காவியத்தலைவன் - சினிமா விமர்சனம்

30-11-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்ச் சினிமாவில் இதுவரையில் நாடகக் கலையின் ஆரம்பக் கட்டங்களை கண் முன்னே நிகழ்த்திய திரைப்படங்கள் குறைவு. அனைவருக்கும் நினைவிருப்பது ‘ராஜபார்ட் ரங்கதுரை’ மட்டுமே.. அதுவும் நாயக பிம்பத்தின் கீழ் சிவாஜி படமாகவே தயாரிக்கப்பட்டதால் உண்மையான நாடக வரலாற்றின் வாழ்க்கை அதில் குறைவு.
அந்தக் குறையை போக்க வேண்டும் என்று எண்ணித்தான் இயக்குநர் வசந்தபாலன் இந்தக் காவியத்தை படைக்க முனைந்திருக்கிறார். அவருடைய இந்த நினைப்பு மிகப் பெரிய விஷயம். இப்போதைய நிலைமையில் எந்தவொரு இயக்குநரும் நினைத்துக் கூட பார்க்காத ஒரு முடிவை கையாண்டிருக்கிறார் வசந்தபாலன். அதற்காக முதற்கண் பாராட்டுக்கள் அவருக்கும், தயாரிப்பாளர்கள் இருவருக்கும்..!
இந்தப் படம் “கொடுமுடி கோகிலம்’ கே.பி.சுந்தராம்பாள் மற்றும் பழம் பெரும் நாடக நடிகர் எல்.ஜி.கிட்டப்பாவின் காதல் வாழ்க்கையையும் தொட்டுச் செல்கிறது. தமிழகத்தின் நாடகக் கலையின் துவக்கத்தில் நாடகம் எப்படி நடத்தப்பட்டது..? அதன் வடிவங்கள் எத்தனை..? அதன் செயல்பாடுகள் எப்படி என்பதை இந்தப் படம் உணர்த்தும்..” என்று முன்பேயே சொல்லியிருந்தார் இயக்குநர் வசந்தபாலன். இதை நினைத்துத்தான் படம் பார்க்க அமர்ந்தோம்..!



1925-ல் தமிழ் நாடகக் கலையின் காவலர்கள் என்றழைக்கப்படும் டி.கே.எஸ். சகோதரர்கள் ஆரம்பித்த நாடக சபாவின் பெயர் ‘ஸ்ரீபாலசண்முகானந்தா சபா’. இந்த சபாவின் பெயரைத்தான் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த சபாவை நடத்துவது சிவதாஸ சுவாமிகள் என்கிற நாசர். இந்த நாடகக் கம்பெனியில் சிறு வயதில் இருந்தே வளர்ந்து வந்திருக்கும் நண்பர்கள் சித்தார்த்தும், பிருத்விராஜும்.  இருவரும் இணைந்து நடித்து வந்தாலும் இப்போது வளர்ந்துவிட்ட சூழலில் நாசருக்கு பிருத்வியைவிடவும் சித்தார்த் மீது பரிவு அதிகம். சித்தார்த்தின் நடிப்பு மீது நாசர் பெருமிதப்படுகிறார். இந்தப் பெருமையையும், அன்பையும் நாசரிடமிருந்து பெற்றுவிடத் துடிக்கிறார் பிருத்விராஜ். அது அவருக்குக் கிடைக்கவில்லை. இந்த ஏமாற்றமே அவருக்குள் சித்தார்த் மீது பொறாமையை ஏற்படுத்தி அது துவேஷமாக வளர்ந்து வருகிறது.
இந்த நேரத்தில் ஆண்கள் மட்டுமே இருந்து வரும் அந்த நாடக சபாவில் சேர தனது மகள் வடிவு என்னும் வேதிகாவை அழைத்து வருகிறார் குயிலி. வேதிகாவிடம் இருக்கும் பாடகி திறமையும், நடிப்புத் திறமையும் அவரையும் சபாவில் சேர்க்க வைக்கிறது.
அதே நேரத்தில் அதே சபாவில் அதுவரையில் ராஜபார்ட் வேடத்தில் யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் பொன்வண்ணனுக்கு நாசர் மீது கருத்து பேதம் ஏற்பட.. வித்யா கர்வத்தினால் பொன்வண்ணன் வார்த்தைகளை நாசர் மீது அள்ளி வீசிவிட்டு சபாவில் இருந்து வெளியேறுகிறார்.
அடுத்த ராஜபார்ட்டாக சித்தார்த்தை தேர்வு செய்கிறார் நாசர். இது பிருத்விக்கு கோபத்தை உண்டாக்குகிறது. ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் அந்த ஊர் ஜமீன்தாரின் பெண்ணான அனைகா, நாடகம் பார்க்க வந்த வேளையில் சித்தார்த் மீது காதல் கொள்ள.. இருவரின் காதல் லீலைகள் அரங்கேறுகின்றன. இதனை தெரிந்து கொண்ட பிருத்வி, ஒரு நாள் இரவில் காதல் லீலைக்காக அரண்மனைக்கு ஓடியிருக்கும் சித்தார்த்தை நாசரிடம் காட்டிக் கொடுக்கிறார்.
மறுநாள் காலை திரும்பி வரும் சித்தார்த்தை நாசர் அடித்து நொறுக்குகிறார். சித்தார்த் மன்னிப்பு கேட்டதால், ‘இனிமேல் அனைகாவை பார்க்கக் கூடாது. நாடகத்தில் வேடம் போடக் கூடாது’ என்று தடை உத்தரவு போடுகிறார். மேலும், ‘இனிமேல் இந்த ஊரில் பிழைப்பு நடத்த முடியாது. உடனே கிளம்புங்கள்’ என்று நாசர் சொல்ல வேறு ஊருக்கு கிளம்புகிறது நாடகக் குழு.
அங்கே சென்ற பின்பு ராஜபார்ட்டாக பிருத்வியும், நடிகையாக வேதிகாவும் மேடையேறுகிறார்கள். இடையில் வேதிகா, சித்தார்த் மீது ஒரு தலை காதலும் கொள்கிறார். இதேபோல் பிருத்வியும் வேதிகா மீது ஒரு தலை காதல் கொள்கிறார். இந்த நேரத்தில் அனைகா வயிற்றில் பிள்ளையிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்திகள் வர.. ஆத்திரப்படும் சித்தார்த் நாசரிடம் வந்து முறையிட்டு, சண்டையிட்டு சாபமே கொடுக்கிறார். அந்தச் சாபம் அடுத்த நொடியில் பலித்துவிட.. நாசர் பக்கவாதம் வந்து உடனேயே மரித்துப் போகிறார்.
இதுதான் சமயம் என்று காத்திருந்த பிருத்வி ‘இந்த நாடகக் குழுவை இனிமேல் நானே நடத்தப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு தனக்கு சித்தார்த் தேவையில்லை என்று சொல்லி அவரை அடித்து விரட்டுகிறார். சித்தார்த் வெளியேற.. பிருத்வியின் தலைமையில் வேதிகாவும் இருக்க நாடகம் தொடர்ந்து நடக்கிறது.
இதன் பிறகு சித்தார்த் என்ன ஆனார்..? பிருத்வியின் காதல் ஜெயித்ததா..? நாடகக் குழு என்ன ஆனது என்பதை அவசியம் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்..!
“இது முழுக்க, முழுக்க நிஜக் கதையல்ல. அதேபோல் கற்பனையான கதையும் அல்ல.. சில, சில விஷயங்கள் மட்டுமே உண்மையாக சேர்க்கப்பட்டிருக்கின்றன..” என்றார் இயக்குநர். இதுதான் படத்தின் மிகப் பெரிய பலவீனமாகவும் இருக்கிறது..!
முதலில் படத்தின் காலக்கட்டம் எது என்று இயக்குநர் வரையறுக்கவில்லை. நம்மாலும் யூகிக்க முடியவில்லை.. இதில் சித்தார்த்துதான் எல்.ஜி.கிட்டப்பாவா..? வடிவுதான் கே.பி.சுந்தராம்பாளா  என்பதையும் நம்மால் யூகிக்க முடியவில்லை.. எல்.ஜி.கிட்டபாபவும், கே.பி.சுந்தராம்பாளும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்ததே இலங்கையில்தான்.. அங்கு நாடகத்தில் நடிக்கப் போயிருந்தபோதுதான் அவர்கள் சந்திப்பு நடந்தது.
இது சங்கரதாஸ் சுவாமிகள் வாழ்ந்த காலகட்டமா என்றும் தெரியவில்லை. சங்கரதாஸ் சுவாமிகள் 1867-ல் தூத்துக்குடியில் பிறந்து 1922-ல் பாண்டிச்சேரியில் காலமானார். நாசரின் கேரக்டர் சங்கரதாஸ் சுவாமிகளைத்தான் குறிக்கிறது என்பதற்கு படத்தில் இருக்கும் ஒரேயொரு ஆதாரம் படத்தில் நாசர் இறக்கும்போது அவருக்கு ஏற்படும் பக்கவாதம். நிஜத்தில் சங்கரதாஸ் சுவாமிகளுக்கும் பக்கவாதம் ஏற்பட்டுத்தான் இறந்திருக்கிறார்.
ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் அவருடைய நாடக சபாவில் இது நடந்திருக்கிறது என்றெல்லாம் இயக்குநர் உறுதியாகச் சொல்ல வரவில்லை. அதுவரையிலும் சந்தோஷம்தான். ஏனெனில் சங்கரதாஸ் சுவாமிகள் காலத்திலேயே அவரே பல நாடக சபாக்களை தோற்றுவித்து தமிழகம் முழுவதும் நாடகக் கலையை வளர்த்திருக்கிறார்.
அவர் நடத்திய நாடகக் கம்பெனி குருகுலம் போன்றது. பாய்ஸ் நாடகக் குழு. சிறு வயதிலிருந்தே பையன்களை வளர்த்து அவர்களுக்கு வாய்ப்பாட்டு, நடனம், நடிப்பு அனைத்தையும் சொல்லிக் கொடுத்துதான் நாடகத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.  அங்கே குருவிடம் மாணாக்கர்கள் பேசும்விதம், நடந்து கொள்ளும்விதம் ஒரு அடிமைத்தனத்தின் தொடர்ச்சியாகத்தான் இருந்தது..
ஆனால், இந்தப் படத்தில் காட்டப்பட்டிருக்கும் காட்சிகளுக்கும் அன்றைய காலக்கட்டத்தில் வாழ்ந்திருக்கும் நமது முன்னோர்களின் வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகின்றன என்பதால் இதுவொரு உண்மையான வரலாற்று படம் என்று சொல்ல முடியவில்லை..!
ஒருவேளை இயக்குநர் பழைய கதையை புதிய ஸ்டைலில்.. இப்போதைய யூத்துகளுக்கும் பிடிப்பதுபோல காட்ட வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ..? ஆனால் அதற்கு இப்படியொரு வரலாற்று பின்புலம் தேவைதானா ஸார்..? இந்த தமிழ் நாடகக் கலை வரலாறு என்ற விஷயமே இல்லாமல் இப்போதைய சமூகச் சூழலுடன் ஒப்பிட்டு வேறு ஒரு பேக்கிரவுண்ட்டை வைத்திருந்தால்கூட இந்த்த் திரைக்கதை அதற்கும் கச்சிதமாகப் பொருந்தும். அந்த அளவுக்கு 2014-க்கு பொருந்தக் கூடிய திரைக்கதையை வைத்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பின்னடைவு..!
ஆனால் நடிப்பிலும், இயக்கத்திலும் குறைவில்லை.. சித்தார்த்-பிருத்விராஜ் இருவரும் போட்டி போட்டிக் கொண்டு நடித்திருக்கிறார்கள். ஒரேயொரு உதாரணம் சூரபத்மன் நாடகத்தின் வசனத்தை இருவருமே வேறு வேறு ஆக்சன்களில் நடித்துக் காட்டும்போது ஏற்படும் சூழலையே சொல்லலாம்.. பிருத்வி பேசுவதுதான் அப்போதைய நாடகத்தின் ஆக்கம்.. ஆனால் சித்தார்த் அதில் புதுமையை புகுத்த நினைத்து பேசுவது இயக்கத்தால் சிறப்பாகிறது..!
தனது மனம் முழுவதும் நிரம்பி வழிந்திருக்கும் பொறாமை என்னும் துர்குணத்தை தனது கண்களாலும், உடல் மொழியாலும் கடைசிவரையிலும் கொண்டு வந்திருக்கிறார் கோமதி நாயகம் என்கிற பிருத்விராஜ். நாசரிடம் தனக்கு நியாயம் கேட்க பேசும்பேச்சும், சித்தார்த்தை சமயம் பார்த்து வெளியேற்றும் நேரத்திலும் ஒரு ஹீரோயிஸமாகவே அதைச் செய்திருக்கிறார்.
காய்ச்சலில் துவண்டு கிடக்கும் அந்தச் சூழலிலும் சித்தார்த்தை பார்த்தவுடன் தானும் அவனுடன் போட்டி போடணும் என்று நினைத்து கர்ணன் வேடத்தை ஏற்பதும்.. அர்ஜூனுடன் மல்லுக் கட்டுவதும் அவருடைய பொறாமைத் தீ இன்றளவும் அணைந்துவிடாமல் இப்போதும் எரிந்து கொண்டேயிருக்கிறது என்பதை காட்டுகிறது.. இயக்குநர் இப்படி பல இடங்களில் காட்சிப்படுத்தலில் ஒவ்வொரு கேரக்டரின் தன்மையையும் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
நஷ்டத்தை ஏற்க வேண்டி தன்னிடமிருக்கும் நகைகளைக் கொடுத்துவிட்டு தன் இயலாமையை தம்பி ராமையாவிடம் வெளிப்படுத்தும் காட்சியில் மிக அழகு என்று சொல்ல வைத்திருக்கிறார் பிருத்வி. வேதிகாவிடம் காதலுக்காக ஏங்குவது.. திரும்பத் திரும்ப தோற்றாலும் அதில் மீண்டும் முயல்வது.. கிளைமாக்ஸில் அந்த நயவஞ்கச் செயலை செய்யும்போது உண்மை உணர்ந்து அதிர்ச்சியைக் காட்டுவது என்று பிருத்வியின் நடிப்புக்கு செம வேட்டை இந்தப் படத்தில் கிடைத்திருக்கிறது.
சித்தார்த் இப்படியொரு சீரியஸான படத்தில் இதற்கு முன் தமிழில் நடித்திருக்கிறாரா என்று தெரியவில்லை. நாசரிடம் அடி வாங்கி மன்னிப்பு கேட்கும் காட்சியிலேயே அசத்தியிருக்கிறார். மென்மையாளர் என்று கருதப்படும் இவரிடத்தில் இருந்தும் நடிப்பை வரவழைத்திருக்கும் இயக்குநருக்கு இன்னொரு பாராட்டு.. சூரபத்மனின் வீர வசனத்தை தன்னுடைய ஆக்சனால் மென்மைப்படுத்தி, வித்தியாசப்படுத்தி காட்டுமிடத்தில் சித்தார்த் மிளிர்கிறார்.
சித்தார்த் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்தார் என்பதை ராட்டை கொடியை பயன்படுத்தியதில் இருந்து புரிந்து கொள்ள வைத்திருக்கிறார் இயக்குநர்.  காங்கிரஸின் போராட்டங்களில் கலந்து கொள்கிறார். காங்கிரஸ் சார்பாக நாட்டு விடுதலையை ஆதரித்த நாடகங்களில் நடிக்கிறார். காங்கிரஸ் சார்பான சுதேசி துணி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். ஆக ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட போராளியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார் சித்தார்த்.
அனைகாவின் காதலில் உருகுவது.. பாடல் காட்சிகளின் நடனத்தில் வேகம் காட்டியிருப்பது.. அனைகா இறந்த பின்பு நாசருக்கு சாபம் விடுவது.. சுதந்திரப் போராட்ட வீரராக உருமாறிய பின்பு பிருத்வியிடம் நட்பு பாராட்டுவது.. கிளைமாக்ஸில் தன் மனதில் இருப்பதை கண் கலங்க சொல்வதெல்லாம் அவரவளவிற்கு மிகப் பெரிய நடிப்பு சாதனை..
கண்களிர் ஈர்ப்பையும், உடல் அசைவில் கவர்ச்சியையும் காட்டி இழுக்கும் ஜமீன் வாரிசாக அனைகா. ராம்கோபால்வர்மாவின் கண்டு பிடிப்பு. எதற்காக இவரை நடிக்க வைத்தார் என்பதை இவருடைய முதல் படத்தைப் பார்த்தாலே தெரியும். ஆனால் இரண்டாவதாக இந்தப் படத்தில் இவரை நடிக்க வைக்க இயக்குநர் முடிவெடுத்த்து ஏன் என்றுதான் தெரியவில்லை.. இக்காலத்திய சினிமா ரசிகர்களுக்காக இவரது கேரக்டர் ஸ்கெட்ச் இப்படி வைக்கப்பட்டதோ என்று சந்தேகப்பட தோன்றுகிறது..! திரைக்கதையின் மெதுவான ஓட்டத்தினால் இவரது சோகமான மரணம், ரசிகர்களாகிய நம்மை அதிகம் பாதிக்கவில்லை என்பதும் ஒரு குறைதான்..!
வேதிகா என்றொரு அழகி.. நிச்சயம் தமிழ் முகமல்ல என்பது பார்த்தவுடன் தெரியுமளவுக்கு இருக்கிறார். நடனத்தில் நளினத்தைக் காட்டியிருக்கிறார். நாசர் முன்பாக அவர் பாடும் பாடலும், அதற்கு அவர் பிடிக்கும் அபிநயமும் நமக்குப் பிடிக்கத்தான் செய்கிறது. இவரை முன்னிறுத்தியே பிருத்வி-சித்தார்த் மோதல் தொடர்ந்து நடைபெறுவதால் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார் படத்தில்..! இவரே கே.பி.சுந்தராம்பாள் என்கிறார்கள். ஆனால் கதையில் அது ஒட்டவேயில்லை..!
நாசரை பற்றி சொல்லவே வேண்டியதில்லை.. இது போன்ற கேரக்டர்கள் என்றால் ஆர்வத்துடன் நடிப்பவர்.. தன்னால் நூறு சதவிகிதம் முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார். அந்த சிவதாஸ் சுவாமிகளாகவே நாசரை பார்க்க முடிந்தது. அதுவரைக்கும் சந்தோஷம்..
சில காட்சிகளே வந்தாலும் பொன்வண்ணன் அழுத்தமாக தன்னை பதிவு செய்திருக்கிறார். இவரது கேரக்டர்கள் இன்றைக்கும் தமிழ் நாடக உலகத்திலும், தமிழ்ச் சினிமாவுலகத்திலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இவர்களை போன்றவர்களால்தான் பல்வேறு வளர்ச்சிகளும் இத்துறையில் ஏற்பட்டிருக்கின்றன.
இவர் போன்ற ராஜபார்ட்டுகள் ஈகோ தன்மையுடன் கோபம் கொண்டு சண்டையிட்டு பிரிந்து சென்று தங்களுக்கென்று தனித்த நாடகக் குழுவை அமைக்க.. அமைக்கத்தான் தமிழ்நாட்டில் நாடகக் குழுக்கள் அதிகமாகி, நாடகக் கலை மென்மேலும் வளர்ந்திருப்பதாக ‘எனது நாடக வாழ்க்கை’ என்ற புத்தகத்தைப் படிக்கும்போது புரிந்தது..!
ஒரு சில காட்சிகளே வந்தாலும் மனதில் நின்றுவிட்டார் காண்ட்ராக்டர் கன்மையனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்.  அவருக்கே உரித்தான பாணியில் முதலில் வரவேற்று பேசி.. வணங்கி பேசி.. பின்பு ஏக்கப்பட்டு.. டிக்கெட் விற்பனை குறைந்த நிலையில் குடித்துவிட்டு வந்து திட்டிவிட்டுப் போவதுவரையிலும் இவரது கேரக்டரை வெகுவாக ரசிக்க முடிந்தது அண்ணன் மன்சூரலிகானின் நடிப்பினால்தான்.. பாராட்டுக்கள்..!
ரஹ்மான் தனது ரசிகர்களை மனதில் வைத்து இன்றைய நிலையில் கேட்க வேண்டும் என்பதை போல இசையை அமைத்திருக்கிறார். இந்தப் பாடல்களும், பாடல் காட்சிகளும்தான் இந்தப் படத்தை வரலாற்று புனைவு என்ற ஒரு வார்த்தையிலிருந்து படத்தை வெகு தொலைவுக்கு கொண்டு சென்றிருக்கிறது..
‘ஏய் மிஸ்டர் மைனர்’, ‘சண்டிக்குதிரை’ பாடலும் ரசிகர்களால்  வெகுவாக ரசிக்கப்படுகின்றன. ‘வாங்க மக்கா வாங்க’ பாடல் குத்துப் பாடலுக்கு நிகராக தாளம் போட வைக்கிறது. பாடல் காட்சிகளில் நடன அசைவுகள் அப்போதைய கலாச்சாரத்திற்கு எந்த வகையிலும் ஒட்டாததுபோல் இருப்பதை இயக்குநர் ஏன் உணரவில்லை..?
இந்தப் படத்திற்கு முறையாக எம்.எஸ்.விஸ்வநாதனைத்தான் அணுகியிருக்க வேண்டும்.. அவர்தான் பொருத்தமானவராக இருந்திருப்பார். இப்படி இயக்குநர்களே புறக்கணித்தால் எப்படி..? அவர் இருந்திருந்தால் நாடகக் காட்சிகள் அனைத்திலும் ஆர்மோனியத்தின் ஒரு நிமிட இசையையாவது ஒலிபரப்பியிருப்பார். படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஆர்மோனியத்தின் இசையைத்தான் காணோம்.. சின்ன பட்ஜெட் படங்களில் கிராமத்து விழாக்களை காட்டும்போதுகூட ஆர்மோனியம் விளையாடுகிறதே. இதையேன் மறந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்..?
நெகிழ்வோடு முழுமையாக பாராட்டுவது ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவைத்தான்.. துவக்கக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் இவருடைய ராஜாங்கம்தான்.. அனைத்தும் சிவப்பு மயமாக இருக்க.. ஒளியமைப்பை அதற்கு பொருந்தும்வகையில் வைத்திருந்து காட்சிப்படுத்தியிருக்கிறார். அந்தக் காலத்தில் அரிக்கேள்விளக்கு வெளிச்சத்தில் நாடகமே நடந்து கொண்டிருக்கும் சூழலில் இத்தனை லைட்டுகள்..? இத்தனை வெளிச்சங்கள்..? எப்படி..? ஜமீனின் அரண்மனைகூட ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது..! அசந்துதான் விட்டோம்.. படம் பார்க்கும்போது இந்த யோசனையே வராத அளவுக்கு படமாக்கியிருக்கிறார்கள்.
நடித்தவர்களின் உடைகள் தேர்வு என்பதில் கொஞ்சம் குழப்பம் கூடியிருக்கிறது. மேக்கப் கலையில் மட்டும் குறை வைக்கவில்லை.. கச்சிதமாக பொருந்தியிருக்கிறது அனைவரின் வேடங்களும். அதிலும் பிருத்வி பெண் வேடமிட்டு ஆடும் நடனம் அசத்தல்.. அந்த அளவுக்கு கச்சிதமாக இருக்கிறது அவருடைய பெண் வேடம். அனைகாவும் வேதிகாவும் நாடக மேடையில் இக்காலத்திய பெண்கள் போல மேக்கப்பில் ஜொலிக்கிறார்கள்.  எதையும் செய்யாததுபோல நினைக்க வைத்து செய்வதுதான் மேக்கப் கலையின் ரகசியம் என்பார்கள். அது இங்கே சாத்தியமாகியிருக்கிறது..
சாதாரணமான ஒரு தமிழ்த் திரைப்படத்தின் வசனகர்த்தாவுடன் போட்டி போட்டு எழுதியிருக்கிறார் வசனகர்த்தா ஜெயமோகன். மிக எளிமையான வசனங்கள். அடுத்த வசனத்தை நாமளே ஊகித்துவிடலாம் என்கிற அளவுக்கு இறங்கி வந்து எழுதியிருக்கிறார். பல இடங்களில் வசந்தபாலனின் கை வண்ணமும் இருக்கிறது என்பதும் புரிகிறது.. இதேபோல் ஜெயமோகன் ‘கடல்’ படத்திலும் செய்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்..!
முன்பே சொன்னதுபோல இந்தப் படத்தின் காலக்கட்டம் எது என்பதே ஊகிப்பதிலேயே பிரச்சினையிருப்பதால் அக்காலக்கட்டத்தை இந்தப் படம் எதிரொலிக்கிறதா என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.. இதனாலேயே இந்தப் படம் அக்காலத்திய வாழ்க்கையை நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறது என்பதையும் எழுத விடாமல் தடுக்கிறது..!
சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் மக்களின் பேச்சுக்கள், பழக்க வழக்கங்களை இந்தப் படம் காண்பிக்கவில்லை. உதாரணம், அனைகாவும், அவரது தோழிகளும் சித்தார்த்திடமும், சிங்கம்புலியிடமும் பேசும் காட்சிகள்.. இதே வசனங்களை நாளை விமல்-சூரி படத்தில் வைத்தால்கூட கச்சிதமாகப் பொருந்தும். இதுதான் இந்தப் படம் முழுவதும் நிரவியிருக்கும் பிரச்சினை..!
கரிகாலன் கைது செய்ய வரும்போது, “வாரண்ட் இருக்கா..?” என்கிறார் சித்தார்த். இந்த அளவுக்கு மனித உரிமைகளை பிரிட்டிஷ்காரன் அப்போது கொடுத்திருந்தானா என்பது தெரியவில்லை. நமக்குத் தெரிந்து சுதந்திர கோஷத்தை பரப்பிய நாடகங்கள் தடை செய்யப்பட்டன என்பது உண்மை. அதை நடத்தியவர்களுக்கு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது என்பதும் உண்மை. இப்பட்டிப்பட்ட காட்சிகளெல்லாம் மக்கள் மனதில் நிற்பது போல எடுத்திருக்க வேண்டும். இங்கே அதுதான் மிஸ்ஸிங்..!
நண்பர்களுக்குள் பொறாமை.. ஒரு தலை காதல்.. அக்காலத்திய நாடகக் கலையின் வாழ்க்கை வரலாறு.. இந்திய சுதந்திரப் போராட்டம் என்று நான்குவிதமான கதைகளுக்குள்ளும் அவ்வப்போது சென்று வருவதால் படத்தின் கதை இதுதான் என்றோ, படம் இதை நோக்கித்தான் செல்கிறதோ என்றோ கடைசிவரையிலும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை..
நான்கு பகுதிகளிலுமே சிலவற்றை மட்டுமே தொட்டுச் சென்றுள்ளதால் மிக ஆழமாக மனதில் பதிய வேண்டியதெல்லாம் மிகச் சாதாரணமாகவே போய்விட்டது என்பது நமது துரதிருஷ்டமே..!
இயக்குநர் வசந்தபாலன் ‘அரவானில்’ செய்த அதே தவறைத்தான் இதிலும் செய்திருக்கிறார். ஆனால் ‘அரவானும்’ இப்போது தமிழ்ச் சினிமா வரலாற்றில் தனித்தே நிற்கிறது.. இந்தப் படமும் அந்த வரிசையில்தான் இடம் பிடித்திருக்கிறது என்பதுதான் வருத்தமான விஷயம்..!
வரலாற்று படங்கள் அதிகம் வருவதில்லை என்று வருத்தப்படுவதைவிட இப்படியாவது குறைந்தபட்சம் எடுத்துக் கொடுத்தார்களே.. சந்தோஷப்படுங்கள் என்று கூறினால் அதற்கும் நாம் கை தட்டுகிறோம்..!

0 comments: