மணல் கயிறு-2 - சினிமா விமர்சனம்

23-12-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழகத்தில் கடந்த 1982-ம் ஆண்டு மே 7-ம் தேதியன்று வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் முழுவதும் ஓடித் தீர்த்த படம் ‘மணல் கயிறு’.
இத்தனைக்கும் இது ரஜினி படமோ, கமல்ஹாசன் படமோ, சிவாஜி படமோ இல்லை. ஆனால் யதார்த்தமான கதை இருந்தது. இயல்பான நகைச்சுவை இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக மனதைத் தொடும் காட்சிகளும், வசனங்களும் இருந்தன.

அன்றைய காலக்கட்டத்தில்தான் வரதட்சணை என்னும் பிரச்சினை தமிழ்ச் சமூகத்தில் மிகப் பெரிய சமூக கோளாறாக பரவியிருந்தது. அந்த நேரத்தில் அதே கல்யாணத்தில் அதில்லாமல் வேறு நோக்கில் ஏற்படும் பிரச்சினைகளை இந்தப் படம் அலசி ஆராய்ந்ததுதான் இந்தப் படத்தின் வெற்றிக்கான காரணமாக அமைந்தது.
முதல் பாகத்தில் ஹீரோவான கிட்டுமணி என்னும் எஸ்.வி.சேகர், தனக்கு வர வேண்டிய மணப்பெண் எப்படியிருக்க வேண்டும் என்பதற்காக 8 கண்டிஷன்களை போடுவார்.
1. பொண்ணு பி.எஸ்.சி.ல முதல் வருடத்திலோ அல்லது இரண்டாவது வருடத்திலோ படிப்பை நிறுத்தியவராக இருக்க வேண்டும்.
1-A. பொண்ணுக்குக் கண்டிப்பா ஹிந்தி தெரிஞ்சிருக்கணும்.
2. பொண்ணு ரொம்ப தைரியசாலியா இருக்கணும்.
3. பொண்ணுக்கு அசைவம், சைவம் இரண்டுமே சமைக்கத் தெரிஞ்சிருக்கணும்.
4, பொண்ணை யாரும் காதலிச்சிருக்கக் கூடாது.
5. பொண்ணுக்கு நடனமாடத் தெரிஞ்சிருக்கணும்.
6. பொண்ணு நானே செத்தால்கூட அழுகக் கூடாது.
7. பொண்ணு எந்த ரகசியத்தையும் என்கிட்ட மறைக்கக் கூடாது.
8. கல்யாணத்துக்கு அப்புறம் திடீர்ன்னு நான் செத்துப் போயிட்டா, அந்தப் பொண்ணு வேற ஒரு கல்யாணம் செஞ்சிட்டு சந்தோஷமா இருக்கணும்.
இப்படியொரு கல்யாண கண்டிஷன்களோடு பொண்ணு பார்க்கச் சொல்லிவிட்டு இது எதுவுமே பொருத்தமில்லாத ஒரு பெண்ணுடன் வாழும் சூழலில் எஸ்.வி.சேகர் படும்பாட்டையும், அதற்கு விசு சொல்லும் நியாயமான காரணத்தையும் அன்றைய தமிழகமே கொண்டாடியது.
இந்தக் கண்டிஷன் விஷயத்தை வைத்து அப்போது பல பத்திரிகைகளில் தொடர் போட்டிகள், கட்டுரைகள், கதைகள், கவிதைகள் வெளிவந்து குவிந்தன. டிரெண்ட் செட்டர் என்ற வகையில் குடும்பக் கதைகளுக்கு அஸ்திவாரம் போட்டது இந்தப் படம்தான்.
அதே படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது உருவாக்கி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். வாழ்த்துகள். பாராட்டுக்கள்..!
இந்த பாகத்தில் எஸ்.வி.சேகரின் மனைவியான சாந்தி கிருஷ்ணாவுக்கு பதிலாக ‘தென்றலே என்னைத் தொடு’ ஜெயஸ்ரீ நடித்திருக்கிறார். ‘நாரதர் நாயுடு’ விசு அதே கேரக்டரில் வருகிறார். இவரது உதவிக்கு ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் வந்து கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறார். சாந்தி கிருஷ்ணாவின் அண்ணனாக வந்த சூர்யகோஸ் ரங்காவும் இதில் அதே கேரக்டரில் நடித்திருக்கிறார்.
எஸ்.வி.சேகர் இப்போது மிகப் பெரிய தொழிலதிபர். அவருக்கு ஒரே மகள் பூர்ணா. தங்களது குடும்ப நிறுவனத்தைப் பார்த்துக் கொள்கிறார். இப்போதும் எஸ்.வி.சேகருக்கு விசு மீது கடும் கோபம். விசு இப்போது 10000 திருமணங்களை நடத்தி வைத்து சாதனையாளராக இருக்கிறார். இவருக்கு நகரில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை பார்த்தவுடன் அவைகளை கிழித்தெறிகிறார் எஸ்.வி.சேகர். ஆனால் ஜெயஸ்ரீக்கும் விசுவுக்கும் இப்போதும் நல்ல பழக்கம் இருக்கிறது.
ஹீரோ அஸ்வின் விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். வீட்டுக்கு ஒரே பிள்ளை. ஜெயஸ்ரீயின் அண்ணனான சூர்யகோஸ் ரங்காவின் மகன். விசுவுக்கும் நன்கு தெரிந்தவர். நாயகி பூர்ணாவை ஓரிடத்தில் பார்த்துவிட்டு அவர் நினைப்பிலேயே இருக்கிறார்.
இந்த நேரத்தில் மனைவி ஜெயஸ்ரீயின் நச்சரிப்பு தாங்காமல் மகளின் ஜாதகத்தை ஜோஸியரிடம் காட்டுகிறார் எஸ்.வி.சேகர். ஜோஸியரான எம்.எஸ்.பாஸ்கர், “உங்களது மகள் திருமணத்தை இன்னமும் 48 நாட்களுக்குள் நடத்தாவிட்டால், அதன் பிறகு அவருக்கு எப்போதுமே திருமணம் நடக்காது…” என்கிறார்.
இதனால் பதறிப் போகும் எஸ்.வி.சேகர் தனக்கு நெஞ்சு வலிப்பதாகச் சொல்லி ஒரு டிராமா போடுகிறார். பதறியடித்து ஓடி வரும் மகள் பூர்ணா அப்பாவின் உடல் நலத்தை முன்னிட்டு தனது கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்கிறார்.
ஆனால், சும்மா இல்லை. கல்யாணத்துக்கு எட்டு நிபந்தனைகளை விதிக்கிறார் பூர்ணா. இதற்கெல்லாம் ஒத்துக் கொள்ளும் மாப்பிள்ளையை கண்ணில் காட்டினால் தான் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்கிறார். அவர் விதிக்கும் நிபந்தனைகள்..
1. மாப்பிள்ளைக்கு அம்மா, அப்பா இருக்கவே கூடாது.
2. மாப்பிள்ளை வேலைக்கு போகவே கூடாது.
3. குடி, சிகரெட் என்று எந்தக் கெட்டப் பழக்கமும் இருக்கக் கூடாது.
4. கல்யாணத்திற்கு பின்பு தன்னை சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும்.
5. கண்டிப்பாக நான் பிள்ளை பெத்துக்க மாட்டேன். இதற்கு மாப்பிள்ளை ஒத்துக்கணும்.
6. ஒரு பிள்ளையை தத்து எடுத்துக் கொள்ள ஒத்துக்கணும்.
7. மாப்பிள்ளைக்கு கண்டிப்பா நீச்சல் தெரிஞ்சாகணும்.
8. கல்யாணத்துக்கு முன்னாடியே டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட்டுக் கொடுக்கணும்.
இந்த நிபந்தனைகளை கேட்டு தாய் ஜெயஸ்ரீ அதிர்ச்சியடைய.. அப்பா எஸ்.வி.சேகரோ அதைப் பற்றி கவலையேபடாமல் பூர்ணாவுக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பிக்கிறார். இன்னொரு பக்கம் அவருக்கே தெரியாமல் விசுவிடம் வரும் ஜெயஸ்ரீ விஷயத்தைச் சொல்லி தனது மகளுக்கு நல்ல மாப்பிள்ளையை பார்த்துக் கொடுக்கும்படி கேட்கிறார்.
இந்த நிபந்தனைகளை கேட்ட விசு, இது எதுவுமே இல்லாத ஹீரோ அஸ்வினை ஜெயஸ்ரீயிடம் காட்டி “இவனை உன் மாப்பிள்ளையாக்கிக்க…” என்கிறார். ஜெயஸ்ரீ “ஓகே…” என்று சொல்ல.. வழக்கம்போல டிராமால்லாம் போட்டு கல்யாணத்தை செய்து வைக்கிறார்கள்.
கல்யாணத்திற்கு பின்பு அஸ்வினின் முகமூடி ஒவ்வொன்றாக கழன்று கொண்டே வர.. தன்னை அனைவரும் சேர்ந்து ஏமாற்றிவிட்டதாக கொதிக்கிறார் பூர்ணா. அஸ்வினை டைவர்ஸ் செய்யப் போவதாகவும் சொல்கிறார். இதே நேரம் பூர்ணா கர்ப்பமாகி நிற்கிறார். உடனேயே தனது கர்ப்பத்தை கலைக்கப் போவதாகச் சொல்ல.. குடும்பத்தினர் அதிர்ச்சியாகிறார்கள்.
இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் இந்த நகைச்சுவை கலந்த திரைப்படத்தின் சுவையான திரைக்கதை.
படத்தின் மிகப் பெரிய நகைச்சுவையே அஸ்வின், ஜெகன், ஜார்ஜ் கூட்டணியில் வரும் விளம்பர வீடியோக்கள்தான். அதையும் அவ்வப்போது திரையில் காட்டுவதால் படம் தொய்வடையும் நேரத்தில், ஒரு சந்தோஷத்தையும் அடுத்த்து என்ன என்கிற எதிர்பார்ப்பையும் சேர்த்தே கூட்டியிருக்கிறது.
எஸ்.வி.சேகரின்  டிரேட் மார்க் காமெடி கலக்கலாக இருக்கிறது. இப்போதுவரையிலும் சிரிக்க வைப்பதில் அவருக்கு தோல்வியே இல்லை. அதிலும் ஷாம்ஸ், சுவாமிநாதன் கூட்டணியில் இண்டர்வியூ காட்சிகள் செம கலாட்டாக்கள்..!
அஸ்வின் சேகர் அவரது அப்பாவை போலவே டைமிங்காக வசனங்களை பேசி நடித்திருக்கிறார். சண்டை காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். நடனமும் ஆடியிருக்கிறார். இது எல்லாவற்றையும் தாண்டி அவரைப் பிடித்துப் போக ஏதாவது ஒன்றை செய்துதான் ஆக வேண்டும். அவர் இனிமேல் நகைச்சுவையை தாண்டிய கதைகளில் நடித்தால்தான் அது தெரிய வரும்..!
இதில் அஸ்வினின் நடிப்பும், பங்களிப்பும் கதைக்கேற்றாற்போலத்தான் இருக்கிறது. அதிகமான எமோஷனல் காட்சிகள் இல்லாமல் இருப்பதால் நடிப்பென்ற ஒன்றே தேவையில்லாமல் இருக்கிறது.
நடிப்பைக் கொட்டியிருப்பவர்கள் பூர்ணாவும், ஜெயஸ்ரீயும்தான். முன்னவர் வாழ்க்கை என்றால் என்னவென்றே புரியாமல் நடித்திருக்கிறார். பின்னவர் வாழ்க்கையைத் தெரிந்து கொண்டு நடித்திருக்கிறார். இரண்டுமே ஒன்றுக்கொன்று முரணாக இருந்தாலும் படத்தை செண்டிமெண்ட் அட்டாச்சில் தாங்கியிருப்பது இவர்கள் இருவரும்தான்..!
பூர்ணா நல்ல நடிகைதான். இவருக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்திருக்க வேண்டும். ஏன் வரவில்லை என்றுதான் தெரியவில்லை. டான்ஸரும்கூட என்பதால் நடனக் காட்சிகளில் குறைவில்லாமல், குறைந்தபட்ச கிளாமருடன் ஆடியிருக்கிறார்.
அமெரிக்க ரிட்டர்னான ஜெயஸ்ரீ தன்னை கேலி செய்யும் டயலாக்குகளையும் அனுமதித்து அதற்கு தானே கவுண்ட்டர் கொடுக்கும் டயலாக்குகளையும் பேசி சாந்தி கிருஷ்ணாவின் ஆப்செண்ட்டை சரிப்படுத்தியிருக்கிறார். சிறந்த தேர்வு.
ஷாம்ஸ் ஒரு சில காட்சிகள் என்றாலும் தொடர்ந்து சிரிக்க வைத்திருக்கிறார். அதற்காக வரும் காட்சிகளிலெல்லாம் அவரை ‘அந்த’ இடத்திலேயே அடித்தால் எப்படிங்க இயக்குநரே..? ஜெகன், மற்றும் ஜார்ஜ் கூட்டணியின் நகைச்சுவை விளம்பரப் படங்களில் தெறிக்கிறது.
குறைந்த பட்ஜெட்டில், குறைந்த நாட்களில் படமாக்கியிருந்தாலும் ஒளிப்பதிவில் குறைவில்லாமல் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளரான ரவி. வெளிநாட்டுக் காட்சிகளை மட்டும் இயற்கை அழகோடு பதிவாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளில் இளமை துள்ளுகிறது.
தரணின் இசையில் நா.முத்துக்குமார் எழுதிய நான்கு பாடல்களுமே சுமார் ரகம். ஆனாலும் என்ன பாடல் காட்சிகளை அசத்தலாக ஷூட் செய்திருக்கிறாரே இயக்குநர். அது போதும்தான்..!
படத்தின் துவக்கத்தில் முதல் பாகத்தில் இருந்து எஸ்.வி.சேகர் போட்ட எட்டு கண்டிஷன் போடும் காட்சிகளை வைத்து, இப்போதைய மக்களுக்கு கதையை புரிய வைத்திருக்கிறார் இயக்குநர். இதற்காக இயக்குநர் மதன்குமாருக்கு ஒரு ஷொட்டு..!
முதல் பாகம் போலவே இதிலும் விசு கல்யாண கண்டிஷன்கள் செய்யும் சமூக சீர்கேட்டை சுட்டிக் காட்டியிருக்கிறார். “சுதந்திரத்திற்கும், விடுதலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. எது தனி மனித சுதந்திரம்.. எது கடமை என்பதை தம்பதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இதைச் செய்தாலே குடும்பத்தில் குழப்பமும் வராது.. டைவர்ஸ் என்கிற பேச்சும் வராது…” என்கிறார் நாரதர் நாயுடுவான விசு. உண்மைதானே..? தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்களில் பெரும்பாலோர் இந்த உண்மையை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்.
இன்றைய இளைய சமுதாயத்தினர் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம் இந்த ‘மணல் கயிறு-2’ என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை..!
பார்த்து விடுங்களேன்..!

2 comments:

Paranitharan.k said...

பார்த்து விடுங்கறேன் ...##


கண்டிப்பாக சார் ...

மாதேவி said...

நன்றி.