ஜாக்சன் துரை - சினிமா விமர்சனம்

02-07-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பேய்ப் பட வரிசையில் நம்மை விடாமல் துரத்துகிறார்கள் தமிழ்ப் பட இயக்குநர்கள். தரணிதரன் இயக்கியிருக்கும் இந்தப் படமும் பேய்ப் படங்களுக்கே உரித்தான இலக்கணத்தோடு அட்சரச் சுத்தமாக அதேபோல் பதிவாகியிருக்கிறது.
சீலம் என்ற பெரு நகரத்தின் அருகேயிருக்கும் சின்ன ஊர் அயன்புரம். அந்த ஊரில் பிரிட்டிஷ் காலத்து மாளிகை ஒன்று உள்ளது. அந்த மாளிகையில் பிரிட்டிஷ் காலத்தில் வாழ்ந்த ஜாக்சன் துரை என்ற ஆங்கிலேய அதிகாரி, தன்னுடைய குடும்பத்தினருடன் ஒரு தீ விபத்தில் சிக்கி இறந்திருக்கிறார்.

இந்த பங்களாவை அதற்குப் பின் யாரும் சீண்டாமல் இருக்க.. அது இப்போதும் அப்படியே பேய் பங்களாவாகவே காட்சியளித்து வருகிறது. ஆனால் அந்த பங்களாவில் ஜாக்சன் துரை பேயாக உலா வருவதாக கிராமத்து ஜனங்கள் இன்னமும் நம்புகிறார்கள். இதனால் அந்த ஊரில் தினமும் இரவு 9 மணியானதுமே அனைவரும் கதவை இழுத்து மூடிவிடுகிறார்கள். அதற்குப் பின் ஊரில் பேச்சுமூச்சில்லை.
தினமும் ஆங்கில தினசரி தாளை பங்களா வாசலில் வைத்தால் அது தானாகவே காணாமல் போகிறது. இது போக வருடாவருடம் கிராமத்து ஜனங்கள் அரிசி மூட்டைகளை அந்த பங்களாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதுவும் சட்டென காணாமல் போகிறது. இருந்தும் கிராமத்து ஜனங்களுக்கு இந்தப் பேய் பற்றிய புதிரை விடுவிக்கும் ஆர்வம் சுத்தமாக இல்லை.
இந்தக் காலத்திலும் இது தொடர்வதால், இந்த மூட நம்பிக்கையை ஒழிக்க விரும்பும் அந்த ஊர் பெரிய தலையான சண்முகசுந்தரத்தின் மகள் பிந்து மாதவி, தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கு இந்த ஊர் பற்றிய செய்தியை புகாராக அனுப்புகிறார்.
இந்தப் புகார் வழக்கம்போல குற்றப் புலனாய்வுத் துறைக்கு அனுப்பப்படுகிறது. சிபிசிஐடி உயரதிகாரிகள் அந்த ஊரே பயப்படும் ஜாக்சன் துரை பேய் நிஜமா..? அல்லது ரீலா..? என்பதை கண்டறிய எதற்குமே உருப்படாமல் தங்களது டிபார்ட்மெண்ட்டில் வேலையத்து போய் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டரான சிபிராஜை அனுப்பி வைக்கிறது.
சிபிராஜ் ஊருக்குள் வரும்போதே ஊர் எல்லையில் பார்த்து லிப்ட் கொடுத்து அழைத்துவரும் பிந்து மாதவியை லவ்வ துவங்குகிறார். வந்த வேலையை விட்டுவிட்டு காதல் வேலையில் தீவிரமாகி பிந்து மாதவியின் அப்பாவான சண்முகசுந்தரத்திடம் போய் பெண் கேட்கிறார்.
ஆனால் அதே நேரம் அங்கே வரும் பிந்து மாதவியின் முறைமாமனான கருணாகரனும் பிந்து மாதவி தனக்கே என்று மல்லுக்கு நிற்க.. சண்முகசுந்தரம் யோசிக்கிரார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்த அவர், "அந்த ஜாக்சன் பேய் பங்களாவில் உங்களில் யார் 7 நாட்கள் தொடர்ந்து தங்கிவிட்டு உயிருடன் திரும்பி வருகிறீர்களோ.. அவருக்கே என் மகள்.." என்கிறார். 
இந்த சவாலை ஏற்றுக் கொண்ட சிபிராஜும், கருணாகரனும் கோலாகலமாக அந்த பேய் பங்களாவிற்குள் கால் வைக்கிறார்கள். திரும்பி வந்தார்களா..? இ்ல்லையா..? பிந்து மாதவி யாருக்குக் கிடைத்தார் என்பதுதான் படத்தின் சுவையான திரைக்கதை.
சென்ற ஆண்டுவரையிலும் அனைத்து படங்களிலும் பேய்கள் அரூபமாகவே வந்து கொண்டிருந்தன. சில படங்களில் வேறொருவரின் உடம்பில் ஏறிக் கொண்டு அழிச்சாட்டியம் செய்து வந்தன. ஆனால் இப்போதைய படங்களில் பேய்கள் பேய்களாகவே காட்சியளித்து தங்களது ஆத்மா சாந்தியாகாமல் இங்கேயே சுற்றி வருவதாகக் காட்டப்படுகிறது. இந்தக் கதையும் அதுதான்..!
முதற்பாதியில் கொஞ்சம் சோர்வைக் கொடுத்தாலும், கருணாகரனும், சத்யராஜும் வந்து சேர்ந்த பின்புதான் படத்தின் சுவாரசியமே கூடுகிறது. இடையிடையே கதையை நகர்த்துவதற்கும், நகைச்சுவைக்கும் யோகி பாபு கை கொடுத்திருக்கிறார். கருணாகரனின் பேய் பயமும், அவர்களைத் துரத்துவதற்கான முதல் கட்டமாக பேய்கள் கொடுக்கும் ஆட்டமும் சுவாரசியத்தைத் தந்தாலும் ரொம்ப நீளமானது.
இதேபோல் சத்யராஜ் அண்ட் கோவும், ஜாக்சன் துரை ஆட்களும் தினம்தோறும் அந்த 9 மணிக்கு மோதுவது வாடிக்கை என்பதால் அதனை திருப்பிப் போட்டாலே அவர்களின் ஆன்மா சாந்தியடைந்துவிடும் என்பதை ஒரு சில வசனங்கள் மூலமாக சொல்லியிருக்கலாம். சொல்லாமலேயே சஸ்பென்ஸில் விட்டு முடித்திருக்கிறார் இயக்குநர்.
சிபிராஜின் நடிப்புக்கு பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும், அப்படியே அவரது அப்பாவின் குரல் இவருக்கும் அமைந்திருப்பதால் இயல்பாக நடிக்கிறார் என்று ஒப்புக் கொள்ள வேண்டியுள்ளது. பிந்து மாதவியை பார்த்தவுடன் லவ்வுவது.. பேய்களை கண்டு முதலில் பயப்படுவது.. பின்பு ஹாயாக அவைகளுடன் பேசுவது.. அவர்களின் அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் ஊகித்துக் கொண்டு கருணாகரனிடம் சொல்வதாக தனது கேரக்டருக்கான வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
படத்தில் சிபியையும் காப்பாற்றியிருப்பது கருணாகரன்தான். இவருடைய சில பயமுறுத்தல் நடிப்புதான் அடுத்து என்ன என்கிற ஆர்வத்தை தோற்றுவித்தது. மாறுதல் தேவைதான் என்றாலும் அதற்காக கருணாகரன் ஒண்ணுக்கு போவதை முடியும்வரை காட்டுவது எந்த விதத்தில் நியாயம் இயக்குநரே..? இது போன்ற காட்சிகளுக்கு இயக்குநரே கத்திரி போட்டிருக்கலாம்.
ஆவிகள்தான் மனித ரூபத்தில் இருக்கின்றன என்பதை சிபிராஜ் சொல்லி முடித்ததும் தனக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஜாக்சன் துரையின் மகனை கருணாகரன் பிடித்திழுத்து நிறுத்தும் காட்சியில் இயக்குதல் சூப்பர்ப்.

திடீரென்று களத்தில் குதிக்கும் மொட்டை ராஜேந்திரனின் ஆக்சன் காட்சிகளும் ஒரு சுவாரசியம்தான்..!
யோகி பாபுவின் வசனங்கள் பல இடங்களில் சிரிக்க வைத்து நகர்த்தியிருக்கின்றன. சிபிராஜின் நம்பர் ஒன் ஸ்டைலை பார்த்து “ஒண்ணுக்கு போறதுக்காகவே மெட்ராஸ்ல இருந்து வந்திருக்கான் போலிருக்கு..” என்ற பன்ச் டயலாக் ஹெவியானது..! இதேபோல் இடைவேளைக்கு பின்பும் யோகியின் அல்டிமேட் பன்ச்சுகளால்தான் கொஞ்சம் கலகலப்பு கிடைத்திருக்கிறது.  
பிந்து மாதவி வழக்கமான ஹீரோயினாக தேவைப்பட்டிருக்கிறார். அரைகுறையான பாடலில் தோன்றி தனது பங்களிப்பை நிறைவு செய்திருக்கிறார். ஏதாவது உள்குத்து வேலையை பிந்துவின் அப்பாவான சண்முகசுந்தரம் செய்திருக்கிறாரோ என்பதற்கு அடையாளமாக சில காட்சிகள் இருந்தாலும் கடைசியில் அதுவும் இல்லையென்றாகிவிட்டது. சஸ்பென்ஸை நீடிக்க வைத்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டுக்கள்.
சத்யராஜும் அவரது கூட்டாளிகளுக்குமான பிளாஷ்பேக் காட்சி சின்னதுதான் என்றாலும் ரசிக்கும்படியாக எடுத்திருக்கிறார் இயக்குநர். சத்யராஜின் ஆவி பேச்சும், அடங்காத ஆத்மாக்களின் தொடர் துப்பாக்கிச் சத்தமும் புதியவர்களுக்கு விசித்திரமாக இருக்கும். ஆனால் பேய்ப் படங்களை பார்ப்பதையே தொழிலாக வைத்திருப்பவர்களுக்கு இது சாதாரண விஷயமாகத்தான் தோன்றும்.
ஆன்மா அடங்காத ஆத்மாக்களின் மேக்கப்பிற்காக படத்தின் கலரிங்கையே மாற்றியிருப்பதால் படம் முழுவதும் டார்க்கிங்காகவே இருப்பது படத்தில் மிகப் பெரிய குறை.
ஒளிப்பதிவாளருக்கும், படத் தொகுப்பாளருக்கும் தனித்தனியே ஒரு பாராட்டு. முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் ஒளிப்பதிவின் தரம் குறையவில்லை. ஆனால் அதுவே கண்ணைக் கட்டி காட்டில்விட்டதுபோல இருக்கிறது. உண்மையில் படத் தொகுப்பாளர்தான் படத்தின் ரசிப்புக்கு மிக முக்கியக் காரணமாகியிருக்கிறார். கிளைமாக்ஸில் எடிட்டரின் கத்திரிக்கோல் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அவர்கள் ஆவியாக கரைந்து போகும் காட்சி மூலமாக முடிவுகள் புரிந்தன. இதனை வசனத்தின் மூலமாக சொல்லியிருக்க வேண்டும். புரியாதவர்களுக்கு மிக எளிதாகப் புரிந்திருக்கும்..!
சித்தார்த் விபினின் ஒரு பாடல் பாதியிலேயே முடிந்துவிட்டாலும், பின்னணி இசையில் கொஞ்சம் அடக்கி வாசித்து வசனத்தை கேட்க வைத்திருக்கிறார். பேய்ப் படங்களுக்கே உரித்தான அந்த இசையை எப்போதுதான் மூட்டை கட்டுவார்கள் என்று தெரியவில்லை. அந்த டெம்ப்ளேட் இசை காணாமல் போனால் இன்னும் கொஞ்சம் நன்றாகவே இருக்கும்.
இனிமேல் பேய்ப் படங்களில் இதுவரையில் சொல்லாத விஷயங்களை, சொல்லாத முறைகளில் சொன்னால் மட்டுமே அவைகள் வெற்றி பெற வாய்ப்புண்டு. அத்தனையையும் கொடுத்தாகிவிட்டது. இனிமேல் பேய்கள் நலச் சங்கத்தில் குழப்பம்.. பேய்களிடையே சண்டை என்ற ரீதியில் திரைக்கதை அமைத்து எழுதினால்தான் அது போணியாகும் என்பது போல தெரிகிறது..!
இதற்கிடையில், இந்த ‘ஜாக்சன் துரை’யை நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்..

0 comments: