தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் - சினிமா விமர்சனம்

07-08-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

4 ஆண்டுகளுக்கு முன்பாகவே துவங்கப்பட்ட படம். தெலுங்கில் இரண்டாண்டுகளுக்கு முன்பாக வெளியாகி தோல்வியைத் தழுவியது. சின்னத்திரை நடிகரான பிரேம்சாய் இயக்கியிருக்கும் முதல் படம்.


கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டுவிட்டு வேலை தேடி சென்னைக்கு வருகிறார் ஹீரோ ஜெய். சென்னையில் ஏ.சி.சக்திவேல் என்ற அவருடைய மாமாவான வி.டி.வி. கணேஷின் வீட்டில் தங்கிக் கொண்டு வேறு வேலைக்கு முயல்கிறார்.
கணேஷ் சொல்லும் எந்த வேலையும் தனக்கு ஷூட் ஆகாது என்று சொல்லியே நாள் கடத்துகிறார் ஜெய். இவருடைய நண்பரான சந்தானம் ஒரு கூரியர் பாயாக வேலை செய்கிறார். திடீரென்று ஒரு நாள் சந்தானம் கூரியர் வேலைக்குப் போக முடியாமல், அந்த வேலையை ஜெய்யின் தலையில் கட்டுகிறார்.
ஒரு நாள்தானே என்று நினைத்து அந்த வேலைக்குச் செல்லும் ஜெய்யை அந்த நாள் புரட்டிப் போடுகிறது. ஒரு துணிக்கடையில் சேல்ஸ் கேர்ளாக இருக்கும் ஹீரோயின் யாமி கெளதமிற்கு கூரியரைக் கொடுக்கும் ஜெய் அவரைப் பார்த்தவுடன் தன் மனதையும் சேர்த்தே கொடுத்துவிடுகிறார்.
பார்த்தவுடன் வரும் காதல் என்பதால் பைத்தியக்காரத்தனமாக தனது காதலைத் தொடர ஆரம்பிக்கிறார் ஜெய். இவரே கடிதம் எழுதி அதைக் கொடுக்கும் சாக்கில் யாமியை தினசரி தரிசனம் செய்து வருகிறார்.
இந்த நேரத்தில் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் இருக்கும் ஸ்டெம் செல் எனப்படும் உயிரியிக்களை வைத்து குணப்படுத்த முடியாத சில நோய்களை குணப்படுத்தலாம் என்று வெளிநாட்டு மருத்துவரான அக்டோஸ் ராணா கண்டறிகிறார். இதற்காக இந்த ஸ்டெம் செல்களை உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் இருந்து சேகரிக்கிறார்.
இந்தச் சேகரிப்புக்கு தமிழகத்தில் இருந்தும் சில மருத்துவர்கள் உடன்படுகிறார்கள். சேலத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் கர்ப்பிணி பெண்களுக்கு சத்து மாத்திரை என்று சொல்லி போலியான மாத்திரைகளை கொடுத்து அவர்களுக்கு வயிற்று வலியை வரவழைத்து கர்ப்பத்தைக் கலைக்க வைத்து.. அந்த ஸ்டெம் செல்களை கைப்பற்றி வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள்.
இதை அதே மருத்துவமனையில் வேலை செய்யும் தம்பி ராமையா தற்செயலாக கேட்டறிந்து அதிர்ச்சியடைகிறார். உடனடியாக சென்னையில் இருக்கும் பிரபல சமூக சேவகரான சத்தியமூர்த்தி என்னும் நாசருக்கு அந்தச் செய்தியையும், மாத்திரை சாம்பிளையும் கூரியரில் அனுப்பி வைக்கிறார்.
ஆனால் இப்படியொரு கூரியர் செய்தி சென்னைக்கு செல்வதை அறிந்த அந்த சேலம் மருத்துவர், அக்டோஸ் ராணாவுக்கு தகவல் கொடுக்க.. அந்தக் கூரியர் நாசரின் கைக்குக் கிடைப்பதற்குள்ளாக அதைக் கைப்பற்ற முனைகிறார் ராணா.
அந்தக் கூரியரை சந்தானம் தற்செயலாக ஜெய்யிடம் கொடுத்து அனுப்பிவிட.. ஜெய் அதை நாசரிடம் கொடுக்கச் செல்கிறார். இதன் பின்னர் கூரியரை கொடுக்க முடிந்ததா..? வில்லன்கள் என்ன செய்தார்கள் என்பதெல்லாம் இடைவேளைக்கு பின்னான திரைக்கதை.
இதே பாணியில் மருத்துவ உடல் உறுப்புக்கள் திருட்டு என்கிற ஒரு விஷயத்தை அடிப்படையாக வைத்து பல திரைப்படங்கள் கடந்த 3 ஆண்டுகளில் வலம் வந்துவிட்டன. இந்தப் படம் அதற்கெல்லாம் முன்பாக வந்திருந்தாலே ரசிக்க முடிந்திருக்கும். இப்போது எல்லாம் முடிந்த பின்பு வந்திருப்பதால் அதிக ஈர்ப்பில்லாமல் போய்விட்டது. அதோடு திரைக்கதையிலும் புதுமையில்லாமல், அழுத்தமும் இல்லாமல், ரசனையாகவும் இல்லாமல் இருப்பதால் படத்தின் மீது ஈர்ப்பு வரவில்லை.
ஜெய் வழக்கம்போல தனக்குத் தெரிந்தவரையில் நடித்திருக்கிறார். அவரைக் காப்பாற்றியிருப்பவர்கள் விடிவி கணேஷும், சந்தானமும்தான். அதிலும் சந்தானம் கட்டக் கடைசியாக காமெடியனாக நடித்திருக்கும் படம் இதுவாகத்தான் இருக்கும். அதனால் எப்பவும் போலவே கவுண்ட்டர் அட்டாக் டயலாக்குகளை அள்ளி வீசியபடியே இருக்கிறார். இவருக்கும் விடிவி கணேஷுக்குமான பொருத்தம் படத்தினை பல இடங்களில் அமர்ந்து பார்க்க வைத்திருக்கிறது.
யாமி கெளதம். புதுமுகம். அழகாக இருக்கிறார். டப்பிங் பேசியவரின் புண்ணியத்தில் பிசிறு தட்டாமல் சின்க் ஆகியிருக்கிறது உச்சரிப்பு. இது மட்டும் போதாது.. அடுத்து தனது தனித்தன்மையை காட்டி நடிக்கக் கூடிய கேரக்டர் கிடைத்து அதில் நடித்தால், அப்போது வாழ்த்துவோம். இப்போது கொஞ்சமே ஸ்டாக் வைத்துக் கொள்வோம்.
சத்யா பொன்மாரின் ஒளிப்பதி குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. பாராட்டலாம். அதேபோல் சண்டை காட்சிகளில் திலீப் சுப்பராயன் தனது பெயரை தக்க வைத்திருக்கிறார். ஜெய் தொடர்ந்து படங்களில் நடிப்பதற்குக் காரணங்களில் இதுவும் ஒன்று. பாடல் காட்சிகள் அழகு என்றாலும் பாடல்கள் ஒரு தடவை மட்டுமே கேட்கும் ரகம்..
நாசரின் வீட்டில் நடக்கும் பரபர சண்டை காட்சி.. அடுத்தடுத்து அவர்களிடமிருந்து ஜெய் தப்பிக்கும் காட்சிகள்.. இதற்கிடையில் திடீரென்று யாமி கெளதம் ஜெய்யுக்காக காத்திருப்பது.. என்று சினிமாட்டிக்கான திரைக்கதையை தப்பாமல் படமாக்கியிருக்கிறார்கள்.
சந்தானத்தை கண்டுபிடித்து சிக்னலில் காரை திருப்பிய பின்பும் அடுத்த 5 நிமிடங்கள் கழித்தே வில்லன்கள் ஸ்பாட்டுக்கு வந்து சந்தானத்தைப் பிடிக்கிறார்கள். அதற்குள்ளாக ஜெய்யிடம் கூரியர் கை மாறிவிடுகிறது.. சைக்கிளில் வந்திருந்தாலே 1 நிமிடத்தில் பிடித்திருக்கலாமே இயக்குநரே..?!
யாரென்றே தெரியாத நபரிடம் இருந்து முதல் நாள் கடிதம் வந்தாலே பதட்டப்படும் வேளையில் வரிசையாக தொடர்ந்து நாள் கணக்கில் கடிதத்தை வாங்கிவிட்டு ஒரு மாதம் கழித்து இதெல்லாம் யார் அனுப்புறது என்று ஹீரோயின் கேட்பது ஓவராக இல்லையா இயக்குநரே..?
எங்கயோ தீப்பிடிக்க அப்படியொரு சிச்சுவேஷனே இல்லாமல் இத்தனை வயதான ஒரு இளைஞன் காதலிக்காக முட்டாள்தனமாக கடைக்குள் புகுந்து தற்காப்பு உதவி செய்வதெல்லாம் எந்த வகையில் நியாயம்..? சிறுபிள்ளைத்தனமான காட்சி..!
வழக்கம்போல ஹீரோ ஜெயித்தாக வேண்டும் என்கிற கட்டாயத்தினால் வில்லன் சாகடிக்கப்படுகிறார்.  ஊடகங்கள் முழிக்கின்றன. ஒலிக்கின்றன. காவல்துறை முனைப்போடு செயல்படுகிறது.. மருத்துவர்கள் பேட்டியளிக்கிறார்கள்.. மக்கள் முழித்தபடியே பார்க்கிறார்கள்.. ஹீரோ ஜொலிப்போடு நகர்கிறார். படம் முடிவடைதாக தெரிகிறது..!
அவ்வளவுதான்..!

0 comments: