13-08-2016
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தீராதி தீர, சூராதி சூர, ஹீரோத்தனமும், வில்லத்தனமும் கலந்த ஒரு கொள்ளையன் தன்னை முடிந்தால் பிடித்துப் பாருங்கள் என்று போலீஸுக்கு சவால்விட்டு கொள்ளையடிப்பதும், அவனை போலீஸாரால் பிடிக்க முடிந்ததா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
கன்னட படவுலகின் சூப்பர் ஸ்டாரான கிச்சா சுதீப்புக்கு மேலும் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்திருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். நிச்சயம் இதுவொரு கமர்ஷியல் கம்மர்கட்டுதான். எந்த லாஜிக்கும் பார்க்காமல் ஹாயாக படத்தைப் பார்த்துவிட்டு போய்விடச் சொல்லித்தான் இயக்குநர் திரைக்கதை அமைத்திருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
ஒரு மிகப் பெரிய பணக்காரன் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை.. ச்சும்மாதான் 120 கோடி ரூபாயை… அலாக்காக தனது ஆட்களை வைத்து கொள்ளையடிக்கிறார் கிச்சா. போலீஸுக்கு போக முடியாமல் தவிக்கும் அந்த பண முதலையான முகேஷ் திவாரி, தனக்கு சலாம் போடும் இன்ஸ்பெக்டருக்கு தகவலைச் சொல்லி தேடச் சொல்கிறார்.
தேடுதல் வேட்டையில் கிச்சா சுதீப் சிக்குகிறார். அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து சித்ரவதை செய்து விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டர். கிச்சாவோ தன் பெயர் ‘சத்யம்’ என்றும், கொள்ளையடித்தவன் தன் அண்ணன் ‘சிவம்’ என்றும், அவன் காணாமல் போய்விட்டதாக போலீஸில் ஏற்கெனவே தான் புகார் கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார்.
ஸ்டேஷனுக்கு வரும் அஸிஸ்டெண்ட் கமிஷனர் நாசர், சத்யத்தின் பரிதாப பேச்சை நம்பி அவருக்கு 500 ரூபாய் பணத்தையும் கொடுத்து அனுப்பி வைக்கிறார். ஆனால் வெளியில் வரும் சத்யம் சில நொடிகளில் தனது சுயரூபத்தைக் காட்டி ‘சத்யமும் நானே.. சிவமும் நானே’ என்பதை ஆடியன்ஸுக்கு உணர்த்துகிறார்.
சத்யம் சொந்தமாக ரியல் எஸ்டேட் பிஸினஸ் நடத்துகிறார். இதில் இடம் வாங்குவதற்காக வரும் நித்யா மேன்னை பார்த்தவுடன் காதல் கொள்கிறார் கிச்சா சுதீப். நிலம் வாங்க பணம் கொடுத்து சில நாட்களிலேயே அந்த இடம் பொறம்போக்கு இடம் என்றும், அங்கு பிளாட் வீடுகள் கட்ட அனுமதியில்லை என்பதும் தெரிய வர.. அனைவரும் சத்யத்தின் அலுவலகம் வந்து பணத்தைத் திருப்பிக் கேட்கிறார்கள்.
இந்தச் சூழலில் நித்யா மேனன் பணம் கேட்டு தொடர்ந்து பின் தொடர்ந்து வர சத்யத்திற்கு அவள் மீதான காதல் மேலும் கூடிக் கொண்டே செல்கிறது. அவளிடமும் சிவத்தின் அராஜகத்தைப் பற்றிச் சொல்லி நம்ப வைக்கிறான் சத்யம். இதைத் தொடர்ந்து இன்னொரு பண முதலையான சரத் லோகிஸ்தவாவிடம் இருக்கும் 150 கோடி கருப்பு பணத்தைக் கொள்ளையடிக்கிறான் சத்யன் என்கிற சிவன்.
இப்போது காதலியான நித்யா மேனனுக்கே சத்யன் மீது சந்தேகம் வருகிறது. நாசருக்கும் சந்தேகம் வருகிறது. இன்ஸ்பெக்டர் சாய் ரவி கொலை வெறியோடு சத்யனை தேடுகிறார்..
கடைசியில் என்னவாகிறது..? காதல் நிறைவேறியதா..? பணத்தைத் திருப்பிக் கொடுத்தாரா..? சத்யம்தான் சிவன்.. சிவன்தான் சத்யம் என்பதை போலீஸார் கண்டறிந்தார்களா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு காலத்தில் ‘வில்லன்’ என்கிற பெயரில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படத்தின் அதே கதையை கொஞ்சம் நினைவுபடுத்துகிறது இந்தப் படம். அதில் அஜீத். இதில் சுதீப். அவ்வளவுதான் வித்தியாசம்.
ஆனால் காட்சிக்குக் காட்சி கலக்கல்தான். மனிதரின் நடிப்பு அத்தனை ரசனையாய் இருக்கிறது. கன்னட சூப்பர் ஸ்டார் என்று சும்மா கிடைக்கவில்லை பட்டம். அதற்கு முழுத் தகுதியுடையவர்தான்.. தங்கத் தமிழை மிக அழகாக உச்சரித்து கவர்ச்சியாக குரலிலேயே ஈர்த்திருக்கும் சுதீப்பிற்கு அதற்காகவே இன்னொரு பாராட்டு.
உண்மையாகவே பல முன்னணி தமிழ் நடிகர்களைவிடவும் நன்கு நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் காதல் மன்னனாகவும், அப்பாவி கேரக்டரில் அப்பாவியையும் மிஞ்சும்விதமாகவும், டான் கேரக்டரில் டானிலும் டானாகவும் எல்லாவற்றிலும் மிஞ்சிய கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் சுதீப். வெல்டன் ஸார்..!
அழகியான நித்யா மேன்னை பேரழகியாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். மென்மையான பேச்சு. ஆனால் தீர்க்கமான பார்வையுடன்..! நித்யாவின் ஒவ்வொரு பேச்சும், ஆக்சனும் நிச்சயம் ரசிகர்களைக் கவரும். இவருக்கு டப்பிங் கொடுத்த மகராசிக்கு ஜோரா ஒரு கை தட்டல்.
சுதீப் தன்னை சுற்றி சுற்றி வருவதை முதலில் விரும்பாமல் பின்பு ரசித்துவிட்டு கடைசியாக ஓகே சொல்லி ஒரு டூயட்டுக்கு வழி விடுவதற்குள் நமக்கே டென்ஷனாகிறது. பாவம் அந்த சுதீப் என்று..! நித்யா மேனன் நடிப்பிலும் குறை வைக்கவில்லை.
இவர்களுக்கு அடுத்து பிரகாஷ்ராஜ்தான். தனது மகனுக்காக தான் உருவாக்கியிருக்கும் ஒரு பொய்யுலகத்தை அவர் சிருஷ்டிக்கும் பாங்கு அருமை. ஆனால் அது இந்த அளவுக்கு இருக்க வேண்டுமா என்று லாஜிக் உதைப்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
பிரகாஷ்ராஜின் கேரக்டர்தான் மகன் சுதீப்பின் இன்றைய நிலைமைக்குக் காரணம் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருப்பதால், பிரகாஷ்ராஜின் கடைசி நிலைமையை நினைக்கும்போது மனம் கலங்காமல் இல்லை.
இன்ஸ்பெக்டராக எப்போதும் டென்ஷனுடனேயே இருக்கும் சாய் ரவியின் நடிப்பு சாதாரண காட்சிகள்லேயே சிரிப்பை வரவழைக்கிறது. சிறிதளவு காமெடிக்கு சதீஷும், இமான் அண்ணாச்சியும்.. பண முதலைகளான முகேஷ் திவாரி, சரத் லோகிஸ்டாவாவின் பணம் பற்றிய புலம்பல்கள்.. இப்படி படத்தில் இடம் பெற்றிருக்கும் முக்கிய கதாபாத்திரங்கள் தங்களது கேரக்டர்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். யாராலும் எந்தக் காட்சியும் சோடை போகவில்லை.
ராஜரத்னத்தின் ஒளிப்பதிவு சூப்பர்.. அதுவொரு விஷயமே இல்லை என்பதை போல படத்தில் காணப்படுகிறது. பாடல் காட்சிகளில் அதன் தனித்தன்மையை காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். அடுத்து சண்டை காட்சிகளில் அனல் பறக்கிறது. கனல் கண்ணனின் இத்தனை வருட அனுபவம் சுதீப் என்னும் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் உதவியிருக்கிறது. இமானின் இசையில் ‘போதவில்லையே…..’ ஒரு பாடல் மட்டுமே இனிப்பு.. மற்றவைகள் ஒரு முறை மட்டுமே கேட்க வைத்தன. அவ்வளவுதான்..!
சண்டை காட்சிகள் மற்றும் கொள்ளையடிப்பு காட்சிகளில் இருக்கும் பரபரப்புக்காக படத் தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனிக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.
தனது அப்பாவை அவரது பிஸினஸ் நண்பர்கள் ஏமாற்றினார்கள் என்பதற்காக கருப்பு பணம் வைத்திருக்கும் திருடர்களிடத்தில் ஹீரோ கொள்ளையடிக்கிறார் என்பதாகத்தான் இயக்குநர் சொல்லியிருக்கிறார். இரண்டு பண முதலைகளிடமும் அடித்த பணம் கருப்புப் பணமாகவே இருந்தாலும் அதுவும் திருட்டுதான்.
‘ஜென்டில்மேன்’, ‘அந்நியன்’ டைப்பில் ஸ்பிளிட் பெர்சனாலிட்டி டைப்பை கொண்டு வருவதற்குக்கூட இயக்குநர் முயலவில்லை. அவன் அப்படித்தான் என்பதை மட்டும் சொல்லிவிட்டு அது சரியா, தவறா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று தீர்ப்பை நம்மிடமே தள்ளிவிட்டிருக்கிறார்.
கமர்ஷியல் படம். அதிலும் சூப்பர் ஸ்டார் நடித்த படம் என்பதால் எதையும் கேள்வி கேட்காமல் படத்தைப் பார்த்துவிட்டு போய்விட வேண்டியதுதான்..!
இரண்டரை மணி நேர பொழுது போக்குக்கு உத்தரவாதம்..! முடிஞ்சா பார்த்திருங்க..!
|
Tweet |
0 comments:
Post a Comment