25-12-2016
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபாலின் தயாரிப்பில் விஷால் – தமன்னா ஜோடியுடன் வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ரிச்சர்டு எம்.நாதன், இசை – ‘ஹிப் ஹாப்’ தமிழா, படத் தொகுப்பு – ஆர்.கே.செல்வா, எழுத்து, இயக்கம்- இயக்குநர் சுராஜ்.
கண்டெய்னர் லாரி ஒன்றில் 300 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கடத்தப்பட்டு வருகிறது. அதனை டெபுடி கமிஷனரான ஜெகபதி பாபு விரட்டிப் பிடிக்கிறார். பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்துவிட்டு, கடத்தி வந்த தருண் அரோராவை ஜெயிலில் தள்ளுகிறார். ஆனால் கருவூலத்தில் வெறும் 50 கோடிதான் பிடிப்பட்டதாக கணக்குக் காட்டப்படுகிறது.
இந்த நேரத்தில் ஜெகபதி பாபுவின் தங்கையான திவ்யா என்னும் தமன்னாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார் விஷால். ஏன், எதற்கு, யார், எவர், தன்னை அவருக்கு எப்படி தெரியும் என்கிற எந்தக் கேள்வியும் கேட்காமல் விஷாலின் காதலுக்கு தூது சென்று அவ்வப்போது தர்ம அடியும் வாங்கி காதலை சேர்த்து வைக்கிறார் லோக்கல் ரவுடியாக தன்னை நினைத்துக் கொள்ளும் சூரி.
விஷால் தமன்னாவை காதலிப்பது அறிந்து விஷாலை ஆள் வைத்து மிரட்டிப் பார்க்கிறார் ஜெகபதி பாபு. விஷால் மசியாமல் போக.. போலீஸை வைத்து தூக்கி வந்து அடித்து உதைக்கிறார். ஆனாலும் தன் காதலில் விஷால் உறுதியாக இருக்க.. தானும் அந்தக் காதலுக்கு ஓகே சொல்கிறார் ஜெகபதி பாபு.
இந்த நேரத்தில் சிறையில் இருந்தபடியே ஜெகபதி பாபுவை போட்டுத் தள்ள உத்தரவிடுகிறார் தருண் அரோரா. இது தெரிந்து ஜெகபதி பாபு சுதாரிப்பதற்குள் அவரையே கடத்துகிறார்கள் தருணின் ஆட்கள். பணத்தைக் கொடுத்துவிட்டால் ஆளைவிட்டுவிடுவதாகச் சொல்ல.. விஷாலிடம் தான் சுருட்டிய பணத்தை வீட்டில் வைத்திருக்கும் இடத்தைச் சொல்லி அதை எடுத்து வந்து கொடுக்கும்படி கேட்கிறார் ஜெகபதி பாபு.
விஷாலும் பணத்தை எடுத்துக் கொண்டு போனவர்.. அங்கே அடிதடியில் இறங்கி பணத்தைக் கொடுக்காமலேயே ஜெகபதி பாபுவை மீட்டுக் கொண்டு வருகிறார். ஆனால் வீட்டுக்கு வந்தவுடன் மற்றொரு டிவிஸ்ட்.. தான் சிபிஐ ஆபீஸர் அர்ஜூன் ராமகிருஷ்ணா என்றும், ஜெகபதி பாபு கண்டெய்னரில் அடித்த பணத்தை கண்டுபிடிக்கத்தான் இப்படி அவருடைய தங்கை தமன்னாவை காதலிப்பதுபோல் நடிப்பதாகச் சொல்லிவிட்டு வீட்டையே சுத்தமாக சுரண்டியெடுத்து மொத்தப் பணத்தையும் சுருட்டிக் கொண்டு போகிறார் விஷால்.
அவர் போன பின்பு ஜாமீனில் வெளியே வரும் தருண் அரோரா நேராக ஜெகபதி பாபுவை தேடி வருகிறார். அங்கே நடந்த கதையைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியானவர், விஷாலின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு விஷால் தன்னுடன் சிறையில் இருந்தவர் என்றும், அவர் சி.பி.ஐ. அதிகாரி இல்லையென்றும் சொல்ல.. ஜெகபதி பாபுவுக்கு வெறியேறுகிறது. இருவரும் சேர்ந்து விஷாலை தேடிப் பிடிக்கிறார்கள்.
விஷாலை விரட்டிச் செல்லும்போது சாலை விபத்து ஏற்படுகிறது. விஷால் அந்த விபத்தில் சிக்கி தலையில் காயமடைகிறார். சிகிச்சையில் விஷாலுக்கு முந்தைய சம்பவங்கள் அனைத்துமே மறந்துவிட்டதாக மருத்துவர் சொல்கிறார்.
இப்போது விஷாலை தங்களது கஸ்ட்டிக்கு எடுத்துச் செல்லும் ஜெகபதி பாபு, தருண் கோஷ்டி இப்போது விஷாலுக்கு மனநல மருத்துவம் அளிக்க டெல்லியில் இருந்து டாக்டர் பூத்ரி என்னும் வடிவேலுவை வரவழைக்கிறார்கள். அவர் மூலமாக விஷாலை குணப்படுத்த முயல்கிறார்கள்.
அவர்களின் இந்த வேலை முடிந்ததா..? விஷாலுக்கு மனநலம் திரும்பியதா..? அவரது காதல் என்னவானது..? அந்த கன்டெய்னர் பணம் என்னவானது..? யாரிடம் இருக்கிறது என்பதையெல்லாம் பொறுமையிருந்தால் தியேட்டருக்குச் சென்று படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இயக்குநர் சுராஜுக்கு என்னாச்சு என்று தெரியவில்லை. எத்தனையோ நல்ல காமெடி படங்களை கொடுத்திருக்கிறார். ஆனால் இதில் காமெடி என்கிற பெயரில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளை திரையில் பார்த்து நிச்சயமாக அவரே சிரித்திருக்க மாட்டார்.
சூரி முற்பாதியில் சில இடங்களில் சற்றே நகைக்க வைத்தாலும், வடிவேலும் இந்த லிஸ்ட்டில் இடம் பிடித்திருப்பது சற்றே வருத்தப்பட வைக்கிறது. தமன்னா, விஷால் இருவருக்கும் இடையே ஓடி, ஓடி சமாதானம் செய்யும் ஒரு காட்சியில் மட்டுமே வடிவேலு பழைய பன்னீர்செல்வமாகத் தெரிந்தார். மற்றபடி அவரையும் ஓரம்கட்டியிருக்கிறார் இயக்குநர்.
யார்.. என்ன படித்திருக்கிறார்..? என்ன பெயர்..? குடும்பம் என்ன..? என்ன வேலை செய்கிறார்..? இது எதையுமே தெரிந்து கொள்ளாமல் இந்தக் காலத்து பொண்ணுகள் யாராவது காதலிப்பார்களா..? அதுவும் காவல்துறையில் துணை கமிஷனரின் தங்கையாக இருப்பவர் எத்தனை சுதாரிப்பாக இருப்பார்..? இப்படி திரைக்கதையில் நிறைய ஓட்டைகளை பரப்பி வைத்திருக்கிறார் இயக்குநர் சுராஜ்.
சூரி போர்ஷனில் முற்பிறவி கதையைப் பரப்பி அதை நம்ப வைக்க விஷாலும், சூரி ஆட்களும் செய்யும் செட்டப் வேலைகள் கடுப்பைத்தான் கிளப்புகின்றன. அரதப் பழசான திரைக்கதை. சூரி, பெண் வேடத்தில் செய்யும் அலப்பறை மட்டுமே கொஞ்சம் ரசிக்கும்படி இருந்தது.
வடிவேலு போர்ஷனில் முதல் ஷாட்டில் இருந்து கடைசிவரையிலும் நான்ஸ்டாப்பாக பேசிக் கொண்டே வருகிறார் வடிவேலு. சிகிச்சையின்போது தமன்னாவை வரவழைத்து விஷாலுடன் பழக விடும் திட்டத்தில் அவர்களிடம் மாட்டிக் கொண்டு வடிவேலு படும் பாட்டில்தான் கொஞ்சமேனும் சிரிக்க வைத்திருக்கிறார் வடிவேலு. ரொம்ப எதிர்பார்த்து போய் ஏமாந்துட்டோம்..!
விஷாலுக்கு மட்டுமே பொருத்தமான கேரக்டர். அவர் தெலுங்குலகத்திற்கும் சேர்த்தே தன்னை ஒரு காரசாரமான பக்கா மசாலா ஹீரோவாக காட்டிக் கொள்ள முனைகிறார். இடையில் ‘பாண்டிய நாடு’ மாதிரியான அருமையான படத்தைக் கொடுத்தாலும் கமர்ஷியல் கம்மர்கட் வேண்டும் என்று நினைத்து இது மாதிரியான கதைகளில் அவர் மாட்டிக் கொள்வதுதான் நமக்குக் கடுப்பாக இருக்கிறது.
தமன்னாவை கவர்ச்சி ஊறுகாயாகவே காண்பித்திருக்கிறார்கள். படம் முழுவதிலும் பெரும்பாலான காட்சிகளில் தொடை தெரியும் அளவுக்கு டிரவுசர் அணிந்து சிக்கனமாக தயாரிப்பாளருக்கு அதிகம் செலவு வைக்காமல் நடித்திருக்கிறார். ஆனால் நடிப்பென்று பார்த்தால் படத்தில் உருப்படியாய் நடித்திருப்பது இவர் மட்டுமே..!
விஷாலை அடித்து நொறுக்கியதை அறிந்து கோபத்துடன் தனது அண்ணன் ஜெகபதியிடம் வந்து பொங்கும் தமன்னாவிடம் ஜெகபதி பாபு, “ச்சும்மா உன்னை நிசமாவே காதலிக்கிறானா, இல்லையான்னு செக் பண்ணத்தான் அப்படி செய்தேன்…” என்றவுடன் சட்டென்று அமைதிப் பூங்காவாக தனது முகத்தைக் கொண்டு போகிறாரே.. அந்த ஒரு காட்சியிலேயே தமன்னா எங்கயோ போய்விட்டார்..!
பாடல் காட்சியில் கவர்ச்சி ப்ளஸ் கிறக்கம்.. காதல் காட்சிகளில் இப்படியொரு காதலி அமையக் கூடாதா என்கிற ஏக்கம்.. விஷாலை முழுமையாக நம்பி அவர் பின்னாலேயே போகும் காட்சியில் ‘ஐயோ பாவம்.. இப்படி பச்சைப்புள்ளையா இருக்கே?’ என்கிற பச்சாபதம் அனைத்தையும் ரசிகனுக்குள் தனது நடிப்பால் புகுத்தியிருக்கிறார் தமன்னா..
ஜெகபதி பாபு தெலுங்கில் முன்னாள் ஹீரோ. இப்போது குணச்சித்திர நடிகர்.. கேரக்டருக்கேற்ற நடிப்பைக் காட்டியிருக்கிறார். தருண் அரோரா வில்லனாக காட்சியளிக்கிறார். வடிவேலுவின் கூட்டாளிகளாக வரும் பாலாஜி, பாவா லட்சுமணன், ஆர்த்தி மூவரின் கூட்டணியும் அவ்வப்போது சிரிக்க வைத்திருக்கிறது.
ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் குறைவில்லை. வெளிநாட்டு லொகேஷன்களையும், பாடல் காட்சிகள், சண்டை காட்சிகளையும் அழகுற படமாக்கியிருக்கிறார்கள். ‘ஹிப் ஹாப்’ தமிழாவின் இசையில் ‘நான் கொஞ்சம் கருப்பு’தான் பாடல் மட்டுமே கேட்க நன்றாக இருக்கிறது. ‘இதயம் இதயம்’ மற்றும் ‘எல்லாமே காசு’ பாடல்களை காட்சிகளாக மட்டுமே பார்த்துக் கொள்ளலாம். பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் அடக்கம் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்..!
நிறைய தமிழ்ப் படங்களின் கதை, திரைக்கதையில் இருந்து ஒவ்வொரு காட்சியாக உருவியெடுத்ததுபோல இருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதையில் ஒரு சில இடங்களில் ‘அட’ என்றும் புருவத்தை உயர்த்தவும் வைத்திருக்கிறார் இயக்குநர் என்பதை மறுப்பதற்கில்லை.
விஷால் திடீரென்று தான் ஒரு சி.பி.ஐ. ஆபீஸர் என்று சொல்லி அதிர்ச்சியூட்டும் காட்சியும், தருண் அரோரா விஷால் தன்னோடு ஜெயிலில் உடன் இருந்தவன் என்று சொல்கிற காட்சியும் இதற்கு உதாரணங்கள். கூடவே விஷாலை ரிசார்ட்டில் ஜெகபதி வந்து சந்திக்கும் காட்சியும் எதிர்பாராததுதான்.
கண்டெய்னரை கடத்தி வந்த வில்லன் தருண் அரோரா இப்போது சிறையில் விசாரணை கைதியாகத்தான் அடைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் தண்டனை கைதிகளுக்கான உடையை அணிந்திருக்கிறார். “என்னுடைய ஜாமீன் மனு என்னாச்சு?” என்று அவரே தன்னைப் பார்க்க வரும் ஆளிடம் கேட்கிறார்.
விசாரணை கைதிகளுக்கு தண்டனை கைதிகளை போல வெள்ளை யூனிபார்மையும், நம்பரையும் தர மாட்டார்கள் என்பது சென்னையில் இருந்து எங்கயோ இருக்கும் அத்திப்பட்டியில் இருப்பவனுக்குக்கூட தெரியும்.
காலம் காலமாக பத்திரிகையாளர்கள் இதை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனை கைதிகளுக்கான வித்தியாசத்தை உணர்ந்து கேரக்டர்களுக்கான உடைகளை பொருத்துங்கள் என்று.. யார் கேட்பது..? இந்த 2017-லிலும் இப்படிச் செய்தால் எப்படி..?
‘கத்தி’ படத்தின் கதையைப் போலவே ‘ராபின்ஹூட்’ பாணியில் விஷால் நடத்தியிருக்கும் இந்த கரன்சி கடத்தலின் உண்மையான காரணம் என்னவோ நியாயமானதுதான். எம்.எல்.ஏ.வும், எம்.பி.யும் சேர்ந்து மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்க அவர்களிடத்தில் கொள்ளையடித்து தன் ஊரை வளமிக்கதாக உருவெடுத்திருக்கும் விஷாலின் அந்தச் செயல் பாராட்டுக்குரியதுதான்.. அரசுகளும், ஆட்சிகளும் மக்களுக்காக உழைக்கவில்லையென்றால் மக்களே அதைக் கையில் எடுப்பதில் தப்பில்லைதான். இதைத்தான் படத்தின் இறுதியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுராஜ்.
இதெல்லாம் சரிதான். ஆனால் அந்த ஊர் இப்படி கொஞ்சம், கொஞ்சமாக இப்படி டெவலப் ஆகி வருவது தொகுதியின் எம்.பி.க்கும், எம்.எல்.ஏ.வுக்கும் தெரியவே தெரியாதா..? எப்படி தெரியாமல் போனது..? ஆளும் கட்சிக்காரர்களுக்குத் தெரியாமல் எந்த ஊரில் இது போன்ற நலத் திட்டங்கள் செயல் வடிவம் பெறும்..? “இப்படியெல்லாம் லாஜிக் பார்த்தால் நாங்க எப்படிய்யா படம் எடுக்கிறது…?” என்று இயக்குநர் புலம்புவார் என்பதால் இதோடு இதனை விட்டுவிடுவோம்..!
சுராஜின் முந்தைய வெற்றி பெற்ற காமெடி படங்களை நினைவில் கொண்டு படத்தில் போய் உட்கார்ந்தால் உங்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும். ‘பாண்டிய நாடு’ தந்த விஷால் என்று நினைத்து தியேட்டருக்குள் போனால் உதையே கிடைக்கும்..! பின்பு எப்படித்தான் போவது என்கிறீர்களா..?
தெரியலையே..?
|
Tweet |
0 comments:
Post a Comment