புகழ் - சினிமா விமர்சனம்

20-03-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘மெட்ராஸ்’ பாணியில் மறுபடியும் ஒரு அரசியல் படம். மிகுந்த தைரியமாகவும், காத்திரமாகவும் தான் சொல்ல வந்த கருத்தை முன் வைத்திருக்கிறார் இயக்குநர். அது தப்பிதமாகவே இருந்தாலும் சரி.. ஒருவன் கையிலெடுக்கும் ஆயுதம் என்பதே எதிராளியின் பலத்தை பொருத்ததுதான் என்பதால், “இந்த மாதிரியான அரசியல்வியாதிகளுக்கு இது மாதிரீயான ஆயுதம்தான் சரி…” என்கிறார் இயக்குநர்.
வேலூர் அருகில் இருக்கும் வாலாஜாபேட்டைதான் இந்தப் படத்தின் இயக்குநரான மணிமாறனுக்கும் சொந்த ஊர். தன்னுடைய ஊரில் தான் வளர்ந்த அதே பொது மைதானத்தையே கதைக்களமாக வைத்து ஒரு அருமையான படத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் மணிமாறன்.
வெற்றிமாறனின் நெருங்கிய நண்பரும், அவரிடத்தில் இயக்கம் பயின்றவருமான இயக்குநர் மணிமாறன், ஏற்கெனவே ‘உதயம் என்.ஹெச்.4’ படத்தினை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாலாஜாபேட்டையில் அந்தக் குறிப்பிட்ட வார்டில் இருக்கிறது ஊருக்கே பொதுவான அந்த விளையாட்டு மைதானம். அந்த மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியெடுத்த பலருக்கும் அரசு வேலை கிடைத்திருப்பதால் அந்த மைதானம் ராசியானது என்றே கருதப்படுகிறது. பிரிட்டிஷார் காலத்தில் இருந்தே அந்த மைதானம் விளையாட்டு மைதானமாகத்தான்.. பொதுமக்களின் அனுபவத்தில் இருந்து வருகிறது.
அந்த ஊரிலேயே மார்க்கெட்டில் குடும்பத் தொழிலான பூ விற்கும் தொழிலில் தன்னுடைய அண்ணன் கருணாஸுக்கு உதவியாக இருக்கிறார் ஹீரோ ஜெய். இவரும் அந்த மைதானத்தில் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்து கிரிக்கெட் விளையாடும் பழக்கமுடையவர். இவருடைய நண்பர்கள் வட்டாரமும் தினமும் இங்கேதான் கூடி கும்மியடித்து வருகிறது.
மாநில கல்வித்துறை அமைச்சரின் மருமகன் இந்த மைதானத்தின் மீது கண் வைக்கிறார். இடத்தைக் கைப்பற்றி அங்கே பிளாட் போட்டு விற்க முடிவெடுக்கிறார். லோக்கல் ஆளும்கட்சி அரசியல் புள்ளியான தாஸ் என்னும் மாரிமுத்துவிடம் இந்தப் பணியை ஒப்படைக்கிறார் கல்வி அமைச்சர்.
மைதானத்தை கையகப்படுத்த நினைக்கும் முயற்சிகளை அந்த ஊர்ப் பெரியவரான பிறைசூடனின் உதவியோடு முறியடிக்கிறார்கள் ஜெய்யும், அவரது நண்பர்களும். மிரட்டல் பயன் அளிக்காததால் அரசியல் களம் சூழ்ச்சியை முன்னிறுத்துகிறது.
அந்த ஊர் நகர மன்றத் தேர்தலில் வார்டு வாரியாக யாரை நிறுத்துவது என்று யோசனை செய்கிறது ஆளும்கட்சி. அப்போது ஜெய்க்கு அந்தப் பகுதியில் இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கை மனதில் வைத்து ஜெய்யை நிற்கச் சொல்கிறார் தாஸ். ஜெய் மறுக்க அவரது உயிர் நண்பரான வெங்கட்டை நிறுத்தி வைத்து “அவனை ஜெயிக்க வை..” என்கிறார் தாஸ்.
நமக்கும் ஒரு ஆள் வேணுமே என்கிற ஆசையில் ஜெய் இதற்கு ஒத்துக் கொள்ள.. தேர்தலில் வெங்கட் நின்று ஜெயிக்கிறார். வெங்கட்டிற்கு கடும் கடன் சுமை. அந்தச் சுமையைத் தான் தீர்த்து வைப்பதாகச் சொல்லும் தாஸ் தன்னை நகர் மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்க வெங்கட்டிடம் ஆதரவு கேட்கிறார். 8 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு வெங்கட் ஒத்துக் கொள்ள.. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தாஸ் நகர் மன்றத் தலைவராகிறார்.
இப்போது கல்வித்துறை அமைச்சர் மைதான விஷயத்தை உடனடியாக முடித்துக் கொடுக்கும்படி கேட்க அதற்கான சதியாலோசனை நடக்கிறது. இரவோடு இரவாக காம்பவுண்ட் சுவரை கட்டுகிறார்கள் கயவர்கள். இதனை எதிர்த்து ஜெய் களமிறங்க அவரைத் தீர்த்துக்கட்டவும் தயங்காமல் முயல்கிறது ஆளும் கட்சியும், அதிகாரமும்.. வெங்கட்டும் பக்கா அரசியல்வியாதியாக மாறி அவர்கள் பக்கம் சேர்ந்து கொள்ள.. அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் இந்த ‘புகழ்’ படத்தின் சுவையான திரைக்கதை.
இப்போதுதான் இதே போன்ற சம்பவம் சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. தற்போதைய தமிழகத்தின் மின் துறை அமைச்சரான நத்தம் விஸ்வநாதனின் மகன் பங்குதாரராக இருக்கும் ஒரு கட்டுமான நிறுவனத்தின் புதிய கட்டிடத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி பெரம்பூர் பகுதியில் இருக்கும் மாநகராட்சி பூங்காவின் ஒரு பகுதியை இரவோடு இரவாக இடித்துத் தள்ளினார்கள் மாநகராட்சி அதிகாரிகள். இதைத் தடுக்கச் சென்ற பொதுமக்கள் போலீஸாரால் அடித்து விரட்டப்பட்டனர்.
இந்த அட்டூழியத்திற்கு ஆளும் கட்சியும், அதிகார வர்க்கமும் துணை போன நிலையில் அந்த பூங்கா இப்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கிறது. நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்திருக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். இதுதான் இப்போதைய தமிழக மக்களின் நிலைமை.
அரசியல்வியாதிகள் என்ன நினைத்தாலும் செய்யலாம்.. சட்டவிரோதமாக செய்யலாம்.. அதைத் தட்டிக் கேட்க ஆளே இல்லை என்கிற நிலைமைதான் கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தச் சமயத்தில் இப்படியொரு அரசியல் விழிப்புணர்வு படத்தைக் கொண்டு வந்திருக்கும் இயக்குநர் மணிமாறன் நிச்சயம் பாராட்டுக்குரியவர் என்பதில் சந்தேகமில்லை.
ஜெய் வழக்கமான படம் போலவே நடித்திருக்கிறார். தன்னிடம் இருப்பதிலேயே அதிகப்பட்சமான நடிப்பை இந்தப் படத்தில்தான் காட்டியிருக்கிறார் என்று நினைக்கிறோம். ஆனாலும் அவருடைய குரலே அவருக்கு மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட். இந்த மைனஸை மிஞ்சும் அளவுக்கான நடிப்பை அவர் என்றைக்கு கொடுப்பாரோ அன்றைக்கு அவரை பாராட்டி எழுதுவோம். பேசுவோம். இப்போது இந்தப் படத்தில் அவருடைய புகழுக்கு பங்கம் வரும் அளவுக்கு எதுவும் படத்தில் இல்லை என்பதால் இந்தப் படத்தின் மூலம் அவருடைய ‘புகழ்’ ஓங்கட்டும் என்று வாழ்த்துகிறோம்.
அசல் அரசியல்வியாதியை நினைவுபடுத்தியிருக்கிறார் தாஸ் என்கிற கேரக்டரில் நடித்திருக்கும் இயக்குநர் மாரிமுத்து. ‘இப்படியே பேசிக்கிட்டே இருப்பேன்னு நினைச்சுக்காத…’ என்று எச்சரிக்கும் நேரத்தில் அனைத்துவித அரசியல்வியாதிகளையும் ஞாபகப்படுத்தி தொலைக்கிறார்.
இன்றைய அரசியலில் நீடித்து நிலைப்பதற்கு பொறுமையும், சகிப்புத்தன்மையும், சாதூர்யமான புத்தியும், எதையும் தாங்கும் இதயமும் வேண்டும் என்பதை இந்தக் கதாபாத்திரத்தின் மூலமாக சுட்டிக் காட்டுகிறார் இயக்குநர்.
பகுதிச் செயலாளர் ஒருவர் கட்சிக் கூட்டத்தில் கோபப்பட்டு தன்னுடைய வேட்டியை அவிழ்த்து தூக்கியெறிய அது மாரிமுத்துவின் முகத்தில் விழும் காட்சி தத்ரூபம். ஆனாலும் அந்தக் கோபத்தைத் தாங்கிக் கொண்டு அதே ஆள் சொல்லும் ஜெய்யை வார்டு பிரதிநிதியாக நிற்க வைக்க நகரச் செயலாளர் என்கிற முறையில் மாரிமுத்து ஒத்துக் கொள்வதும்கூட சாட்சாத் அரசியல்தான்..! நல்ல திரைக்கதை..!
கொஞ்சம், கொஞ்சமாக டெம்பர் ஏற்ற வேண்டும் என்பதற்காகவும் லீகலாக இந்த விஷயத்தைக் கொண்டு போய் ஜெயிக்க வைக்க முடியாது. கொஞ்சம் பயமுறுத்தியும் மக்களின் கவனத்தை திசை திருப்பியும்தான் தப்பிக்க முடியும் என்பதை கல்வித் துறை அமைச்சர் பேசும் வசனங்களாலேயே சொல்லியிருக்கிறார் இயக்குநர். ‘நச்’ என்று இருக்கின்றன வசனங்கள். இன்றைய அரசியல் காலத்திற்கு இதுவொரு உதாரணம்.!
கோபமான ஹீரோயின் சுரபி. இவருடனான காதல் போர்ஷன் மட்டுமே வலிந்து திணிக்கப்பட்டதுபோலவே இருக்கிறது. இயல்பாகவே இல்லை. ஆனால் காட்சியமைப்புகள் சூப்பர். சுரபியின் கோபத்தில் நியாயம் இருக்கிறது. அதே நேரம் ஜெய் தனக்கு பொதுநலன்தான் முக்கியம் என்று முடிவெடுக்கும் நேரத்தில் அதற்கு ஒத்துக் கொள்ளும் பக்குவமும் அவருக்குண்டு என்பதை திரைக்கதையில் காட்டி ஹீரோயினின் கேரக்டரை உயர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
சுரபி அவ்வளவு பெரிய அழகி இல்லையென்றாலும், அவருடைய நடிப்பு ரசிக்க வைக்கிறது. எம்.ஜி.ஆரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படப் பாடலை கேட்டுக் கொண்டிருக்கும் ஜெய்யிடமிருந்து ரிமோட்டை பிடுங்கி காதல் மன்னன் ஜெமினிகணேசன் பாடல் காட்சியை போட்டுவிட்டு “கொஞ்சம் இதையும் பாரு..” என்று வெடுக்கென்று சொல்லிவிட்டுப் போகும் காட்சியில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போகிறார் சுரபி.
ஆர்.ஜே.பாலாஜியின் சின்னச் சின்ன கமெண்ட்டுகள் தியேட்டரில் கைதட்டல்களை வரவழைத்திருக்கிறது. வெங்கட்டாக நடித்தவரின் ஊசலாட்ட நடிப்பும், அரசியலுக்கு வந்தால் சுளையாக அள்ளலாம் என்கிற ஆவலையும் உருவாக்கி சமூகம் எப்படி சீர்கெடுகிறது என்பதை இவர் மூலமாக காட்டியிருக்கிறார் இயக்குநர். நல்ல நடிப்புதான்..!
மாரிமுத்துவை போலவே கவிஞர் பிறைசூடனும் இந்தப் படத்தில் தன்னுடைய அனுபவ நடிப்பைக் காண்பித்திருக்கிறார். மருத்துவமனையில் கருணாஸுடன் பேச வார்த்தைகள் வராமல் மெளனமாக திரும்பிப் போகும் காட்சியில் ஒருவித மயான அமைதி நிலையை நிறுவியிருக்கிறார் பிறைசூடன். இயக்குநரின் இயக்கத் திறமைக்கு இதுவும் ஒரு உதாரணம்..!
ஒரு பொறுப்பான அண்ணனாக நடித்திருக்கிறார் கருணாஸ். ஒரு பக்கம் மாரிமுத்துவை சமாளிப்பது.. இன்னொரு பக்கம் பொது நலனில் அக்கறை கொண்டு களத்தில் குதிக்க நினைக்கும் தம்பியை நினைத்து கவலைப்படுவது.. அவனுடைய திருமண நிகழ்வை சுமூகமாக்க பெண் கேட்டுச் செல்வது.. தன்னுடைய பிஸினஸ் பாதிக்கப்படக் கூடாது என்பதையும், குடும்பத்தை பாதுகாக்கவும் அல்லல்படுவது என்று தன்னுடைய கேரக்டரை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் கருணாஸ்.
அதே நேரம் தன்னுடைய தன்மானத்தையும் விட்டுக் கொடுக்காமல் மாரிமுத்து “உன் தம்பியை வெட்டுவேன்..” என்று சொல்லும்போது, ஜெய்யை இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தி, “வெட்டுரா பார்ப்போம்..” என்று கோபத்தில் கர்ஜிக்கும்போது சபாஷ் போட வைத்திருக்கிறார் கருணாஸ்..!
தான் பணியாற்றும் திரைப்படங்களில் ஏதாவது ஒரு காட்சியிலாவது முகத்தைக் காட்டிவிடும் வழக்கமுள்ள ஒளிப்பதிவாளர் வேல்ராஜும் இந்தப் படத்தில் இரண்டு காட்சிகளில் வாலாஜாபேட்டையின் நகராட்சி கமிஷனராக வந்து தன் நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.  விவேக் மெர்வினின் பாடல்கள் அதிகம் ஈர்க்கவில்லை என்றாலும் டைம் பாஸிற்கு உதவியிருக்கிறது.
சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயனின் உதவியினால் கிளைமாக்ஸ் சண்டை காட்சியை உக்கிரமாக்கி படமாக்கியிருக்கிறார் இயக்குநர். அந்தக் காட்சியே படத்தின் முடிவு என்பதால் படம் பார்த்த ரசிகர்களின் மனதில் அதுவே ஒரு பெரும் பாரமாக அமர்ந்துவிடுகிறது. வெல்டன் திலீப் ஸார்..!
இந்த அளவுக்கு ஒரு பெரிய சர்ச்சை உருவாகியிருக்கும் நேரத்தில் அந்தப் பகுதி மீடியாக்கள் எங்கே போயின..? பத்திரிகைகளில் இதனை ஏன் செய்தியாக்கவில்லை..? அந்த ஊர் எதிர்க்கட்சிகள் என்ன ஆனார்கள்..? என்பதற்கெல்லாம் திரைக்கதையில் எந்த பதிலும் இல்லை என்பதுதான் இந்தப் படத்தின் ஒரேயொரு லாஜிக் எல்லை மீறல்..!
ஆனாலும்.. இத்தனை மீடியாக்கள் இருக்கும் சென்னை போன்ற தலைநகரத்திலேயே ஒரு பூங்காவின் சுவரைக்கூட காப்பாற்ற முடியவில்லையே என்னும் உண்மையை நினைக்கும்போது இதுவொன்றும் பெரிய தவறாக நமக்குத் தெரியவில்லை. இருந்தாலும் என்ன சாதித்துவிடப் போகிறார்கள்..?!
“அரசியல் பூந்தோட்டமல்ல.. அதுவொரு போர்க்களம்..” என்றார் பேரறிஞர் அண்ணா. ஆனால் அவர் சொன்ன போர்க்களம் இப்போதைய அரசியல் சூழலில் அரசியல்வியாதிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையில் நடக்கின்ற மோதல் என்கிற முரண்பாட்டை பார்க்கத்தான் அவர் இப்போது உயிருடன் இல்லை.. இந்த முரண்பாட்டை விளக்கியிருப்பதுதான் இந்த புகழ் திரைப்படம்.
இயக்குநர் மணிமாறனுக்கும், நடிகர் ஜெய்க்கும் புகழ் அளித்திருக்கிறது இந்த புகழ்..!
படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

0 comments: