அப்பா - சினிமா விமர்சனம்

01-07-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“நீங்கள் என்னவாகப் போகிறீர்கள்..?” – இந்தக் கேள்வியை சந்தித்திராத மாணவ, மாணவியரே இருக்க முடியாது. ஆனால் இதற்கு தன்னிச்சையாக பதில் சொன்ன மாணவ, மாணவியரும் யாரும் இருக்கவே முடியாது. காரணம், அவர்கள் என்னவாகப் போகிறார்கள் என்பதை அவர்கள் தீர்மானிக்கவில்லை. அவர்களுடைய பெற்றோர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். பிள்ளைகள் அதைச் செயல்படுத்துகிறார்கள். இதுதான் இந்தியாவில், தமிழகத்தில் அநேகம் பேரின் நிலைமை.
இதைத்தான் இந்த ‘அப்பா’ திரைப்படம் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. பிள்ளை என்றாலும் அவனது வாழ்க்கை எது என்று தீர்மானிக்க அவனுக்கு மட்டுமே உரிமையிருக்கிறது. அதை பெற்றவர்கள் தங்களது விருப்பத்திற்காக மாற்றக் கூடாது என்பதை தெள்ளத் தெளிவாக இந்தப் படத்தின் மூலம் எடுத்துரைக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.
நான்கு குடும்பங்கள்.. வேறு வேறு வகுப்புகள்.. வேறான வாழ்க்கைத் தரம்.. அவர்களது பிள்ளைகள் தங்களது இளமைப் பிராயத்தில்.. பள்ளிப் பருவத்தில் தாங்கள் சந்திக்கும் சந்தோஷங்கள்.. துக்கங்கள்.. இன்பங்கள்.. துன்பங்கள். இவை எல்லாவற்றையும் தாண்டி தயாளன் என்னும் ஒற்றை மனிதனின் துணையுடன் எப்படி சாதிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் திரைக்கதை.

தயாளன் என்னும் சமுத்திரக்கனி சமூக சிந்தனையுள்ளவர். இந்த சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டுமெனில் நாம் அதற்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். இயற்கையோடு இயைந்து நமது முன்னோர்கள் போல வாழ நினைப்பவர்.
இதனாலேயே தனது மனைவி மலரின் பிரசவத்திற்கு மருத்துவமனைக்குக்கூட அனுப்பி வைக்காமல் வீட்டிலேயே பார்த்துக் கொள்கிறார். பெற்ற மகனை 5 வயதுவரையிலும் வீட்டிலேயே வைத்திருந்து பின்பு முதலாம் வகுப்பில் சேர்த்துவிட நினைக்கிறார். ஆனால் இவருடைய மனைவி மலரோ.. இவருடைய போதனைகளும், சொற்களும் பிற்போக்குத்தனமானவை என்று நினைக்கிறார். மகனின் எதிர்காலத்தை கணவர் சிதைக்கப் பார்ப்பதாக குற்றம் சாட்டுகிறார். மனைவியின் நச்சரிப்பை தாங்க முடியாமல் மகனை தனியார் பள்ளியில் யு.கே.ஜி.யில் சேர்த்துவிடுகிறார்.
இவருடைய பக்கத்து வீட்டுக்காரர் சிங்கப்பெருமாள் என்னும் தம்பி ராமையா. இவரது மனைவி வினோதினி. ‘மாமா’, ‘மாமா’ என்று கணவர் பேச்சை தட்டாதவர். தம்பி ராமையா மகன் பிறப்பதற்கு முன்பேயே எந்த மருத்துவனையில் டெலிவரி பார்ப்பது.. அவனை எந்தப் பள்ளியில் சேர்ப்பது..? 11-ம் வகுப்பில் எந்த கோர்ஸில் பையனை திணிப்பது..? எந்தக் கல்லூரியில் பட்டப்படிப்பை படிக்க வைப்பது..? என்றெல்லாம் யோசித்து வைத்து.. பையன் படித்து முடித்துவிட்டு அமெரிக்காவில் வாஷிங்டனில் தனியாக வீடு வாங்கி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்கிற பெரும் கனவுவரையிலும் சிந்தித்து வைத்திருக்கிறார். இவரது மகனும் சமுத்திரக்கனியின் மகனுடன் ஒரே பள்ளியில்தான் படிக்கிறான்.
இவர்கள் இருவரைத் தவிர நடுநிலையான் என்னும் நமோ நாராயணனின் மகனும் இதே பள்ளியில்தான் படிக்கிறான். ஆனால் நடுநிலையானோ தனது மகனுக்கு யார்கூடவும் சேரக் கூடாது.. எப்பவும் நடுநிலைமையோடதான் பேசணும். நடந்துக்கணும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார். இந்த நடுநிலையானின் மகனான நசத் உடல் வளர்ச்சி குன்றியவன்.
சமுத்திரக்கனியின் மகனுக்கு பிராஜெக்ட் ஒர்க்காக தாஜ்மஹாலை செய்துவரும்படி சொல்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் சமுத்திரக்கனி பள்ளிக்கே சென்று சண்டையிட.. அது மோதலாகி பையனுக்கு டி.சி. கொடுத்து அனுப்பி விடுகிறார்கள்.  இந்தக் கோபத்தில் சமுத்திரக்கனியின் மனைவி, அவரது அப்பா வீட்டுக்குப் போகிறார்.
பையனை சமுத்திரக்கனி பத்திரமாக பார்த்துக் கொண்டாலும் வாழ்க்கை முறைகளின் ஒரு பகுதியை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறார். அதில் ஒரு பகுதியாக மகனை தனியாக பேருந்தில் ஏற்றி அனுப்பி, இவர் பின்னாலேயே பைக்கில் செல்கிறார். தவறுதலாக பையன் முதல் ஸ்டாப்பிலேயே இறங்கிவிட பையனை காணாமல் தேடுகிறார்.
இந்த்த் தகவல் அவனுடைய அம்மாவுக்குத் தெரிய வர.. தன்னுடைய அண்ணனையும், தம்பியையும் அனுப்பி வைக்கிறார். பையனை ஒரு வழியாக மீட்டாலும், மனைவியிடமிருந்து விவாகரத்துக்காக வக்கீல் நோட்டீஸ் வருகிறது. எதையும் தாங்கும் மனப்பான்மையுடன் சமுத்திரக்கனி இதையும் எதிர்கொள்கிறார்.
பையன் வெற்றி ஈஸ்வரன் பத்தாம் வகுப்பை நோக்கி வரும்வரையிலும் சமுத்திரக்கனியும், அவரது மனைவியும் பிரிந்தே வாழ்கிறார்கள். இந்த நேரத்தில் வெற்றி ஈஸ்வரன் பேருந்தில் ஒரு மாணவியை பார்த்து சலனப்பட.. இதை அப்பாவிடம் சொல்கிறான். அடுத்த நாள் அப்பா சமுத்திரக்கனி அதே பேருந்தில் பயணித்து அந்தப் பெண்ணை சிநேகிதம் பிடித்து அவளை தன் இருப்பிடத்திற்கு அழைத்து வந்து இருவரையும் சரளமாகப் பேச வைக்கிறார்.
இதேபோல் தம்பி ராமையாவின் மகனான சக்கரவர்த்தியும் ஒரு மாணவியை பார்த்து சலனப்பட இதையும் சமுத்திரக்கனியே இணைத்து வைத்து நண்பர்களாக்குகிறார். இவர்கள் பத்தாம் வகுப்பை பாஸ் செய்து 11-க்கு போகும்போது சக்கரவர்த்தியை வேறு ஊர் பள்ளிக்குக் கொண்டு போய் சேர்க்கிறார் தம்பி ராமையா.
அவன் ஒருவன் பிரிந்து போனதால் நண்பர்கள் ஏமாற்றமாக.. போன நண்பன் அங்கே நல்லபடியாக இல்லை என்பது இவர்களுக்குத் தெரிய வர.. சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் வருத்தப்படுகிறார்கள். இதற்கடுத்து இவர்கள் என்ன செய்கிறார்கள்..? இதன் விளைவுகள் என்ன என்பதுதான் படத்தின் திரைக்கதை.
படம் முழுவதையும் தாங்கியிருக்கிறார் சமுத்திரக்கனி. இது போன்ற கேரக்டர்களெல்லாம் இவருக்கு அல்வா சாப்பிடுவதுபோலத்தான்.. ஒரு மாறுபட்ட அப்பாவாக நமக்கெல்லாம் இப்படியொருத்தர் அப்பாவாகக் கிடைத்திருக்கக் கூடாதா என்று ஏங்க வைக்கும் அளவுக்கு பண்பான அப்பாவாக, திரையில் தன்னைக் காண்பித்திருக்கிறார் கனி.
ஒவ்வொரு செங்கல்லாக பார்த்துப் பார்த்துக் கட்டிடம் கட்டுவதைப் போல, தனது மனைவியிடமும், மகனிடமும், சுற்றத்தாரிடமும், பள்ளி நிர்வாகியிடமும் தன்னுடைய கொள்கைகளையும், நல்ல விஷயங்களையும் உதிர்க்கும்விதம் ஒரு நல்லதொரு ஆசிரியராக இருந்திருக்க வேண்டியவரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
மனைவியைச் சமாளிக்கும்விதமும், பையனைக் காணாமல் போன நொடியில் இருந்து அவர் ஓடும் பரபரப்பும்.. பையன் கிடைத்தவுடன் காட்டும் நிம்மதியும்.. நடிப்பில் கனி இன்னும் பல படிகள் ஏறியிருக்கிறார் என்பதையே காட்டுகிறது.
ஒரு பையனுக்கும், பெண்ணுக்குமான முதல் ஈர்ப்பை புரிந்து கொள்ளாத காரணத்தினால்தான் இங்கே பல கொலைகளும், தற்கொலைகளும் நடக்கின்றன. இதில் கனி அமைத்திருக்கும் திரைக்கதை சிம்ப்ளி சூப்பர்ப். பார்த்துக் கொண்டேயிருக்க விரும்பிய பெண்ணை அழைத்து வந்து நேரில் அமர்த்தி பேச வைத்து.. “இவ்ளோதாம்பா விஷயம். நீங்களே பேசிட்டீங்கன்னா எல்லாமே விளங்கிரும்..” என்று சொல்லிப் புரிய வைக்கும் பக்குவம், இங்கே எத்தனை பெற்றோர்களுக்கு உண்டு.? சபாஷ் கனி ஸார்..
தம்பி ராமையா எப்போதும்போலவே ஸ்கோர் செய்திருக்கிறார். “மிஸ்டர் சக்கரவர்த்தி சிங்கப்பெருமாள்” என்று தன் மகனை பெருமையாக பெயர் சொல்லி அழைப்பதில் துவங்கி.. அவனை ‘படி..’ ‘படி’ என்று அனத்தி.. அவனை பயமுறுத்தி.. தன் இஷ்டத்திற்கு ஆட்டிப் படைக்கும் ஒரு அப்பன் கேரக்டரில், இதற்கு மேல் நடிக்க ஆளில்லை என்பதை போல் அனைத்தையும் முடித்திருக்கிறார் தம்பி ராமையா.
சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கும் ப்ரீத்தி ஒரு புதுமுகம். ஆனால் அப்படி தெரியவில்லை. ஹிஸ்டிரியா பேஷண்ட் போன்ற பதட்டம், கோபம்.. ஆத்திரம் எல்லாமும் கலந்து ஒரு பயத்தைக் காட்டியிருக்கிறார். இப்படிப்பட்ட மனைவியிருந்தால் கணவர் என்ன செய்வார்கள் என்பதை நினைத்து உச்சுக் கொட்ட வைத்திருக்கிறார். இயக்குநர் எதிர்பார்த்த ‘பாவம்’, கணவருக்கு நிச்சயம் தியேட்டரில் கிடைக்கும்..
பிள்ளைகளாக வலம் வந்திருக்கும் விக்னேஷ், ராகவ், யுவலட்சுமி, கேப்ரில்லா, நசத் என்று இவர்களின் கூட்டணி கொஞ்சமும் பிசிறில்லாமல் நடித்திருக்கிறது. யுவலட்சுமியின் லட்சணமான நடிப்பை இப்போதுதான் ‘அம்மா கணக்கு’ படத்தில் பார்த்தோம். அதற்குள் இதோ இந்தப் படம். ‘பார்த்தவுடன் பக்கென்று என்னமோ செய்யுதுப்பா’ என்று விக்னேஷ் அப்பாவிடம் சொல்கிறான். நிச்சயம் அப்படித்தான் இருக்கிறது இவரது ஆக்சனெல்லாம்.
நடிப்பு, ஆட்டம், உற்சாகம் அனைத்தையும் சிற்சில ஆக்சன்களில் கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள் வாண்டுகள். இதில் நசத்தின் கவிதை புத்தக வெளியீடு ஒரு புதிய திரைக்கதை. அந்தக் கதைக்குள் வைத்திருக்கும் பெரிய கதை.. அபாரமானது. ‘விதையை சின்னது என்று நினைத்து விதைக்காமல்விட்டால் எதுவும் விளையாது’ என்கிறார் இயக்குநர். நசத்தின் கவிதை புத்தகத்தை வெளியிட்டு அவரை ஊக்கப்படுத்தும் நிகழ்வுகளில் அவரது அப்பா நமோ நாராயணனின் பேச்சும், ‘எல்லாமே அவர்தான்’ என்று கனியைக் கை காட்டுவதும் நெகிழ்ச்சியான இடங்கள்..
சமுத்திரக்கனியின் சமூகப் பார்வையை முற்றிலும் புரிந்து கொண்ட மாமனாராக வேல ராமமூர்த்தி.. ‘மாமா.. மாமா’ என்று கணவர் பேச்சுக்கு மறுபேச்சில்லாமல் காலத்தை ஓட்டி வரும் வினோதினி.. கடைசியாக வந்து தலையைக் காட்டும் டாக்டர் ச்சிகுமார் என்று மற்ற கேரக்டர்களுமே உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
இதற்கு நடுவில் கனியின் தோழனாக திலீபனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். கல்யாண வயதைத் தாண்டியும் திருமணமாகாத இவருக்கு திடீரென்று பெண் கிடைத்து இவரும் வாழக்கையில் செட்டிலாவதெல்லாம் திரைக்கதையில் இருக்கும் ஒரு ஸ்வீட்டான டிவிஸ்ட். திலீபன் ஆஸ்தான தோழர் மற்றும் நண்பன் கேரக்டரில் ஜொலிக்க நாமும் வாழ்த்துகிறோம்.
காணாமல் போன பையனை ஒரு திருநங்கை மீட்டுக் கொண்டு வந்து கொடுப்பது.. புரிந்து கொள்ளாத மைத்துனர்களை அதிகாரமிட்டு விரட்டியடிப்பது.. 10-ம் வகுப்பை முடித்துவிட்டு தனது அம்மாவை பார்க்கச் செல்லும் பையன், அங்கே அத்தனை பேரையும் ஏகத்துக்கு விரட்டுவது.. ப்ரீத்தி மீண்டும் தனது கணவருடன் சேர பையனுடன் ஊர் திரும்புவது.. கனிக்கு போன் செய்து இன்னிக்கு வீட்டுக்கு வந்திருங்க என்று சங்கோஜத்துடன் அழைப்பது.. பெண் பிள்ளைகளுக்கு பக்குவமாக வீட்ல சொல்லிட்டுத்தான் எங்கேயும் வரணும் என்று கண்டிஷன் போட்டுச் சொல்வது.. ஒரு திறமைசாலியை உற்சாகப்படுத்தி மேலே கை தூக்கிவிட வேண்டும் என்று நசத் கேரக்டர் வாயிலாகச் சொல்லியிருப்பது என்று இந்தத் திரைக்கதை மூலமாக இயக்குநர் கனி சொல்லியிருக்கும் அனைத்து விஷயங்களும் பாராட்டத்தக்கவை.
இதையும் தவிர, வேறொரு பயந்த பெற்றோர்களை அடிக்கடி கலாக்கும்  தம்பி ராமையா, அதில் கணவரை ‘அடியே’ என்றும், பெண்ணை ‘வாடா, போடா’ என்றும் அழைப்பது செமத்தியான குறும்பு..!
ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் நெய்வேலி டவுன்ஷிப்பை அழகுறக் காட்டியிருக்கிறார்கள். பல காட்சிகளில் சினிமாத்தனமே இல்லாமல் தன்னுடைய மாயாஜால இசையினால் காட்சிகளை அப்படியே நகர்த்திக் கொண்டே போகிறார் இசைஞானி இளையராஜா. பாடல் காட்சிகள் வைத்திருக்க வேண்டிய இடங்களிலெல்லாம் எதுவும் இல்லாமல் பின்னணி இசையே போதுமென்று நினைத்திருக்கும் கனிக்கு நமது பாராட்டுக்கள். இசைஞானியின் இசைக்கு இதைவிட பெரிய பெருமை வேறெதுவும் இருக்காது.
படத்தின் முற்பாதியில் சில இடங்களில் படம் மிகவும் சோர்வாக இருப்பதை போல தோன்றினாலும் பிற்பாதியில் அதற்கும் சேர்த்து வேகத்தை ஈடுகட்டியிருக்கிறார் இயக்குநர்.
இப்போதைய பாடத் திட்டத்துக்கு ஏற்றபடி நேரடியாக முதலாம் வகுப்பில் சேர்த்தால் இப்போதைய பிள்ளைகள் படிக்க சிரமப்படுவார்கள் என்பதும் உண்மைதானே..? வீட்டிலேயே சொல்லிக் கொடுக்கலாம் என்றாலும், பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று பழக வேண்டுமே என்றுதானே இதற்கு முந்தைய வகுப்புகள் துவங்கின. அதை ஏற்றுக் கொள்ளலாமே..? தப்பில்லையே..?
இதேபோல் இயற்கையான பிரசவம் வேண்டும் என்பதற்காக வீட்டிலேயே அதைப் பார்த்துக் கொள்வதும் மிக ரிஸ்க்கான விஷயம் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். முந்தையக் காலக்கட்டத்திற்கு அது சரியானதுதான். ஆனால் இப்போது புதிது, புதிதாக நோய்களும், பிரச்சினைகளும் வரும்போது  சிறந்த மருத்துவனைகளில் சிசேரியனை கட்டாயப்படுத்தாத மருத்துவமனைகளை நாடுவது நல்லதுதானே கனி ஸார்..?
இனிமேல் இந்த நாட்டில் தமிழ் மீடியத்தில் படித்தால் எந்தவிதப் புண்ணியமும் இல்லை. ஜெராக்ஸ் கடையில் வேலை செய்யவும், ஹோட்டலில் வேலை பார்க்கவுமே ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாடு போய்க் கொண்டிருக்கிறது. ஆக.. இப்படியொரு சூழலில் தமிழ் மீடியமும், ஆங்கிலம் அல்லாத கற்றலும் தேவையற்றதாகவே இருக்கிறது.
இதனை நாமே நமது பிள்ளைகள் மேல் திணித்தால் இதுவும் ஒருவகையில் குற்றம்தானே..? நாளைய பொழுதுகளில் அவர்கள் வளர்ந்த பின்பு தன்னிலை உணர்ந்து கேட்க மாட்டார்களா..? அப்போது யார் அவர்களின் கேள்விக்கு பொறுப்பாவார்கள்..? இதுவெல்லாம் படத்தின் முடிவில் நம் மனதில் நிற்கும் கேள்விகள்தான்..!
சசிகுமாரை போல எத்தனை மருத்துவர்கள் உண்மைக்கு உரமாக இருக்கிறார்கள்..? பிள்ளைகள் படிக்கத்தான் வேண்டும். ஆனால் அது அவர்கள் விரும்பியபடியே இருக்கட்டுமே..? இப்படி மதிப்பெண்ணுக்காக அவர்களை கொலை செய்யும் அளவுக்கு போக வேண்டுமா என்ற அவர் எழுப்பும் கேள்வி எல்லாரையும் பார்த்துதான் வீசப்பட்டிருக்கிறது.
தனியார் பள்ளிகள் மதிப்பெண்ணையும், தேர்ச்சி விகிதத்தையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு 9-ம் வகுப்பிலேயே 10-ம் வகுப்பு பாடத்தை நடத்துவது.. 11-ம் வகுப்பிலேயே 12-ம் வகுப்பு பாடத்தை நடத்துவது.. படிப்பு, படிப்பு என்று டார்ச்சர் செய்வது என்பதையெல்லாம் கேள்விக்குறியாக்கியிருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. ஆனால் இதனை காது கொடுத்துக் கேட்கத்தான் அரசுகளுக்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் நேரமில்லை.
மதிப்பெண், படிப்பு, பட்டம், தேர்ச்சி, வேலை… இதில் இல்லை ஒருவனுடைய வாழ்க்கை. இதை மிஞ்சி அவனுக்குள் இருக்கும் திறமையினால் அவனுக்கு சமூகத்தில் கிடைக்கும் மரியாதைதான் அவன் இங்கே வாழ்ந்ததற்கான அடையாளமே என்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.  
இந்தப் படத்தைப் பார்த்தாவது இதனைப் புரிந்து கொண்டால், அதுவே தன்னுடைய சொந்தத் தயாரிப்பாக இதனை உருவாக்கி வெளியிட்டிருக்கும் இயக்குநர் சமுத்திரக்கனிக்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும்.
அப்பா – பெற்றோர்களும், பிள்ளைகளும் இணைந்து அவசியம் பார்க்க வேண்டிய படம்.

0 comments: