சும்மாவே ஆடுவோம் - சினிமா விமர்சனம்

17-07-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இவரெல்லாம் இயக்குநரா..? பேசாமல் நடிப்பைப் பார்த்துக் கொண்டு போகலாமே..? என்று புரளி பேசிய வாய்களையெல்லாம் மூட வைத்திருக்கிறார் இயக்குநர், நடிகர் ‘காதல்’ சுகுமார்.
‘காதல்’ படத்தில் ஹீரோ பரத்தின் நண்பனாக அறிமுகமான சுகுமார், அதன் பிறகு பல படங்களில் இரண்டாம் நிலை நடிகனாக நடித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பின்பு கடந்தாண்டு ஒரு படத்தை இயக்கி வெளியிட்டார். தேவதர்ஷிணியின் புண்ணியத்தில் அந்தப் படம் கொஞ்சம் பெயரெடுத்து தப்பித்தது.
அடுத்த சில மாதங்களிலேயே இந்த ‘சும்மாவே ஆடுவோம்’ படத்தைத் துவக்கி பல இயக்குநர்களுக்கே அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டார் சுகுமார். பெரிய ஹிட் கொடுத்தவர்களுக்கே படம் கிடைக்காமல் அல்லாடும்போது, தோல்வி படத்தைக் கொடுத்த சின்ன இயக்குநருக்கு எப்படிய்யா படம் கிடைத்தது என்று ஆச்சரியப்பட்டார்கள். பலர் பொறாமைப்பட்டார்கள்.
ஆனால் சுகுமார் தன் வழியிலேயே சென்று ஜெயித்திருக்கிறார். அவ்வளவு சுத்தமான இயக்கம் என்று சொல்ல முடியாது. ஆனால் கடைசிவரையிலும் படத்தைப் பார்க்க வைக்கும் வகையில் இயக்கியிருக்கிறார். திரைக்கதையை சுவாரசியப்படுத்தியிருக்கிறார். பல இடங்களில் ‘அட’ என்று ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். இந்த சின்ன பட்ஜெட் படத்திற்கு இது போதுமே என்றே சினிமா விமர்சகர்களை சொல்ல வைத்திருக்கிறார். பாராட்டுக்கள் சுகுமார்..

கிராமத்துக் கதை. ஊர் ஜமீன்தார் ரொம்பவே நல்லவர். அதே கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களையும் அரவணைத்துச் செல்பவர். இவருக்கு குழந்தைகள் இல்லை. “வேறு ஒரு பெண்ணுடன் உறவு கொண்டு அப்பெண் சூலான பின்னர்தான் கட்டின மனைவிக்கு கரு தரிக்கும்..” என்று ஒரு ஜோஸியர் சொல்லிவிட.. ஜமீன்தார் குழப்பத்திற்கு ஆளாகிறார்.
இதைக் கேள்விப்படும் தாழ்த்தப்பட்ட பெண்ணான அம்மு தானே மனமுவந்து முன் வந்து தன்னை ஜமீனிடம் ஒப்படைத்து கருவுருகிறாள். அதே நேரம் ஜமீனின் மனைவியும் கருத்தரிக்க ஜோஸியர் காசை அள்ளுகிறார்.
இருவருக்கும் ஒரே மருத்துவமனையில் பிரசவம் நடக்கிறது. இருவருக்குமே ஆண் குழந்தை பிறந்தாலும் பிரசவத்தின்போது அம்மு இறந்துவிடுகிறார். இதனால் அவளது குழந்தையை தன் மனைவி பக்கத்தில் மாற்றி, தன் மனைவி மூலம் பிறந்த குழந்தையை அம்முவிடமும் மாற்றி வைக்கிறார் ஜமீன்தார். தான் செய்ததுதான் நடந்திருக்கிறது என்றே இப்போதுவரையிலும் நம்பி வருகிறார் ஜமீன்தார்.
காலங்கள் உருண்டோட.. இப்போது வாலிப வயதில் இருக்கிறார்கள் ஜமீனின் மகன்கள் இருவரும். இதில் ஜமீனுடனேயே வாழும் அர்ஜூன் சினிமாவில் மிகப் பெரிய ஹீரோவாக இருக்கிறான். இவனது அகில உலக ரசிகர் மன்றத் தலைவராக இருப்பவன் ஜமீனின் இன்னொரு மகனான கண்ணன்.
கண்ணனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த லீமா பாபுவுக்கும் இடையே காதல் ஒரு புறம் ஓடிக் கொண்டிருக்கிறது. அர்ஜூனின் புதிய படம் ரிலீஸ் தினத்தன்று கட்அவுட்டை வைக்கும்போது அதே ஊரைச் சேர்ந்த ஒரு ரசிகன் தவறி கீழே விழுந்து உயிரை விடுகிறான்.
இதையறியும் அர்ஜூன் அந்த ரசிகனுக்கு 3 லட்சம் ரூபாய் உதவித் தொகை தருவதாக அறிவிக்கிறான். அதான் தலைவர் அறிவிச்சிட்டாரே.. என்று ஆசையில் அதை வாங்க வரும் கண்ணன் அண்ட் கோ-விடம் ஜமீனின் மைத்துனர் சம்பத்ராம் தரக்குறைவாக பேசியனுப்பிவிடுகிறார்.
ஆனாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றியாக வேண்டும் என்பதால் கண்ணன் தன்னுடைய சொந்தக் கடையை விற்று அந்த 3 லட்சத்தை இறந்து போன ரசிகனின் குடும்பத்திற்குக் கொடுக்கிறான். இதையறிந்து ஊர் மக்கள், “உண்மையான ஹீரோ நீதான் கண்ணா..”  என்று அவனை வாழ்த்துகிறார்கள்.
இந்த நேரத்தில் அந்தக் கிராமத்தில் இருக்கும் நிலங்களை ஒரு பெரிய தனியார் நிறுவனம் வாங்க நினைக்கிறது. ஆனால் அந்த நிலங்கள் அனைத்தையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஜமீன்தார் எழுதி வைத்திருக்கிறார். இதனால் குறுக்கு வழியில் அந்த நிலத்தை மீட்டு தனியார் கம்பெனிக்கு கொடுத்து தான் லாபமடைய நினைக்கிறார் சம்பத்ராம்.
தங்களுடைய நிலத்தை அபகரிக்க நினைப்பதையறிந்த மக்கள் ஜமீனை பார்க்க வருகிறார்கள். ஆனால் அர்ஜூனும், அவரது மாமன் சம்பத்ராமும் மக்களைத் தடுக்கிறார்கள். அந்த வாக்குவாதத்தில்.. “உண்மையான ஹீரோ கண்ணன்தான். நீயில்லை..” என்று மக்கள் அர்ஜூனை பார்த்துச் சொல்ல அவனுக்கு அவமானமாகிறது.
“சினிமால ஹீரோன்னா சாதாரண விஷயமில்லை. கடுமையான உழைப்பு வேணும். வேணும்ன்னா உங்க கண்ணனை ஒரு படத்துல ஹீரோவா நடிச்சு படத்தை ரிலீஸ் பண்ணிக் காட்டுங்க..” என்று சவால் விடுகிறான் அர்ஜூன்.
ஊர் மக்கள் சவாலை ஏற்றுக் கொண்டதோடு இல்லாமல், இந்தப் பந்தயத்தில் தோற்றால் நிலங்களை ஜமீனுக்கே விட்டுக் கொடுக்கவும் ஊர் மக்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.  சொன்னபடியே படத் தயாரிப்பில் இறங்குகிறார்கள். படத்தை எடுத்து முடித்தார்களா..? நிலத்தை மீட்டார்களா என்பதுதான் படமே..!
சுவையான கதைதான். இந்தக் கதைக்கு அவ்வப்போது சிரிப்பெழும் நகைச்சுவையுடன் கூடிய திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர். இதற்கு முன்பு இதுபோல முன்பு வெளிவந்த சவால்விட்டு ஜெயிக்கும் படங்களை போலத்தான் இதுவும்.  என்ன..? ‘இதுவரையிலும் சினிமா எடுத்துக் காட்டு’  என்று யாரும் சொன்னதில்லை.. அவ்வளவுதான்..
சினிமாதானே எடுத்திரலாம்.. என்ன பெரிய சினிமா..? கேமிராவை கையில் தொட்டவரெல்லாம் கேமிராமேன்.. ஸ்டார்ட், ஆக்சன், கட் சொல்லத் தெரிந்தவரெல்லாம் இயக்குநர்.. என்கிற ரீதியில் சுகுமாரும் படத்தில் தனக்கான ஆட்களை நகைச்சுவை ததும்ப ஆள் பிடிக்கிறார்.
அதே ஊரைச் சேர்ந்த சென்னையில் வசிக்கும் ஒரு துணை இயக்குநர்தான் படத்தின் இயக்குநராகிறார். ஊருக்குள் காதுகுத்தில் இருந்து கருமாதிவரைக்கும் புகைப்படமெடுக்கும் நபர்தான் கேமிராமேன், ஊரில் இருக்கும் சலவைத் தொழிலாளிதான் காஸ்ட்யூமர், சாவுக்கும், கல்யாணத்துக்கும் பந்தல் போடும் நபர்தான் கலை இயக்குநர்.. சலூன் கடை வைத்திருப்பவர்தான் மேக்கப்மேன்.. ஊரிலேயே தடியாக இருப்பவர்தான் ஸ்டண்ட் இயக்குநர்.. ஒல்லியாக இருக்கும் ஒருவர்தான் நடன இயக்குநர்.. என்று அத்தனை பேரையும் உள்ளூரிலேயே வளைத்துப் பிடித்து ஆரம்பிக்கும் காட்சியிலேயே படம் களை கட்டுகிறது.
இது மட்டுமா..? சினிமா சிச்சுவேஷனுக்காக இவர்கள் அமைத்திருக்கும் திரைக்கதையும் நகைச்சுவையைக் கொட்டியிருக்கிறது.
மழை காட்சிக்காக தீயணைப்பு வண்டியில் இருந்து தண்ணியை கொட்ட முடியாததால், பத்து பேர் இரண்டு பக்கமும் நின்று கொண்டு, தண்ணி பாக்கெட்டுகளில் இருந்து தண்ணீரை பீய்ச்சியடித்து மழை சிச்சுவேஷனை உருவாக்குவது.. மாட்டு வண்டியை டிராலியாகப் பயன்படுத்துவது.. ராட்டினத்தில் இயக்குநரையும், கேமிராமேனையும் கட்டிவைத்து அதை ஜிம்மி ஜிப்பாக பயன்படுத்தி படம் எடுக்கும்விதம் என்று அடுத்தடுத்த காட்சிகளில் செம ரகளை செய்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பை நிறுத்த சம்பத்ராம் செய்யும் கலாட்டாவில் அடிக்க வந்த ஆளையே கேரக்டர் ஆளாக்கி நடிக்க வைப்பது சுவையானது. கூடுதல் போனஸாக, பெரிய, பெரிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்களே செய்யாத ஒரு விஷயமாக… பெப்சி பெயரைச் சொல்லி மிரட்டும் ஆளை, மரத்தில் கட்டி வைத்து, உதைத்து திருப்பியனுப்பும் காட்சியை வைத்தததற்காக இந்த இயக்குநர் காதல் சுகுமாருக்கு பெரிய சல்யூட்..!
படம் முடியும் தருவாயில் கேமிராமேன் செய்யும் உள்ளடி வேலையில் அதுவரையிலும் படமாக்கிய அத்தனையும் சம்பத்ராமின கைக்கு போய்விட.. இதை நினைத்து கலங்காமல் அடுத்து 24 மணி நேரத்தில் படமெடுத்துக் காட்டுகிறோம் என்று சவால்விட்டு வேகமாக களத்தில் குதிக்கும்போது படம் படு வேகமெடுக்கிறது..
கடைசியாக கியூப் நிறுவனத்திலும் தடை செய்ய வைத்து.. படத்தை சொந்த ஊரில் இருக்கும் தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் தடுப்பதும், சொந்த ஊரைத் தவிர மற்ற ஊர்களில் படம் ரிலீஸாகி ஹிட்டடிப்பதும் எதிர்பாராத டிவிஸ்ட்..
கண்ணனாக நடித்திருக்கும் அருண் பாலாஜி, அர்ஜூனாக நடித்திருப்பவர், ஹீரோயின் லீமா பாபு, ஜமீன்தார், ஜமீன் மனைவியான யுவராணி அனைவருமே தங்களுக்குச்  சொல்லித் தந்த்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
தாழ்த்தப்பட்ட மக்களிடையே பிரமுகராக இருக்கும் பாலாசிங், ஜோஸியராக வரும் பாண்டு, சம்பத்ராம், மற்றும் பட தயாரிப்பு குழுவில் இருக்கும் அத்தனை பேருமே படத்தின் சுவாரஸ்யத்திற்கு சொந்தக்காரர்களாகியிருக்கிறார்கள். வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் ‘முத்து முத்து கருவாயா’. ‘தலைவா தலைவா’, ‘மகராசி’ பாடல்கள் கேட்கும் ரகம். வில்லியம்ஸின் ஒளிப்பதிவில் குறைவில்லை. மிகக் குறைந்த பட்ஜெட்டில் வெளிப்புறப் படப்பிடிப்பில் நிரடல் இல்லாமல் அனைத்தையும் படமாக்கியிருக்கிறார். பாராட்டுக்கள்.
“கூத்துக் கட்டி ஆடுபவர்களெல்லாம் சினிமா ஸ்டார்களாக முடியாது..” என்று ஒரு டயலாக் படத்தில் உள்ளது. கூத்தாட்டம் ஆடு்ம் கலைஞர்கள் சினிமா கலைஞர்களுக்குக் கொஞ்சமும் சளைத்தவர்களில்லை என்பதை படம் சொல்லும் என்று இயக்குநர் முன்பான பேட்டிகளில் சொல்லியிருந்தார். ஆனால் இதற்கான விளக்கவுரை படத்தில் இல்லாதது மட்டுமே படத்தின் ஒரு சிறிய குறை..!
சின்ன பட்ஜெட்டிற்குள் தெளிவான கதை.. குழப்பமில்லாத திரைக்கதை.. நெளிய வைக்காத நகைச்சுவை.. அழுத்தமான இயக்கம் என்று அனைத்தையும் வைத்து வெற்றிப் படத்துக்குரிய லக்கினங்களோடு படத்தைத் திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ‘காதல்’ சுகுமார். அவருடைய திறமைக்கு நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!
கடைசிவரையிலும் போரடிக்காமல் செல்லும் இந்தப் படமும், ஜெயிக்க வேண்டிய படம்தான்..!
ஜெயிக்க வையுங்கள் மக்களே..!

0 comments: