பயம் ஒரு பயணம் - சினிமா விமர்சனம்

29-08-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பேய்ப் படங்களின் பட்டியலில் கட்டாயம் இடம் பெற தகுதியுள்ள படம்தான் இது.
புகைப்படக் கலைஞரான ஹீரோ பரத் ரெட்டி, ஒரு அஸைண்மெண்ட்டுக்காக தேக்கடி அருகில் இருக்கும் காட்டு பகுதிக்குள் வருகிறார். புகைப்படங்களை முடிந்தவரையிலும் எடுத்துவிட்டு இரவில் தங்குவதற்காக கெஸ்ட் ஹவுஸ் தேடுகிறார். அவருக்கு அந்தப் பகுதியில் வசிக்கும் மகா குடிகாரரான சிங்கம்புலி ஒரு கெஸ்ட் ஹவுஸை காட்டுகிறார்.

அன்றைய இரவில் அங்கே தங்கும் நாயகனுக்கு தற்செயலாக ஒரு மெமரி கார்டு கிடைக்கிறது. அதனை லேப்டாப்பில் போட்டு பார்க்கும்போது வில்லங்கமான விஷயங்கள் அதில் இருப்பது தெரிகிறது. அதோடு அந்தப் புகைப்படங்களுக்கும் அவருக்கும் இருக்கும் ஒரு தனிப்பட்ட தொடர்பும் அவரை திடுக்கிட வைக்கிறது.
உடனேயே தன்னுடைய நண்பரான பத்திரிகையாளருக்கு போன் செய்து அதனைச் சொல்கிறார். ஜிமெயிலில் புகைப்படங்களை அனுப்ப முயன்றும் முடியாமல் தோல்வியுறுகிறது.
இந்த நேரத்தில் திடீரென்று அந்த வீட்டில் பல அமானுஷ்யங்கள் நடைபெறுகின்றன. சில, பல பேய்கள் அவரை விரட்டுகின்றன. பயமுறுத்துகின்றன. பரத் ரெட்டியால் ஒரு கட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியாமல் நடு இரவில் காரை எடுத்துக் கொண்டு தப்பியோடுகிறார்.
அந்தப் பேய் பல உருவங்களில் அவரை பின் தொடர.. அதில் இருந்து தப்பிக்க முடியாமல் தவிக்கிறார். தேக்கடியில் தங்கியிருக்கும் தனது குடும்பத்தினரையும் தொடர்பு கொள்ள முடியாமல் அல்லாடுகிறார். அந்த பேய்க்கும் இவருக்கும் என்ன தொடர்பு..? இறுதியில் என்ன ஆகிறது..? என்பதுதான் இந்த திரில்லர் படத்தின் கதை.
சுவையான திரைக்கதை. ஆனால் போதாமையான இயக்கத்தினால் சிற்சில தேக்கங்கள் படத்தில் இருந்தாலும் கடைசிவரையிலும் பார்க்க முடிகிறது.
ஹீரோ பரத் ரெட்டியை சுற்றித்தான் அதிக நேரம் கதை நகர்கிறது. அவருடைய நடிப்பும் அந்த பதட்டத்தை அதிகமாகவே வெளிக்கொணர்ந்திருக்கிறது. இவருக்கும் சிங்கம்புலிக்குமான பிரெண்ட்ஷிப்பில் விளையும் தொடர் கலகலப்புகளும், திருப்பங்களும் இயக்குநருக்கு பலே சொல்ல வைக்கின்றன.
இறந்து போனவர்களெல்லாம் வரிசையாக கண்ணுக்கு வந்து தொலைந்து அடுத்தடுத்து பரத் ரெட்டி அல்லல்படும் காட்சிகளெல்லாம் திக் திக் உணர்வுதான்.
விசாகா சிங்கை பாவமாக்கியிருக்கிறார்கள். அத்தனை வன்முறை அந்தப் பெண்ணின் மீது நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இத்தனை கொடூரத்தைச் செய்தால் அந்தப் பெண் பேயாக மாறாமல் எப்படியிருப்பார்..?
மங்களூரிலும், புனேவிலும், மும்பையிலும், நாக்பூரிலும் இந்து மத அமைப்புகள் ஒழுக்கம் என்கிற பெயரில் பப்புகளிலும், பூங்காக்களிலும் நுழைந்த நடத்திய அழிச்சாட்டியத்தை இங்கே அதே இந்தி மத அமைப்புகள் என்கிற பெயரிலேயே தைரியமாக காட்டியிருக்கிறார் இயக்குநர். இதற்காகவே இவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.
அதே சமயம் இன்றைய இளைஞர்கள், இளைஞிகள் இப்படியொரு தண்ணி பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமென்ன என்கிற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார் இயக்குநர். இது நியாயமானதுதான்..!
பத்திரிகையாளர்களுக்கென்று தனியாக ஒரு சமூகமில்லை. அவர்களும் இந்தச் சமூகத்தில் ஒரு அங்கம்தான். பத்திரிகை என்கிற பின்புலம் இல்லையென்றால் அவர்களும் சாதாரணமானவர்களே என்பதையும் ஒரு கட்டத்தில் ஹீரோவுக்கு புரிய வைக்க முயல்கிறார் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை.
தன் மகளின் புகைப்படத்துடன் காமக்களியாட்டம் என்பது போன்ற டைட்டில் வைத்து செய்தியை வெளியிடாதீர்கள் என்று கெஞ்சி கேட்டும் செய்தியை திமிராக வெளியிட்டு அதற்கான பதிலாக அவர்களின் தற்கொலை என்னும் பாவத்தை சம்பாதிக்கும் அந்த நடிப்பை உண்மையாக வெளிப்படுத்தியிருக்கிறார் பரத் ரெட்டி. வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
இப்படி சில உண்மையான மனதைத் தொடும் சம்பவங்கள் இந்தப் படத்தில் இருப்பதாலேயே படம் கவனிக்க வைத்திருக்கிறது. பயத்தை ஏற்படுத்தும் காட்சிகளும், பேய் மிரட்டல் காட்சிகளும் உண்மையாகவே இருப்பதினால் திரில்லர் வகை படங்களின் லிஸ்ட்டிலும் இந்தப் படம் இடம் பிடித்திருக்கிறது.
விசாகா சிங், அவரது அப்பாவான ஞானவேல், அம்மாவான ஊர்வசி, நண்பராக வரும் முண்டாசுப்பட்டி முனீஸ்காந்த், சிங்கம்புலி ஆகியோரின் பண்பட்ட நடிப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. இன்னொரு நாயகியான மீனாட்சி தீட்சித்திற்கு கொஞ்சமேனும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிளைமாக்ஸில் வரும் அந்த திடீர் திருப்பம் எதிர்பாராதது. ஆனால் மனதில் பெரும் பாரத்தைக் கொடுக்கிறது.
ஆண்ட்ரூவின் அற்புதமான ஒளிப்பதிவு இந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம் என்றே சொல்ல்லாம். இரவு நேரக் காட்சிகளிலும், பேய் துரத்தல் காட்சிகளிலும் உண்மையாகவே மிரட்டியிருக்கிறார். இதேபோல் படத் தொகுப்பாளர் தாஸ் டேனியலின் கைவண்ணத்தில் படத்தை ஒரு இறுக்கமான சூழலிலேயே கடைசிவரையிலும் போரடிக்காமல் கொண்டு சென்று ரசிக்க வைத்திருக்கிறார்கள். பாராட்டுக்கள் இருவருக்கும்.
ஒய்.ஆர்.பிரசாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தாலும், பின்னணி இசையில் பெரும் திகில்தான். சோகத்திற்கு நடுவே இடையிடையில் தன்னுடைய கதையை நாயகன் சொல்வதால் அந்த பீலிங் மட்டும் ஜம்ப் ஆவது ஒரு பெரிய குறை.
இயக்குநர் மணிசர்மா தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை இந்தப் படத்தில் நிரூபித்திருக்கிறார். பேய்ப் படம்தான் என்றாலும் அதை பார்க்கும்படியாக உருவாக்கி கொடுத்திருப்பதை பார்த்தால், பேய்ப் படங்களின் ராஜ்ஜியம் இப்போதைக்கு தமிழ்ச் சினிமாவில் முடியாது போலிருக்கிறது.
சிறந்த இயக்கத்தில் கொடுத்தால் எத்தனை பேய்கள் வந்தாலும், தமிழ் சினிமா ரசிகர்கள் அதனை பயப்படாமல் எதிர்கொள்வார்கள் என்பதை இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் சொல்கிறது.
‘பயம் ஒரு பயணம்’ – திகிலூட்டும் ஒரு பயணம்.

0 comments: