அர்த்தநாரி - சினிமா விமர்சனம்

10-07-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தன்னில் பாதியான உமையாளைச் சுமக்கும் சிவனின் ரூபத்தை ‘அர்த்தநாரி’ என்பார்கள். இந்தத் தலைப்பை இந்தப் படத்திற்கு எதற்கு வைத்தார்கள் என்பது அந்த சிவனுக்கே வெளிச்சம்..!

நாசர் நடத்தி வரும் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து, படித்து உருவானவர் ஹீரோ ராம்குமார். குழந்தை தொழிலாளர்களை எங்கே கண்டாலும் அவர்களை தடுத்து அந்த இடத்தில் இருந்து வெளியேற்றி பள்ளிக்கு அனுப்பும் வேலையைச் செய்பவர் நாசர். இவரால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹீரோயினான அருந்ததி துடிப்பான போலீஸ் ஆபீஸர். என்கவுண்ட்டர்களுக்கும் அஞ்சாதவர். பெண்களைக் கடத்தி விற்கும் தொழிலில் ஈடுபடுபவர்களை தேடிப் பிடிக்கும் ஒரு அஸைன்மெண்ட்டில் இறங்கியிருக்கிறார்.
இந்த நேரத்தில் அருந்கதி ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் துப்புத் துலக்க போக.. அவரை பாலோ செய்யும் ஹீரோ ராம்குமார் அருந்ததியையே துப்புத் துலக்குகிறார். அருந்ததி அவரை அலட்சியப்படுத்திவிட்டுப் போகிறார். ஆனாலும் ஹீரோ விடாமல் பின்னாலேயே துரத்து, துரத்தென்று துரத்தி தன்னைக் காதலிக்க வைக்கிறார்.
இந்த நேரத்தில் திடீரென்று நாசர் இறந்து போகிறார். அவருடைய மரணம் இயற்கையானது என்று நினைக்கும் நேரத்தில், நாசர் கொலை செய்யப்பட்டிருப்பதாக ராம்குமாருக்கு தகவல் தெரிகிறது.
அதிர்ச்சியான ராம்குமார், அந்தக் கொலையைச் செய்த்து யார் என்று தானே களத்தில் இறங்கி விசாரிக்கத் துவங்குகிறார். இன்னொரு பக்கம் அருந்ததியும் விசாரிக்கிறார். இறுதியில் என்ன ஆனது..? கொலையாளிகளை கண்டுபிடித்தார்களா..? இல்லையா..? என்பதுதான் படத்தில் இருக்கும் திரைக்கதை.
படத்தின் இயக்குநர் சுந்தர இளங்கோவன் இயக்குநர் பாலாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் என்பதைக் கேள்விப்பட்டுத்தான் ஆர்வமாக படம் பார்க்கச் சென்றோம். படத்தில் ஒரு சின்ன ஷாட்டில்கூட பாலாவின் பெயர் ஞாபகப்படுத்தப்படவில்லை என்பது மிகப் பெரிய சோகம்.
மிக, மிக சாதாரணமான இயக்கம். அடுத்து என்ன நடக்கிறது என்பதை சொல்லிவிடக் கூடிய திரைக்கதை. நடிகர்களை கஷ்டப்படுத்தி நடிக்க வைத்திருப்பது மட்டும் தெரிகிறது. ஒரேயொரு காட்சி மட்டுமே படமாக்கியவிதத்தில் அந்த நேரத்தில் சபாஷ் போட வைக்கிறது. தன்னை அடித்துத் துன்புறுத்தியவனை ஒரு சிறுவன் கழுத்தில் பிளேடு போடும் காட்சிதான் அது.
படத்தின் ஹீரோ ராம்குமார் பரவாயில்லை என்கிற ரீதியில் நடித்திருக்கிறார். பார்த்தவுடனேயே காதல்.. பைத்தியக்காரத்தனமான பேச்சு.. போலீஸ் என்று தெரிந்த பின்பும் வேண்டுமென்றே போய் காதல் பேச்சு பேசுவது என்று எரிச்சல்பட்ட திரைக்கதையில் இவர் வருவதால் ரசிக்கத்தான் முடியவில்லை. படத்தின் பிற்பாதியில் வில்லன்களை தேடி இவர் ஓடிக் கொண்டேயிருப்பதால் நல்லவேளையாக நம்மை தப்பிக்க வைத்திருக்கிறார்.
ஹீரோயின் அருந்ததிக்கு விஜயசாந்தியை போல வர வேண்டும் என்று ஆசையாம். இந்தப் படத்தின் நடிப்புக்கே விஜயசாந்திதான் மூலாதாரம் என்றெல்லாம் சொல்லியிருந்தார். விஜயசாந்தி இந்தப் படத்தைப் பார்க்காமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம்.
முதல் காட்சியிலேயே பனியன் மற்றும் இறக்கிக் கட்டப்பட்ட பேண்ட்டுடன் அவர் போடும் சண்டை கிளாமரை விரும்பும் ரசிகர்களை அதிகம் கவர்ந்துவிட்டது. இது போன்று பெண் போலீஸ் அதிகாரிகளை படத்துக்குப் படம் காட்டினால் நன்றாகத்தான் இருக்கும். இதேபோல் பெண் புரோக்கரை பிடிக்க நடுரோட்டில் அவர் நடந்து வரும் அழகு.. தனி ரகம்..!  
அந்த புரோக்கரை தனியறையில் வைத்து வெளுத்து வாங்கும் காட்சியை மட்டும் இயக்குநர் எப்படி, இப்படி உண்மைத்தனத்துடன் படமாக்கினாரோ தெரியவில்லை. அந்த அளவுக்கு தத்ரூபம். அருந்ததி தன்னுடைய ‘உண்மை’யான கோபத்தையெல்லாம் அந்தக் காட்சியில் காட்டிவிட்டார் போலிருக்கிறது. பாடல் காட்சியில் கிளாமரைக் கொட்டியிருக்கிறார். ரொமான்ஸ்தான் வரவில்லை. ஆனாலும் முகத்தைப் பார்க்கையில்…. முடியவில்லை..
நாசர் வழக்கம்போல ஒரு பெரிய மனிதராக வாழ்ந்து காட்டியிருக்கிறார். மொட்டை ராஜேந்திரன் சகுனம், ராகு, கேது, நட்சத்திரம் பார்த்து கொலை செய்யும் நபராக  கொஞ்சம் கலகலப்பு ஊட்டியிருக்கிறார்.
செல்வகணேஷின் இசையில் 3 பாடல்களும் ஒரு முறை கேட்கும் ரகம். ஒளிப்பதிவாளரும் தன் வேலையை சரியாகவே செய்திருக்கிறார்.
ஆட்களைக் கடத்தி புதிய மருந்துகளுக்கான பரிசோதனைக் கூடத்தில் எலிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தும் கொடூரத்தை இதில் சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர். நல்ல விஷயம்தான். ஆனால் அழுத்தமில்லாது போன இயக்கம் இதன் உண்மையை உணரவிடாமல் செய்துவிட்டது..!
இயக்குநர் அடுத்தப் படத்தில் இதைவிடவும் அதிகமாக ஜெயிக்க வாழ்த்துகிறோம்..!

0 comments: