25-12-2016
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
எந்த முன்னுரையும் இல்லாமல் நேரடியாக கதைக்குள் போவோம்..!
போஸ்ட் மாஸ்டரான ரோகிணி தனக்குக் கிடைத்த மாற்றல் உத்தரவினால் தனது மகன் சசிகுமாருடன் மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் வழுதூருக்கு வருகிறார். அங்கேயிருக்கும் ‘செல்பி’ காத்தாயி என்னும் கோவை சரளா-சங்கிலி முருகன் தம்பதியினருக்கு சொந்தமான வீட்டில் குடியேறுகிறார்.
வரும்போதே டிஷ் ஆண்ட்டனாவை கொண்டு வருகிறார். ரோகிணியின் அப்பா சதாசர்வகாலமும் டிவி பார்க்கும் பழக்கமுள்ளவர். அவருக்காகவே அந்த வீட்டில் எப்போதும் டிவி ஓடிக் கொண்டேயிருக்கிறது. அதே ஊரில் வசிக்கும் வளவன், கேபிள் டிவி நடத்துகிறார். அந்த ஊரில் யார் டிஷ் ஆண்ட்டனா வைத்தாலும் அவர்களை பயமுறுத்தியோ, அடித்தோ டிஷ்ஷை தூக்க வைத்துவிட்டு தன்னிடம் கேபிள் கனெக்ஷன் வாங்க வைத்துவிடுவார். இவருக்கு அந்த ஊர்ப் பஞ்சாயத்து தலைவரும் ஆதரவாக இருக்கிறார்.
அதே ஊரில் வசிக்கும் கறிக்கடை பாயான பாலாசிங்கின் மகள் தான்யா. இவரைப் பார்த்தவுடன் வழக்கமான ஹீரோக்கள் போலவே காதல் கொள்கிறார் சசிகுமார். தான்யா முதலில் மறுத்தாலும் பின்பு காதலுக்கு ஒத்துக் கொள்கிறார்.
இந்த நேரத்தில் டிஷ் ஆண்ட்டனா விஷயத்திற்காக ரோகிணியை தனது வீட்டிற்கு அழைத்து, அவரை அவமானப்படுத்தி அனுப்பி வைக்கிறார் ஊர்த் தலைவர். அதோடு ரோகிணி வீட்டிற்கும் வந்து யாருக்கும் தெரியமால் டிஷ் ஆண்ட்டனாவை தூக்கிச் செல்கிறார்கள் அவருடைய ஆட்கள்.
இதனால் கோபப்படும் ரோகிணி, சசிகுமாரிடம் அவர்களை அடிக்கச் சொல்கிறார். தாய் சொல்லே மந்திரமாக வாழும் சசிகுமாரும் அவர்களை வெளுத்து வாங்குகிறார். இது போலீஸ் கேஸாகிவிட சிறைக்குச் செல்கிறார் சசிகுமார். இதனால் அரசு வேலைக்காக காத்திருந்த சசிகுமாரின் வேலைக்கான கனவு ஆசை நிராசையாகிறது.
ஜெயிலிலிருந்து வெளியே வரும் சசிகுமார் இனிமேல் வளவனை தான் ஆட்டம் காண வைக்கிறேன் என்று அவனிடமே சவால் விடுகிறார். அப்படியென்ன செய்து சாதிக்கிறார் என்பதும், தான்யா, சசிகுமாரின் காதல் என்னவாகிறது என்பதும்தான் இடைவேளைக்கு பின்னான கதை..!
சின்னக் கதை. அதற்கு பொட்டு வைத்து, பூ வைத்து அழகு பார்ப்பதைவிட்டுவிட்டு, எத்தனை அலங்கோலமாக எடுக்க முடியுமோ அத்தனையையும் செய்திருக்கிறார் இயக்குநர்.
இந்தக் கதைக்குள்ளும் ஒரு அழகான, சுவையான கதைக் கரு ஒன்று உள்ளது. தான்யாவின் அப்பா பல ஊர்களில் சீட்டுப் பிடிப்பதாகச் சொல்லி பணத்தை வசூல் செய்துவிட்டு, கலெக்சன் நிறைய கைக்கு கிடைத்தவுடன் அந்த ஊரைவிட்டு ஓடி வந்து வேறொரு ஊரில் செட்டிலாகும் குணமுள்ளவர்.
இப்போது இந்த ஊருக்கே, வேறொரு ஊரில் அடித்த பணத்துடன் வந்துதான் டேரா போட்டிருக்கிறார். கூடவே இதே ஊரிலேயே சீட்டும் பிடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்தத் தொழிலையும் செய்து கொண்டிருக்கிறார்.
இந்த ஒரு கருவை வைத்தே திரைக்கதையை அமைத்திருந்தால் சுவையாக இருந்திருக்கும். வேறொரு திரைக்கதையும் இவர்களுக்கு கிடைத்திருக்கும். இதை கோட்டைவிட்டுவிட்டு ஒரு சாதாரண டிஷ் ஆண்ட்டனா, கேபிள் டிவி மோதலையே மையமாக வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். இதனால் படத்தில் சுவாரஸ்யமே இல்லாமல் சப்பென்று உள்ளது.
இடைவேளை பிளாக்கில் தான்யாவின் அப்பாவின் தில்லுமுல்லுகள் தெரிய வர.. இரண்டாம் பாதியில் அதைத் தீர்த்து வைக்கும் வேலையில் ஹீரோ இறங்கி, அந்தக் குடும்பத்தினரின் நன்மதிப்பைப் பெற்று.. தான்யாவின் அப்பாவுக்கு நல்லவனாக வாழ்வதில் இருக்கும் சுகத்தை உணர்த்தி நல்லவிதமாக படத்தை முடித்திருக்கலாமே..?!
படத்தில் அனைத்து கேரக்டர்களுமே லூஸுத்தனமாக இருப்பது இன்னும் கொடூரமாக இருக்கிறது. முக்கியமாக கோவை சரளா. ஆச்சி மனோரமாவுக்கு பின்பு நடிப்பில் சிகரம் தொடுபவர் கோவை சரளாதான். அதில் சந்தேகமேயில்லை. ஆனால் அதற்காக வடிவேலு பாணியில் பக்கம், பக்கமான வசனங்களை கொடுத்து பேச வைத்தால் எப்படிங்கோ..?
ஒரு பொறுப்பான பாட்டியாக இருக்க வேண்டியவரை பத்தாம்பசலியை போல காட்டியிருக்கிறார் இயக்குநர். மார்க்கெட்டிங் ஆட்களை அவர் வேலை வாங்கும் விதம் ஒன்றுபோதும் இதைச் சொல்வதற்கு.. மேலும் தான்யா கேட்டார் என்று சொல்லி சசிகுமாரிடம் நகைகள், ஒட்டியாணம், கொலுசு, என்று அனைத்தையும் தனக்கென்று வாங்கி அணிவதெல்லாம் ஒரு பாட்டி செய்யக் கூடிய வேலையா இயக்குநரே..?
சங்கிலிமுருகன் கேரக்டர் ஸ்கெட்ச்சும் இப்படித்தான் இருக்கிறது. அவரை சகட்டுமேனிக்கு அனைவருமே ‘டேய்’ போட்டுத்தான் பேசுகிறார்கள். இது என்ன மாதிரியான நாகரிகம் என்று தெரியவில்லை. வயதான மனுஷனை கிராமப்புறங்களில் ‘யோவ்’ என்பார்கள்.. ‘பெரிசு’ என்பார்கள்.. நாம் பார்த்திருக்கிறோம்.. கேட்டிருக்கிறோம்.. ஆனால் இங்கே எல்லை மாறி கடந்து போயிருக்கிறார்கள்.
வளவனின் மகள் கேரக்டரிலும் இதே போன்ற தவறுகள்.. அந்தப் பெண் பார்ப்போர் அனைவரையும் காதலிப்பார் என்றும், சிரித்துப் பேசுவார் என்றும் சொல்லி.. கடைசியில் அப்பா பார்த்திருக்கும் பையனை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, கேபிள் டிவியில் வேலை செய்யும் பையனை காதலிப்பதாகச் சொல்ல.. அவருக்கு கோவை சரளா கோஷ்டி கல்யாணம் செய்து வைத்து அனுப்புவதெல்லாம் சின்னப்புள்ளத்தனமாக இருக்கிறது..!
தான்யாவை காதலில் விழ வைக்க சாமியாரிணி பெண்ணிடம் சசிகுமாரை அழைத்துப் போகிறார் கோவை சரளா. அந்த சாமியாரிணி சொல்லும் ஐடியா ‘உவ்வே’ ரகம். எப்படித்தான் இயக்குநர் இப்படியெல்லாம் யோசித்தாரோ தெரியவில்லை..!
இதைவிட பெரிய கொடுமை.. ஹீரோயின் தான்யாவின் அம்மா புகைப்படத்தை வைத்து இயக்குநர் செய்திருக்கும் காமெடி. ஹீரோயின் ஓடி வருவதை போன்ற காட்சிகூட ஓகே. ஆனால் அடுத்த ஷாட்டில் ஹீரோயினின் அம்மாவும் சசிகுமாரை நோக்கி அத்தனை ஆசையாய் ஓடி வருவதை போல காட்டினால் எப்படிங்கோ..? சசிகுமார் முழுமையாக கதை, திரைக்கதையை கேட்டுத்தான் இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை. அத்தனை சொதப்பலாக இருக்கிறது திரைக்கதை..!
அவ்வளவு நேரமும் மகளின் காதலுக்கு எதிர்ப்பாக இருக்கும் அம்மா, திடீரென்று எப்படி கணவரை எதிர்த்து பேசுகிறார்..? மகளின் காதலுக்கு எப்படி துணை போகிறார்..? பாலாசிங் ஏன் இப்படி எதற்கெடுத்தாலும் அரிவாளை கையில் தூக்கிக் கொண்டு சண்டைக்கு வருகிறார்..? இதெல்லாம் ரசிகர்களுக்குக் கிடைத்திருக்கும் அளவு கடந்த சோதனை என்றே சொல்லலாம்.
படத்தில் மெச்சத்தகுந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் ரோகிணி. அடுத்தது ஹீரோயின் தான்யா. ரோகிணியின் நடிப்பிலேயே சசிகுமார் போடும் சண்டை நியாயப்படுத்தப்படுகிறது. அத்தனை ஆண்கள் முன்னிலையில்.. அதுவுன் தன் மகன் வயதையொத்த பையன்களே தன்னை சீண்டிப் பார்க்கும்விதமாக பேசுவதைக் கேட்டு அவமானப்பட்டு வந்தவர்.. தன் வீட்டிலேயே கை வைத்துவிட்டதை பார்த்து பொங்கி வந்த கோபத்தில் “சக்தி.. அடிடா அவனை…” என்று ஒவ்வொருவரையும் கை காட்டி அடிக்க வைப்பதை காட்சி முடிந்த பிறகே இது சரியா என்று யோசிக்க தோன்றியது. அந்த அளவுக்கு ரோகிணியின் பாடி லாங்குவேஜும், அதற்கேற்ற அவரது குரல்வாகும், நடிப்பும் நம்மைக் கவர்ந்திழுக்கிறது.
புதுமுகம் தான்யா பழம்பெரும் நடிகரான ரவிச்சந்திரனின் மகள் வயிற்றுப் பேத்தி. சேலையில் பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கிறார். நடிப்பும் வருகிறது. முதல் படம் போலவே இல்லை. இவருக்கு டப்பிங் கொடுத்தவருக்கு மிகப் பெரிய பாராட்டு. எந்தவொரு சின்க் மிஸ்ஸிங்கும் இல்லாமல் கச்சிதமாக இருக்கிறது இவரது வாய்ஸ். நடிப்பிலும் செல்வி தான்யா குறை வைக்கவில்லை. இப்போது கோடம்பாக்கத்தில் இவர் மாதிரியான உண்மையான அக்மார்க் தமிழ் நடிகைகளுக்கு டிமாண்ட்டாக இருக்கிறது. இவர் அந்தக் குறையைத் தீர்த்து வைப்பார் என்று நம்பலாம்..!
கோவை சரளாவும், சங்கிலி முருகனும் ஒருமித்த தம்பதிகளாக வாழ்கிறார்கள் என்று நினைத்தால் கோவை சரளா பேசும் பல பேச்சுக்கள் அந்த நினைப்பையெல்லாம் குழி தோண்டி புதைத்துவிட்டது. தன்னை மலடி என்று சொல்லிவிட்டானே என்று அழுது புலம்பும் காட்சி மட்டுமே அவருக்கானது. மற்றவையெல்லாம் வீணானது.
ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவு அற்புதம். அத்தனை அழகாக அந்தக் கிராமத்தை படம் பிடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் கடும் உழைப்பை காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்பது அவைகளை பார்க்கும்போதே தெரிகிறது. வெல்டன் ஸார்..
தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் இருக்கின்றன. ஒலிக்கின்றன. ஆனால் மீண்டும், மீண்டும் கேட்க வைக்கவில்லை. பின்னணி இசையில் மட்டும் அழுத்தாமல் விட்டு வைத்திருப்பதால் பிடிக்கிறது..!
கலை இயக்குநர் மாயாண்டி, சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன், படத் தொகுப்பாளரான பிரவீன் ஆண்டனி ஆகியோரையும் பாராட்ட வேண்டும். அவரவர் பணியை கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். வளவன் கோஷ்டியினரை சசிகுமார் பொளந்து எடுக்கும் அந்தக் காட்சியில் சண்டை பயிற்சியும், படத் தொகுப்பும் அத்தனை பிரமாதம்.
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் நடிகர் திலகம் சிவாஜி தனது தம்பியான வெள்ளையத்தேவனாக நடித்த ஜெமினிகணேசனை ஒரு காட்சியில் ‘பலே வெள்ளையத் தேவா’ என்று பலமாகப் பாராட்டுவார். அந்த ஒரு வார்த்தையைக் கச்சிதமாகப் பிடித்துக் கொண்டு அதையே கேட்ச்சிங்கான தலைப்பாகவும் வைத்துக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
சசிகுமாரின் கேரக்டர் பெயர் ‘சக்திவேல்’. இதில் வெள்ளையத் தேவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. இடையிடையே சங்கிலிமுருகன் மட்டுமே அந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி சசிகுமாரை தூண்டிவிடுகிறார். அவ்வளவுதான்..!
ஏற்கெனவே தொடர்ச்சியாக முக்குலத்தோர் புகழ் பாடும் கேரக்டர்களையும், கதைகளையுமே தனக்கான கதைக்களமாக கொண்டிருக்கும் சசிகுமார் இந்த முறையும் அதையே பயன்படுத்தியிருக்கிறார். அவருடைய படங்களை பார்ப்பவர்கள் பெரும்பாலானோர் முக்குலத்தோர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் என்று நினைக்கிறார் போலும்..! சரி.. நமக்கென்ன..?
முதல் 20 நிமிடத்தில் படம் நன்றாகவே போய்க் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று தான்யாவை பார்த்தவுடன் விமல் போலவும், ஜெய் போலவும் தன்னை நினைத்துக் கொண்டு தலையை அசைத்து ஜொள்ளுவிட்டு தான் தான்யாவை பாலோ செய்வதாகச் சொல்லும் அந்தக் காட்சியில் படுத்த படம் அதன் பின் கடைசிவரையிலும் எழவேயில்லை..!
சசிகுமாருக்கு இதெல்லாம் தேவையே இல்லை.. அவருக்கான இடம் ஒன்று தனியே காத்திருக்கிறது. விமல், ஜெய், சிவகார்த்திகேயன் கதைகளில் அவர் நடிக்க நினைப்பது அவருடைய கேரியரை அவரே அழித்துக் கொள்வது போலத்தான்..! ‘சுப்ரமணியபுரம்’, ‘தாரை தப்பட்டை’, ‘கிடாரி’ போன்ற படங்களின் கதைகளே அவருக்கானது. யாராவது அவருக்கு எடுத்துச் சொன்னால் தேவலை..!
எதுவும் சொல்வதற்கில்லை..!
|
Tweet |
0 comments:
Post a Comment