22-07-2016
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இதற்கு முன் இயக்கியது ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ என்ற இரண்டு வெற்றிப் படங்கள்தான். இவைகளின் வெற்றியைவிடவும் இல்லாத ஒன்றைத் தேடிப் பிடித்துச் சொல்வதை போல இவைகளை ‘தலித்திய படங்கள்’ என்று சொல்லியும், ‘தலித்திய இயக்குநர் ரஞ்சித்’ என்று சொல்லியும் அவரை ஒரு அடையாள மேடையாக்கினார்கள். மூன்றாவது படமே சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கினால் எதிர்பார்ப்பு சாதாரணமாகவா இருக்கும்..?
அவரும் ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ என்று தன்னுடைய பாணியில் இரண்டு தோல்வி படங்களை கொடுத்துவிட்டு அடுத்த வெற்றிக்காக காத்திருந்தார். யாரிடம் யார் கவிழ்ந்தார்கள் என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் தாணு 25 வருடங்களாக காத்திருந்தது வீண் போகவில்லை. கிடைத்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
ரஞ்சித்தும் அனைத்து இயக்குநர்களையும் பொறாமைப்படும் அளவுக்கு தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார். படம் பற்றிய பிரமோஷனில் ரஜினி அனைத்து வகையான ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பினார். படத்தின் கதை நிச்சயம் அரசியலாகத்தான் இருக்கும் என்று கங்கணம் கட்டி சொன்னது மீடியா உலகம்.
இதுவரையிலும் இல்லாத அளவுக்கான விளம்பர வெளிச்சம் இந்த ‘கபாலி’யின் மீது பாய்ச்சப்பட.. கிட்டத்தட்ட தமிழக மக்களுக்கு ‘கபாலி’ என்கிற பெயரில் புதிய காய்ச்சலே வந்துவிட்டது என்று சொல்ல்லாம்.
முதலில் வெளிவந்த டிரெயிலரில் இருந்த ‘கபாலிடா’ சீனும், ‘வந்துட்டேன்னு சொல்லு.. நா திரும்ப வந்துட்டேன்’னு சொல்லு டயலாக்கும் ‘கபாலி’யின் டெம்போவை மென்மேலும் உயர்த்திவிட்டது.
இந்த அளவுக்கு ‘கபாலி’யை அவர்களிடத்தில் திணித்திருக்கும் தயாரிப்பாளரின் விளம்பர டெக்னிக்கை பாராட்ட வேண்டிய அதே நேரம், அதுவே ரஜினிக்கு மட்டும் எதிர்ப்பலையாக மாறியிருக்கிறது என்பதையும் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படியொரு கதைக்குத்தான் இப்படியொரு பில்டப்பா என்று ஒரு பக்கமும், இது ரஞ்சித் படமாகவும் இல்லை.. ரஜினி படமாகவும் இல்லை என்று வேறொறு பக்கமுமாக வெளுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கேங்ஸ்டர் படம்தான். மணிரத்னத்தின் ‘நாயகனு’க்கும் இதற்கும் பெரும் தொடர்புண்டு. அதே பாணியில் ஏற்கெனவே பார்த்தது போலவே இருந்தாலும், ரஜினி என்கிற ஒற்றை மனிதரால் அத்தனையும் புதிதாக தெரிகிறது..!
தன்னுடைய தாத்தா காலத்திலேயே திண்டிவனம் பக்கத்தில் இருந்து மலேசியாவுக்கு வேலை தேடி போனது ரஜினியின் குடும்பம். அங்கே ரஜினி இளைஞராக இருக்கும்போது தொழிலாளர்களுக்கு தலைவராக, போராட்ட குணமுள்ளவராக திகழ்கிறார்.
சீன தொழிலாளர்களுக்கும், தமிழக தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம்தான் தரப்பட வேண்டும் என்று தன் எஸ்டேட் முதலாளியுடன் சண்டையிடுகிறார் ரஜினி. போராட்டம் நடத்துகிறார். ஜெயிக்கிறார். இதனால் இவரது புகழ் மெல்ல பரவுகிறது.
இந்த நிலையில் தொழிற் சங்கத் தலைவராக இருக்கும் நாசரின் கண்ணில் ரஜினி பட.. அவரை தன் பக்கம் இழுத்துக் கொள்கிறார் நாசர். நாசர் உடன் இருக்கும் தோழர்களை போதை மருந்து கடத்தலில் ஈடுபட வைக்க கிஷோரின் டீம் முயல்கிறது. இதனை நாசர் தடுக்க. அவரை ஒரு நல்ல சுபமுகூர்த்த நாளில் பரலோகம் அனுப்புகிறது.
இதனால் அடுத்த தளபதி பதவி தானாக ரஜினியின் கைக்கு வருகிறது. இந்த நேரத்தில் ராதிகா ஆப்தேயை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் ரஜினி. மனைவி கர்ப்பமாக இருக்கும் சூழலில் ரஜினியும் கலந்து கொண்ட ஒரு பார்ட்டியில் நாசரின் மகன் கொல்லப்படுகிறார். இந்தக் கொலைப் பழி ரஜினி மீது சுமத்தப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் ராதிகா ஆப்தேவும் சுடப்படுகிறார். அவருடைய நிலையைப் பார்த்தவுடன் அவர் இறந்துவிட்டாரோ என்று நினைத்துக் கொள்கிறார் ரஜினி.
இந்தக் கொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டு காலமாக சிறையில் இருக்கும் ரஜினி சிறை மீள்வதில் இருந்துதான் படமும் துவங்குகிறது. நன்னடத்தை காரணமாய் விடுவிக்கப்படும் ரஜினியை அவரது பழைய கூட்டாளியான ஜான் விஜய் வரவேற்கிறார்.
அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போதே அந்த 25 வருடத்திய மலேசியாவின் மாற்றம் ரஜினிக்குள் புகுத்தப்படுகிறது. இப்போது இங்கேயிருக்கும் தமிழர்களின் நிலைமை முன்னைவிட படு மோசம் என்று ஒப்புவிக்கப்படுகிறது. போதை மருந்துகளில் ஆட்கொண்டு இளைய தலைமுறையே அழிந்து கொண்டிருக்கிறது. கந்து வட்டி கடன்காரர்களின் தொல்லை.. அடாவடிகளின் ஆட்சி நடந்து வருவதை சொல்கிறார்கள் தோழர்கள்.
’43-வது கேங்’ என்ற ரவுடி கும்பல்தான் மாணவர்களை போதை மருந்துக்கு அடிமையாக்கி வைத்திருருப்பதாக சொல்ல உடனடியாக அந்தக் கும்பலின் தளபதியான லிங்கேஷை சந்திக்கிறார் ரஜினி. அவனை மிதி, மிதியென்று மிதித்துவிட்டு “நான் கபாலிடா…” என்று எச்சரித்துவிட்டு வருகிறார்.
அவர் சிறைக்குச் சென்றாலும் அவருடைய பெயரில் போதை மருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வுக் கூடத்தை அவருடைய சிஷ்யமார்கள் நடத்தி வருகிறார்கள். இதில் போதைக்கு அடிமையான ரித்விகா சிகிச்சை பெற்று வருகிறார். இங்கே கலையரசனும் ஒரு ஆசிரியராக இருக்கிறார். அதைச் சுற்றிப் பார்க்கும் ரஜினி தன் பெயரில் நடத்தப்படும் ஒரு நல்லதை நினைத்து பெருமைப்படுகிறார்.
தன்னுடைய வீட்டிற்கு வரும் ரஜினி தனிமையான சூழலில் தன் வாழ்க்கையை நினைத்துப் பார்த்து, தன் மனைவி இறந்துவிட்டதாகவே நினைக்கிறார். தனது அடுத்த வேலையாக போதை மருந்தை சப்ளை செய்யும் சப் டீலரான மைம் கோபியை போட்டுத் தள்ளுகிறார்.
இது மெயின் டீலரான கிஷோருக்கு பயத்தைக் கொடுக்கிறது. ஏற்கெனவே கிஷோரின் தந்திரத்தால்தான் ரஜினி சிறைக்குச் சென்றிருக்கிறார். இந்த விஷயத்தினால் ரஜினிக்கு முன்பு தான் முந்திக் கொள்ள நினைத்து, ரஜினியை தீர்த்துக் கட்ட தன்ஷிகாவை நியமிக்கிறார் கிஷார்.
ரஜினியை கொலை செய்ய நினைத்து, அவர் பின்னாலேயே அலையும் தன்ஷிகா ஒரு சம்பவத்திற்குப் பிறகு ரஜினியிடமே ஐக்கியமாகிறார். அவர்தான் ரஜினியின் மகள் என்பதும் ரஜினிக்கு தெரிய வருகிறது. அடுத்த காட்சியிலேயே அதிர்ச்சியாக தன் மனைவியும் உயிருடன் இருப்பது மகள் மூலமாகவே ரஜினிக்கு தெரிய வர.. மனைவியைக் கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் இறங்குகிறார்.
இதற்காக தமிழ்நாட்டுக்கு வருகிறார். சென்னையில் தேடியலைந்து கடைசியாக பாண்டிச்சேரியில் தனது மனைவியைக் கண்டறிகிறார். ஆனால் அதே நேரம் மலேசியாவில் இருக்கும் ரஜினியின் தோழர்களை கிஷோரின் ஆட்கள் போட்டுத் தள்ளிவிட.. மனைவி மகளுடன் ஊர் திரும்பும் ரஜினிக்கு இது பேரதிர்ச்சியாகிறது..
ரஜினி எதிரிகளை எப்படி பழி வாங்குகிறார்.. ரஜினியின் முடிவு என்ன என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்..!
இது முழுக்க முழுக்க ரஜினியின் படம்தான். அப்படி நினைத்துதான் ரசிகர்களும் வந்து கூடியிருக்கிறார்கள். அவருடைய மேக்கப், ஸ்டைல், உடையலங்காரம் அனைத்துமே பழசுதான் என்றாலும், கண் இமை கொட்டாமல் ஸ்கிரீனை பார்க்க வைக்கிறது. இதுதான் ரஜினி என்னும் மந்திரம் செய்யும் மாயம். இதற்காகத்தான் இன்றைக்கு ஒரு நாளில் தமிழகமே ஸ்தம்பித்துவிட்டது போன்ற நிகழ்வு நடந்தேறியிருக்கிறது.
பிரேம் பை பிரேம் ரஜினி மட்டுமே செதுக்கப்பட்டிருக்கிறார். அவராலேயே காட்சிகள் நகர்கின்றன. எத்தனை வயதானாலும் அவருக்கே உரித்தான ஸ்டைல் இன்னமும் புதிய ரசிகர்களையும் வசீகரித்திருப்பது உண்மைதான். நடப்பது.. பார்ப்பது.. திரும்புவது.. என்று தனது உடல் மொழி அனைத்திலுமே ஒரு தனித்துவமாக காட்டி அதனையே நடிப்பாக்கியிருக்கிறார் ரஜினி.
அறிவுரை சொல்லும் காவல்துறை அதிகாரியை “போதும். வாயை மூடிக்கோ..” என்பதை போல சட்டென்று திரும்பி உதட்டோரம் கை வைத்து உஷார்படுத்தும் அந்த கணத்தில் ஆரம்பிக்கிறது அவரது நடிப்பு. அதற்கு முன்பான அரை செகண்ட்டில் தனது முதல் வசனத்தை “மகிழ்ச்சி” என்று வெளிப்படுத்தியிருப்பார். அடுத்த அரை செகண்ட்டில் அவரது மனோபாவமும், கேரக்டரும் இப்படி உருமாறுகிறது.
படம் நெடுகிலும் காட்சிக்கு காட்சி அவரது நடை, உடை, பாவனைகள்.. இது போலவே மாற்றப்பட்டிருக்கின்றன. “அம்மா இன்னும் உசிரோடதான் இருக்காங்கப்பா…” என்று சொன்னவுடன் அவர் காட்டுகின்ற ரியாக்ஷனும், தனது மகளை அக்கறையுடன் பார்க்கும் அந்த பாவனையும், மனைவியை 25 ஆண்டுகள் கழித்து பார்த்தவுடன் மனைவியின் அழுகையையும் மீறி ஒரு ஆணாக தனது நடிப்பை காட்டியிருப்பதில் சபாஷ் என்று சொல்ல வைத்திருக்கிறார் ரஜினி.
சண்டை காட்சிகளில் புதிய புதிய டெக்னிக்கல் வசதிகள்.. படமாக்கலில் இருக்கும் நவீனத்துவம்.. இவற்றின் துணையோடு ஒரு புதிய பாணியில் ரஜினி ஜெயித்திருந்தாலும் அதிலும் அவருக்கே உரித்தான ஸ்டைல் இருப்பதாலேயே அவைகளும் பேசப்படுகின்றன.
“மகிழ்ச்சி” என்கிற வார்த்தையை வேறு வேறு வடிவங்களில் அவர் உச்சரித்தவிதமும் அந்தந்த காட்சிகளின் கனத்தை உயர்த்தியிருக்கின்றன. சென்னை ஹோட்டலில் அவர் சொல்லும்விதத்தைக் கேட்டவுடன் அழைத்து வந்தவர் சொல்வாரே.. “சூப்பரா இருக்கு ஸார்..” என்று.. சந்தேகமேயில்லை.. அது ரசிகர்களின் கருத்துதான்..!
எத்தனை புதிய, புதிய நடிகர்கள் வந்தாலும் தன்னுடைய ஸ்டைலிஷான நடிப்பும், ஆக்சனும் வேறு யாருக்கும் வராது. இல்லை என்பதாலேயே இந்த ராஜா இன்னமும் ராஜாவாகவே இருக்கிறார்.
ரஜினியின் மகளாக நடித்திருக்கும் தன்ஷிகாவுக்கு புதிய வேடம். “மூஞ்சி இங்க இருக்கு..” என்று தனது அறிமுகக் காட்சியிலேயே தனது கூட்டாளியிடம் எரிச்சல்படும் இவரது ஆக்சன்கள் பின்பு சண்டை காட்சி ஆக்சன்கள்வரையிலும் நீண்டிருப்பது இவருக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. இடைவேளைக்கு பின்பான காட்சிகளில் இவருடைய கதாபாத்திரத்தின் உதவிதான் ரஜினிக்கே மிக துணையாய் இருக்கிறது.
போதை மருந்தில் ஆட்கொண்ட நோயாளியான ரித்விகா சில காட்சிகள்தான் என்றாலும் மனதைத் தொட்டிருக்கிறார். “வாங்கப்பா..” என்று ரஜினியை அழைக்க அவர் ஒரு கணம் திகைக்க.. அந்த ஒரு காட்சியிலும் மிக யதார்த்தமான நடிப்பும், இயக்கமும் வெளிப்பட்டுள்ளது.
ராதிகா ஆப்தேவை சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக்கணும்னு இயக்குநருக்கு எப்படி தோன்றியதென்று தெரியவில்லை. ஆனால் சரியான ஜோடிதான். முதற்பாதியில் அவ்வப்போது சின்னச் சின்ன ஷாட்டுகளில் மனதைத் தொடுகிறார். ரஜினியை பார்த்து ரொமான்ட்டிக் மூடில் அவர் பேசும் காட்சி டச்சிங்..
25 வருடம் கழித்து கணவரை பார்த்த அதிர்ச்சியில் அவர் காட்டும் நடிப்பும், கிளைமாக்ஸ் காட்சியில் “நான் மறக்கலை.. மறக்கவும் மாட்டேன்..” என்று கிஷோரிடம் சொல்லும் தைரியமான வசன உச்சரிப்பும்.. கை தேர்ந்த நடிகையை காட்டுகிறது.
தினேஷுக்கு அழுத்தமான வேடம். நாயகனை போல இவர்தான் கடைசியான அம்பாக இருப்பார் என்று நினைத்திருந்த நேரத்தில், இவரது பரிதாப மரணம் உச்சுக் கொட்ட வைக்கிறது. அதிலும் அந்த மரணக் காட்சியில் அன்னாரின் நடிப்பு டிக்கெட் கட்டணத்தில் சேர்க்கப்பட வேண்டிய விஷயமாகும்..!
கலையரசன், ஜான் விஜய், லிங்கேஷ், கிஷோர் என்று நால்வருமே முத்தாய்ப்பாக நடிப்பைக் காட்டியிருந்தாலும் மெயினான வில்லனான வின்ஸ்டன் சா அசத்தலான நடிப்பைக் காட்டியிருக்கிறார். வில்லனின் நடிப்பே ஹீரோவை உயர்த்தும் என்பார்கள். அது இதிலும் சாத்தியமாகியிருக்கிறது.
ஜி.முரளியின் ஒளிப்பதிவு துவக்கக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் ரம்மியம்தான். மலேசிய காட்சிகள் அனைத்தும் அத்தனை அழகு. சண்டை காட்சிகளில் கேமிராவின் பங்களிப்பும், படத் தொகுப்பாளரான கே.எல்.பிரவீனின் உதவியும் இயக்குநருக்கு நிறையவே கிடைத்திருக்கிறது.
மலேசியா செட்டுகளை கலை இயக்குநர் ராமலிங்கம் அவ்வளவு ரிச்சாகவும், அழகாகவும் போட்டுக் கொடுத்திருக்கிறார். இதை படமாக்கிய கேமிராமேன் உட்புற காட்சிகளில் கலர் டோன் மாற்றம் செய்தும் அசத்தியிருக்கிறார். இதெல்லாம் பெரிய பட்ஜெட் படங்களில்தான் அதிகம் சாத்தியமானது என்றாலும், அதைக்கூட தப்பில்லாமல் அழகாக செய்திருக்கிறார்களே என்று பாராட்டத்தான் வேண்டும்.
பாடல்களைவிடவும் பின்னணி இசைதான் பரவாயில்லை என்று சொல்ல வைத்திருக்கிறது. பாடல்கள் வழக்கம்போலவே இருப்பதால் எதுவும் மனதில் நிற்கவில்லை. ரஜினிக்கு முதல்முறையாக ஆடியோ கேஸட்டில் தோல்வியைக் கொடுத்திருக்கிறது இந்தப் படம். எத்தனையோ இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் ரஜினி நடித்திருப்பதால், இது அவருக்கே நிச்சயம் திருப்தியை தந்திருக்காது என்று நம்புகிறோம்.
இது சூப்பர் ஸ்டார் படமா அல்லது இயக்குநர் ரஞ்சித்தின் படமா என்று கேட்டால் ரஜினி படமாகத் துவங்கி ரஞ்சித்தின் படமாக முடிந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
படத்தின் இடையிடையே ரஞ்சித்தின் பேசும் மொழியான ஒடுக்கப்பட்டவர்களின் குரலும் பல இடங்களில் வசனமாக ஒலித்திருக்கிறது.
"பறவையோட குணாதிசயமே அது பறக்கறதுதான்டா… அதை பறக்க விடு…. வாழ்வா சாவான்னு அது முடிவு பண்ணிக்கட்டும்…. உன்னோட இந்த கருணை அதோட சாவைவிட கொடுமையானது!!.." என்று பறவைகளுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் ரஞ்சித்.
"காந்தி சட்டையைக் கழட்டினதுக்கும், அம்பேத்கர் கோட், சூட் போட்டதுக்கும்கூட ஒரு அரசியல் காரணம் இருக்கு.." என்று தனது ஆஸ்தான அரசியல் அபிலாஷையை வெளிப்படுத்தியிருக்கிறார் ரஞ்சித். இதனை ரஜினி மூலமாக சொல்ல வைத்திருப்பதன் மூலம் ரஜினியின் கலை வடிவம் அந்த மக்களின் கைகளிலும் இனி வரும் வருடங்களில் விளையாடப் போகிறது என்பது திட்டவட்டமான உண்மை.
"யார்றா நீ.. வெறும் சோத்துக்காக இங்க வந்தவன்தானே..? தின்னுட்டு அமைதியா இருக்க வேண்டியதுதானே..? மத்த்தையெல்லாம் எதுக்கு நீ செய்ற..? செய்றதுக்கு நீ யாரு..? அதெல்லாம் பிறப்பிலேயே இருக்குடா..? உனக்கென்ன தகுதி இருக்கு…? கோட்டு, சூட்டு, கண்ணாடி போட்டா சமமா ஆயிடுவியா..?" என்று கிஷோர் கேட்கும் கேள்விதான் இன்றைக்கு தமிழ்நாட்டில் ஆண்ட பரம்பரை, பேண்ட பரம்பரை என்று சொல்லிக் கொள்ளும் குலக் கொழுந்துகள் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வி. இதனை இப்படி பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி ஒரு சமூக சிந்தனையை உசுப்பேற்றியிருக்கிறார் ரஞ்சித்.
"சோத்துக்கே வழி இல்லாமல்தாண்டா இருந்தோம். ஆனால் இப்ப நாங்க முன்னேறி வருவது, நல்லா படிக்கிறது, உங்க கண்ணை உறுத்துதுன்னா, ஆமாண்டா அப்படித்தான் போடுவோம், படிப்போம், முன்னேறுவோம்.." என்று கபாலி இதற்கு சொல்லும் பதில் வசனமும் தற்போதைய தமிழக மக்களின் வாழ்வியல் சூழலை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது.
இதற்கு முன்பு ஒரு பக்கம் தேவர்களும், இன்னொரு பக்கம் கவுண்டர்களுமாக படங்களில் தங்களுடைய ஆளுமையை செதுக்கியிருக்கும் தமிழ்ச் சினிமாவில், முதல் முறையாக ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் குரலை மிகவும் வெளிப்படையாக இந்தப் படத்தின் மூலம் பதிவு செய்திருக்கும் ரஞ்சித்திற்கு ஒரு பூங்கொத்து பார்சல்..!
படத்தின் இறுதிக் காட்சி சூப்பர் ஸ்டாரின் படத்தில் எந்த இயக்குநரும் வைக்கத் துணியாதது. ரஞ்சித்தின் தைரியத்திற்கு பாராட்டுக்கள். இறுதியில் குண்டு யாருடைய துப்பாக்கியில் இருந்து வெடித்தது என்பதை பார்வையாளரின் முடிவுக்கே விட்டுவிட்டார் இயக்குநர். இது ஒருவேளை அடுத்த பாகத்திற்கான முன்னோட்டமாக இருக்குமோ.. என்னவோ..?
கேங்ஸ்டர் கதை என்பதோடு அது நிகழ் காலத்தோடு சம்பந்தப்பட்டது என்பதால் கதையின் லாஜிக்கை கொஞ்சமும் இடிக்காமல் கொண்டு போயிருந்திருக்கலாம். அத்தனை வருடங்கள் கழித்து வெளியில் வருபவர்.. அதுவும் மலேசியாவில் உடனடியாக சண்டைக்கு போய் அடித்து உதைத்துவிட்டு பழையபடி டான் தொழிலுக்கே வருவதெல்லாம் எதார்த்தம்தானா இயக்குநரே..?
கிட்டத்தட்ட தமிழ்ப் படங்கள் போலவே.. மலேசியாவிலும் போலீஸ் என்றொரு டிபார்ட்மெண்ட் இல்லவே இல்லை என்பது போலவே திரைக்கதை அமைத்திருப்பது ஏனோ..? இத்தனை கொலைகளும் நடந்த பின்பும், அந்த நாட்டு போலீஸ் என்னதான் செய்தது என்ற கேள்வி எழும்பாதா இயக்குநரே..?
ரஜினியின் பெயரில் அமைப்பெல்லாம் நடத்துபவர்கள், அவருடைய மனைவியைப் பற்றி சிறிதும் கேள்விப்படாதவர்களாக, தேடாதவர்களாகவா இருந்திருப்பார்கள்..?
மனைவியைத் தேடி சென்னைக்கு வரும் ரஜினி, உடனடியாக தேடும் பணியில் ஈடுபடாமல், நிறுத்தி, நிதானமாக ஓய்வெடுத்து பின் தொடர்வதெல்லாம் திரைக்கதைக்கு வேண்டுமானால் உதவியிருக்கலாம். நிஜத்திற்கு வெகு தொலைவில் அல்லவா போய்விட்டது..?
ரஜினி தமிழகம் வந்திருக்கும் சமயம் மலேசியாவில் நடப்பது எதுவும் அவருக்குத் தெரியாதது போல காட்சிகள் இருப்பது ஏனோ..? ஒரு செல்போன் கூடவா ரஜினியிடம் இல்லை..
கிஷோரும் காலி.. ‘வின்ஸ்டன் சா’வும் காலி.. யார் இவர்களை கொலை செய்தது.? இவரது அடியாட்களை தீர்த்துக் கட்டியது யார்..? போலீஸ் விசாரிக்கவே இல்லீங்களா ஸார்..? அதுவும் மலேசிய போலீஸ்..?
கலையரசன்தான் கடைசியில் ரஜினியை பொலி போடப் போகிறார் என்று நினைத்தால் அதற்குள்ளாக போலீஸே ஒரு உளவாளியை அனுப்பி போட்டுத் தள்ள நினைப்பதெல்லாம் எதற்கோ..? இப்போதுதான் அந்த ஊரிலும் போலீஸ் இருக்கிறது என்பதை காட்டவா..? என்னமோ போடா மாதவா..?
இப்படி பல லாஜிக் மீறல்கள் நமக்குள் உதைத்தாலும், சூப்பர் ஸ்டார் என்கிற ரஜினியை.. 68 வயதான ரஜினி என்னும் வயதானவரை அவருடைய வயதுக்கேற்ற கேரக்டரில் நடிக்க வைத்த ஒரேயொரு காரணத்திற்காக இயக்குநர் ரஞ்சித்திற்கு நமது வாழ்த்துகளும், பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாகட்டும்..!
இனிமேல் சூப்பர் ஸ்டார் ரஜினி, சின்ன ஹீரோக்களுடன் மல்லுக் கட்டி அவர்களைப் போல காதல் டூயட்டுகளை அரங்கேற்றி அசிங்கம் செய்யாமல்.. அமிதாப்பச்சன் போல.. இது போன்ற வெரைட்டியான கேரக்டர்களை செய்தால் அது தமிழ்ச் சினிமாவுக்கும், அவருக்கு மிக, மிக நல்ல விஷயமாகவே இருக்கும்.
ரஜினியின் படங்களில் இதுவும் ஒரு முக்கியமான படமாக இடம் பிடித்திருப்பதில் சந்தேகமில்லை. இந்தக் கபாலி “நான்தான்டா கபாலி” என்று அழுத்தமாக சொல்லவும் வைத்திருக்கிறார்..
கபாலிடா..!
|
Tweet |