திருநாள் - சினிமா விமர்சனம்

05-08-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அனைவரும் வன்முறையை கைவிட்டு அஹிம்சையை தேடிப் போகும் நாள்தான் உண்மையான திருநாளாம். இதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு. இதைத்தான் கரம் மசாலா சேர்த்து கமர்ஷியலாக கொடுத்திருக்கிறார்கள்.

கும்பகோணத்தில் மிகப் பெரிய தாதா நாகா. இவருடைய அடியாள் ‘பிளேடு’ என்னும் ஜீவா. நாகாவுக்காக எதையும் செய்வார். எந்த அவமானத்தையும் தாங்கிக் கொள்வார். பல பேர் முன்னிலையில் செத்துப் போன தனது மனைவி ஜீவா மீது ஆசைப்பட்டு அவரிடம் போனார் என்று நாகா பொய்யாக சொல்வதைக்கூட டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொள்ளும் அளவுக்கு நாகாவிடம் அடிமையாக இருக்கிறார் ஜீவா.
நாகாவும், ஜோ மல்லூரியும் பிஸினஸ் பார்ட்னர்கள். ஜோ மல்லூரியின் மகள் வித்யா என்னும் நயன்தாரா. நயன்தாராவின் கனவில் ஜீவா வந்து தாலி கட்டும் அளவுக்கு அவருக்குள் காதல் இருக்கிறது. ஜீவாவும் நயன்தாராவை மனதுக்குள் காதலித்திருக்கிறார். பிற்பாடு இருவரும் இதனை வெளியில் சொல்ல.. இருவருக்குள்ளும் கெமிஸ்ட்ரி பிய்த்துக் கொண்டு போகிறது.
திடீரென்று தஞ்சை மாவட்டத்திற்கு அடிஷினல் எஸ்.பி.யாக கோபிநாத் பொறுப்பேற்கிறார். வந்து சேர்ந்த இரண்டாவது நாளே ஏரியாவின் மிகப் பெரிய ரவுடியான ஜெயபாலனை என்கவுண்ட்டர் செய்கிறார் கோபிநாத். அடுத்த குறி தனக்குத்தான் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாகிறார் நாகா.
திடீரென்று நயன்தாராவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற.. இந்தக் களேபரத்தில் அனைவரின் முன்பாகவும் ஜீவாவும், நயன்தாராவும் ஜோடியாக பிடிபடுகிறார்கள். இது அவர்களது குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஜோ மல்லூரி அவமானத்தில் ஊரைவிட்டுப் போக முடிவு செய்கிறார்.
நாகாவிடம் வந்து தனது பங்கு பணத்தைக் கொடுத்தால் தான் தஞ்சாவூருக்கே போய் செட்டிலாகிவிடுவதாகச் சொல்கிறார். நாகா அவர் பணமே கொடுக்கவில்லை என்று சொல்லி ஏமாற்றுகிறார். மண்ணை வாரி இறைத்து சாபம்விட்டுவிட்டுப் போகிறார் மல்லூரி.
இடையில் ஜீவாவின் நிலைமை திரிசங்கு சொர்க்கமாகிறது. ஜீவாவின் திருமணத்தை நடத்தி வைக்க நாகா மறுக்கிறார். அப்படிச் செய்தால் ஜீவா எனக்கு பார்ட்னராகிவிடுவான். அது மரியாதைக் குறைவாகிவிடும் என்கிறார். இதை ஒட்டுக் கேட்கும் ஜீவாவுக்கு இப்போதுதான் வாழ்க்கையென்றாலே என்னவென்று புரிகிறது.
ஜோ மல்லூரி தனது பங்கு பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றுவதாக நாகா மீது கும்பகோணம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறார். ஜீவாவும் உடன் வந்து மல்லூரிக்கு சாட்சி சொல்ல.. நாகா பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டியதாகிறது.
இந்த நேரத்தில் ஜோ மல்லூரியுடன், ஜீவாவையும் போட்டுத் தள்ளச் சொல்லி லோக்கல் ரவுடிக்கு நாகா உத்தரவிட்டது ஜீவாவுக்கு தெரிய வர.. வெறுத்தே போகிறார் ஜீவா. ஜோ மல்லூரியுடன் தஞ்சைக்கு வரும் ஜீவாவுக்கும், நயன்தாராவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது.
ஒரு பக்கம் போலீஸ் நாகாவை வளைக்கப் பார்க்க.. இன்னொரு பக்கம் ஜீவாவை போட்டுத் தள்ள நாகா திட்டம் போட.. ஜீவா, நயன்தாரா திருமணம் நடந்ததா இல்லையா என்பதுதான் திரைக்கதை.
ஏற்கெனவே பார்த்து, பார்த்து சலித்துப் போன கதைதான்.. இடையிடையே வரும் சில டிவிஸ்ட்டுகள் படத்தின் டெம்போ குறையாமல் கொண்டு சென்றாலும் கடைசியில் இதுக்குத்தானா இவ்வளவும் என்கிற மந்த கதியைத்தான் ரசிக மனம் அடைகிறது..!
எத்தனையோ வெட்டுக் குத்து கொலைகளை உள்ளடக்கிய மசாலா படங்களை பார்த்துப் போன தமிழ் ரசிகர்களுக்கு இது எந்தவிதத்திலும் புதுமையைக் கொடுக்கவில்லை. மாறாக இதுவும் ஒன்று என்றாகத்தான் இருக்கிறது.
ஒரேயொரு ஆறுதல் நயன்தாரா மட்டுமே..! அந்த மூக்குக்கும், உதட்டும் இடையில் இருக்கும் மச்சம் மட்டும் இல்லையெனில் நயனும் சாதாரணப் பெண்ணாகவே இருப்பார் போலிருக்கிறது. வயதானது சில காட்சிகளில் சில கோணங்களில் தெரிந்தாலும் பல இடங்களில் அம்மணியின் அழகு ஜொலிக்கிறது.
ஏன் நயன்ஸ் கோடிகளில் சம்பளம் கேட்கிறார் என்பது இன்றைய தியேட்டர் நிலவரத்தைக் கேட்டறிந்த பின்புதான் புரிகிறது. நயன்தாராவுக்காகவே படம் பார்க்க ஒரு கூட்டம் தியேட்டருக்கு வரும்போது எவ்வளவு கேட்டால்தான் என்ன..?
கொஞ்சம் நேரம் பாவாடை தாவணியிலும், மிச்ச நேரமெல்லாம் பாந்தமான புடவையிலும் வந்து மனதைக் கொள்ளை கொள்கிறார். முதல் நாள் வகுப்புக்கு வரும் எல்கேஜி மாணவர்களுக்கு சாக்லெட் கொடுத்து தனது கன்னத்தைக் காட்டி முத்தம் வாங்கும் நயனுக்கு.. சிம்பு போன்ற சேட்டைக்கார பையன்.. உதட்டில் ஒரு கிஸ் வைத்துவிட்டு ஏகாந்தமாக செல்வதும்.. அதற்கு நயன்ஸ் கொடுக்கிற ஆக்ஷனும் ஏ ஒன்..! தியேட்டருக்கு வரும் அத்தனை ரசிகர்களின் பொறாமை கோபத்தையும் அந்தக் குட்டிப் பையன் சம்பாதித்துவிட்டான்..
நயன்ஸ் வரும் காட்சிகளிலெல்லாம் அவரே ஸ்கிரீனை ஆக்கிரமித்துக் கொள்வதால் ஜீவா பாவமாகத் தெரிகிறார். இப்போதைய தமிழ்ச் சினிமாவின் டிரெண்ட்டின்படி ரவுடிகளைத்தான் ஹீரோயின்கள் விரட்டி, விரட்டி காதலிப்பார்கள் என்பதால் இது ஒன்றும் பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கவில்லை. ஆனால் நயன்ஸையும், ஜீவாவையும் அருகருகே பார்க்கும்போது.. ம்ஹூம்.. ஒன்றும் சொல்வதற்கில்லை..!
ஹீரோவுக்கான அனைத்து ஸ்கோப்புகளும் படத்தில் இருக்கிறது. அத்தனையையும் மிகச் சரியானபடி செய்திருக்கிறார் ஜீவா. இயக்கத்தில் புதிதாக எதுவுமில்லையென்பதால் நடிப்பும் அப்படியேதான் இருக்கிறது.
நாகாவாக நடித்திருக்கும் சரத் லோஹிதாஸ்வாதான் கலக்கியிருக்கிறார். அறிமுகக் காட்சியில் இருந்து கடைசியாக சாகின்றவரையிலும் அவர் வரும் காட்சியில் அவரே ஆக்கிரமித்திருக்கிறார். இவருக்கு போட்டியாக ஜோ மல்லூரி தனது அழுத்தமான, ஆர்ப்பாட்டமில்லாத குணச்சித்திர நடிப்பில் கவர்கிறார்.
“அங்க, இங்கன்னு வந்து கடைசியா என்னையும் ஏமாத்திட்டீயா..?” என்று கோபத்துடன் சொல்லி மண்ணை வாரியிறைத்துவிட்டு திரும்பிப் போகும் காட்சியில், கொஞ்சமேனும் படம் பார்க்கும் காமன்மேன்களை உசுப்பிவிட்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.
வ.ஜ.செ. ஜெயபாலன், ‘நீயா நானா’ கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இயக்குநர் மாரிமுத்து, நயன்தாராவின் அம்மாவாக நடித்திருக்கும் ரமா, ‘முண்டாசுப்பட்டி’ ராம்தாஸ், நயன்தாராவின் பாட்டி என்று சிலரை  நடிக்க வைத்திருப்பதில் இயக்குநருக்கும் திருப்தி. நமக்கும் திருப்தி.
‘முண்டாசுப்பட்டி’ ராமதாஸின் காமெடியெல்லாம் படத்திற்கு எந்தவிதத்திலும் உதவவில்லை. லேசாக புன்னகைக்க மட்டுமே செய்தது. 
மிக நீண்ட இடைவெளிக்கு பின்பு மீனாட்சி ஒரு கேமியோ ரோலில்.. கொஞ்சம் கிளாமரை காட்ட வேண்டி இவர் இருக்கும் காட்சிகளிலெல்லாம் இவரை சைட் போஸிலேயே காட்டி சென்சாருக்கு அதிக வேலை வைத்திருக்கிறார் இயக்குநர். இதிலெல்லாம் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம் ஸார்..!
கடைசியான ‘திட்டாதே’ பாடல் காட்சியும் ஓவர் திகட்டல்.. கொட்டும் மழையில் சுஜா வாருணி ஆடும் ஆட்டம். அந்த நேரத்திய திரைக்கதையில் மிகப் பெரிய தேக்கத்தை ஏற்படுத்திவிட்டது..
அதிசயமாக பாடல்களும், பாடல் காட்சிகளும் அருமையாக இருக்கிறது. வெகு நாட்களுக்குப் பிறகு ஹீரோவும், ஹீரோயினும் பாடலுக்கு வாயசைக்கும் குளோஸப் காட்சி இந்தப் படத்தில்தான் இருக்கிறது எனலாம். பாடல்களும் கேட்கும் ரகம்.. ‘பழைய சோறு’ பாடலும், பாடலை படமாக்கியவிதமும் சூப்பர் எனலாம். உதவிக்கு மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும் பெரிதும் கை கொடுத்திருக்கிறது.
ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் முற்பாதியைவிடவும் பிற்பாதி மட்டுமே விறுவிறுப்பாகப் போகிறது. அவ்வப்போது எதிர்பார்ப்பை ஏற்றுவதும்.. பின்பு குறைப்பதுமாக இயக்குநர் நம்முடனேயே பரமபத விளையாட்டை விளையாடியிருக்கிறார்.
ஜீவாவின் ‘பிளேடு பக்கிரி’ டெக்னிக்கை பார்த்து நீதிபதி பயப்படுவதும்.. இதனாலேயே அவரை விடுவிப்பதும் சற்றே லாஜிக் இடறல்.. இதேபோல் கடைசியாக ஜீவாவின் கதியென்ன என்பதை காட்டாமல், பட்டென்று நயன்ஸ்-ஜீவா கல்யாணத்தைக் காட்டி முடிக்கிறார்கள். இது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை..!
புதிய சிந்தனையோடு திரைக்கதையை இன்னமும் அழகாக வடிவமைத்து படமாக்கியிருந்தால் ஜீவா, நயன்தாரா இருவருக்குமே அவரவர் கேரியரில் இது மிக முக்கியமான படமாக இருந்திருக்கும்..!

3 comments:

Unknown said...

Super boss

Unknown said...

Super boss

நம்பள்கி said...

ஒரு கேள்வி?
நீங்க படம் பார்க்க சினிமாவிற்கு போகிறீர்களா? இல்லை படத்தைப் பற்றிய நோட்ஸ் மட்டும் எடுக்க போறீங்களா?

இப்படி இருந்தால்...படத்தை எப்படி ரசிக்க முடியும்?
சரி! சரி! கொஞ்சம் விமர்சனம் சுருக்கா பிள்ளையார் மாதிரி எழுதுங்க? புரியலையா? உங்கப்பன் ஞானபண்டிதன் உலகை சுத்தினா மாதிரி நீட்டி முழக்கி எழுதாம--நம்ம பிள்ளையார் மாதிரி சுருக் என்று எழுதுங்களேன்!