20-03-2016
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
எந்த மாதிரியான கதையாக இருந்தால்தான் என்ன..? இயக்கம் சிறப்பாக இருந்தால் ஒரு முறையாவது அந்தப் படத்தை உட்கார்ந்து பார்க்கலாம்தான். அந்த வரிசையில் இந்தப் படமும் இடம் பிடித்திருக்கிறது.
ஈ.சி.ஆர். ரோட்டில் ஒரு சைக்கோ கொலையாளி தினமும் சில கொலைகளைச் செய்கிறார். அவரைக் கண்டுபிடிக்க துணை கமிஷனர் சாலமனை கமிஷனர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கிறார். சாலமனுக்கு மறுநாள் தமிழக எல்லையில் உள்ள ஆந்திராவில் திருமண நிச்சயத்தார்த்தம். அந்த அவசரத்தில் இருக்கிறார்.
ஆந்திர எல்லையில் இருக்கும் ஒரு தொகுதியில் தமிழக சட்டமன்ற உறுப்பினர் அருண். கார் பிரியரான இவருடைய பழைய காண்டஸா கிளாஸிக் கார் சர்வீஸ் செய்யப்பட்டு டெலிவரிக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த வண்டியை புதிய டிரைவரான மதியிடம் கொடுத்து எம்.எல்.ஏ. வீட்டில் ஒப்படைக்கும்படி சொல்கிறார் ஒர்க்ஷாப் ஓனர் கவிதாலயா கிருஷ்ணன்.
சாலமன் சென்ற கார் நடுவழியில் ரிப்பேராகி நின்றுவிட.. அந்த வழியாக வந்த எம்.எல்.ஏ.வின் காரில் லிப்ட் கேட்டு செல்கிறார் சாலமன். டிரைவர் மதிக்கும், சாலமனுக்கும் இடையில் புரிதல் இல்லாமல் மோதலாகவே போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் போலீஸ் தேடி வந்த சைக்கோ கொலைகாரனும் அதே காரில் பயணிக்கும் சூழல் ஏற்படுகிறது..
எம்.எல்.ஏ.விடம் காரை ஒப்படைக்க இருந்த அவசரம்.. நாளைய தினம் காலையில் திருமண நிச்சயத்தார்த்தை வைத்துக் கொண்டு அவசரத்தில் இருக்கும் சாலமன் சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க திட்டம் தீட்டி அதற்கான வேலைகளில் இறங்க.. சைக்கோ கொலைகாரனோ புத்திசாலித்தனமாக திட்டம் தீட்டி அவர்களைக் கொலை செய்ய பார்க்க.. கடைசியில் ஜெயித்தது யார் என்பதை வெள்ளித்திரையில் காண்க..!
மிகவும் சின்ன கதைதான். ஆனால் திரைக்கதையில் அனைத்து நடிகர்களுக்கும் சம அளவில் வாய்ப்பு கொடுத்து கதையை மெருகேற்றி காட்சிக்கு காட்சி பரபரப்பை ஊட்டி, படத்தின் டெம்போ குறையாமல் பார்த்துக் கொண்டு படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்கள். மறைந்த படத்தொகுப்பு கலைஞன் டி.ஈ.கிஷோரின் கை வண்ணத்தில் படத்தை வெகுவாக ரசிக்க முடிகிறது. ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது இந்தப் படம்.
சாலமோனாக நடித்த பெனிடோ பிராங்களினைவிடவும் கார் டிரைவராக நடித்திருக்கும் மதியும், சைக்கோவாக நடித்திருக்கும் கார்த்திக் யோகியும் கொஞ்சம் அதிகமான கைதட்டல்களைப் பெறுகிறார்கள்.
போலீஸ் என்று தெரிந்தும் பயப்படாமல் வரிக்கு வரி பதில் அளிக்கும் மதியின் அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்குக் கிடைத்த ஒரு பிளஸ் பாயிண்ட் என்றே சொல்ல்லாம். இதனாலேயே இவர்களிடையே நடக்கும் வாய்ச்சண்டையிலேயே திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
“சாயந்தரம் 5 மணிக்குள்ள கார் போய்ச் சேரலைன்னா என்ன ஆகும் தெரியுமா..?” என்று ஒர்க்ஷாப் ஓனர் பயமுறுத்த.. அந்தப் பயத்துடன் வண்டியை ஓட்டும் மதி இடையிடையே கொஞ்சம் ரிலாக்ஸ் மூடில் தெறிக்கவிடும் வசனத்தினால் கொஞ்சம் புன்னகைக்கவும் முடிகிறது.
இடையிடையே சட்டமன்ற உறுப்பினர் அருணின் மக்கள் நலப் பணிகளையும் காட்டி பெப் ஏற்றியிருக்கிறார்கள். அருணின் தோற்றப் பொலிவும், ஆக்சனும்கூட ரசிக்க வைக்கிறது.
ரொம்பவே சின்ன கேரக்டர் என்பதால் ஹீரோயின் சனம் ஷெட்டிக்கு பெரிய ஸ்கோப் இல்லை. அவரும் இருக்கிறார் என்பதற்கு மட்டுமே உதவியிருக்கிறது.
கார்த்திக் யோகிக்கு அவரது முகத்தோற்றமே ஒரு பிளஸ் பாயிண்ட். அதற்கேற்றாற்போல இயக்கமும் சிறப்பாக இருக்கவே தன்னை ஒரு சைக்கோகவா மாற்றிக் கொள்ள கொஞ்சமும் கஷ்டப்படாமல் நடித்திருக்கிறார். இவருடைய சைக்கோத்தனத்திற்கான காரணங்களை இடையிடையே எஃப்.எம்.ரேடியோ வாயிலாக சொல்லியபடியே கதையை நகர்த்தியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.
சைக்கோவின் வீட்டை போலீஸ் சோதனையிடுவதும்.. அங்கே கிடைக்கின்ற பொருட்கள்.. இதில் கணேஷ் என்கிற இன்ஸ்பெக்டர் படும்பாடு.. அதே நேரம் காரில் கணேஷை சைக்கோ என்று தவறுதலாக நினைத்து சாலமோன் பதறிப் போய் தகவல்களை பரிமாறிக் கொள்வது.. போன் நம்பர்களை மாற்றுவது.. செல்போனில் சார்ஜ் குறைவது.. சிக்னல் கிடைக்காதது.. அடர்ந்த காட்டுக்குள் திசை மாற்றி பயணிப்பது.. திடீரென்று சைக்கோ பயணம் செய்யும் கார் கிராஸ் செய்வது.. என்று தொடர்ச்சியாக இந்த கார் பயணம் கொஞ்சமும் அலுப்பு தட்டாமல் பயணிக்கிறது..
விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் கொஞ்சம் திகிலூட்டியிருக்கிறது. செழியனின் ஒளிப்பதிவு காட்சிக்கு காட்சி பரபரப்பை உண்டு பண்ண உதவியிருக்கிறது. இயக்குதல் சிறப்பாக இருந்தாலே அனைத்தும் சிறப்பாக இருக்கும் என்பதற்கு இந்தப் படமும் ஒரு சிறந்த உதாரணம்..!
திரைக்கதைக்காக மெனக்கெட்டு கடுமையாக உழைத்திருக்கிறார் இயக்குநர் குகன் சென்னியப்பன். ஒரு சின்ன கதைதான்.. ஆனால் அதனை திரைக்கதையாக்கிவிதத்திலும், படைப்பாக்கத்திலும் ஒரு வித்தியாசத்தைக் காட்டி தான் ஒரு வித்தியாசமான இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார் குகன். இதற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும்..! வாழ்த்துகள்..!
|
Tweet |
0 comments:
Post a Comment