02-11-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஆரோகணம்’ என்ற சூப்பர்ஹிட் படத்தைக் கொடுத்த கையோடு அடுத்த படத்தை ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு சற்று சுமாரான இன்னொரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
ஹீரோ ஷபீர் வெட்டி ஆபீஸர்.. அப்பா ஒய்.ஜி.மகேந்திரனின் பெட்ரோல் பங்கில் தனது நண்பர்களுக்காக பெட்ரோலை இலவசமாக வாரிக் கொடுக்கும் வள்ளல். அதே ஊரின் எம்.எல்.ஏ.வான ஏ.எல்.அழகப்பன் ஹீரோவுக்கு நீண்ட நாள் குடும்ப நண்பர். இதனால் அழகப்பன் சொல்லும் வேலையை மட்டும் அவ்வப்போது செய்வார். இப்போதும் அப்படியொரு வேலையை ஷபீரிடம் கொடுக்கிறார் அழகப்பன்.
காரைக்கால்வரையிலும் சென்று 2000 லிட்டர் பெட்ரோலை யாருக்கும் தெரியாமல் சொல்பவரிடம் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் அஸைண்மெண்ட். அன்றைக்குத்தான் இந்தியா முழுவதிலும் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக். தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக நாடே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. இந்த நேரத்தில் காரைக்காலுக்கு கிளம்புகிறார் ஷபீர்.
ஆனால் போகும் வழியிலேயே அந்த பெட்ரோல் தேச விரோத செயலுக்கு பயன்படப் போகிறது என்பதை அறிந்து அந்த வேலையைச் செய்ய மாட்டேன் என்கிறார் ஷபீர். செய்யாமல் போனால் அவருடைய குடும்பத்தினர் கொல்லப்படுவார்கள் என்கிறார் எம்.எல்.ஏ. அழகப்பன். கடைசியாக ஹீரோ என்ன செய்தார் என்பதுதான் கதை..!
ஒரு சஸ்பென்ஸ் கலந்த கதையின் முடிச்சுக்களை அவ்வப்போது ஆங்காங்கே விரித்துக் கொண்டே செல்வது சரிதான். ஆனால் இங்கே அழுத்தமில்லாத திரைக்கதையாக இருப்பதால் அதிலும் அவ்வளவு சுவாரஸ்யமில்லாமல் இருக்கிறது..!
எதற்காக காரைக்காலுக்கு அந்த பெட்ரோல் என்கிற சஸ்பென்ஸே இடைவேளைக்கு பின்பு உடைகிறது.. ஆனால் அதற்கடுத்து அந்தத் திட்டமும் எந்தவித பெரிய தாக்குதல்கள் இல்லாமல் பட்டென்று உடைவதால் மனதில் நிற்கவில்லை..
இடையில் செருப்பு தைக்கும் பையனுக்கும், ஆதிக்க சாதி பெண்ணுக்கும் காதல்.. ஓடி போகுதல். இவர்களது லாரியிலேயே வருவது.. இன்னொரு பக்கம் கேங் ரேப்பில் பிறந்த மகள், அரும்பாடுபட்டு வளர்த்த தன் தாயை மதிக்காமல் திரிவது.. நடுஇரவில் ஆக்ஸிடெண்டாகி ரோட்டில் கிடப்பது. இவர்களும் அதே லாரியில் செல்வது.. இதில் ரசிகர்களுக்கு ஒன்றும் பெரிய சுவாரஸ்யம் கிடைக்கவில்லை.. கதைக்கும் இவர்களால் எந்த பிரயோசனமுமில்லை.. எல்லாம் பார்த்துதானே என்று சலிப்பாகத்தான் இருக்கிறது..!
ஒய்.ஜி.மகேந்திரனும், விஜியும், தம்பி ராமையாவும் மட்டுமே நடிப்பில் கவர்கிறார்கள். மற்றவர்களுக்கு வாய்ப்புகள் இருந்தும் பிரயோசனமில்லை.. ஏ.எல்.அழகப்பன் எம்.எல்.ஏ. பந்தாவை சாதாரணமாகவே செய்கிறார். கடைசியில் இதேபோல் சாதாரணமாகவே கைதாகிச் செல்கிறார். தமிழ்நாட்டில் ஒரு எம்.எல்.ஏ.வைகூட இப்படி சாதாரணமாக கைது செய்துவிட முடியாது..! நிறைய அரசியல் படங்களை பார்த்துத் தொலைத்திருப்பதால் ‘என்னடா இது’ என்ற எண்ணம்தான் வருகிறது..!
ஹீரோவுக்கு முதல் படம்.. ஏதோ நடிப்பு வரும்போல தெரிகிறது.. நடித்திருக்கிறார். பியாவுக்கு நடிக்க வாய்ப்பே இல்லை. கிடைத்த வாய்ப்பிலும் விஜியே ஸ்கோர் செய்து போய்விட்டார்.. இன்னொரு ஹீரோயினும் பரவாயில்லை ரகம்.. அடுத்தடுத்த படங்களில் நல்ல நடிப்பை காட்டும்படி வேண்டிக் கொள்வோம்..! அம்பிகாகூட இருக்கிறார்.. முதல் ஷாட்டில் மலையாள தமிழ் பேசுபவர், அடுத்தடுத்த காட்சிகளில் அப்படியே லோக்கல் தமிழுக்கு ஜம்ப்பாகிவிட்டார்.. அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் கன்டினியூட்டி செக் செய்திருக்கக் கூடாதா..?
காரைக்குடி அனல் மின் நிலையத்தின் அனைத்துவித ரகசியங்களை கைப்பற்ற நினைக்கிறார்கள். வந்த உளவாளி தனது உளவு வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டு தன் நாட்டுக்குத் திரும்பப் போவதற்காக காரைக்கால் கடலில் படகுக்கு டீசல் இல்லாமல் காத்திருக்கிறான். ஹீரோ கடத்தி வரும் டீசலை பெற்றுக் கொண்டால் பறந்துவிடுவான். அதற்காகத்தான் ஹீரோவை இந்த விரட்டு விரட்டுகிறார்கள். ஹீரோ கடைசியில் செய்யும் அந்த செல்போன் டிவிஸ்ட் மட்டுமே ரசிக்க வைக்கிறது.. மற்றபடி திகிலூட்டும் சஸ்பென்ஸ் எதுவும் இதில் இல்லாதது சோகமே..!
இதில் முன்னாள் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும் இதற்கு உடந்தையாம். அவர் எதற்கு.. ஏன்.. இதில் தலையிடுகிறார்.. என்பதையெல்லாம் பெரிய அளவுக்குச் சொல்லப்படாத்தால் ஏனோதானாவான கதையாக இருக்கிறது..!
முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் ஒளிப்பதிவாளர் வினோத் பாரதியின் ஒளிப்பதிவு குறிப்பிட்டுச் சொல்லும்படியாக உள்ளது. காரைக்கால் கடலில் இருந்து கரைக்கு வரும் அந்த உளவாளியை படமெடுக்கத் துவங்கிய கேமிரா.. அதன் பின்பு பல காட்சிகளிலும் ஏரியல் வியூவில் பிரமாதப்படுத்தியிருக்கிறது..! லாரி போக்குவரத்து காட்சிகள் அதிகம் இருக்கின்றன. ஒளிப்பதிவாளர் எப்படி சமாளித்தாரோ தெரியவில்லை..? வினோத்பாரதி வெல்டன்..!
மேட்லீ புளூஸ் என்கிற இசையமைப்பாளரின் இசை பாடல்களைவிடவும் பின்னணி இசை கொஞ்சம் குறிப்பிட்டுச் சொல்லும்படியிருக்கிறது..
வெற்றிப் படத்திற்கு நல்ல கதைதான் முக்கியம்.. ‘ஆரோகண’த்தில் இருந்த உண்மையான கதை, இதில் இல்லாததுதான் பிரச்சினை.
இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், அடுத்தப் படத்தில் திரும்பவும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!
|
Tweet |
0 comments:
Post a Comment