போக்கிரி ராஜா - சினிமா விமர்சனம்

05-03-3016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

செல்போன் டவர் பற்றிய தொழில் நுட்பத்தை மையமாகக் கொண்டு உருவான தனது முதல் படமான ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்திற்கு பின்பு வேறுவகையான தொழில் நுட்பத்துடன் தனது அடுத்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா.

ஹீரோவான ஜீவா படித்தது கம்ப்யூட்டர் என்றாலும், எந்த இடத்திலும் உருப்படியாக தொடர்ந்து வேலை செய்ய முடியவில்லை. காரணம் அவரிடமிருக்கும் அளவுக்கதிகமான கொட்டாவி விடும் பழக்கம். இதனால் சேருமிடத்திலெல்லாம் உடனடியாக ரிலீவும் ஆகிவிடுகிறார். கடைசியாக அப்படித்தான் ஒரு கம்பெனியில் இருந்து திடீரென்று வெளியேற்ற.. மனிதர் எக்கச்சக்க கோபத்துடன் இருக்கிறார்.
இந்த நேரத்தில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு சமூக நோக்கத்துடன் ‘பொதுவிடங்களில் பிஸ் அடிக்காதீர்கள்’ என்று ஆண்களை பார்த்து கேள்வி கேட்கும் சமூகப் பொறுப்புணர்வுள்ள பெண்ணாக இருக்கும் ஹன்ஸிகாவின் கைப்பை திருடப்படுகிறது.  அந்தச் சமயத்தில் ஹன்ஸிகாவை ஜீவா பார்த்துவிட அவரது அழகில் மயங்குகிறார். சொக்கிப் போகிறார்.
ஜீவாவுக்கு வேறொரு இடத்தில் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்க அங்கே வேலைக்கு சேர்கிறார் ஜீவா. அங்கேயும் கொட்டாவிவிட்டு வந்தாலும் வேலைக்கு பாதகமில்லாமல் பார்த்துக் கொள்கிறார் ஜீவா, ஹன்ஸிகாவும் அங்கே வேலை பார்ப்பதை அறிகிறார். ஹன்ஸிகாவின் கைப்பையில் மதுபானம், சிகரெட் பாக்கெட்டுகள் இருப்பதை பார்த்து முதலில் அவரைத் தவறாக எடை போடுகிறார். பின்பு ஹன்ஸிகாவின் சமூக சேவை சிந்தனையை பார்த்து அவர் மீது காதல் கொள்கிறார்.
இந்த நேரத்தில் தனது காதலியான ஹன்ஸிகாவுடன் சேர்ந்து பொது நலப் பணியில் இறங்குகிறார் ஜீவா. ரோட்டோரமாக சிறுநீர் கழிப்பவர்கள் மீது தண்ணி வண்டி பைப் மூலமாக தண்ணியடித்து அவர்களை விரட்டுகிறார்கள். அப்படியொரு முறை ஜீவா தண்ணியடிக்கும்போது அது பிரபல ரவுடியான கூலிங்கிளாஸ் குணாவைத் தாக்குகிறது. நட்ட நடுரோட்டில் தான் அவமானப்பட்டதை உணர்ந்த குணா, இதனாலேயே ஜீவாவை கொலை செய்ய முயல்கிறார்.
இந்த முயற்சியில் அவரது கண் பார்வை பறி போக.. வீட்டில் இருக்க வேண்டிய நிலைமை. இன்னொரு பக்கம் ஜீவா, ஹன்ஸிகாவின் காதல் டாப் கியரில் போக.. திடீரென்று ஒரு கண் மட்டும் சிபிக்கு கிடைக்கிறது. இதனை வைத்தே ஜீவாவின் கதையை முடிக்க திட்டம் தீட்டுகிறார்.
இதையறிந்து ஜீவாவும், ஹன்ஸிகாவும் இதில் இருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். முடிந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் திரைக்கதை.
படத்தில் இருக்கும் ஒரேயொரு புதுமை.. ஹன்ஸிகா செய்யும் அந்த பொதுநலச் சேவைதான். மற்றபடி இதுவொரு சாதாரணமான கமர்ஷியல் திரைப்படம்தான். ஜீவாவின் கொட்டாவியும்,  கொட்டாவிக்கு பின்பு அவருக்குள் இருக்கும் தனித் திறமையான ‘ஊதித் தள்ளுதலும்’ திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருக்கின்றன. இந்தத் திறமையை இன்னமும் நன்கு பயன்படுத்தியிருக்கலாம்.
ஜீவா ‘மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்’ கேரக்டர் ஸ்கெட்ச்சோடு படம் முழுக்க வந்து போயிருக்கிறார். சண்டை காட்சிகளில் மட்டுமே முகத்தில் அனல் பறக்கிறது. மற்றபடி பாடல் காட்சிகளிலும், ஹன்ஸிகாவுடனான காதல் காட்சிகளிலும் வழக்கம்போல..!
சிபிராஜ் அச்சு அசலாக அவரது அப்பா சத்யராஜ் போலவேதான் நடிக்கிறார். அந்த டயலாக் டெலிவரியை மட்டும் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக உச்சரிக்கத் துவங்கினால் ஜூனியர் சத்யராஜ்தான் இவர்.. இவருக்கான முன் கதையை இன்னமும் கொஞ்சமும் சுருக்கிக் கொடுத்திருக்கலாம். இவருடைய கோபம் நியாயமானது என்பது நன்கு உணர்த்தப்பட்டதால்தான் படத்தின் இடைவேளைக்கு பின்பான பல காட்சிகளில் தியேட்டரில் கைதட்டல் தூள் பறக்கிறது. சிபிராஜின் கூட்டாளியான முனீஸ்காந்த் அண்ட் கோ செய்யும் காமெடிகள் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட்.  
ஹோட்டலில் அமைச்சருடனான சந்திப்பின்போது கண் பார்வை இல்லாத நிலைமையில் அவர்களைச் சமாளிக்கும் காட்சியை சுவாரஸ்யமாக படமாக்கியிருக்கிறார்கள். இதில் சிபியின் நடிப்பு ஏ ஒன்.
‘ப்ப்ளி ப்ப்ளி’ பாடலுக்கேற்றபடி ப்ப்ளிமாஸ் போலவே இருக்கிறார் ஹன்ஸிகா. துள்ளல், இளமை, வசீகரம், அழகுடன் வந்தாலே போதும்.. ஸ்கிரீனில் தெரிந்தாலே போதும் என்கிற அளவுக்கு இருக்கிறார் ஹன்ஸிகா. யார் நடிப்பைக் கேட்டது..? பார்த்தது..? ஆனாலும் ‘ரோமியோ ஜூலியட்’ அளவுக்காச்சும் இன்னமும் கொஞ்சம் நடிக்க வாய்ப்பளித்திருக்கலாம்.
ஆஞ்சநேயலுவின் ஒளிப்பதிவு அழகு. பாடல் காட்சிகளில் அழகைக் கூட்டி மிளிர வைத்திருக்கிறார். கடைசியான சண்டை காட்சியிலும், ஜீவாவின் ஊதித் தள்ளுதல் காட்சிகளிலும் தன்னால் முடிந்த அளவுக்கு திறமையைக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஊதலின்போது எதிரில் இருப்பவை அத்தனையும் நொறுங்கிப் போகும் காட்சிகளிலெல்லாம் கைதட்டல்களும் சேர்ந்தே கிடைத்திருக்கின்றன.
இமானின் இசையில் ‘அத்துவுட்டா’ பாடலும் ‘பப்ளி பப்ளி’ பாடலும் ஓகே ரகம். பாடல் காட்சிகளையும் ரம்மியமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். கமர்ஷியல் படத்திற்கேற்றபடியாகவே படமாக்கியிருப்பதால் குறையொன்றுமில்லை..!
முதற்பாதியில் கொஞ்சமும், இடைவேளைக்கு பின்பு அதிகமாகவும் காமெடியை பரவலாக்கி ஒரு கமர்ஷியல் கதையை தன்னால் முடிந்த அளவுக்கு நேர்மையாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா.
இந்தப் படத்தின் மூலம் அனைவரையும்விட அதிக லாபம் பார்த்திருப்பது சிபிராஜ்தான். இவருக்கு வில்லன் கேரக்டர் அம்சமா வந்திருக்கு. அவர் தொடர்ந்து இதையே செய்தால் தமிழ் வில்லன்களுக்கு ஏற்பட்டிருக்கும் கிராக்கியை அவரே ஈடுகட்டலாம்..!
இந்த ‘போக்கிரி ராஜா’வில் போக்கிரி கொஞ்சம் அதிகம்தான்..!

0 comments: