பழைய வண்ணாரப்பேட்டை - சினிமா விமர்சனம்

02-12-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஸ்ரீகிருஷ்ணா  டாக்கீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் வி.எம்.பிரகாஷ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்த படத்தில் பிரஜன், ரிச்சர்ட், நிஷாந்த் ஆகியோர் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மற்றும் ரோபோ சங்கர், சேசுர், மணிமாறன், தீனா, பரணி, ஜெயராஜ், கூல் சுரேஷ், தேனி முருகன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பாருக், இசை – ஜுபின், எடிட்டிங் – தேவராஜ், கலை – ஆனந்த், சண்டை பயிற்சி –மிரட்டல் செல்வா, நடனம் – ஜானி, தயாரிப்பு –  எம்.பிரகாஷ், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – மோகன்.ஜி.


வடசென்னையின் இதயப் பகுதியான பழைய வண்ணாரப்பேட்டையில் ஒரு காலத்தில் நடைபெற்ற உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
வண்ணாரப்பேட்டையில் ஒரு குறிப்பிட்ட வார்டின் கவுன்சிலர் விபத்தில் இறந்துவிட.. அந்த வார்டில் மட்டும் மறுதேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக எதிர்க்கட்சியை சேர்ந்த லெனின், ஜீவா என்கிற இரண்டு தொண்டர்கள் யாரோ முகம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தப்படுகிறார்கள். இதில் இருவருமே சீரியஸாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
பழைய வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் கொஞ்சம் நேர்மையானவர். எந்தவொரு வழக்காக இருந்தாலும் 21 மணி நேரத்தில் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடித்துவிடுவோம் என்று பெருமையாக பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தவர். இப்போது இந்த வழக்கை துப்பறியத் துவங்குகிறார்.
ஹீரோ பிரஜின் பொறியியல் இந்தாண்டுதான் முடித்திருக்கிறார். இவருடைய நண்பர்கள் குழாமும் கல்லூரி மாணவர்கள்தான். ஆள், ஆளுக்கு ஒரு கனவில் இருக்கிறார்கள். அன்றைய நாளில் இவர்களும் ஒரு பாரில் குடித்துவிட்டு அந்தக் கத்திக் குத்து சம்பவம் நடைபெற்ற தள்ளுவண்டி கடையில் வந்துதான் இரவு உணவை முடித்தார்கள்.
இதனால் சந்தேக்க் கேஸில் இவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்துவிடுகிறார்கள். மறுநாள் காலையில் ஒட்டு மொத்த வடசென்னையின் ரவுடிகளும் ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டும் ஒரு சின்ன தடயம்கூட கிடைக்காமல் அல்லாடுகிறது போலீஸ்.
தேர்தல் நேரம் என்பதால் போலீஸ் உயரதிகாரிகள் எப்படியாவது கேஸை முடித்துவிடும்படி இன்ஸ்பெக்டருக்கு நெருக்கடி கொடுக்க.. இந்த நேரத்தில் கத்துக்குத்துப்பட்டவர்களில் ஒருவரான லெனின் மருத்துவமனையில் இறந்து போகிறார்.
இதனால் மேலிட பிரஷ்ஷர் அதிகமாகவே, வேறு வழியில்லாமல் பிரஜினின் நண்பர்களில் ஒருவன் மீது கேஸை சுமத்தி அவன்தான் கொலையாளி என்று சொல்லி கேஸை முடிக்கப் பார்க்கிறார் இன்ஸ்பெக்டர்.
அப்போது பார்த்து திரையில் எண்ட்ரியாகும் அஸிஸ்டெண்ட்  கமிஷனர் ரிச்சர்ட்.. சுலபமாக அவன் கொலையாளி இல்லை என்பதை கண்டறிகிறார். இந்த வழக்கை தானே புலன் விசாரணை செய்வதாக ராபர்ட் சொல்ல, அவரிடம் கோபப்படும் இன்ஸ்பெக்டர் லீவில் சென்று விடுகிறார்.
உண்மையான குற்றவாளி கிடைத்தால் மட்டுமே பிரஜினின் நண்பன் வெளியில் வர முடியும் என்பதால் பிரஜினும் களத்தில் குதிக்கிறார். ஒரு பக்கம் அஸிஸ்டெண்ட் கமிஷனர் ரிச்சர்டும், இன்னொரு பக்கம் பிரஜின் தனது நண்பனுக்காகவும் அந்தக் கத்திக் குத்து கொலையாளி யார் என்பதை கண்டறிய களம் இறங்குகிறார்கள்.
யார் அந்தக் கொலையாளி..? ஏன் இந்தக் கொலை..? பிரஜினின் நண்பன் தப்பித்தானா என்பதுதான் இடைவேளைக்கு பின்பான கதை..!
பிரஜின் அவரது நண்பர்கள் குழாம் இயல்பாக நடித்திருக்கிறது. இயக்குநர் தனக்குத் தெரிந்தவகையில் இயக்கம் செய்திருப்பதால் எந்த வகையிலும் இவர்களைக் குற்றம் சொல்ல முடியாது.
குமாரின் இருப்பிடத்தைக் கண்டறியும் பொருட்டு ‘ஊத்திக் குடி’ பாடலுக்கு முன்பாக நடக்கும் சரச காட்சிகளும், அதைத் தொடர்ந்து பிரஜினும், அவனது நண்பனும் உள்ளே நுழைந்து வில்லனிடம் குமாரின் இருப்பிடம் பற்றி விசாரிக்கும் காட்சியிலும் நம்மை மறந்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். அந்தக் குமாரியின் நடிப்பு அந்த இடத்தில் அத்தனை ரசனையானது.. வெல்டன் மேடம்..!
இதேபோல் ரோபோ சங்கர் அசல் குடிகாரனை போல நடித்திருப்பதும், கூல் சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளும், மருத்துவமனையில் கொலை சம்பவம் பற்றி ரிச்சர்ட் விசாரிக்கும் காட்சிகளும் இயக்குநரின் இயக்கத் திறமைக்கு ஒரு சான்று..!
இதேபோல் கருணாஸின் கேரக்டர் ஸ்கெட்ச்சும் அவரது பேச்சும்.. அரசியல் பற்றி அவருக்கு இருக்கும் தெளிவும், காட்சியை நகர்த்த அவர் தரும் க்ளுவும் படத்தில் ஒரு பெரிய ட்விஸ்ட் என்றே சொல்லலாம்..!
பாரூக்கின் ஒளிப்பதிவு குறிப்பிடத்தக்க பணியை செய்திருக்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே நடந்திருப்பதால் கேமிராவின் பங்களிப்பு பெரிதாக இருக்கிறது. ‘ஊத்திக் குடி’ பாடல் காட்சியிலும், சண்டை காட்சிகளிலும் கேமிராவின் அழகுணர்ச்சியில் காட்சிகள் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளன. சண்டை காட்சியில் சீரியல் லைட்டுகளின் அணிவகுப்பும், ‘ஊத்திக் குடி’ பாடல் காட்சியில் கண்ணைக் கவரும் லைட்டுகளுமே இன்னொரு பக்க அழகைக் கூட்டியிருக்கின்றன. கலை இயக்குநருக்கு ஒரு ஜே போடுவோம்..!
இசையமைப்பாளர் ஜூபின் இந்தப் படத்தில் கவனிக்க வைத்திருக்கிறார். ‘உன்னை நினைக்காத’ என்ற வேல்முருகன் பாடும் பாடல் அந்த சிச்சுவேஷனை சற்று இறுக்கத்தில் இருந்து இறக்கியிருக்கிறது. அதேபோல் ‘ஊத்திக் குடி’ பாடலும் சிச்சுவேஷனுக்கேற்றாற்போல் அலற வைத்திருக்கிறது. மனிதர் பின்னணி இசையிலும் அடித்து புரட்டியிருக்கிறார். டிரம்ஸின் உறையே கிழிந்திருக்கும். அந்த அளவுக்கு தெறிக்கிறது இசை. வாழ்த்துகள்.. பாராட்டுக்கள் ஜூபினுக்கு..!
தேவராஜின் படத்தொகுப்பு படத்தின் பிற்பாதியில் படத்தை இறுக்கமாக ஒரு தேடுதல் வேட்டையை நோக்கி நகர்த்தியிருக்கிறது.
படத்தின் பிற்பாதியில் இருக்கும் வேகம் முற்பாதியில் இருந்திருந்தால் படம் செம திரில்லர் டைப் என்று உறுதியாகச் சொல்லியிருக்கலாம். முற்பாதியில் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளில் தேவையே இல்லாமல் பலரது சொந்த வாழ்க்கை… காதல் வாழ்க்கை.. வழக்குகள்.. என்று திரைக்கதை ஒவ்வொரு பக்கமாக சென்றுவிட்டதால், படத்தில் ஒட்டு மொத்தமாக மூழ்க முடியவில்லை.
பிற்பாதியில் “யாரய்யா அந்த பட்டறை குமார்..?” என்று படம் பார்க்கும் ஒவ்வொருவனையும் யோசிக்க வைத்து.. ஏங்க வைத்து.. கடைசியாக குமாரின் அந்த முகத்தைக்கூட சரியாகக் காட்டாமல் படத்தின் இரண்டாம் பாகம் மும்பையில் தொடரும் என்று தற்காலிகமான முற்றுப்புள்ளி போட்டிருக்கும் இயக்குநருக்கு ஒரு சபாஷ்.
பழைய வண்ணாரப்பேட்டையில் நடந்த பழைய கதையை, புதிய வடிவத்தில் கொடுத்திருக்கிறார்கள். பார்க்கலாம்தான்..!

0 comments: