது என்பதால் அதிக முக்கியத்துவமும் இவருக்குத்தான். நடிப்புக்கு ஸ்கோப் கொடுக்கும் காட்சிகள் இல்லை என்பதாலும், வழக்கமாக ஜெய் எந்த அளவுக்கு நடிப்பார் என்பது உலகத்துக்கே தெரியும் என்பதாலும் எதுவும் தவறாக இல்லை. நன்று..!
கூடவே பிரேம்ஜியின் அக்கப்போர் வசனங்கள் அதிக நேரம் சிரிக்க வைத்திருக்கின்றன. பெரிய அளவுக்கு பில்டப்பை கொடுத்து மைதானத்தில் இறங்கி முதல் பந்திலேயே டக்அவுட்டாகி அதையும் எளிதாக எடுத்துக் கொண்டு வெளியேறும் காட்சியில் தனது ரசிகர்களை மனம் குளிர சிரிக்க வைத்திருக்கிறார். இவருடைய முயற்சியால்தான் மறுபடியும் நண்பர்கள் ஒன்று திரண்டு படத்தை முடிக்க தேனிக்கு மீண்டும் பயணமாகிறார்கள் என்பதால் இவரது கேரக்டர் அதி முக்கியமானது.
மேலும் விஜய் வசந்த், அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ், வைபவ், மிர்ச்சி சிவா பலரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். மிர்ச்சி சிவாவின் டைமிங் காமெடி பலமாக ஒர்க்கவுட்டாகியிருக்கிறது. விஜய் வசந்த் அப்பாவியாய் தனது மனைவியிடம் மாட்டிக் கொண்டு முழிப்பதும், இப்படியே நண்பர்கள் மனைவிமார்களிடம் சிக்கிச் சீரழிவதையும் நகைச்சுவையாகவே படமாக்கியிருக்கிறார் இயக்குநர். மஹத்தும், இனிகோவும் கடைசி நேரத்தில் நண்பர்களுக்காக தலையைக் காட்டி தங்களுடைய இருப்பை பதிவு செய்திருக்கிறார்கள்.
மனைவிகள் அனைவருமே சிறப்பு. பொங்கல் வைப்பதில் இவர்களில் யார் சிறந்தவர் என்று போட்டியே வைக்கலாம் என்பதுபோல இவர்களது சீற்றம்தான் அதிகமாக படத்தில் பதிவாகியிருக்கிறது. ‘பாவம்டா பசங்க’ என்று ஒரு ரசிகர் தியேட்டரைவிட்டு வெளியில் வரும்போது வாய்விட்டுச் சொன்னார். இதிலேயே இவர்களது வெற்றி அடங்கியிருக்கிறது எனலாம்.
ச்சும்மா கமர்ஷியல்தானே என்பதாக இல்லாமல் திரைக்கதைக்கும் தேவை என்பதால் ‘சொப்பன சுந்தரி’ பாடலை வைத்திருக்கிறார்கள். மனீஷா யாதவ் சேலையில் ரம்மியமான கவர்ச்சியில் ஆடிப் பாடி கடைசியில் அனைவரையும் கவிழ்த்துவிட்டார். கிரிக்கெட் ஆட்டத்தின்போது படவா கோபியின் வர்ணனை ரசிக்க வைத்திருக்கிறது.
ராஜேஷ் யாதவ்வின் ஒளிப்பதிவில் சென்னையும், தேனியும் பசுமையாக தெரிகிறது. இரவு, பகல் நேர கிரிக்கெட் ஆட்டங்களை நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறார்கள். ‘சொப்பன சுந்தரி’ பாடல் காட்சியில் கேமிராவின் வித்தைகள் அதிகம். அதேபோல் மற்றைய பாடல் காட்சிகளிலும் அதிகப்பட்ச ஷாட்டுகளை எடுத்துத் தொகுத்து அளித்திருக்கிறார்கள். படத் தொகுப்பாளர் கே.எல்.பிரவீனின் திறமைக்கு இதுவொரு சான்று.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் சந்தேகமே இல்லாமல். ‘சொப்பன சுந்தரி’ பாடல் ஆட்டம் போட வைத்திருக்கிறது. மேலும் ‘வர்றோம்னு சொல்லு.. தள்ளி நில்லு’, ‘நீ கிடைத்தால்’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
படத்தை இந்தப் பாகத்திலும் முடிக்காமல் இன்னொரு பாகத்திற்கும் நகர்த்தியிருக்கிறார்கள். அடுத்த பாகத்தில் நிச்சயம் பிரேம்ஜிக்கு கல்யாணம் நடக்கும்போது ஏற்படும் கலாட்டாவாக இருக்கும் என்பது புரிகிறது. எத்தனை பாகம் வந்தால்தான் என்ன..? அத்தனையும் நகைச்சுவை கலாட்டாவா இருந்தால் மக்கள் ரசிக்கத்தான் செய்வார்கள்.!
ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு படத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்குமோ அத்தனையையும் உள்ளடக்கி, இரண்டரை மணி நேர கலகலப்பிற்கு உத்தரவாதம் அளித்திருக்கிறது இந்த ‘சென்னை-28 இரண்டாம் பாகம்’ திரைப்படம்..!
சந்தேகமே இல்லை.. ‘சென்னை-600028 இரண்டாவது இன்னிங்ஸ்’ கோப்பையை கைப்பற்றியுள்ளது.
|
Tweet |
0 comments:
Post a Comment