மாப்ள சிங்கம் - சினிமா விமர்சனம்

11-03-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தேனி மாவட்டம் வீரபாண்டியூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராதாரவி. அந்தப் பகுதியின் மெஜாரிட்டியான சாதியைச் சேர்ந்தவர். நிறைய சாதி வெறி பிடித்தவர். சாதிவிட்டு சாதி திருமணத்தை அடியோடு வெறுப்பவர்.

இவருடைய தம்பி கு.ஞானசம்பந்த்த்தின் மகன் விமல். 12-ம் வகுப்பு பெயில். பெரியப்பா பெயருக்கு இருக்கும் மரியாதையோடு ஊரில் கெத்தாக வலம் வருபவர். வெட்டி ஆபீஸர் என்பதால் இவரும் பெரியப்பா வழியில் காதலர்களை பிரித்து வைக்கும் பாவத்தைச் செய்து வருகிறார். இவருக்கு 3 அல்லக்கைகள்.
அதே ஊரின் காலம்காலமாக நடைபெற்று வரும் தேரோட்டம் சில வருடங்களாக தடை பட்டு நிற்கிறது. தேரை நாங்கள்தான் இழுப்போம் என்று இரண்டு சாதியினரும் மல்லுக் கட்டி நிற்கிறார்கள். ஒவ்வொரு வருடம் தேரோட்டத்தின்போதும் ரகளைகளும், சாதி சண்டைகளும் நடப்பது இங்கே சகஜம்.
ராதாரவிக்கு எதிரணியில் ஜெயப்பிரகாஷும், இவருடைய உறவினரான முனீஷ்காந்தும் முன்னணியில் இருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷின் மகள் ஹீரோயின் அஞ்சலி. அஞ்சலியின் அண்ணன் ராதாரவியின் மகளைக் காதலிக்கிறான். திருமணம் செய்ய தயாராக இருக்கிறார்கள் இந்த ஜோடி.
இந்த நேரத்தில் ஒரு கேஸ் விஷயமாக அஞ்சலியை சந்தித்து பேசும் விமலுக்கு வழக்கம்போல பார்த்தவுடன் காதல் பிறக்கிறது. அஞ்சலிக்கும் விமலின் தங்கை, தனது அண்ணனின் காதல் தெரிந்துவிடுகிறது.
திடீரென்று ராதாரவி தன் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறார். நிச்சயம் மட்டும்தானே கல்யாணம் இல்லையே என்று சொல்லி தங்கைக்கு சமாதானம் சொல்லி பெண் பார்க்க வைக்கிறார் விமல். திடீரென்று விமலின் தங்கை காணாமல் போய்விட.. இதற்கு ஜெயப்பிரகாஷின் மகன்தான் காரணம் என்று நினைத்து அவரது வீட்டை அடித்து நொறுக்குகிறார்கள் ராதாரவியின் ஆட்கள்.
ராதாரவியின் மகளோ சென்னைக்கு வந்து டைட்டல் பார்க்கில் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர வந்திருப்பது பின்புதான் அவர்களுக்குத் தெரிகிறது. இந்த நேரத்தில் ராதாரவிக்கும் மகளின் காதல் விவகாரம் தெரிய வர கொதிக்கிறார். தன் விருப்பப்படிதான் தன் மகளின் கல்யாணம் நடக்கும் என்கிறார்.
இடையில் முனீஸ்காந்தின் அடியாட்கள் விமலை அடித்து காயப்படுத்திவிட.. இதனை யோசித்துப் பார்க்கும் ராதாரவி, விமலை அடுத்த ஊராட்சி மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நிறுத்துகிறார். அதே நேரம் எதிரணியின் சார்பாக அஞ்சலி தேர்தலில் நிற்கிறார். தேர்தலில் அஞ்சலி ஒரு வோட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தலைவராகிறார்.
தொடர்ந்து ராதாரவியின் மகளுக்கு கல்யாணப் பத்திரிகை தயாராகி திருமண ஏற்பாடுகள் நடக்க.. அஞ்சலி எதிர்க்கட்சியின் சார்பாக நின்று ஊராட்சி மன்றத் தலைவராகிவிட.. அஞ்சலியை காதலிக்கும் விமலுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கலாகிறது. இதையெல்லாம் அவர் எப்படி சமாளித்து அஞ்சலியைக் கைப்பிடிக்கிறார் என்பதுதான் மீதமுள்ள திரைக்கதை.
இயக்குநர் ராஜசேகர் ரொம்பவும் தைரியமாகத்தான் அரசியல் களத்தை தேர்வு செய்திருக்கிறார். கட்சியினரின் பெயர் குறிப்பிடவில்லையென்றாலும் பாட்டாளி மக்கள் கட்சியையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும்தான் குறிப்பிடுகிறார் என்று யூகிக்க வெகுநேரமாகவில்லை. மஞ்சள் சட்டை, மஞ்சள் கொடி, நீலக் கொடியையெல்லாம் காட்டினால் வேறு எப்படி அர்த்தம் புரிந்து கொள்வார்கள்..?
தேரோட்டத்தின்போது “நாங்க ஆண்ட பரம்பரை.. 24 கிராமங்களும் எங்களுக்குத்தான் சொந்தம்.. நாங்களும் ஒரு காலத்தில் ஆண்டவர்கள்தான்…” என்று கொஞ்சம் பிசகினாலும் ஊருக்குள் கலவரத்தை உண்டு பண்ணக் கூடிய அளவுக்கான வசனங்களை பயமே இல்லாமல் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பாராட்டுக்கள்.
முதலில் காதலர்களைப் பிரிக்கும் வேலையைச் செய்யும் விமல் பிற்பாதியில் தான் செய்த்தெல்லாம் தவறு.. இனிமேல் காதலர்களை சேர்த்து வைக்கத்தான் வேண்டும் என்பது போல வசனம் பேசி படத்திற்கு பங்கம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனாலும் கிளைமாக்ஸில், “என்னவோ பெரிய சாதி.. அது.. இதுன்ன.. இப்போ என்ன ஆச்சு..? எங்க வீட்டுப் பொண்ணு உனக்கு மருமகளா வந்திருச்சுல்ல. இப்போ என்ன செய்யப் போற..? ஆறு முழக் கயிறுதான்..” என்று ஜெயப்பிரகாஷ் சொல்வதெல்லாம் தேவைதானா இயக்குநரே..?
விமல் வழக்கம்போல கொஞ்சமும் கஷ்டப்படாமல் தனக்கு எது மாதிரி வருமோ, அந்த கேரக்டரை கச்சிதமாக தேர்வு செய்திருக்கிறார். அதற்காக அதிர்ச்சியைக்கூட காட்டவில்லையென்றால் எப்படிங்கண்ணா..? “தங்கச்சி ஓடிப் போயிருச்சு..” என்பதற்குக்கூட அதிகமாக முக பாவனையை மாட்டிக் கொள்ளாமல் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவருங்கோ..!
வசனங்கள் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருப்பதால் சரளமாக அடித்துவிட்டு அடுத்தக் காட்சிக்கு மிக எளிதாக தாவுகிறார்கள். விமலின் அல்லக்கைகளாக வரும் சூரி, காளி வெங்கட் மற்றும் அந்த வெள்ளைக்கார கூட்டணி படு ஜோர்..!
அந்த வெள்ளைக்காரர் எதற்காக வருகிறார் என்பதை படத்தின் கிளைமாக்ஸில் வைத்திருக்கும் ஒரு டிவிஸ்ட்டில் தெரிகிறது. புரிகிறது.. இதுக்காக இப்படியொரு கேரக்டர் ஸ்கெட்ச்சா..? ஆனாலும் அந்த டிவிஸ்ட்டின் மூலமாக கலெக்டர் பாண்டியராஜன் நாம் யார் என்பதை நமது மக்களுக்குப் புரிய வைக்க முயலும் அந்தக் காட்சிக்காக இயக்குநருக்கு இன்னுமொரு பாராட்டு..!
அஞ்சலி அத்தனை பெரிய அழகியல்ல. ஆனால் நல்ல நடிகை. இதில் நடிக்கவே வாய்ப்பு கொடுக்காமல் ச்சும்மா வந்து போவது போல வைத்திருக்கிறார்கள். அவருடைய அறிமுகக் காட்சியில் மிகப் பெரிய அளவுக்கு பில்டப் கொடுத்துவிட்டு அதற்கு சின்னதாக ஆக்சன் வைத்து காட்டி ஏமாற்றியிருக்கிறார் இயக்குநர். நாங்க அஞ்சலிகிட்டேயிருந்து இதுக்கும் மேல எதிர்பார்க்கிறோமே இயக்குநர் ஸார்..!
இதுக்கும் மேலேயும் அஞ்சலி எடை கூடிக் கொண்டே போனால் அப்புறம் உடன் நடிக்கும் நடிகர்களுக்கு சிக்கல்தான். பாடல் காட்சிகளில் அழகாக காட்டப்பட்டு அழகாக ஆடியிருக்கிறார் அஞ்சலி.  கெத்து, அலட்டல், திமிர், தெனாவெட்டு கேரக்டர்கள்தான் அஞ்சலிக்கு லாயக்கப்படும் என்பது இந்தப் படத்தின் மூலமும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
சூரியின் டைமிங்சென்ஸ், காளி வெங்கட்டின் கெத்தான பேச்சு.. ‘லொள்ளு சபா’ சுவாமிநாதனின் இயல்பான நடிப்பு.. ராதாரவியின் மிடுக்கு.. முனீஷ்காந்தின் அலப்பறை நடிப்பு எல்லாம் சேர்ந்து படத்தின் பிற்பாதியில் பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறது..!
தருண் பாலாஜியின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளில்தான் மட்டுமே அவர் தெரிகிறார். ஒளிப்பதிவுக்கு அதிக முன்னுரிமை கொடுக்காமல் இயக்கத்திற்கும், காட்சிகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருப்பது போல தெரிகிறது. ரகுநந்தனின் இசையில் ‘எதுக்கு மச்சான் காதலு’ பாடலும், ‘இடுப்பழகி’ பாடலும், ‘வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்’ பாடலும் கேட்கும் ரகம்.
வரிசையாக தொடர்ந்து இது போன்ற கமர்ஷியல் படங்கள் வந்து கொண்டேயிருப்பதால் அடிக்கடி சிரிப்பை உதிர்க்க வைக்கும் காமெடிகளைவிட்டுவிட்டால், இந்தப் படத்தில் சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை என்பது மிகப் பெரிய சோகம்..! விமலின் படங்களில் இதுவும் ஒன்று என்றாகிவிட்டது..!
‘மாப்ள சிங்க’த்தில் மாப்ள இருக்காரு. சிங்கம்தான் இல்லை..!

0 comments: