ஒன்பதிலிருந்து பத்துவரை - சினிமா விமர்சனம்

17-07-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள்ளாக நடக்கும் கதை என்பதால் இந்த டைட்டில்..” என்றார் இயக்குநர். நம்பித்தான் சென்றோம்.
படத்தின் இயக்குநரான விஜய சண்முகவேல் அய்யனார் லேசுப்பட்ட ஆளில்லை.. கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் இருவரிடமும் பல படங்களில் திரைக்கதை உருவாக்கத்தில் உடன் இருந்தவராம். இதனாலும் நம்பித்தான் சென்றோம். 
‘நிறம்’, ‘காந்தர்வன்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த அனுபவம் கொண்ட கதிர் இதில் ஹீரோவாகவும் மலையாளத்தில் ‘கீதாஞ்சலி‘ என்ற படத்தில் மோகன்லாலுடன் நடித்த அனுபவம் கொண்ட ஸ்வப்னா கதாநாயகியாகவும் நடித்திருப்பதாலும் நம்பித்தான் சென்றோம். ஆனால்..???

ஹீரோ கதிர்.. கால் டாக்சி ஓட்டுனர். எப்.எம்.மில் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை நடத்தி வரும் ஹீரோயின் ஸ்வப்னாவின் குரலை மட்டுமே கேட்டு அவர் மீது ஒரு இனம் புரியாத பாசத்துடனும், ரசிக மனப்பான்மையுடனும் இருக்கிறார்.
எப்படியாவது ஒரு நாளாவது தனது ஆதர்ச ரேடியோ ஜாக்கியை சந்திக்க வேண்டும் என்றெண்ணி அந்த ரேடியோ ஸ்டேஷனுக்குச் செல்கிறார். அவரைப் பார்க்க முடியாமல் திரும்புகிறார்.  இன்னொரு நாளில் காலை 9 மணிக்கே ஒரு சவாரி அவருக்குக் கிடைக்கிறது.
ஹீரோயின்தான் அதில் பயணிக்கிறார். செங்கல்பட்டில் இருக்கும் தனது வருங்கால மாமியாரை சந்தித்து பேசுவதற்காக போகிறார் ஹீரோயின். ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் இந்தப் பயணமே பிரச்சனையாகிறது. புரிந்து கொள்ளாமை அதிகமாகிவிட.. இருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் தவறாகவே நினைத்துக் கொண்டு திட்டிக் கொள்கிறார்கள்.
ஆனால் கொஞ்ச நேரத்தில் இவர்தான் தனது ஆதர்ச ஒலிபரப்பாளர் என்பதை தெரிந்து கொண்ட ஹீரோ இதற்கு மேல் பவ்யமாகிறார். ஆனால் இதை நடிப்பு என்று நினைத்து இவரை உதாசீனப்படுத்துகிறார் ஹீரோயின்.
செங்கல்பட்டில் ஹீரோயினின் வருங்கால கணவரைப் பார்த்தவுடன் ஹீரோவுக்கு பக்கென்றாகிறது. அவர் தவறானவர் என்று தெரிய வர.. ஹீரோயினின் கல்யாணத்தைத் தடுத்து நிறுத்த எண்ணுகிறார்.
இதற்காக ஒரு நாள் ஹீரோயினின் வீடு புகுந்து அவளது அம்மா, அக்கா, அக்கா கணவரை கட்டிப் போட்டு வருங்கால மாப்பிள்ளைய வீட்டுக்குள் வரவழைக்கிறார் ஹீரோ. அந்த மாப்பிள்ளையும் சேர்த்துக் கட்டிப் போட்டுவிட்டு ஹீரோயினுக்கு போன் செய்து வரச் சொல்கிறார். ஏன் இதனைச் செய்கிறார்..?  கடைசியில் முடிவு என்ன ஆனது என்பதுதான் மீதமான படம்.
படத்தில் இயக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும்படியாக அமைந்திருப்பதால் படத்தை முழுமையாக ரசிக்க முடியவில்லை. இடையிடையே வரும் சில நகைச்சுவை துணுக்குகள் மட்டுமே நம்மை புன்னகைக்க வைக்கின்றன.
இயக்கமே இல்லாத்தால் இவர்களின் நடிப்பைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஹீரோயின் மட்டுமே அழகாகவும் இருக்கிறார். அழகாகவும் நடித்திருக்கிறார். ஹீரோயினுக்கு ஈடுகொடுக்க முயன்று முடியாமல் தோல்வியடைந்துள்ளார் ஹீரோ. அவர் இன்னும் நடிப்பைக் கற்க வேண்டும் போலிருக்கிறது.
போலீஸ் உயர் அதிகாரிகளுக்குள் நடக்கும் மறைமுக ஈகோ போராட்டத்தை சுட்டி மட்டுமே காட்டியிருக்கிறார்கள். இதையும் அழுத்தமாக நல்ல இயக்கத்தோடு உண்மைத்தனத்தோடு சொல்லியிருந்தால் ரசித்திருக்கலாம்.
முதற்பாதியில் சவசவ என்று நகரும் காட்சிகளாலும் சுவாரஸ்யமில்லாத திரைக்கதையாலும் படம் அல்லாடுகிறது. கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே கொஞ்சமேனும் பார்க்கும்படியாக இருப்பதும்.. கிளைமாக்ஸில் வரும் டிவிஸ்ட்டும் எதிர்பாராமல் சற்று பாராட்ட வைக்கிறது..!
ஒளிப்பதிவாளருக்கு மட்டும் ஒரு ஷொட்டு. அவர் வேலையை மட்டும் அவர் அழகாக செய்திருக்கிறார். இசை இருக்கிறது. பாடல்கள் ஒலித்தன. அவ்வளவுதான். பின்னணி இசைகூட காட்சிகளோடு ஒன்றவில்லை..
படப்பிடிப்பு நாட்களைவிடவும் கதை, திரைக்கதை அமைக்க நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டால் நல்லது என்பதற்கு இந்தப் படமும் மிகச் சிறந்த உதாரணம்..! 
வேறொன்றும் சொல்வதற்கில்லை..!

0 comments: