எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது - சினிமா விமர்சனம்

29-08-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் வேறு யாரும் தன்னுடைய இடத்தை நிரப்பவோ, பிடிக்கவோ முடியாது என்பதற்கு ஒரேயொரு உதாரணமாக இருக்கிறார் நகைச்சுவை சக்கரவர்த்தி மகான் கவுண்டமணி.
ஏற்கெனவே ‘49-ஓ’ என்கிற சமுதாய முன்னேற்றத்தை முக்கியமாகக் கொண்ட படத்தில் நடித்து தனது பெயரையும் காப்பாற்றிய கையோடு, இயல்பான நகைச்சுவையிலும், நக்கல் பேச்சிலும், அரசியல் அதிரடி பேச்சிலும் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பதை நிரூபித்தார் கவுண்டமணி. இப்போது அதே பாணியில் இன்னுமொரு படம் ‘எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது’.

சின்ன வயதிலேயே ஓவியக் கலையும், படைப்பாற்றலும் மிக்கவராக இருக்கும் கவுண்டர், ஊருக்குள் வரும் சினிமா படப்பிடிப்புக் குழுவுக்கு ஒரு உதவியைச் செய்கிறார். ஹீரோயினின் டிரெஸ் மாற்றுவதற்கு படப்பிடிப்புக் குழு வந்த வேனையே மாற்றித் தருகிறார். இதைப் பார்த்து அசந்து போன அந்த வேனின் உரிமையாளர் கவுண்டரை தன்னுடனேயே சென்னைக்கு அழைத்து வருகிறார்.
சென்னைக்கு வந்த பின்பு தன்னுடைய புத்திசாலித்தனத்தினாலும், பேச்சாலும் வளர்ந்து இப்போது திரைப்படத் துறையினருக்கு கேரவன் வேன்களை வாடகைக்கு விடும் பெரிய தொழிலதிபராக வளர்ந்திருக்கிறார் கவுண்டமணி.
கூடவே, காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வேலையையும் கச்சிதமாகச் செய்து வருகிறார். இதில் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் பேசியே சமாளிக்கும் ஆற்றல் படைத்தவராக இருக்கிறார்.
இவருடைய மனைவியோ பதிபக்தியும், இறை பக்தியும் மிக்கவர். ஜோதிடம், நாள், நேரம், நட்சத்திரம் எல்லாவற்றிலும் நம்பிக்கை உடையவர். கவுண்டரின் பாதுகாப்புக்காக பாதுகாவலர்களையெல்லாம் செட்டப் செய்து வைத்து தனது தாலியை காப்பாற்றி வருகிறார்.
புதிதாக 2 கேரவன் வேன்களை வாங்கியிருக்கும் கவுண்டமணி, இதற்காக தன்னிடம் வேலை பார்ப்பவர்களுடன் சந்தோஷமாக டூர் அடிப்பதற்காக வண்டியை கிளப்பச் சொல்கிறார்.
இதே நேரம் மதுரையை மையமாகக் கொண்ட மாநில அமைச்சரின் மகளான ரித்விகாவை அதே ஊரில் இருக்கும் வேறொரு  ஜாதியைச் சேர்ந்த வாலிபனான செளந்தர்ராஜன் காதலிக்கிறார். இந்தக் காதல் அவர்களது வீட்டுக்கு தெரிந்து ரகளையாக.. வழக்கம்போல இருவரும் ஊரில் இருந்து எஸ்கேப்பாகுகிறார்கள்.
இவர்களைத் தேடிப் பிடித்து கொலை செய்ய ஒரு வாடகைக் கொலையாளிகளை புக் செய்து அனுப்புகிறார் அமைச்சர். அந்த ரவுடி கோஷ்டி காதலர்களை பிடிக்கும் சமயம் கவுண்டமணி தனது கேரவனோடு வந்து அவர்களை விசாரிக்கிறார். இது காதல் விவகாரம் என்பதை அறிந்தவுடன்.. இது தான் நடத்தி வைக்கப் போகும் 51-வது காதல் திருமணம் என்று செண்ட்டிமெண்ட்டாக பீல் ஆகி.. காதலர்களுடன் வண்டியை மதுரைக்கு விடச் சொல்கிறார்.
அங்கே என்ன நடக்கிறது..? காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா..? காதலர்களை கவுண்டர் சேர்த்து வைத்தாரா என்பதுதான் திரைக்கதை.
கவுண்டமணியை வைத்துக் கொண்டு சீரியல் படம் எடுக்க முடியாது. ஆனால் சீரியஸான விஷயங்களை காமெடியாகச் சொல்லி பார்வையாளர்களை சீரியஸாக்கலாம். அதைத்தான் இந்தப் படத்திலும் செய்திருக்கிறார் கவுண்டமணி.
தமிழ்ச் சினிமா நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள், ஜாதிக் கட்சித் தலைவர்கள், போஸ்டர் ஒட்டும் அல்லக்கைகள்.. காலில் விழுந்து காலை வாரத் துடிக்கும் தொண்டர்கள், ஜோதிடர்கள், பக்தி, ஒழுக்கம், கோவில்கள் என்று சமூகத்தின் பலவற்றையும் கொத்து புரோட்டா போட்டிருக்கிறார் கவுண்டர்.
ஒரு காட்சியில், ஹன்ஸிகா மோத்வானி, காஜர் அகர்வாலின் பெயர்களில் இருக்கும் ஜாதிப் பெயரைத் திட்டிவிவிட்டு, ‘இப்படி பேரு வைச்சிருக்கிறவங்களுக்கு கேரவன் தர மாட்டோம்ன்னு சொல்லு’ என்கிறார்.
விஷால் கேரவன் கேட்டால் ‘பின்னி மில்லுக்கு அனுப்பு’.. கவுதம் வாசுதேவ் மேனன் கேட்டால் ‘ஈ.சி.ஆர். ரோட்டு காபி ஷாப்புக்கு அனுப்பு’.. ஹரி கேட்டால் ‘போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பு’.. என்று டக், டக்கென்று ஒப்பிக்கிறார் கவுண்டர்.
இன்னொரு காட்சியில் ‘ஜி.வி.பிரகாஷ், எஸ்.ஜே.சூர்யால்லாம் நடிக்க வந்துட்டாங்க’ என்ற தகவலுக்கு, ‘அடேய் இங்க என்னடா நடக்குது.. சினிமா எங்கடா போய்க்கிட்டிருக்கு’ என்று மொத்தமாக வாரியிருக்கிறார் கவுண்டர்.
பவர் ஸ்டாருக்கு இதைவிட பெரிய மானக்கேடு வேற எதுவும் வேணாம்.. அப்படியொரு பன்ச்சை அவருக்கு வைத்திருக்கிறார் கவுண்டமணி.
‘இப்பவெல்லாம் நாய், பேயை வைச்சு எடுக்குற படம்தாண்டா நல்லா ஓடுது. அதுனால நாய் படத்துக்குத்தான் முதல்ல கேரவனை அனுப்பணும்’ என்கிறார். பெயர் தெரியாத ஒரு நடிகருக்கு கேரவன் வேணும் என்று உதவியாளர் சொல்ல ‘அவனுக்கெல்லாம் தர முடியாது. போய் மரத்தடில போட்டுக்கச் சொல்லு’ என்கிறார் அலட்சியமாக..!
இன்னொரு காட்சியில் தன்னிடம் கேரவன் வாங்கியிருக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்புக்குச் செல்கிறார் கவுண்டமணி. அந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஹீரோ ‘நான் செத்துட்டேன்னா உன்னை சும்மா விட மாட்டேன்டா’ என்கிற வசனத்தை வேறு, வேறு மாடுலேஷனில் நடிப்பே இல்லாமல் சொல்கிறார். இயக்குநர் விடாமல் அவரை அனத்தி அதை பேச வைக்க.. இந்தக் காட்சியில் கவுண்டரின் வெறும் முக பாவனையிலேயே கை தட்டல் அள்ளுகிறது. கடைசியாக ‘அவன் செத்த பின்னாடி எப்படிடா அவனை பார்ப்பான்.. என்னடா டயலாக் எழுதுறீங்க..?’ என்று அலுத்துக் கொள்வதும் நம்பர் ஒன் காமெடி.
சாதாரண டயலாக்குதான். ஆனால் அது கவுண்டமணியின் வாயிலிருந்து வரும்போது காமெடியாக மாறி விடுகிறது.
தனது மனைவியின் ஜோதிட ஆர்வத்தையும், கடவுள் பாசத்தையும் ஒரு சேர கிண்டலடித்து அவரையும் வெறுப்பேற்றுகிறார்.  “அதென்னங்கடா ஆனா ஊனான்னா அண்ணனை வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்னு கதை விடுறீங்க.. வயசில்லைன்னா.. வயசுக்கு வந்தப்புறம் வந்து கும்புடுங்கடா..” என்று ஒட்டு மொத்த அரசியல்வாதிகளையும் நக்கலடிக்கிறார்.
“இந்தக் கால்ல விழுகுற கர்மத்தை எவண்டா கண்டுபிடிச்சான்..? எதுக்கெடுத்தாலும் கால் விழுந்தாகணுமா..?” என்ற கவுண்டரின் எகத்தாளமான கேள்வி, இன்றைய ஆட்சியாளர்களின் காதுகளுக்கு போனதா என்று தெரியவில்லை. செருப்படி கமெண்ட்..! ஜாதியை பார்க்காமல் ஓட்டு கேட்டு வாங்கிவிட்டு, பின்பு ஜாதி பார்த்து பேசுவதும், திருமணம் செய்வதுமான அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டையும் வாரியிருக்கிறார் கவுண்டர்.
இதுதான் என்றில்லை.. சாதாரணமாக அவரது சின்ன பார்வை ஒன்றே பல விஷயங்களை உணர்த்துகிறது. அவருடைய மனைவியின் அருகில் படுத்திருப்பவர், மனைவியின் முகத்தை பார்த்துவிட்டு பயத்துடன் திரும்புவதும்.. ஒரு காட்சியில் பதிலேதும் சொல்லாமல் சரக்கையெடுத்து குடித்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொள்வதுமாக சில காட்சிகளில் கவுண்டமணியின் முக பாவனையே ஆயிரம் நடிப்பைக் காட்டுகிறது.
கவுண்டருக்கு உடல் வலு இல்லை. முகம்கூட ஒட்டிப் போய்விட்டது என்றாலும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு அவருக்கு எப்போதும் உண்டு. பாடல் காட்சிகளில் நடனமாடவும் செய்கிறார். என்னதான் செய்தாலும் அவருடைய பலம் அவருடைய வாய்தான் என்பதுதான் உண்மை.
காதலியாக வரும் ரித்விகா, காதலனாக நடித்திருக்கும் செளந்தர்ராஜன், உதவியாளரான பாடகர் வேலமுருகன் என்று இவர்களுக்கும் தனித்த நடிப்புக்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு, அதையும் கச்சிதமாகவே செய்திருக்கிறார்கள்.
கவுண்டரின் மனைவியாக நடித்திருக்கும் ஷானூர் ஷானா, இனி வரும் காலங்களில் நிறைய தமிழ்ப் படங்களில் அம்மா கேரக்டரில் நடிக்க வைக்கப்படலாம். தெலுங்கில் அதிகமாக அம்மாவாக நடித்துவரும் இவருக்கு இது இரண்டாவது தமிழ்ப் படம் என்று நினைக்கிறோம். அழகிலும், நடிப்பிலும் குறைவில்லை.
காதலர்களை போட்டுத் தள்ளுவதற்காக தேடிப் பிடிக்கும் ராம்ஸ் அண்ட் கோ-ரவுடி கும்பலின் அளப்பறை இன்னொரு பக்கம் தியேட்டரை குலுங்க வைக்கிறது. இவர்கள் ஆயிரத்தில் பேச வந்தவர்கள் லட்சத்தில் சொன்னவுடன் திகைப்பதும்.. அட்வான்ஸை வாங்க மறுத்து ‘பேலன்ஸை மொதல்ல எடுத்து வைங்க’ என்று கேட்டு அவர்களை திகைக்க வைப்பதும் காமெடியிலும் ஒரு காமெடி.
திருட்டு பைக்கில் ஸ்டீரியோ டைப் ஸ்பீக்கரை வைத்து.. மூடி போடாமல் ஓட வேண்டும் என்பதும்.. 200 அடி பின்னால்தான் சந்தேகப்படாத அளவுக்கு நிற்க வேண்டும் என்பதற்காக டேப் வைத்து அளந்து பார்ப்பதெல்லாம் நான் ஸ்டாப் காமெடியாகிவிட்டது.
கண்ணனின் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை. இதையெல்லாம் தனித்துப் பார்க்கும் அளவுக்கு முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. அருணகிரியின் இசையில் ‘பேடி பேடி’, ‘கோடம்பாக்கம் மறுபேரு’, ‘அதான் இதானு’ பார்த்தேன் பாடல்கள் ஓகே.. கவுண்டருக்காக வைக்கப்பட்டிருக்கும் டைட்டில் பாடல் படு ஜோர்..!
முதற்பாதியில் கவுண்டரின் பன்ச்சினால் தீயாய் பறக்கும் படம்.. இடைவேளைக்கு பின்பு செளந்தர்ராஜன், ரித்விகா காதல் ஸ்டோரியை சொல்வதற்காக கொஞ்சம் பிரேக்விட்டதில் தொய்வாகிவிட்டது.. இதில் லவ் ஸ்டோரியை கொஞ்சமாகச் சொல்லி கவுண்டரையே முன்னிலைப்படுத்தியிருக்கலாம்.
இருந்தாலும், அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் தோழராக செளந்தர்ராஜனை காட்டியிருப்பதும்.. அமைச்சரின் மகளுக்கு அப்பாவின் பொஸஸ்ஸிவ்னஸ் காரணமாகவே செளந்தர் மீது காதல் வருவதும்.. ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் செய்த்தற்காகவே தம்பியுடன் பேசாமல் இருக்கும் அமைச்சரின் கதையும்.. இதே தம்பி காதலைப் பிரிக்க நினைப்பதும், கிளைமாக்ஸில் மணப்பெண் உடையில் மகளைப் பார்த்தவுடன் அப்பா மனம் மாறுவதும்.. அடிதடியில்லாமல் முடிக்கப்பட்டு இது போன்ற சிற்சில சுவாரஸ்யங்களே படத்தைக் காப்பாற்றியிருக்கின்றன.
கவுண்டமணியின் புண்ணியத்தில் படத்தை கடைசிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறார்கள். பார்க்கலாம்.. சிரிக்கலாம்.