ஒரு மெல்லிய கோடு - சினிமா விமர்சனம்

02-07-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தேடப்பட்ட சிவராசன், சுபா பற்றிய ‘குப்பி’, சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாறாக ‘வனயுத்தம்’ என்று உள்நாட்டில் நடந்த கதைகளை படமாக்கிய கன்னட இயக்குநர் ஏ.எம்.ஆர். ரமேஷ், இப்போது வெளிநாட்டுக் கதையையே சுட்டும், சுடாமலும் படமாக்கியிருக்கிறார்.
2012-ம் ஆண்டு வெளியான ஸ்பெயின் மொழி படமான ‘தி பாடி’ என்கிற படத்தின் அதிகாரப்பூர்வமில்லாத காப்பி இது. கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி கன்னடத்தில் ‘கேம்’ என்கிற பெயரில் இந்தப் படம் வெளியாகியிருக்கிறது.  இந்த ‘கேம்’ படத்தின் தமிழ் டப்பிங் படம்தான் ‘ஒரு மெல்லிய கோடு’..
‘தி பாடி’ படத்தின் கதை கொஞ்சம் மாற்றப்பட்டு, மலையாளத்தில் ராஜேஷ் பிள்ளையின் இயக்கத்தில் ‘வேட்டா’ என்கிற பெயரில் ஒரு படம், இந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி வெற்றியும் பெற்றது.
   
பிரபல பெண் தொழிலதிபரான மனிஷா கொய்ராலா மர்மமான முறையில் இறந்து போயிருக்கிறார். அவருடைய உடல் ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்வதற்காக அரசு உடற்கூறு ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நள்ளிரவில் திடீரென மனீஷாவின் உடல் காணாமல் போய்விடுகிறது.
போலீஸ் உதவி கமிஷனரான அர்ஜூன் இந்தக் கேஸை விசாரிக்க அவசரமாக அங்கே வருகிறார். மனீஷாவின் கணவரான ஷாமையும் வரச் செய்கிறார். ஷாம் தனது மனைவியின் உடலைக் காணாமல் தவிக்கிறார். சண்டையிடுகிறார். போலீஸும் ஆய்வகம் முழுவதும் மும்முரமாக தேடுகிறது.
இடையில் அர்ஜூனின் விசாரணையின்போது ஷாம் தன் மீது சந்தேகம் வரும் அளவுக்கு நடந்து கொள்ள.. இவரிடம் ஏதோ உள்ளது என்று சொல்லி அவரை இரவு முழுவதும் அங்கேயே தங்க வைக்கிறார் அர்ஜூன்.
அந்தக் கட்டிடத்தில் திடீர், திடீரென்று ஷாமின் முன்பாக மனீஷா காட்சியளிக்க.. இறந்து போன மனீஷா எப்படி உயிருடன் வந்தார் என்று குழம்பிப் போய் அர்ஜூனிடம் இது பற்றிச் சொல்கிறார். அவரும் தேடுகிறார். கிடைக்கவில்லை. கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் இந்த திரில்லர் படத்தின் முடிவு.
போலீஸ் அதிகாரி வேடமென்றால் அர்ஜூனுக்கு மிக பொருத்தமாகத்தான் இருக்கும். இதில் கொஞ்சம் ஸ்டைலிஷான இயக்கத்தினாலும் அதிகமாக தமிழகத்து போலீஸையே காட்டாத அளவுக்கான கேரக்டர் ஸ்கெட்ச்சில் நடித்திருக்கிறார் அர்ஜூன்.
அதிகப்படியான நடிப்பைக் காட்டாமல் போலீஸ் அதிகாரிக்கே உரித்தான கெத்தையும், கம்பீரத்தையும், கண்டிப்பையும் காட்டிவிட்டு இறுதியில் தான் யார் என்பதைச் சொல்லும்போது நிஜமாகவே நமது கண்களுக்கு வில்லனாகவே தெரிகிறார்.
மனிஷா கொய்ராலா கேன்சரில் இருந்து மீண்டு வந்தாலும், இந்த வயதிலும் ‘பம்பாய்’ படத்து துள்ளலோடு பல காட்சிகளில் வலம் வந்திருக்கிறார். தன்னைவிட வயது குறைந்த ஷாமை திருமணம் செய்திருந்தாலும் அவர் மீதான காதலில் உறுதியாக இருப்பதும்.. எப்போதும் ஷாமை விரும்பினாலும்,. ஷாம் விலகிப் போவதை உணர்ந்து தன்னைக் காத்துக் கொள்ள தயாராகிவிடுவதும்.. அவருடைய கேரக்டரை நன்கு ஸ்டெடி செய்து நடித்திருக்கிறார்.
இரட்டைத் தலை பாம்புபோல மனிஷாவிடமும், அக்சா பட்டிடமும் மாட்டிக் கொண்டு முழுக்கிறார் ஷாம். பணத்துக்காக கல்யாணம் செய்துவிட்டு, தனது விருப்பத்துக்காக அக்சாவை காதலிக்கும் கிரிமினல் கேரக்டர். ஏதோ தனக்குத் தெரிந்த அளவுக்கும், இயக்குநர் சொல்லிக் கொடுத்த அளவுக்கும் நடித்திருக்கிறார் ஷாம்.
அக்சா பட் கவர்ச்சிக்கு கொஞ்சம் பொருத்தமாகி பாடல் காட்சிகளில் ரகளையாக்கியிருக்கிறார். ஆனால் வில்லி நடிப்பெல்லாம் இவருக்கு ஒத்துவரவில்லை. படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஆட்களே இல்லை என்று நினைத்து இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷே நடித்திருக்கிறார். அடுத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாமே ஸார்..?
படத்தின் அதிகமான காட்சிகள் ஆய்வக வளாகத்திற்குள் நடக்கிறது என்றாலும் அதையும் அழகுற படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிருஷ்ண ஸ்ரீராம். மழை காட்சிகளும், ஷாமின் வீட்டின் உட்புறக் காட்சிகளும் ஒளிப்பதிவாளரின் பெயரைச் சொல்கின்றன. அந்த உடற்கூறு ஆய்வகம் ‘செட்’ என்று சொன்னால் நம்பத்தான் முடியலை. இதற்காக கலை இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.
பாடல்தான் இந்தப் படத்துக்கு மிகப் பெரிய ஸ்பீடு பிரேக்கர். அது இல்லாமலேயே இருந்திருக்கலாம். இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை மட்டும் இந்தப் படத்துக்கு பெரிய  டானிக் என்பது உண்மையே.
கள்ளக் காதல் விவகாரம் தமிழகத்தைப் பொறுத்தவரையில் இப்போது சர்வசாதாரணமான விஷயமாகிவிட்டது. இங்கே தினத்துக்கு ஒரு கொலை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனாலேயே இந்தக் கதை சாதாரணமான ஒரு கதையாகிவிட்டது.
இதனால் இதனை இன்னும் அதிகமான சுவராசியம் கலந்த திரைக்கதை மற்றும் அழுத்தமான இயக்கத்தினால் மெருகேற்றியிருக்க வேண்டும். அது இல்லாததால் படம் சில நேரங்களில் போரடிக்கிறது.
உண்மையில் மனீஷா ஷாமின் விஷம் கலந்த ஒயினை குடிக்காமல் உயிர் தப்பினாரா..? அல்லது செத்தே போனாரா..? கிருஷ்ண பிரசாத் அவளை மார்ச்சுவரியில் காப்பாற்றுவது உண்மைதானா..? உயிருடன்தான் இருக்கிறார் என்றால் கடைசியில் அவரை கொலை செய்தது யார்..? இதையெல்லாம் புரியாதவர்களுக்கு புரியும்வகையில் சொல்லியிருக்கலாம்..!
மர்ம மரணம் என்றால் இறந்து போனவரின் உடலை அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டு செல்வார்கள். அங்கே போஸ்ட் மார்ட்டம் செய்து, அதிலும் சந்தேகம் இருந்தால் மட்டுமே உடல் உறுப்புகள் சிலவற்றை வெட்டியெடுத்து அதனை ‘பாரன்ஸிக் லேபரட்டரி’ எனப்படும் ‘உடற்கூறு ஆய்வக’த்திற்கு அனுப்பி வைப்பார்கள். உடலையே கொண்டு போகச் சொல்ல மாட்டார்கள். இதில் அப்படியே நேர்மாறாக.. மனீஷாவின் உடல், ‘உடற்கூறு ஆய்வக’த்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.  ஸ்பெயின் படத்தை காப்பியடித்ததில் அப்படியே இதுவும் காப்பியாகிவிட்டதுபோலும்..!
பிரமாதமாக திட்டம் போடுகிறார் டாக்டரான கணவர். விஞ்ஞானபூர்வமாகக் கூட கண்டுபிடிக்க முடியாத லெவலில் ஒரு கொலைத் திட்டம்.. பணமும் கிடைக்கும். காதலியும் கிடைப்பாள் என்று காத்திருப்பவன், போலீஸ் விசாரணையை எதிர்கொண்டவுடன் திடீர் பதட்டத்துடன் அல்லாடுவது அவரது கேரக்டரையே சிதைத்துவிட்டது.
ஷாமின் இந்தப் பதட்டமான காட்சிகளின் உச்சக்கட்டமாக டாய்லெட்டில் போட்ட பேப்பரை எடுத்து வாயில் போட்டு முழுங்குகிறாராம்.. கொடுமைதான்.. வெளிநாட்டு படத்திற்கு இது ஓகேதான். தமிழுக்கு இதெல்லாம் தேவையில்லாதது என்பது இயக்குநருக்கு ஏன் புரியவில்லை. இங்கேதான் பணம் என்று ஒன்று இருந்தால், நீதியையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்பது இயக்குநருக்குத் தெரியாதா என்ன..?
கிளைமாக்ஸில் வரும் டிவிஸ்ட் யாரும் எதிர்பாராததுதான். அதே சமயம் இப்படியொரு தண்டனையை அரசு ஊழியரே.. அதுவும் காக்கிச் சட்டை அணிந்த ஒருவரே கொடுப்பது ஏற்புடையதல்ல. தவறான வழிகாட்டுதலுக்கு அல்லவா இந்தப் படம் சொல்லிக் கொடுக்கிறது..?
எது எப்படியிருந்தாலும், 2 மணி நேரத்தில் ஒரு துப்பறியும் நாவலை படித்த உணர்வை இந்தப் படம் கொடுக்கிறது என்பது மட்டும் உண்மை. பார்க்கலாம்..!

0 comments: