ஜோக்கர் - சினிமா விமர்சனம்

13-08-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எதிர்வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியன்று 70-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளது இந்தியா. உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக வெளியில் சொல்லிக் கொள்ளும் இந்த நாடு இத்தனையாண்டு கால சுதந்திர காலத்தில் வல்லரசு நாடாக உருமாறியிருப்பதாக ஆள்பவர்கள் பெருமையாக பீத்திக் கொண்டாலும், இன்னமும் முக்கால்வாசி கிராமப்புற வீடுகளில் கழிவறை வசதிகூட இல்லை என்பதை யாரிடம் போய் சொல்வது..?
“செவ்வாய்க்கே ராக்கெட்விடப் போகிறோம்.. அந்த அளவுக்கு தொழில் நுட்பத்தில் வல்லரசு நாடுகளுக்கு சவால்விடும் வகையில் வளர்ந்திருக்கிறோம்..” என்று முட்டாள் அரசுகளும், மந்திரிகளும், முதலமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் கத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்தான் இன்னமும் கிராமங்களில் வசிக்கும் இந்தியர்கள் கழிப்பறைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த பத்து அம்சத் திட்டத்தை 50 ஆண்டுகளாக அமல்படுத்தி பெருமளவுக்கு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய இதே அரசுகள்தான், இந்தக் கழிப்பறை விஷயத்தை இன்றுவரையிலும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன.

தொட்டில் முதல் சுடுகாடுவரை ஊழல்.. இமயம் முதல் கன்னியாகுமரிவரையிலும் இந்தியாவின் ஒருமைப்பாடு லஞ்சம், ஊழல் என்கிற இரண்டு விஷயத்தில்தான் ஒன்றிப் போயிருக்கிறது.
அரசுகள் வைத்ததுதான் சட்டம். அமைச்சர்கள் சொல்வதுதான் விதி.. அதிகாரிகள் விதிப்பதுதான் விதிமுறை.. காவல்துறையினரின் கடமையே அதிகாரத் துஷ்பிரயோகம்தான்.. கவுன்சிலர் முதல் ஜனாதிபதி மாளிகைவரையிலும் ஊழல் பெருக்கெடுத்து ஓடும் இந்த நாட்டில் இதையெல்லாம் தட்டிக் கேட்கும் சாமான்யனின் குரல் ஒருபோதும் ஒலித்த்தில்லை.
ஒலிக்க ஆரம்பித்த குரலையும் ஒடுக்கிவிடுகிறார்கள்.. அல்லது அரசப் பயங்கரவாதம் என்று சொல்லி மரணிக்க வைத்துவிடுகிறார்கள். அப்படியொரு குரலை உயர்த்தியிருக்கும் மன்னர் மன்னன் என்கிற சாமான்யனின் கதைதான் இந்த ஜோக்கர் திரைப்படம்.
திருமண பந்தத்தில் நுழைய விருப்பம் கொண்டு, தான் பார்த்த பெண்ணையே மணக்க விரும்பி பெரும் போராட்டம் நடத்தி அப்பெண்ணின் மனதில் இடம் பிடிக்கிறார் மன்னர். அப்பெண்ணுக்கோ தான் வாழப் போகும் வீட்டில்  நிச்சயமாக கழிப்பறை இருக்க வேண்டும் என்று ஆசை.
அதே நேரம் நாடெங்கும் ‘வாழ்ந்து காட்டுவோம்’ என்கிற திட்டத்தின் கீழ் சில கிராமங்களைத் த்த்தெடுத்து அங்கே கழிவறை வசதியில்லாத வீடுகளுக்கு அரசே இலவசமாக கழிவறைகளை கட்டித் தரும் திட்டத்தைத் துவக்குகிறது. வழக்கம்போல மந்திரிகளும், பிரதானிகளும், அரசு அதிகாரிகளும் இத்திட்டத்தில் கையை வைத்து ஊழல் செய்யத் துவங்க.. திட்டத்தின் நோக்கமே சிதைந்து போகிறது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியின் மன்னரின் வீட்டில் பாதி கட்டப்பட்ட நிலையில் கழிப்பறை வசதி அம்பேலென்று நிற்கிறது. இதைத் திறந்து வைக்க வருகை தரும் ஜனாதிபதிக்கு மன்னரின் வீடு நிற்பதற்கே வசதியில்லையென்பதால் வேறு வீடு பார்க்கப்படுகிறது.
பாதி கட்டப்பட்டு அம்போவென கைவிடப்பட்ட அந்த கழிப்பறையை கொட்டும் மழையில் கர்ப்பிணியாய் இருக்கும் மன்னரின் மனைவி மல்லிகா பயன்படுத்த வந்த நேரத்தில் சரியாகப் பூசாமல்விட்டதினால் மழையில் இடிந்து விழுக.. அது மல்லிகாவை கடுமையாகத் தாக்கி வயிற்றில் இருக்கும் குழந்தையை சாகடிக்கிறது.
ஜனாதிபதி வந்துபோகும்வரையிலும் ஊரைவிட்டு யாரையும் வெளியில்விட முடியாத அளவுக்கு பாதுகாப்பு இருப்பதினால் தாமதித்து மருத்துவமனைக்கு மல்லிகாவை கொண்டு செல்ல.. அதிக ரத்தம் வீணாகியும், மூளையில் ரத்தம் தேங்கிய காரணத்தினாலும் அவர் மூளைச் சாவை அடைந்து நடைப் பிணமாகிறார்.
இந்தச் சோகத்தில் மன்னர் மன்னனுக்கும் புத்தி பேதலித்துப் போய் இந்தியாவுக்கே ஜனாதிபதியாகிவிட்டதா தன்னைத் தானே அறிவித்துக் கொள்கிறார். அடுத்தடுத்த நாட்களில் எதற்கும் அஞ்சாமல் பலவித போராட்டங்களை நடத்துகிறார். இவருக்கு கை கொடுக்கிறார்கள் சமூக ஆர்வலர் பொன்னூஞ்சலும், குடியினால் கணவனை இழந்த இசையும்..
முகநூலில் மன்னர்மன்னனின் பக்கத்தில் தினமும் அவரைப் பற்றிய செய்திகள் அப்டேட்டாக தர்மபுரி மாவட்டத்தையும் தாண்டி அவரது புகழ் பரவுகிறது. சாலையில் ஆட்டின் மீது மோதி ஆட்டின் காலை முறித்த லாரிக்காரர் மீது வழக்கு.. மணல் லாரிகளை சிறைபிடித்து மணல் கொள்ளையை எதிர்த்து வழக்கு.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமிக்கு நஷ்டஈடு கோரும் வழக்கு.. காவல்துறையின் அராஜகத்தை எதிர்த்து போராட்டம்.. நீதிமன்றத்திலேயே தனது ஜனாதிபதி அதிகாரத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பது குறித்த போராட்டம்.. என்று படம் முழுக்க ஒரு சாமான்யன் தன்னுடைய இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள நடத்தும் போராட்டங்களே நிரம்பியிருக்கின்றன.
கட்டக் கடைசியாக தனது மனைவி மல்லிகாவை வீட்டில் வைத்து கவனிக்க முடியாததால் அவளை கருணைக் கொலை செய்ய அனுமதி வேண்டி சுப்ரீம் கோர்ட்டுக்கே செல்கிறார் மன்னர். முடிவு என்ன ஆனது என்பதுதான் கிளைமாக்ஸ்..!
தனது ‘வட்டியும் முதலும்’ தொடர் மூலமாகவே வசீகர எழுத்தால் எழுத்தாளராக கவர்ந்த இயக்குநர் ராஜு முருகன், ‘குக்கூ’ என்கிற தனது முதல் படத்தினாலும் புகழ் பெற்றவரானார். இப்போது தனது வாழ்நாளிலேயே சிறந்த படமாக இந்த ‘ஜோக்கர்’ படத்தைக் கொடுத்திருக்கிறார்.
மிக எளிமையான திரைக்கதை.. மனப்பிறழ்வான ஒரு மனிதன்.. அவன் ஏன் அப்படி ஆனான்..?  என்கிற கேள்வியைவிடவும் அவன் கையில் எடுக்கும் போராட்டங்களும், முன் வைக்கும் பேச்சுக்களுமே அதகளமாக இருக்கிறது. பார்வையாளர்களின் மனதில் மன்ன்ர் மன்னனின் போராட்டக் களமே பிரதானமாக இடம் பிடித்திருக்க.. கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய வாழ்வு திரை விலகி அப்பட்டமாகும்போது அடப் பாவிகளா என்று உருகாதவர்கள் யாரும் இருக்க முடியாது..!
ராஜூமுருகனின் திரைக்கதை யதார்த்தத்திலும் யதார்த்தம்.. ஒரு கழிவறை கட்டினால்தான் கல்யாணம் என்கிற கட்டாயத்தில் இருப்பவனிடம் அதைப் பற்றியே கவலைப்படாமல் கட்டிங் போடுவது எப்படி என்று தாசில்தார் முதல் அமைச்சர்வரையிலும் பேசித் தீர்ப்பதெல்லாம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இப்போதும் நடந்து வருவதுதான்..!
சமீபத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு எழுந்த கோஷமான சுத்தமான இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை திட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால் எத்தனை கிராமங்களில் எத்தனை வீடுகளில் இது கட்டப்பட்டது என்பது தெரியாது. ஆனால் ஒதுக்கப்பட்ட பணம் முற்றிலும் செலவாகிவிட்டிருக்கும் என்பது மட்டும் உண்மை.
இந்த ஊழலினால் ஒரு சமான்யன் பாதிக்கப்படுகிறான் என்பதையும், அதன் பின் விளைவுகள் என்ன என்பதையும் சாதாரண மக்களும் உணரும்வகையில் திரைக்கதை அமைத்து அதனை தனது அற்புதமான இயக்கத்தின் மூலம் நடிகர்களை நடிக்க வைத்து வெற்றிப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜூ முருகன்.
ஒவ்வொரு கேரக்டர்களுக்கான ஸ்கெட்ச்.. தர்மபுரி மாவட்டத்தை அப்படியே வளைத்துப் பிடித்து எடுத்திருப்பது போன்ற படப்பதிவு.. அந்த ஊர் மக்களுக்கு இயல்பாகவே இருக்கும் பற்கரையைக்கூட அப்படியே த்த்ரூபமாகக் காட்டியிருக்கிறார். தர்மபுரி மாவட்டத்தின் குடிநீரில் கலந்திருக்கும் ப்ளோரைடு என்னும் அரக்கனை பற்றி இன்னொரு சினிமாதான் எடுத்து சொல்ல வேண்டும்..!
‘ஆரண்ய காண்டம்’ படத்திலேயே அற்புதமான நடிப்பினால், “யாருய்யா இந்தாளு?” என்று கேட்க வைத்த குரு சோமசுந்தரம்தான் இந்தப் படத்தின் ஜனாதிபதி. ‘இப்போ அஹிம்சையா இருக்கேன். அப்புறம் பகத்சிங்கை அவுத்து விட்ருவேன்’ என்று அவர் ஒவ்வொரு முறையும் சொல்லும்போது படம் பார்க்கும் ரசிகனின் மனதில் ஆணி அடித்து அமர்ந்துவிட்டார். அனைவரின் மனதிலும் இதே எண்ணம்தானே ஓடிக் கொண்டிருக்கிறது.!?
ஒவ்வொரு முறையும் தன்னை ஜனாதிபதியாக நினைத்துக் கொண்டு அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், செய்யும் செயல்களும் உண்மையாகவே இருப்பதுதான் இந்தப் படத்தின் வசீகரத்துக்கு மிக முக்கியக் காரணம். எதையும் பைத்தியக்காரத்தனமாக அவர் கேட்கவில்லை. செய்யவில்லை. மனம் பிறழ்ந்த நிலையிலும் உண்மையைத்தான் பேசுகிறார். நியாயம்தான் பேசுகிறார். ஜனநாயக ரீதியில்தான் போராடுகிறார்.
குரு தன் உடல் மொழியாலும் நடித்திருக்கிறார். மல்லிகாவை லாரியில் பார்த்துவிட்டு அவரை நெருங்கி, நெருங்கி பாலோ செய்வதும்.. அவரை கவர்வதற்காகவே பாட்டில் வாங்கி வந்து கொடுத்து.. பிரியாணி, தண்ணி பாட்டில் கொடுத்து.. பின்னாடியே பாலோ செய்து கவர நினைப்பதும் அக்மார்க் காதலின் ஓட்டம்.. அந்தக் காதலனின் பீலிங்கை திரையில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் காண்பித்திருக்கிறார் குரு.
இதற்கு நேர்மாறாக.. ஜனாதிபதியாக மாறியவுடன் அவருடைய உடல் மொழி, குரல் ஒலிப்பு, பேச்சு, நடத்தை எல்லாம் கெத்தாக மாறிப் போயிருப்பதையும் உணர முடிகிறது. எல்லா வகையான போராட்டங்களையும் செய்துபார்த்துவிட்டு இன்னும் போராட நாள் இருக்கிறது என்று நம்பும் அந்த எளியவனை குரு சோமசுந்தரம் அனுபவித்து செய்திருக்கிறார். வாழ்த்துகள் பாராட்டுக்கள்.
ஜெயகாந்தனின் இளமைத் தோற்றத்தில் ‘பொன்னூஞ்சல்’ கேரக்டரில் நடித்திருக்கும் மு.ராமசாமி உண்மையில் இதில்தான் முதல் முறையாக நடித்திருக்கிறார். அந்தக் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். ஜனாதிபதியை அடித்து உதைத்து அமர வைத்திருப்பதை பார்த்தவுடன் பொங்கிப் போய் இன்ஸ்பெக்டரின் சட்டையைப் பிடித்துலுக்கு மல்லுக்கு நிற்பதும்.. சிறையில் ஜனாதிபதியை பார்த்து அமைதியாக விஷயத்தைச் சொல்லி அவரை ஆசுவாசப்படுத்துவமாக ‘டிராபிக்’ ராமசாமி போன்ற கேரக்டர் ஸ்கெட்ச்சை கச்சிதமாக செய்து காண்பித்திருக்கிறார். நன்றி..
மல்லிகாவாக நடித்திருக்கும் ரம்யா பாண்டியன் அறிமுகம் போலவே இல்லாமல் நடித்திருக்கிறார். தான் வாழப் போகும் வீட்டிலாவது கழிவறை இருந்தாக வேண்டும் என்கிற லட்சியத்தை தன்னுடைய கண்களிலேயே காட்டியிருக்கிறார்.
“டாய்லட் இல்லையா..?” என்று கேட்டுவிட்டு “எனக்கு பிடிக்கலை..” என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு போகும் வேகத்தில், குரு நிலை குலைவது மேட்ச்சிங்கான இயக்கம். பாடல் காட்சிகளின் மாண்டேஜ்களில் கிராமத்துப் பெண்ணின் அழகியலுக்குள் தன்னைப் பொருத்திக் கொண்டுள்ளார் ரம்யா பாண்டியன். அற்புதமான புதிய அறிமுகம் தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
மதுக்கடைகளை மூடும்படி தனது தந்தையுடன் இணைந்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வந்த நந்தினி என்கிற பெண்ணின் சாயலில் இசை என்ற கேரக்டரில் காயத்ரி கிருஷ்ணன் நடித்திருக்கிறார். சில காட்சிகள் என்றாலும் இவருடைய பங்களிப்பும் முக்கியமானதே..
முகநூலில் ஜனாதிபதியை கலாய்க்கும் பிரபலங்களைச் சொல்லி “இவர்களையெல்லாம் என்ன செய்யலாம்.. நம்மளும் கண்டிச்சு அறிக்கை விட்ரலாமா..?” என்று கேட்கிறார் இசை. “அதெல்லாம் வேண்டாம்.. விட்ருங்க. கருத்துச் சுதந்திரத்தை மொதல்ல நாமதான் மதிக்கணும். நம்ம மதித்தால்தான் அரசு அதிகாரிகள் நம்மை மதிப்பார்கள்..” என்கிறார் குரு. இந்த அளவுக்கு திரைப்படங்களில் பெயர் வரும் அளவுக்கு கலாய்ப்பு திலகங்களாக பெயர் எடுத்திருக்கும் முகநூல் அன்பர்களுக்கு நமது வாழ்த்துகள்..!
வாட்டசாட்டமாக கேமிரா முகமாக இருந்தாலும் இதுநாள்வரையிலும் திரைக்கு வராமல் இருந்த எழுத்தாளர் பவா செல்லத்துரையை இழுத்துப் பிடித்து நிறுத்திய ராஜூ முருகனுக்கு இன்னொரு ஸ்பெஷல் பாராட்டு.
“யாரும் கொடுக்கலைன்னா நாமளே எடுத்துக்கணும் பையா. அதுதான் பவரு..” என்று பவா பேசும் அந்த டயலாக் நீண்ட நெடும் நாளைக்கு நிச்சயமாக தமிழகத்தில் பேசப்படும். “பவுடரை பூசிட்டு தர்மபுரி பஸ்ஸ்டாண்ட்ல கொஞ்ச நேரம் நில்லு. நிறைய பொண்ணுக தானா வருவாங்க..” என்று ஐடியாவை அள்ளி வீசும் அன்பராகவும் நடித்திருக்கிறார். பவாவின் நடிப்பும், பேச்சும், உடல் மொழியும் மிக இயல்பாக இருப்பதே சிறப்பாக இருக்கிறது. நடிப்பைத் தொடரலாமே பவா..?! அவருடைய திடீர் முடிவையடுத்து தனக்கு சரியான ஆலோசனை சொல்ல ஆளில்லாமல் அல்லல்படும் மன்னர் மன்னனின் நிலைமைக்கு சரியான பொருத்தமாகவே இருக்கிறது.!
தைரியமான முயற்சியாக ஜெயலலிதா, கருணாநிதி என்றில்லை… வைகோவையும், சீமானையும்கூட ஒரு காட்சியில் கலாய்த்திருக்கிறார் ராஜூ முருகன். “நபிகளும் என்னுடைய முப்பாட்டன்தான்..” என்கிற அந்தக் கலாய்ப்பு சீமானுக்கு நிச்சயம் கோபத்தைக் கொடுக்க வாய்ப்புண்டு..
வசனங்களே படத்தின் பிரதானம்.. படத்தைத் தாங்கிப் பிடிப்பதும் அங்கதத்தோடு கூடிய அரசியல் வசனங்களே..! “ஆள்றதுதான் பிரச்சனைன்னா பேள்றதும் பிரச்சினையா..?” என்கிற டயலாக்கே அதிகப்பட்ச கை தட்டலை பெற்றது. “ஹெலிகாப்டரை பார்த்து கும்பிடறது தப்பு” என்கிற டயலாக்கை சென்சார் போர்டு எப்படி விட்டது என்றும் தெரியவில்லை. ஏர்கூலர் வைத்து நடத்தப்பட்ட ‘அந்த’ அரைமணி நேர உண்ணாவிரதத்தையும் விட்டுவைக்காமல் கலாய்த்திருக்கிறார் முருகன்.

இந்த வசனங்களாலேயே படத்தில் அடுத்தடுத்து கை தட்டல்கள் கிளம்பிக் கொண்டேயிருக்கின்றன.. 
சில வசனங்கள் எக்காலத்திற்கும் பொருத்தமானவை. 
“நாம யாருக்காக போராடுறமோ, யாருக்காக உயிர விடுறமோ, அவங்களே நம்மள காமெடியனா பாக்கிறதுதான் பெரிய கொடுமை…”
“மக்களாட்சி என்றால் அது மக்களிடம் இருந்தே புறப்பட வேண்டும்..”
“நமக்கு தேவையானதை கொடுக்கலேன்னா நாமளே எடுத்துக்கணும். அதுதான் பவரு…”
“அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தின்னுட்டு போடுற எச்சி சோத்த திங்கிறவங்கதான்டா நம்ம மக்கள்..”
“வாழ்றதுதான் கஷ்டம்னு நெனச்சேன். இந்த நாட்ல பேள்றதகூட கஷ்டமாக்கிட்டானுங்க…”
“நாம ஓட்டு போட்டுதான் அவன் ஆட்சிக்கு வர்றான். அதுக்கு மட்டும் நமக்கு உரிமை இருக்கு. அவன் அநியாயம் பண்ணினா, அவன டிஸ்மிஸ் பண்றதுக்கு நமக்கு உரிமையில்லையா..?
“நூடுல்ஸ தடை பண்ணா சைனாகாரனுக்கு புடிக்கல.
கூல்ட்ரிங்ஸை தடை பண்ணா அமெரிக்காகாரனுக்கு புடிக்கல.
ஹெலிகாப்டர பாத்து கும்பிடாதிங்கடன்னா அமைச்சர்களுக்கு புடிக்கல.
அரை நாள்  உண்ணாவிரதத்துக்கு ஏர்கூலர் ஏன்னு கேட்டா எதிர்க்கட்சி தலைவருக்கு புடிக்கல.
கல்லூரி கட்ட தடை. கூட்டணி தாவலுக்கு தடை..
சாதி மாநாட்டுக்கு தடை. அதனாலதான் என்ன புடிக்கல…”
“சகாயம் பண்ணுங்கன்னு சொல்லலை. சகாயம் மாதிரி பண்ணுங்கன்னுதான் சொல்றோம்..”
“நகைக்கடைக்காரனுங்க புரட்சி பண்ற இந்த நாட்ல ஒரு ஜனாதிபதி புரட்சி பண்ண கூடாதா…!”
“குண்டு வைக்கிறவனையெல்லாம் விட்ருங்க. உண்டகட்டி வாங்கி தின்னிட்டு கோயில்ல தூங்குறவன பிடிங்க..”
“சத்து குறைபாட்டால் 12 குழந்தைங்க செத்து.. மயக்க மருந்த மாத்தி கொடுத்ததால 2 கர்ப்பிணி பெண்கள் செத்து போயிட்டாங்க. கர்த்தரும் காப்பாத்தல.. நபிகளும் காப்பாத்தல. மாரியாத்தாளும் காப்பாத்தல.”
“உழைக்கிறவன் வண்டியதானே போலீஸ் புடிச்சு ஸ்டேஷன்ல வைச்சுக்கும்.. எந்த ஸ்டேஷன்லயாவது ஆடி காரோ, பி.எம்.டபிள்யூவோ துருப்பிடிச்சு நின்னிருக்கா..?”
“இங்க பாக்க முடியாது. அப்பலோலதான் பாக்கனும்னா, ஓட்டு ஏன் கவர்மென்டுக்கு போடணும்.  அப்பலோவுக்கே போட்ரலாமே..?”
“வேடிக்கை பார்ப்பவர்களை வெள்ளம் கொண்டு போகட்டும்.”
“சாராய அதிபர்களுக்கும், கொலைகாரர்களுக்கும் இரண்டடுக்கு பாதுகாப்பு கொடுக்குது இந்த மானங்கெட்ட அரசு…”
“நாட்ல இருக்கிறவங்கள எல்லாம் நடைபிணமா ஆக்கிட்டு யாருக்கு காட்ட போறீங்க உங்க கருணைய.. ஊழல் இல்லாம கக்கூஸ் கட்ட வக்கில்ல. உங்ககிட்ட கருணைய எதிர்பார்த்தது தவறுதான்..”
“பெத்தவளையும், கட்டுனவளையும் விக்கிற மாதிரில்ல ஓட்ட விக்கிறானுங்க…”

வசனத்தின் மூலம் இப்படியெல்லாம் சவுக்கடி கொடுத்திருக்கும் இயக்குநர் ராஜூ முருகனுக்கும், கூடுதலாக வசனத்தில் உதவி செய்திருக்கும் சி.முருகேஷ்பாபுவுக்கும் நமது வாழ்த்துகள்.
“4ஜி போன் பத்திரம்..” என்று சொல்லி தன் செல்போனை கொடுத்துவிட்டு போய் குண்டி கழுவுவதும், அதன் பின்பு என்னென்ன சர்டிபிகேட்டுகள் இந்தக் கழிவறைத் திட்டத்திற்காக தேவை என்பதை கழுவியபடியே அவர் சொல்வதும்.. என்னவொரு குறியீடு..? டாப்கிளாஸ் இயக்கம் ராஜூ முருகன்..!
பையன் எல்.கே.ஜி. ஸ்கூலுக்கு போறதுக்கே போஸ்டர் அடித்து ஒட்டும் கலாச்சாரம் பரவி வரும் வேளையில் அந்த அரசியலையும் விட்டுவைக்காமல் சாடுகிறார். யார், யாருக்கு எங்கெல்லாம், எப்படியெல்லாம் கமிஷனை வெட்ட வேண்டும். எப்படியெல்லாம் லஞ்சமும், ஊழலும் ஒரு திட்டத்தில் விளையாடுகிறது என்பதை நண்பர் மை.பா.நாராயணன் தான் வரும் காட்சியில் திருப்பாவை போல விளக்கியிருக்கிறார். நன்றி..!
பிரணாப் முகர்ஜி போன்ற ஜனாதிபதியையே நடிக்க வைத்தும் ஒரு சாதாரண கக்கூஸை திறந்து வைக்க ஜனாதிபதி பாப்பிரெட்டிபட்டிக்கு படையெடுத்து வருவதையும், பிபிசி சேனல் இந்த நிகழ்ச்சியை கவரேஜ் செய்வதையும்விட அதிகப்பட்ச பகடியாக வேறு எதையும் இந்தப் படத்தில் சொல்லிவிட முடியாது.  
படத்தில் வரும் சோகக் காட்சிகளும், பகடியான காட்சிகளும் அவரவர் வேலையை கச்சிதமாக செய்யும் அளவுக்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் தனது இசையமைப்பை கச்சிதமாகச் செய்திருக்கிறார். பல இடங்களில் தனது இசையை மெளனிக்க அனுமதித்திருக்கிறார். அதுவே அழகு..
மார்ச்சுவரியில் கனவு கண்டவரின் கண்கள் திறந்திருக்கும் நிலையில் பின்னணி இசை இல்லாமல் பார்வையாளனுக்குள் நுழையும் அந்த சோகத்திற்கு ஈடு இணையில்லை. ராஜூ முருகனின் அற்புதமான இயக்கத் திறமைக்கு இந்தக் காட்சியும் ஒரு சான்று..!
“என்னங்கடா உங்க சட்டம்” பாடல் காட்சியில் சொல்லப்படும் மாண்டேஜ் காட்சி போராட்டங்கள் அனைத்தும் ‘ஏ கிளாஸ்’ ரகம்.. பின்னோக்கி நடப்பது.. தவழ்ந்து செல்வது.. ஆமைகளை விடுவது.. மறியல் செய்வது.. முகமூடி அணிந்து விளக்க கூட்டம் நடத்துவது என்று அனைத்துவித ஆர்ப்பாட்டங்களையும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு அறிமுகம் செய்துள்ளார் ராஜூ முருகன்.
பாடல்களில் ‘என்னங்கடா உங்க சட்டம்’, ‘ஜாஸ்மின்’, ரமேஷ் வைத்யா எழுதிய ‘செல்லம்மா’ பாடல்கள் கேட்கும் ரகம்.. ஆனால் பிற்பாதியில் படத்தின் ஓட்ட வேகத்தை இவைகள் தாதமதப்படுத்துவதும் உண்மை.
உயர்தரமான செழியனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப் பெரிய பலம்தான். இருட்டிலேயே பல காட்சிகளை நகர்த்தியிருந்தாலும் அந்த வீட்டுக்குள் நடப்பவைகளில் ஒரு சோகத்தையும் சீன் பை சீன் இருக்கும்படி படமாக்கியிருக்கிறார். காட்டுப் பகுதியில் வரும் வெளிச்சத்தில் இருபுறமும் நிற்கும் பெண்களின் அவலத்தை அந்த சிங்கிள் ஷாட்டில் காட்டியிருக்கிறார் செழியன். கழிப்பறை வசதி இல்லாத சூழலில் வளர்ந்திருக்கும் பெண்களுக்கு ஒரு கணம் திக்கென்ற உணர்வு நிச்சயம் வந்திருக்கும். ஹாட்ஸ் அப் செழியன் ஸார்..!
மனம் பிறழ்ந்த நிலையில், “ராணுவ ஆட்சியை பிரகடனப்படுத்தியிருக்கிறேன்..”, “ராணுவ தளபதி என் பேச்சுக்குக் கட்டுப்பட வேண்டும்.”, “பிரதமர் தனது ஆதரவாளர்களை வைத்து என்னை சிறைக்கு அனுப்பிவிட்டார்.”, “சிறையில் செல்போனை பயன்படுத்தக் கூடாது. விதிகளை நாமளே மீறினால் எப்படி?” என்று பல விஷயங்களை நகைச்சுவையாகவும், அதில் உள்ள உண்மையை நாம் உணரும்விதமாகவும் சுட்டிக் காட்டி படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
எந்த ஒரு காட்சியிலும், எந்த ஒரு வசனமும் அநாவசியமாக இல்லை. அவசியம் கருதியே அனைத்துமே இணைக்கப்பட்டிருக்கிறது. புதிய இயக்குநர்களுக்கு இந்தப் படம் நிச்சயமாக ஒரு பாடம். அரசியல் படங்கள் வரவில்லையே என்று எதிர்பாரத்தவர்களுக்கு இந்தப் படம் ஒரு டபுள் ட்ரீட்..
‘அமைதிப்படை’க்கு பின்பு முழுக்க முழுக்க அரசியல் பேசி நம்மை கவர்ந்திருக்கும் படம் இதுதான். மன்னர்மன்னன் நிச்சயம் ஜோக்கர் இல்லை. நாம்தான் ஜோக்கர்கள் என்பதை இறுதிக் காட்சியில் பொன்னூஞ்சல் விளக்கும்போது, அதில் தவறே இல்லை என்று நினைத்துதான் ரசிகர்கள் கை தட்டி கொண்டாடுகிறார்கள்.
அப்படியே போய்விடாமல் அடுத்து வரும் தேர்தலின்போதாவது இதையெல்லாம் மனதில் கொண்டு வாக்குக்கு பணம் வாங்காமல் சிந்தித்து வாக்களித்து புதிய சமுதாயத்தை உருவாக்கினால் இந்தியாவுக்கும் நல்லது.. மக்களுக்கும் நல்லது..!
இந்த அரசியல்வியாதிகளின் அட்டூழியத்தை ஒடுக்க வேண்டுமெனில் நிச்சயமாக இந்தியாவின் போலி ஜனநாயகத்தினால் முடியவே முடியாது.. மன்னர்மன்னன் வேண்டியது போல யாரோ ஒரு நியாயமான, நல்லவரான ராணுவத் தளபதியால் மட்டுமே அது முடியும். ராணுவ ஆட்சியின் கீழ்தான் இந்த நாடு முதன்முதலாக உண்மையான ஜனநாயகத்தை பார்க்க முடியும் என்பதே உண்மை..!
அரசியல்வியாதிகளின் முகத்திரையைக் கிழிக்க இது போன்ற எண்ணற்ற படங்கள் வர வேண்டும். உண்மையில் சினிமா, இந்தச் சமூகத்திற்கு என்ன செய்தது என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்வதே இது போன்ற படங்கள்தான்.. படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே..!
‘ஜோக்கர்..’ மக்கள்தான்ன் ஜோக்கர்களாக இருக்கிறார்கள் என்பதை சொல்லும் படம்..! மிஸ் பண்ணிராதீங்க.. அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

2 comments:

Bala said...

Excellent review.BTW, it's not 66th independence day. It's 70th. Please correct it. I'm wondering why nobody noticed it.

757 Recordings said...

அற்புதம் உங்கள் விமர்ச்சனம் My www.tamilechosongss.blogspot.com