16-03-2016
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தெலுங்கு படத் தயாரிப்பாளரும், நடிகை ஜெயப்பிரதாவின் கணவராக அறியப்பட்டவருமான ஸ்ரீகாந்த் நகாதா சென்னையில் காலமாகிவிட்டாராம். இந்தச் செய்தி எப்படி இதுவரையில் வெளியில் வராமல் போனது என்றே தெரியவில்லை.
‘இந்தியாவின் மிக அழகான நடிகை இவர்தான்’ என்று இந்தியாவின் மிகப் பெரிய இயக்குநரான சத்யஜித்ரேவால் புகழப் பெற்றவர். ஆனால் இவரது துரதிருஷ்டம், வாழ்க்கை வேறு மாதிரியாகிவிட்டது.
1976-ல் கே.பாலசந்தரால் ‘மன்மத லீலை’ படத்தில் ஒரு சிறு வேடத்திலும், பின்பு ‘அவள் ஒரு தொடர்கதை’யின் தெலுங்கு பதிப்பான ‘அந்துலேனி கதா’வில் சுஜாதா கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அறிமுகமானவர் ஜெயப்பிரதா. இதே ஆண்டு வெளியான 'சீதா கல்யாணம்' என்ற தெலுங்கு படத்தில் சீதா வேடத்தில் நடித்ததினால் தெலுங்குலகத்தில் ஓவர்நைட்டில் ஹீரோயினானார். கே.விஸ்வநாத்தின் ‘சர்கம்’ என்கிற ஹிந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டுக்கும் அறிமுகமானார்.
தெலுங்கு படவுலகில் கிளாமர் ஹீரோயின் என்று சுண்டிவிட்டால் ரத்தம் வரும் அளவுக்கு செக்கச் செவேல் என்றிருந்த ஜெயப்பிரதாவை, அன்றைக்கு இருந்த தெலுங்கு ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து ஆடினார்கள்..!
அதே நேரம், ஆந்திர படவுலகில் நகாதா குடும்பத்தினர் மிகவும் பிரபலம். இவருடைய தந்தையும் ஒரு படத் தயாரிப்பாளராக இருந்தவர்தான். அந்த வகையில் ஜெயப்பிரதாவை வைத்து படங்களை தயாரித்தபோதுதான், ஸ்ரீகாந்த் நகாதாவுடன் பழக்கம் ஏற்பட்டு அது கடைசியில் 1986-ல் அவருக்கே துணைவியாகும்வரையிலும் போய் நின்றது.
இந்த நகாதாவுக்கு சந்திரா என்பவருடன் ஏற்கெனவே திருமணமாகி அவர் மூலமாக 3 குழந்தைகளும் இருந்தன. இத்திருமணத்தை ஏற்காத நகாதாவின் முதல் மனைவி சந்திரா இதனை கடுமையாக எதிர்த்தார். பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். இருவரும் தெலுங்கு பத்திரிகைகளில் மாறி, மாறி பேட்டிகளில் சண்டையிட்டது அப்போது பிரபலமான விஷயம்.
கடைசியில் சண்டை முற்றிப் போன நிலையில் ஜெயப்பிரதாவை, சந்திரா ஒரு விஷயத்தில் பழி வாங்கிய விதம்தான், எல்லோருக்கும் பிலிம் காட்டும் இந்திய சினிமாவுலகத்துக்கே, பிலிம் காட்டிவிட்டது.
தனது கணவர் நகாதாவை மருத்துவமனைக்கு நைச்சியமாக அழைத்துப் போய் அவருக்கே தெரியாமல் குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷனை செய்துவைத்துவிட்டார் சந்திரா.
ஒரு மாதம் கழித்து இதனை பகிரங்கமாக வெளிப்படுத்திய சந்திரா, “இனிமேல் என் பிள்ளைகள் மட்டும்தான் நகாதா குடும்ப வாரிசுகள்.. முடிந்தால் ஜெயப்பிரதா, ஸ்ரீகாந்த் மூலம் பிள்ளை பெற்றுக் காட்டட்டும்...” என்று பத்திரிகைகளில் சவால் விட்டதைக் கண்டு இந்தியத் திரையுலகமே ஆடிப் போய்விட்டது..!
ஜெயப்பிரதா அடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை.. ஆனாலும் கணவருக்காக பொறுத்துக் கொண்டார். “என்னால் முதலில் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் அப்போது வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டேன்.. எல்லாம் நானே ஏற்படுத்திக் கொண்டதுதானே..?” என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார் ஜெயப்பிரதா.
அப்போது நகாதா தெலுங்கில் படங்களை தயாரித்துக் கொண்டிருந்த்தால் ஹைதரபாத், சென்னை என்று பறந்து கொண்டிருந்தார். ஹைதராபாத் வந்தால் ஜெயப்பிரதா.. சென்னை வந்தால் முதல் மனைவி வீடு என்று சுற்றியவர் ஒரு கட்டத்தில் படத் தயாரிப்பை மூட்டைகட்டியதால் சென்னையிலேயே முடங்கினார்.
தி.நகர் ஆந்திரா கிளப்பிற்கு நேரெதிர் தெருவில்தான் நகாதா நடத்தி வரும் பார்ம்சூட்டிக்கல் நிறுவனம் இருக்கிறது. துவக்கக் காலத்தில் நகாதாவை பார்ப்பதற்காக சென்னை வரும்போதெல்லாம் இதற்கு வசதியாக ஆந்திரா கிளப்பில்தான் தங்குவாராம் ஜெயப்பிரதா.
நகாதாவின் மனைவி சந்திரா. சென்னையில் வசிக்கும் தெலுங்குல மக்களிடையே மிகவும் பிரபலமானவர். மிகவும் தைரியமானவர். தனது குடும்ப பார்ம்சூட்டிக்கல் நிறுவனத்தை இவர்தான் இப்போது முழுமையாக கவனித்து வருபவர். வெற்றிகரமான பெண் தொழிலதிபர்கள் வரிசையிலும் இடம் பிடித்தவர். நகாதா இப்போது பேரன், பேத்திகளெல்லாம் எடுத்து சூப்பரான தாத்தாவாகியிருந்தார்.
ஜெயப்பிரதா 1994-களில் துவங்கி அரசியலில் ஈடுபடத் துவங்கிய பின்பு நாளாவட்டத்தில் கட்சி, அரசியல் ஈடுபாடு காரணமாக தனது கணவரிடமிருந்து முற்றிலுமாக விலகியவர் 1996-ல் “நான் வாழ்க்கையில் செய்த ஒரே முட்டாள்தனம், நகாதாவை திருமணம் செய்ததுதான்” என்று தனது தனது சோகமான மண வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார் ஜெயப்பிரதா.
இந்தச் சோகத்திற்கு கடந்த மாதம் நிரந்தரமான ஒரு முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டது..!
|
Tweet |
2 comments:
ம்ம்ம்ம்ம்ம்............
most of the actresses marry married men only married rich men only could divert their riches to these actresses
Post a Comment