13-12-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சூப்பர்ஸ்டார் ரஜினி மிகக் குறுகிய காலத்தில் தனது ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கும் புதிய படம். தமிழ்ச் சினிமாவில் ரஜனி பார்முலா என்ற ஒரு விஷயம் இருக்கிறது. இதற்கு உடன்பட்டு இயக்கும் இயக்குநர்கள்தான் ரஜினி படத்தை வெற்றியாக்கியிருக்கிறார்கள். இந்த பார்முலாவை அத்துப்படியாக மனப்பாடம் செய்திருப்பவர் இயக்குநர்.கே.எஸ்.ரவிக்குமார். இந்த முறையும் தன் கடமையைக் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.
மலையும், மலை சார்ந்த மண்ணுமாக பச்சை வயல்களையும் தன்னகத்தே கொண்ட ஒரு ஊர் சோலையூர். அந்த ஊரில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ஒரு அணைதான் இப்போதும் அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து ஊர்களுக்கும் ஊற்றுப்படி. நாலு போக வெளச்சலுக்கும் அந்த அணையின் தண்ணீர்தான் ஆக்சிஜனாக உதவி வருகிறது..
இப்போதும் இந்த அணை திடமாக இருக்கிறதா என்று சோதனை செய்து அரசுக்குச் சொல்ல பொறியாளர் பொன்வண்ணன் அங்கே வருகிறார். அந்த ஊர் அரசியல்வியாதியான பாராளுமன்ற உறுப்பினர் ஜெகபதி பாபு அந்த அணை வலுவில்லாமல் இருப்பதாக சர்டிபிகேட் கொடுக்கும்படி பொன்வண்ணனிடம் கேட்கிறார். பொன்வண்ணன் மறுத்து அணை நல்லபடியா இருப்பதாகவே சர்டிபிகேட்டை தயார் செய்துவிட்டதாகச் சொல்ல.. அவரை கொலை செய்கிறார் எம்.பி.
சாகும் தறுவாயில் தன்னைச் சந்திக்கும் ஊர்ப் பெரியவர் கே.விஸ்வநாத்திடம் பல வருடங்களாக பூட்டிக் கிடக்கும் ஊர்க் கோவிலைத் திறக்கும்படி சொல்லிவிட்டு பரிதாபமாக மரித்துப் போகிறார் பொன்வண்ணன். ஊர்க் கோவிலைத் திறக்க வேண்டுமெனில் அந்தக் கோவிலையும், அணையையும் கட்டியவரான லிங்கேஸ்வரனின் வாரிசு வர வேண்டும். லிங்கேஸ்வரனுக்கு ஒரு பேரன் மட்டுமே உண்டு. ஆனால் அவர் எங்கே எப்படி இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரைக் கண்டுபிடித்து வர வேண்டும் என்று ஊர்க் கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது.
லிங்கேஸ்வரனின் பேரனான லிங்கா அடிக்கடி சிறைக்குச் சென்று வரும் ஒரு சின்ன சைஸ் திருடனாக இருக்கிறார். தனது நண்பர்களுடன் ஒரு திருட்டு வழக்கில் சிக்கி லாக்கப்பில் இருக்கிறார். அப்போது அங்கே வரும் ப்ப்ளிக் டிவியின் ரிப்போர்ட்டர் அனுஷ்கா ரஜினி அண்ட் கோ-வை ஜாமீனில் எடுக்கிறார்.
இந்த உதவி எதுக்கு என்று ரஜினி கேட்க.. தான் சோலையூரைச் சேர்ந்தவள் என்றும் சோலையூர் கிராமத்துக்கு வந்து தாத்தா ரஜினி கட்டிய கோவிலைத் திறந்து வைக்க வேண்டும் என்றும் அனுஷ்கா கேட்கிறார். ரஜினியோ தனது தாத்தா மீதுள்ள கோபத்தில் வர முடியாது என்று தட்டிக் கழிக்கிறார்.
இந்த நேரத்தில் லலிதா ஜூவல்லரி நடத்தும் ஒரு பெரிய நகைக் கண்காட்சியில் இருக்கும் ஒன்றரை கோடி மதிப்புள்ள வைர நெக்லஸை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார்கள் ரஜினியும், நண்பர்களும். இதனை கவனித்துவிடும் அனுஷ்கா நெக்லஸ் திருட்டு சக்ஸ்ஸாக முடிந்தவுடன் போலீஸில் சொல்லிவிடுகிறார். போலீஸ் ரஜினியையும் நண்பர்களையும் தேடும்போது அவர்களது பாதுகாப்பிற்காக சோலையூருக்கு வரும்படி அனுஷ்கா கூப்பிட.. வேறு வழியில்லாமல் சோலையூருக்கு பயணமாகிறார் ரஜினி.
அங்கே பல வருடங்களாக் பூட்டிக் கிடக்கும் கோவிலின் உள்ள விலை மதிக்க முடியாத மரகத லிங்கம் இருப்பதை அறிந்த ரஜினி இரவோடு இரவாக அதனை அபகரித்துக் கொண்டு தப்பிக்க நினைக்கிறார். ஆனால் அது முடியாமல் போக.. கோவிலை திறந்ததாக பொய் சொல்லி மக்களிடமிருந்து தப்பிக்கிறார் ரஜினி. இந்த நேரத்தில் ரஜினியின் தாத்தா லிங்கேஸ்வரனின் வாழ்க்கை வரலாற்றை கே.விஸ்வநாத் சொல்ல.. இது பேரன் ரஜினியின் கல் மனசை கரைக்கிறது..
இந்த நேரத்தில் தாத்தா கட்டிய அணையை வெடிகுண்டு வைத்து உடைத்துவிட்டு புதிய டேம் கட்டி அதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாயை கமிஷனாக அள்ள நினைக்கும் அத்தொகுதி எம்.பி. ஜெகபதி பாபுவின் சதி வேலை ரஜினிக்குத் தெரிய வர.. அதை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் மிச்சமான கதை..!
முதற்கண் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்கும், அவரது இயக்குநர்கள் குழுவுக்கும் நமது பாராட்டுக்கள். இவ்வளவு பெரிய நட்சத்திரப் பட்டாளங்களை கொண்ட படத்தை ஒருங்கிணைத்து இயக்குவது மிக சவாலான விஷயம். இது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது சினிமாவில் இருக்கும் அத்தனை பேருமே அனுபவ ரீதியாக உணர்ந்த விஷயம்.
படத்தின் பிற்பாதியில் தாத்தா லிங்கேஸ்வரனின் பிளாஷ்பேக் காட்சிகள் முழுவதிலும் ஆள் பட்டாளம் அதிகம்.. அணை கட்டும் காட்சிகளில் தெரியும் பிரமாண்டமான மக்கள் கூட்டத்தையெல்லாம் எப்படி திரட்டினார்கள்.. கேமிராவுக்குள் கொண்டு வந்தார்கள் என்பதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது..!
இத்தனை கூட்டத்தையும் வைத்துக் கொண்டு படத்தின் ஷூட்டிங்கை 60 நாட்களில் முடித்திருக்கிறார்கள் என்றால் இது நிச்சயம் சாதனைதான்.. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வேகமான இயக்குனர் என்பார்கள். இப்போது அதிவேகமான இயக்குநர் என்றே சொல்லலாம்..
பிரேம் பை பிரேம் ரஜினி மாயம்தான்.. அவரது ரசிகர்கள் ஒரு ஜென் துறவிக்கான மனநிலையைக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி நடந்தால் அழகு.. நின்றால் அழகு.. நடந்தால் அழகு.. என்று ஒவ்வொரு அழகுக்கும் தியேட்டரில் கைதட்டல் அள்ளுகிறது.. ரசிகர்களோடு அமர்ந்து படம் பார்க்கும்போதுதான் ரஜினியின் மாஸ் தெரிகிறது.. அவரது ரசிகர்கள் அவரிடத்தில் எதை விரும்புகிறார்கள் என்பதும் புரிகிறது.. இந்த புரிதலை கச்சிதமாக புரிந்து கொண்டதால்தான் ரஜினி தன்னை மையப்படுத்தியே தனது கதைகளை அமைக்கச் சொல்கிறார். இயக்குநர்களும் அதைத்தான் செய்கிறார்கள். இதுதான் ஜென் நிலை.. தன்னை உணர்ந்தவன் தரணியை ஆள்வான் என்பதற்கு ரஜினி மிகப் பெரிய உதாரணம்..!
தனது வயதை காரணம் காட்டி எந்தக் காட்சியும் மொன்னையாக இருக்கக் கூடாது என்று முடிவெடுத்து கவனமாக நடித்திருக்கிறார் ரஜினி. முகத்தில் தெரியும் வயதையும் மேக்கப்பின் மூலமாக கொஞ்சமாக குறைத்தும் காட்டியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ரத்னவேலு சொன்னதுபோல கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் ரஜினியை இளமையாகக் காட்டியிருக்கிறார்கள்.
பேரன் ரஜினி தனது ரசிகர்களுக்காக சர்க்கஸ் வித்தை போல தான் வரும் காட்சிகளிலெல்லாம் விதவிதமான ஸ்டைலை காட்டியிருக்கிறார். தனது அறிமுக பாடல் காட்சியில் இருந்து தனது கழுத்தில் இருந்த ருத்திராட்ச கொட்டையில் இருந்து பென் டிரைவை கழட்டும்வரையிலும் பேரன் ரஜினியின் ஸ்டைல்தான் அவரது ரசிகர்களை கடைசிவரையிலும் அமர வைத்திருக்கிறது..
முற்பாதி முழுவதிலும் திரையரங்கில் அவ்வப்போது ரசிகர்களின் கை தட்டல்கள் வந்து கொண்டேயிருந்தன. லிங்கேஸ்வரன் கதை ஆரம்பித்ததும் அவரது பன்ச் வசனங்களை ரசித்தார்கள்.. வெள்ளைக்கார கலெக்டரிடம் கால் மேல் கால் போட்டு அக்ரிமெண்ட் பேசும் ரஜினியின் அந்த வேகமும் கை தட்டலை வாங்கியது.. இது சொற்பம்தான்.. மீண்டும் பேரன் ரஜினி வந்தவுடன் தியேட்டரில் ஆர்ப்பாட்டம் துவங்கியது..! பேரன் ரஜினியைவிடவும், தாத்தா ரஜினியிடம்தான் அவரது வழக்கமான நடிப்பு உடல் மொழியின் மூலம் வெளிப்படுகிறது..
உடன் நடிக்கும் சந்தானம், பாலாஜி ஆகியோருக்கு சங்கடம் வரக் கூடாது என்பதற்காகவே கடைசிவரையிலும் ‘நீ’, ‘வா’, ‘போ’ என்றெல்லாம் சொல்லி சமாளித்தவர்கள் ஒரு காட்சியில்கூட ‘டா’ போட்டு பேசவும் அனுமதிக்கவில்லை.. ஒரு ‘டா’வைகூட லாக்கப்பில் ரஜினியே சொல்லும் ஸ்டைலே அழகுதான்..!
இனிமேல் பறந்து பறந்து அடிப்பதெல்லாம் முடியாத காரியம் என்பதால் ரஜினி வழக்கம்போல பல பன்ச்சுகளை படம் முழுக்க பறக்க விட்டிருக்கிறார். துணைக்கு சந்தானம் இருக்கும்போது என்ன கவலை..? பல வசனங்கள் பன்ச்சாக இருந்தாலும், அது அவரது ரசிகர்களுக்கு அவர் கொடுத்திருக்கும் செய்தியாகவும் இருக்கிறது.
“நான் ஒரு காரியத்துல சுலபத்துல இறங்க மாட்டேன்.. இறங்கினா முடிக்காமவிட மாட்டேன்..
ஒரு வேளை சாப்பிட உணவில்லைன்னா பிரச்சினையில்லை.. ஒருவேளைக்கும் சாப்பிட இல்லைன்னாதான் பிரச்சினை.
எவ்வளவு உயரத்துல வாழ்ந்தாலும் நாம படுக்குறதுக்கு தேவை நம்ம உயரம் அளவுக்குத்தான்..
ஒரு காரியம் முடியறதுக்கு நிறைய பேரு உதவியா இருப்பாங்க. ஆனா அந்த காரியம் நடக்க எதிரிதான் காரணமா இருப்பான்.
நீங்க கிழக்கிந்திய கம்பெனியை ஆரம்பிக்கிறேன்னு சொல்லி இங்க வந்து எங்களை அடிமைப்படுத்தினதைவிட.. நான் பிறந்த நாள் விருந்துன்னு சொல்லி வைஸ்ராயை வரவழைச்சு அணை கட்ட பெர்மிஷன் வாங்கியது ஒண்ணும் பெரிய தப்பில்லை.
எனக்கு அந்த ஜாதி மனிதன்.. இந்த ஜாதி மனிதன்னு யாரும் வேண்டாம். நாமெல்லாம் இந்தியர்கள்ன்னு யாரெல்லாம் நினைக்குறாங்களோ அவங்க வந்தா போதும்..
நீங்க என்னை பாடி சந்தோஷப்படுத்துனீங்க.. நான் பதிலுக்கு உங்களை சந்தோஷப்படுத்த அதையெல்லாம் தர்றதா சொல்லி சந்தோஷப்படுத்தினேன்..
நான் காரியத்துல எறங்கிட்டா முடிக்காம விடமாட்டேன்.. முடியாததுல இறங்க மாட்டேன்.
வாழ்க்கைல எதுவும் ஈஸி இல்லை.. முயற்சி பண்ணினா எதுவும் கஷ்டம் இல்லை.
அரண்மனைல இருக்குறவங்கெல்லாம் ராஜா இல்லை. எங்க இருந்தாலும் தன்கிட்ட இருப்பதை இல்லாதவர்களுக்கு தர்ற எல்லோருமே மனதளவில் ராஜாதான்..” என்ற ரஜினியின் வசனங்கள் நிச்சயம் அவரது விருப்பதற்காகவே அவரது ரசிகர்களுக்காக வைக்கப்பட்டிருக்கிறது என்பது புரிகிறது.
சந்தானமும் தன் பங்குக்கு திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார்.
“நீ வேணாம்.. வேணாம்னாகூட மக்கள் விட மாட்டாங்க போல.. ஊரே உனக்கு மரியாதை கொடுக்குது.
அவர் ஹை வோல்டேஜ். கை வைச்ச பொசுங்கிருவ..
ஐடியாவும் அப்பளமும் ஒண்ணு.. ஆறவிட்டா நமத்து போயிடும்.
எந்த தொழில் செஞ்சாலும் தூங்கலாம், ஆனா தூங்காம செய்ற ஒரே தொழில் திருட்டுத் தொழில்.
ஸ்பெஷல் டீ குடிச்சும் தூக்கம் வருதுன்னா, உங்க மூஞ்சிய மூதேவி லீசுக்கு எடுத்துருக்கான்னு அர்த்தம்…” என்ற சந்தானத்தின் பல பன்ச்சுகள் அந்த நொடிக்கு சிரிப்பை வரவழைத்திருக்கின்றன.
‘பாட்சா’, ‘அண்ணாமலை’, ‘முத்து’, ‘படையப்பா’ படங்களில் இருந்தது போலவே சொத்துக்களை இழந்து, ஒரு சூனியத்தில் சிக்கி அவமானப்பட்டு திரும்பிப் போகும் ரஜினியின் கதை இங்கேயும் வருகிறது.. இது ரஜினி படங்களின் சூத்திரம்போல.. கே.எஸ்.ரவிக்குமார் இதையும் கச்சிதமாகப் பயன்படுத்தியிருந்தாலும் மிக வேகமாக ஷூட் செய்திருப்பதால் அந்த இறுக்கமான சோகமான மனநிலை இந்தப் படத்தில் கிடைக்கவில்லை என்பது உண்மை.
அனுஷ்கா நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் இது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். பாடல் காட்சிகளில் அம்மணியின் ஆட்டம் ரஜினிக்கு தோதான நடிகையோ என்று சொல்ல வைக்கிறது.. நெக்லஸை திருடப் போகும்போது அனுஷ்காவுக்கும் ரஜினிக்குமான நெருக்கத்தை திரைக்கதையின் மூலம் சுவாரசியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பாடல் காட்சிகளில் ரஜினியின் ஸ்பீடுக்கு அனுஷ்கா கலவரப்படுத்தியிருக்கிறார். இருந்தாலும் தெலுங்கு இயக்குநர்கள் அளவுக்கு தமிழ் இயக்குநர்கள் அனுஷ்காவை நடிக்க வைக்கவில்லை. நடனமாட வைக்கவில்லை என்கிற குறை இப்போதும் இருக்கிறது..!
‘நிறுத்துங்க.. நிறுத்துங்க’ என்ற குரலோடு ஓடி வந்த சோனாக்சி பாப்பா போலத்தான் இருக்கிறார். பார்த்தவுடன் காதல் கொள்ளும் இந்தக் காலத்திய திரைக்கதைக்காக அதிகமாவே நடித்திருக்கிறார். ஹீரோக்களை சுற்றியே வரும் ஹீரோயின்களின் தொடர்ச்சி என்பதால் வேறென்ன செய்ய முடியும்..? பாடல் காட்சிகளில்கூட இவரை கண்ணியமாகவே காட்டி தப்பித்திருக்கிறார் இயக்குநர். இதுக்குத்தான் எஸ்.பி.எம். வேணும்ன்றது..!
காதல் இருக்கா இல்லையா என்பதையெல்லாம் சொல்லாமலேயே கொண்டு போய் கடைசியில் ரஜினி திரும்பிப் போகும்போது சோனாக்சி வந்து சேர்ந்து கொள்வதையும் காலைக் கட்டிப் பிடித்து தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி சொல்வதையும் அந்தக் காலத்திய மனோபாவத்துடன் நாம் பார்க்க வேண்டியிருப்பதால் மன்னித்துவிடுவோம்.. பாடல் காட்சிகளில் கொஞ்சமேனும் சோனாக்சியை ரசித்திருப்பதால் இவருக்கும் ஒரு வெல்கம்..
ஒரு நட்சத்திரப் பட்டாளமே படத்தில் அணி வகுத்திருக்கிறது. பொன்வண்ணன், ஜெகபதிபாபு, கே.விஸ்வநாத், ராதாரவி, விஜயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், அனுமோகன், கிரேன் மனோகர், பிரம்மானந்தம், மனோபாலா, இளவரசு என்று முக்கிய நடிகர்களே அணி வகுத்திருந்தாலும் ரஜினி படம் என்பதால் அனைவரும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போலத்தான் இருக்கிறார்கள்..
படத்தில் பாராட்டத் தகுந்த நபர் இயக்குநருக்கு பின்பு கலை இயக்குநர்தான்.. சாபு சிரிலின் கடின உழைப்புதான் அந்த அணையை கச்சிதமாக உருவாக்கித் தந்திருக்கிறது.. தினம் தினம் கட்டியதையே மறுநாள் இடித்துவிட்டு மறுபடியும் புதிதாக கட்டியிருக்கிறார்கள். இப்படித்தான் ஷூட்டிங் நடந்திருக்கிறது.. காசு, பணம் நிறைய இருந்தாலும் அதனை அழகாகச் செய்து முடிக்க ஒரு கலைஞன் வேண்டும். அந்த சிறந்த திறமையுள்ள கலைஞன் சாபுசிரில். பாராட்டுக்கள் ஸார்.. லாங் ஷாட்டில் அந்த அணைக்கட்டு பகுதியை பார்க்கும்போதே ஆயிரம் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை வைத்து கட்டி மேய்ந்திருப்பதைவிட.. அதன் திட்டமிடல்தான் கவனிக்க வைக்கிறது.. எல்லா புகழும் இயக்குநருக்கே..!
திட்டு வாங்க வேண்டிய ஒருவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். பாடல்களில் ‘ஓ நண்பா’, ‘மன்னவா’, ‘மோனா’ பாடல்கள் காட்சிகளுடன் பார்க்க பிடிக்கிறது.. ‘உண்மை ஒரு நாள் வெல்லும்’ பாடல் வெல்லவில்லை.. அதேபோல் படம் முழுக்க பின்னணி இசையே இல்லாததுபோல ஒரு பீலிங்.. காரணம் என்னவென்று இயக்குநர்தான் சொல்ல வேண்டும்..!
ரத்னவேலுவின் ஒளிப்பதிவில் நடிகர்களின் பிரமாண்டத்தைவிடவும், காட்சிகளின் பிரமாண்டம் அழகாகத் தெரிகிறது.. ரஜினியை பிரேம் டூ பிரேம் அழகாகக் காட்டியிருக்கிறார். ரஜினி ஸ்பீடுக்கு ஏற்றாற்போல காட்சி கோணங்களை வைத்து அவரது ஸ்டைலை பிரதானப்படுத்தியிருக்கிறார். ரஜினி தனது இரு கைகளையும் பின்னோக்கி தள்ளிவிட்டு நடந்து வரும் ஒரு ஷாட்டை படம் பிடித்திருக்கும் அழகே அழகு.. அவரது ரசிகர்களுக்கு இது ஒன்றே போதும்..! பாடல் காட்சிகளின் அரங்கமைப்பும், ஒளியமைப்பும், காட்சிப்படுத்தலிலும் இளமை துள்ளுகிறது.. ‘மோனா’ பாடலின் சிறப்புக்கு அனுஷ்கா ஒரு காரணமெனில் ஒளிப்பதிவும் இன்னொரு காரணம்..!
இயக்குநரின் திரைக்கதையின் வேகத்துக்கு ஏற்றாற்போல் எடிட்டரும் தனது கத்திரி பணியில் கை வைத்திருக்கிறார். பொன்வண்ணனை கத்தியால் குத்திவிட்டு ஜெகபதிபாபு டீம் விலகிய அடுத்த நொடியே பிரேமில் எண்ட்ரி கொடுக்கிறார் கே.விஸ்வநாத். அவ்வளவு பெரிய அணைக்கட்டில் அவர் படியேறி நடந்து வரவே அரைமணி நேரமாகியிருக்கும். தொடர் காட்சிகளுக்கு இணைப்பாக அவ்வப்போது இயற்கைக் காட்சிகளும், அணைக்கட்டு ஷாட்டுகளுமாக பரவி படத்தை குளுமையாகவே காட்டியிருக்கின்றன.
முல்லை பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னி குவிக்கின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தின் கதையைத் தயார் செய்திருக்கிறார் கதாசிரியர் பொன்.குமரன். பென்னி குவிக்கின் இந்தத் திட்டத்துக்கு முதலில் ஆதரவு தெரிவித்த ஆங்கிலேயே அரசு பின்பு பணம் அதிகம் செலவாகுமே என்பதால் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தது.. 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1893-ல் துவங்கப்பட்ட இந்த அணையை பென்னிகுவிக் தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தில்தான் கட்டி முடித்தார். அதனால்தான் இன்றைக்கும் கம்பம் பள்ளத்தாக்கு மக்களிடையே உண்மையான ஒரு ஹீரோவாக திகழ்கிறார் பென்னி குவிக்.
இந்த கதையையே மையப்படுத்தியிருக்கிறார் கதாசிரியர். கலெக்டருக்கும், ரஜினிக்குமான ஈகோ பிராப்ளம்.. நீ எப்படி கட்டுவ..? அதையும் நான் பாத்தர்றேன் என்ற கலெக்டரின் வஞ்சகத்தால் தனது சொத்துக்கள் முழுவதையும் கலெக்டரிடம் கொடுத்துவிட்டு கட்டிய பெயரைக்கூட விட்டுக் கொடுத்துவிட்டு விலகுவது தமிழ்ச் சினிமாவுக்கான திரைக்கதைதான்.
படத்தில் லாஜிக்கையெல்லாம் பார்க்கவே கூடாது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஏனெனில் இது ரஜினி படம். ரஜினி படமே ரஜினிக்காக, ரஜினி ரசிகர்களுக்காக எடுக்கப்படுகிறது என்பதால் பொதுவான தமிழ்ச் சினிமா ரசிகர்கள் அதைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம் என்பதை மறைமுகமாக சொல்லிவிட்டார்கள்.
அனுஷ்காவுக்கு பேரன் ரஜினிதான் லிங்கேஸ்வரனின் பேரன் என்பது எப்படி தெரியும்.. எப்படி கண்டுபிடித்தார் என்பது தெரியவில்லை.. அந்த வைரத் திருட்டு நடக்கும் இடத்தில் நடக்கும் சுவாரஸ்யத்தில் வைரத்தின் அருகில் ஒரு செக்யூரிட்டிகூடவா நிற்க மாட்டார்கள் என்பதையும் நம்மால் யோசிக்க முடியவில்லை..
கலெக்டராக பொறுப்பேற்க வரும் லிங்கேஸ்வர ரஜினியை கடத்த வருகிறார்கள் அன்றைய சுதந்திர போராட்ட தீரர்கள். ரஜினி அவர்களை அடித்து, உதைத்து போலீஸ் துணையோடு பிடிக்கிறார். “சுதந்திரம் வேணும்னு போராடணும்னு நினைச்சீங்கன்னா காந்தி பின்னாடி போங்க.. அஹிம்சை வழில போராடுங்க. இல்லைன்னா சுபாஷ் சந்திரபோஸ் வழில போங்க..” என்கிறார். 1939-ல் சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸில்தான் இருந்தார். காங்கிரஸ் தொண்டர்கள் இன்னமும் தீவிரவாதமாக செயல்பட வேண்டும் என்று தீவிரமாக இருந்தார். அவ்வளவுதான்.. ஒரு தீவிர இந்தியனாக இருக்கும் லிங்கேஸ்வன் ஏன் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கலெக்டர் பணியை விரும்பினார் என்று தெரியவில்லை.
1939. மதுரை அருகேயிருக்கும் குக்கிராமம். நாலாப்பூ வரைக்கும் படித்த சோனாக்சி முதல் சந்திப்பிலேயே ரஜினிக்கு ‘டேங்ஸ்’ சொல்கிறார். பின்பு இன்னொரு கட்டத்தில் ‘நோ மென்ஷன்’ என்கிறார். ஆங்கிலத்தில் பேசுவதையும் புரிந்து கொள்கிறார். தீவிரவாதிகள்போல கயிறு கட்டி செட்டப் செய்து தண்ணியை கொட்ட வைக்கிறார். ஹீரோயின்களை ஹீரோக்களுக்கு ஒத்தாசையா இருக்கணும்னு காட்டணும்ன்னா இதையெல்லாம் செய்யணும் போலிருக்கு.. என்னவோ போடா மாதவா...!
இத்தனை திருட்டுக்களை செய்யும் குறுக்குப் புத்தியுடைய பேரன் ரஜினி, போலீஸிடமிருந்து எஸ்கேப்பாக ஊருக்கு வர ஒத்துக் கொள்வது.. தனது தாத்தாவின் கதையைக் கேட்டவுடன் மனம் மாறி நல்லவனாகும் பேரன் ரஜினி.. ஒரு தம்பதி குடும்பத்துடன் தற்கொலை செய்வதை பார்த்தவுடன் மனம் மாறும் தாத்தா ரஜினி. தனது சொத்துக்களை இழந்தாலும் மக்கள் நல்லாயிருக்கணும் என்று நினைக்கும் தாத்தா.. தன்னை மக்கள் தவறாக நினைத்துவிட்டார்கள் என்ற நிலையிலும் கலெக்டருக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டி அவர்களிடம் உண்மையைச் சொல்லாமல் வெறுப்பை சம்பாதித்துவிட்டு வெளியேறும் தாத்தா.. கலெக்டரின் மனைவி திடீரென்று ஆவேசமாகி தனது கணவரை ஊர் ஜனங்கள் மத்தியில் போட்டுக் கொடுப்பது.. இதையடுத்து கலெக்டர் தன் மனைவியின் காலைப் பிடித்துக் கெஞ்சியவுடன் தமிழகத்து மனைவிமார்கள்போல அவரும் மனம் மாறுவது.. மனைவியின் நிபந்தனையினால் கலெக்டரும் மனம் மாறி லிங்கேஸ்வரனின் பெயரை கல்வெட்டில் பொறிக்கச் செய்வது.. இரவு வேளையில் சாப்பிட வந்த தனது மாமனார் அண்ட் கோ-விடம் தான் இப்போதும் ராஜா மாதிரியிருப்பதாகச் சொல்லி திருப்தியடையும் தாத்தா ரஜினி.. சில ஆண்டுகள் கழித்து சந்தித்தாலும் “மொதல்ல சாப்பிடுங்கப்பா.. அப்புறம் பேசலாம்..” என்று சகஜமாகச் சொல்லும் மகள் சோனாக்சி.. கே.விஸ்வநாத்தின் பேத்திதான் அனுஷ்கா என்பதை நம்மையே ஊகித்துத் தெரிந்து கொள்ள வைத்திருப்பது.. ஊருக்குத் திரும்ப நினைக்கும் பேரன் ரஜினி, கே.விஸ்வநாத்தின் இரண்டு வரி வசனத்தின் மூலம் மனசு மாறி இங்கேயே இருக்கிறேன் என்பது.. காரணமே இல்லாமல், சந்தேகப்பட வாய்ப்பே இல்லாமல் ஜெகபதிபாபுவின் காரில் அனுஷ்கா மைக்கை பொருத்துவது.. பொன்வண்ணனின் பென் டிரைவ், கோவிலுக்குள் கிடந்து அது கிளைமாக்ஸில் ரஜினியின் கைகளில் இருப்பது.. ஜெகபதிபாபுவின் திட்டம் பொதுமக்களுக்கு தெரிவது.. – இப்படியெல்லாம் படத்தின் வேகத்திற்கு ஏற்றாற்போல கஷ்டப்படாமல் திரைக்கதையை அமைப்பது இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் போன்ற கமர்ஷியல் இயக்குநர்களுக்கு கை வந்த கலை.. இந்த வித்தை தெரியாதவர்கள்தான் கமர்ஷியலிலும் தோல்வியடைகிறார்கள்.
எல்லாம் இருந்தும் ஒரு மிகப் பெரிய குறை.. படத்தின் கிளைமாக்ஸ்தான்.. என்னதான் ரஜினின்னாலும் இந்த மாதிரி பலூன் சண்டையெல்லாம் ரொம்ப டூ மச்சா இருக்கு.. ‘சிவந்தமண்’ படத்துலயே இதையெல்லாம் நாங்க பார்த்தாச்சு.. பைக்ல பறக்குறது.. அப்புறம் வானத்துலேயே பறந்து பலூன்ல விழுகறதையெல்லாம் அவரது ரசிகர்களே விரும்பவில்லை போல தெரிந்தது.. இதை கொஞ்சம் மாற்றியிருக்கலாம்.
அதேபோல படத்தின் நீளமும் அதிகம்.. முற்பாதியில் 45 நிமிடங்கள் கழித்துதான் படமே துவங்குகிறது. அணை கட்டும் காட்சியை ஒரு பாடலின் மூலம் காட்டிவிட்டாலும் மேலும் நீட்டித்திருக்க வேண்டாம். எடிட்டிங் டேபிளில் கத்திரியை கொஞ்சம் ஷார்ப்பாக போட்டிருந்தால் படம் இன்னமும் ஷார்ப்பாக இருந்திருக்கும்..!
எடுத்தவரைக்கும் பார்த்தால் கமர்ஷியல் படங்களின் திரைக்கதையில் இன்னமும் தான் ராஜா என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
அனைத்துத் தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் ஏகத்துக்கும் ஏற்றிவிட்ட நிலையில் ரஜினி இன்னமும் தான் மட்டுமே சூப்பர்ஸ்டார் என்பதை நிரூபித்திருக்கிறார்.
இப்போது மீண்டும் துவக்கத்திற்கே வந்திருக்கிறோம்..
அடுத்த படம் எப்போ தலைவா..?
அதுக்கு முன்னாடி அரசியல் மேடைல ஏறிருவோமா தலைவா..?
|
Tweet |
4 comments:
முழுக் கதையையும் சொல்லிட்டீங்க படம் பார்த்த திருப்தியை தருது விமர்சனம்! நன்றி!
முழுக்கதையும் சொல்லீட்டீங்களே.. என் விமர்சனம் படிக்க
http://alonealike.blogspot.in/2014/12/blog-post.html
திட்டு வாங்க வேண்டிய ஒருவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்// உண்மை
no one cares/wants about PUNCH dialogues, since it is outdated like Rajani's acting.why you are giving it like a grocery list.
Post a Comment