08-07-2016
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தன்னுடைய சக போட்டியாளர் சிவகார்த்திகேயனின் அசுரத்தனமான வெற்றி, சந்தானத்தையும் யோசிக்க வைத்திருக்கிறது. இனிமேலும் சக நடிகரைக் காப்பாற்றும் காமெடியனாக இருந்தால் சிவாவை தொட முடியாது என்பதை உணர்ந்திருக்கும் சந்தானம், இதன் முதல் படியாக அடுத்தடுத்த வேறு, வேறு களங்களில் ஹீரோ வேஷம் கட்டத் துணிந்துவிட்டார்.
அந்த வரிசையில் ‘இனிமே இப்படித்தான்’ படத்தைத் தொடர்ந்து நடனமாடவும், சண்டையிடவும் ஸ்கோப் உள்ள கதையாகத் தேர்ந்தெடுத்து இதில் நடித்திருக்கிறார் சந்தானம்.
பிரிட்டிஷார் இந்தியாவில் இருந்த காலத்தில் தங்களுக்கு உதவிய ஒரு திபெத்திய மன்னருக்கு தென் தமிழகத்தில் மேகமலை பிரதேசத்தில் சிவன் கொண்டை மலை என்னுமிடத்தில் ஒரு மிகப் பெரிய அரண்மனையைக் கட்டிக் கொடுத்து பாதுகாத்திருக்கிறது பிரிட்டிஷ் அரசு.
அந்த அரண்மனையில் திபெத்திய அரசர் வாழ்ந்து வந்தபோது அரண்மனைக்கு வேலைக்கு வந்த ஒரு அழகியின் அழகில் மயங்கி அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். அரசர் ஊர் சுற்றக் கிளம்பிச் சென்ற பிறகு, அரசரின் மனைவி தனது கள்ளக் காதலனை அரண்மனைக்கு வரவழைத்து குஷாலாக இருந்துள்ளார். இடையில் ராணிக்கு ஒரு பையன் பிறக்கிறான்.
பையன் வளர்ந்த நிலையில் அரசருக்கு ராணியின் துரோகம் பற்றித் தெரிய வர.. கள்ளக் காதலனை கொலை செய்கிறார். ராணியையும் சித்ரவதை செய்கிறார். இதனால் ராணி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறார். ராணியின் சிறு வயது மகனும் இறந்து போகிறான்.
இந்தச் சோகத்தில் ஆட்பட்ட அரசர் திபெத்துக்கே திரும்பிச் செல்கிறார். ஆனால் அங்கே சென்றவுடன் மன வேதனைப்பட்டே அவர் மரணமடைந்துவிட.. அவருக்குப் பின் வந்த அவரது வாரிசுகள் பலரும் இளம் வயதிலேயே காலமாகிவிடுகிறார்கள்.
இதன் ரகசியம் அறியும் திபெத்திய பித்த பிக்குகள்.. சிவன் கொண்டை மலை அரண்மனையில் தற்கொலை செய்து கொண்ட ராணியும் அவளது மகனும் ஆத்மா சாந்தியாகாமல் இன்னமும் அதே பங்களாவில் அலைந்து கொண்டிருப்பதால்தான் திபெத்திய மன்னர் வாரிசுகள் நிலைக்க மாட்டேன் என்ற ரகசியத்தை அறிகிறார்கள். அந்தப் பேய்களை அடக்குவதற்காக திபெத்தில் இருந்து மேகமலைக்கு வருகிறார்கள் புத்த பிக்குகள்.
இந்த நேரத்தில் சென்னையில் ஹீரோ சந்தானம் வழக்கம்போல என்ன வேலை என்று தெரியாமலேயே வாழ்கிறார். இவருடைய அப்பா ஆனந்த்ராஜ் சினிமாவில் சண்டை நடிகராக இருக்கிறார். அம்மாவின் தம்பியான கருணாஸ், மினி வேனை வாடகைக்கு விடும் தொழிலில் இருக்கிறார்.
இந்த மினி வேனை டியூ கட்டவில்லை என்பதற்காக கடன் கொடுத்த சேட்டுக்காரன் தூக்கிக் கொண்டு போக.. இதனால் ஆத்திரப்படும் கருணாஸ் இதை தனது மருமகனிடம் சொல்லி வருத்தப்பட.. சேட்டுவுக்கு ஒரு பாடம் கற்பிக்க நினைத்த சந்தானம், சேட்டு வீட்டில் கொள்ளையடிக்கச் செல்கிறார்.
அங்கே தற்செயலாக அவரைப் பார்த்துவிடும் சேட்டுவின் மகள் சனாயா.. நைச்சியமாகப் பேசி சந்தானத்தை போலீஸிடம் பிடித்துக் கொடுக்கிறாள். இதே சனாயாதான் சந்தானத்தின் பால்ய வயதில் மிக நெருங்கிய தோழியாக இருந்தாள். சனாயா சந்தானத்தை இன்னமும் மறக்க முடியாமல் அவனைத் தேடியும் வருகிறாள்.
அப்படி சந்தானத்தைத் தேடி அவரது வீட்டிற்கே வரும் சனாயா தான் பிடித்துக் கொடுத்த திருடன்தான் தனது பால்ய வயது காதலன் என்று அறிந்து அதிர்ச்சியானாலும் தனது காதலில் உறுதியாக இருக்கிறார். சந்தானமும் அப்படியே..!
இவர்களது காதலை சேட்டு ஏற்கவில்லை. பிரிக்கப் பார்க்கிறார். முடியவில்லை. இதனால் தந்திரமாக சந்தானத்தின் குடும்பத்தையே கொலை செய்யப் பார்க்கிறார். இதற்காக மொட்டை ராஜேந்திரனை நாடுகிறார்.
மொட்டை ராஜேந்திரனோ “இங்கே வைத்து குடும்பத்தையே கொலை செய்ய முடியாது. வேறு ஊருக்குத் தூக்கிட்டுப் போய்தான் செய்ய முடியும்…” என்று சொல்லி.. சிவன் கொண்டை மலை உச்சியில் இருக்கும் அந்த பேய் வசிக்கும் பங்களாவிற்கு சந்தானத்தின் குடும்பத்தை அழைத்து வரச் சொல்கிறார்.
சேட்டும் மேகமலையில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பொய் சொல்லி அனைவரையும் அங்கே அழைத்து வருகிறார். கொலை செய்ய ராஜேந்திரன் கும்பலும் அங்கே வந்துவிட.. இவர்களது கொலைத் திட்டம் நிறைவேறியதா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
பேயும், நகைச்சுவையும் கலந்ததுதான் இப்போதைய வெற்றிக்கான பார்முலா என்பதால் அதில் குறை வைக்காமல் திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் ராம்பாலா. விஜய் டிவியில் சந்தானத்தை பிரபலப்படுத்திய ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் இயக்குநரான இவர், சந்தானத்தின் நன்றிக் கடன் குணத்தினால் இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்.
ஒரு பேய் வீடு.. அமானுஷ்யமான சூழ்நிலை. இருட்டு.. திடீர், திடீரென்று மூடும் கதவுகள்.. பறக்கும் பொருட்கள்.. பேயின் சக்தி.. காதைக் கிழிக்கும் பின்னணி இசை.. பேயின் திடுக்கிடும் ஆக்சன் காட்சிகள் என்று பேய் படத்தின் குணாதிசியங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் உள்ளடக்கியிருக்கிறது இந்தப் படம்.
ஆட்கள் அதிகமாக இருந்தால் அவர்களுக்கேற்ற நகைச்சுவை கலந்த தேடுதல் வேட்டையாக திரைக்கதை அமைப்பது மிக, மிக கடினம், இதில் சுந்தர்.சி. மிகவும் எக்ஸ்பர்ட்டானவர். அவரை போலவே இந்தப் படத்திலும் படத்தின் இடைவேளைக்கு பின்னான காட்சிகளில் அனைவரையும் ஒன்று சேர்க்கும்விதமாக திரைக்கதை அமைத்து நகைச்சுவையை வெளிக்கொணர்ந்திருக்கும் இயக்குநர் ராம்பாலாவின் இயக்கத் திறமைக்கு நமது பாராட்டுக்கள்.
பேயாக வேடம் போட்டவர்கள் ஒரு குழுவாகவும், ஒரிஜினல் பேய்கள் இன்னொரு குழுவாகவும் பிரிந்து, பிரிந்து பயம் காட்ட.. யார் ஒரிஜினல்.. யார் டூப்ளிகேட் என்று தெரியாமல் சந்தானம் அண்ட் கோ-வினர் மாட்டிக் கொண்டு முழிக்கும் அந்த 25 நிமிட காட்சிகள்தான் படத்தின் ஹைலைட்டே..! இதில் சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. வெல்டன் இயக்குநரே..!
சந்தானம் தனது டிரேட் மார்க் வசன உச்சரிப்போடு அது போல வசனங்களையே இதிலும் உதிர்த்திருக்கிறார். உடலை கிண்டல் செய்யும் வசனத்தை இன்னமும் அண்ணன் கைவிடவில்லை. இதையும் கைவிட்டால் நன்றாக இருக்கும்.
சந்தானத்தின் நடன திறமை கொஞ்சம் கூடியிருக்கிறது. இவருடைய நடனத்துக்காகவே முதல் பாடல் காட்சியான ‘சிவன் மகன்டா’ பாடலை படமாக்கியிருக்கிறார்கள். அத்தனை வேகமான நடனம் அதில் இருக்கிறது. பன்ச் டயலாக்குகளை கொஞ்சம் குறைத்து காட்சிக்கேற்ற வசனங்களையே பேசி சிரிக்க வைக்கிறார்.
“நானென்ன திருடனா?” என்று பலவித மாடுலேஷனில் கேட்டு, கேட்டு கருணாஸை சாகடிக்கும் காட்சி கட்டுப்படுத்த முடியாத நகைச்சுவை. இதேபோல் தனது அப்பாவை எப்போதும் கலாய்த்தபடியிருக்கும் காட்சிகளும் ரசனையானவை. ரொமான்ஸ்தான் மனிதருக்கு சிக்காமல் இருக்கிறது. அடுத்து காதல் கருவில் வரும் படம் அதை நிவர்த்தி செய்யும் என்று நம்புவோமாக.
பாலிவுட்டின் மிகப் பிரபலமான நடிகரான செளரவ் சுக்லா இதில் சேட்டாக.. ஹீரோயினின் அப்பாவாக நடித்திருக்கிறார். தமிழ் தெரியவில்லையென்றாலும் தமிழை மிக அழகாக உச்சரித்திருக்கிறார். டப்பிங்கில் சொதப்பாமல் வெளிவந்திருக்கிறது இவர் பேசியிருக்கும் டயலாக்குகள்.
மனிதர் நடிப்பில் அசர வைப்பவர். இதிலும் குறை வைக்கவில்லை. சந்தானத்தின் டைமிங் காமெடிக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். பேயுடன் மாட்டிக் கொண்டு தவிக்கும் காட்சியில் சிரிப்பலையை முகபாவனையிலேயே வரவழைத்திருக்கிறார். படத்தில் மிக சரியான தேர்வு இவர்தான்.
ஹீரோயின் சனாயா. ஏன் இப்படி படத்துக்குப் படம் புதுமுகங்களை தேடிப் போகிறார்கள் என்று தெரியவில்லை. வழக்கம்போல தமிழ் உச்சரிப்பு தகிடுதத்தம் போட்டாலும், இவரது அழகு காப்பாற்றுகிறது. பாடல் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். இப்போதைக்கு இது போதுமே..!?
கருணாஸ் ஒரு பக்கம் உடன் வந்து தவியாய் தவித்தாலும் ஆனந்த்ராஜ் கட்டிங் விஷயத்தில் கில்லியாக அலைந்து அதை வைத்து ஒரு பக்கம் கிச்சுகிச்சு மூட்டுகிறார். மொட்டை ராஜேந்திரன் இன்னும் எத்தனை படத்தில் இதேபோல் ஆக்சனை காட்டுவாரோ தெரியவில்லை. கொஞ்சம் திகட்டுகிறது. ஆனால் கிளைமாக்ஸில் ஒரிஜினல் பேயுடன் இவர் மல்லுக்கட்டும் விதம் அத்தனை சிரிப்பை வரவழைக்கிறது. மனிதர் ரசித்து, உணர்ந்து நடிக்கிறார். பாராட்டுக்கள்..!
பேய் என்கிற பயத்தை வைத்து இவர்களை சாகடிக்கும் திட்டம் என்பதே ஒரு காமெடி. காமெடியான ஒரு வில்லனை நம்பி சேட்டு இங்கே இவர்களை அழைத்து வருவதை நினைத்தால் சேட்டுவே ஒரு காமெடியாகத்தான் தெரிகிறார்.
அமாவாசையன்று பேய் பெட்டியில் இருந்து வெளியேறும் சூழலில், திபெத்திய சாமியார்கள் ஒரு பக்கம்.. ஒரிஜினல் பேய்கள் ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் போலி பேய்களுடன் மொட்டை ராஜேந்திரனின் கோஷ்டியினர் இன்னொரு பக்கமுமாக திரைக்கதையை எழுதியவர்கள் எப்படித்தான் அல்லல்பட்டு எழுதினார்களோ தெரியவில்லை. அவர்களுக்கு சபாஷ்.. பாராட்டுக்கள்..!
படத்தின் ஒளிப்பதிவாளரான தீபக் குமார் பாடிக்கு ஒரு மிகப் பெரிய பாராட்டு. மனிதர் அனைத்தையும் அழகுற பதிவாக்கியிருக்கிறார். காட்சிகள் அனைத்துமே கண்ணில் ஒற்றிக் கொள்வது போலத்தான் இருக்கிறது. புதிய திறமைசாலியை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ராம்பாலா.
இதேபோல் படத்தொகுப்பாளர் கோபிகிருஷ்ணாவும் தன் பங்குக்கு சிறப்பான படத்தொகுப்பினை செய்திருக்கிரார். பேய்ப் படங்களில் படத்தொகுப்பு என்பது கத்தி மேல் நடப்பது போன்ற பிரச்சினை. கோபியின் நீண்ட கால அனுபவம் அவருக்குக் கை கொடுத்திருக்கிறது. பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியதைவிடவும், எடிட்டிங்கில் அழகாக தொகுத்து வழங்கியிருப்பதிலும்தான் இந்தப் படத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. பாராட்டுக்கள் கோபி கிருஷ்ணா.
எஸ்.எஸ்.தமனின் இசையில் ‘சிவன் மகன்டா’ பாடல் கேட்கும் ரகம். ‘காணாமல் போன காதல்’ பாடல் ஒரு டூயட்டுக்காக இருக்கிறது. ‘தில்லுக்கு துட்டு’ பாடல், பாதிதான் படத்தில் இடம் பிடித்திருக்கிறது. பின்னணி இசையில் அளப்பறையே செய்திருக்கிறார் கார்த்திக் ராஜா. பாராட்டுக்கள் ஸார்..!
பேய்ப் படங்களின் வரிசையில் பலவகையான பேய்களையும் பார்த்தாகிவிட்டது. இதற்கு மேலும் அவைகளை பார்க்கும் ஆசை தமிழ் ரசிகர்களுக்கு இருக்காது என்று நினைக்கிறோம். அந்த அளவுக்கு திகட்ட, திகட்ட பேய்களை அடையாளம் காட்டிவிட்டார்கள் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்.
இந்தப் படத்தோடு இந்தப் பேய் பிரச்சினை தமிழ்ச் சினிமாவில் முடிவுக்கு வந்தால் நிச்சயம் சந்தோஷப்படுவோம். ஏனெனில் இதற்கு மேலும் பேய்களை சிரமப்படுத்துவது நமக்குத்தான் சிக்கலில் முடியும்..!
காதல், திகில், பேய், பன்ச் வசனங்கள், நகைச்சுவை என்று அனைத்தும் கலந்த ஒரு கலவையாக இருக்கும் இந்தப் படமும், தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்றே நம்புகிறோம்..!
|
Tweet |
0 comments:
Post a Comment