இப்போது பேய் படங்களும், காமெடி படங்களும்தான் கண்ணை மூடிக் கொண்டு ஓடுகின்றன என்பதால் அது மாதிரியொண்ணை முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்து முயன்றிருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். ஆனால் முடியவில்லை என்பதுதான் உண்மை.
தூத்துக்குடி அருகேயுள்ள ஒரு ஊரில் இருக்கும் இரண்டு வெட்டி ஆபீஸர்கள் விமலும், சூரியும். சூரியை ஒரு பெண் காதலிப்பதாகச் சொல்ல அவருடன் வீட்டை விட்டும், ஊரைவிட்டும் ஓட தயாராகிறார் சூரி. நண்பனுக்கு உதவி செய்ய செல்கிறார் விமல். அடுத்த வேளை சோத்துக்கே லாட்டரி அடிக்கும் சூரியை பற்றிய உண்மையை விமல் சொல்லிவிட.. அந்தப் பெண் ரயில்வே ஸ்டேஷனோடு எஸ்கேப்பாகிறார்.
தங்களைத் தாக்க வரும் அந்தப் பெண்ணின் சொந்தக்காரர்களிடமிருந்து தப்பிக்க, ஓடும் டிரெயினில் ஏறி தப்பிக்கிறார்கள் விமலும், சூரியும். அதே டிரெயினில் வரும் டாக்டர் பிரியா ஆனந்தை எதிர்பாராதவிதத்தில், எதிர்பாராத இடத்தில் சந்திக்கிறார் விமல். தப்பான முறையிலேயே டாக்டர் பிரியா ஆனந்தை பார்க்கும் விமல், கடைசியில் உண்மை தெரிந்தவுடன் காதலிக்கத் துவங்குகிறார்.
இந்த நேரத்தில் பிரியா ஆனந்தை கொல்ல ஒரு டீம் வர.. அவர்களிடமிருந்து மூவரும் தப்பிக்கிறார்கள். பிரியா ஆனந்திடம் இதற்கான காரணத்தைக் கேட்க படத்தின் மெயின் கதை விரிகிறது.
தூத்துக்குடி அருகே காயல்பட்டிணத்தில் இருக்கும் ஒரு இரும்பு உருக்கு ஆலையில் மருத்துவ சேவைக்காக சென்றபோது அந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பாதுகாப்பான உபகரணங்கள் அணியாமல் வேலை செய்வதால் பல உடல் உபாதைகளுடன் கஷ்டப்படுவதையும், தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்துவதால் கேன்சர் போன்ற பெரிய வியாதிகளையும் தாங்கிக் கொண்டு வேலை செய்வதையும் பார்த்து பரிதாபப்படுகிறார் பிரியா ஆனந்த்.
அதே ஆலையில் வேலை பார்க்கும் தனது தோழி விசாகா சிங்கின் உதவியுடன் தொழிற்சாலைக்குள் நுழைந்து அங்கே நடப்பவற்றை புகைப்பட, வீடியோ ஆதாரங்களுடன் சேகரிக்கிறார். பின்பு இதைப் பற்றி அத்தொழிற்சாலையின் அதிபர் நாசரிடம் சென்று சண்டையிடுகிறார். நாசர், பிரியா ஆனந்தை அவமானப்படுத்தி அனுப்பிவிட.. உடனேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் அத்தொழிலாளர்களுக்காக பொதுநலன் கருதி வழக்கு தொடுக்கிறார் பிரியா ஆனந்த்.
அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருவதால் அதற்குள் பிரியா ஆனந்தை கொலை செய்ய நாசரின் மனைவி அனுபமாகுமார் திட்டமிடுகிறார். அந்தக் கொலையாளிகள்தான் இவர்கள் என்கிறார் பிரியா ஆனந்த்.
“இதுவரைக்கும் விளையாட்டா வாழ்ந்திட்டோம். இனிமே இந்த விஷயத்துல உங்களுக்கு உதவி செஞ்சு எங்க வாழ்க்கையை ஒரு அர்த்தமுள்ளதாக மாத்துறோம்…” என்று விமலும், சூரியும் முடிவு செய்து பிரியா ஆனந்தை அழைத்துக் கொண்டு சென்னைக்குக் கிளம்புகிறார்கள்.
இனி என்ன ஆகிறது என்பதுதான் மிச்சம், மீதியான படத்தின் கதை..!
இது மாதிரியான நாட்டு நடப்புகளை கொஞ்சமேனும் சீரியஸா சொல்ற மாதிரி சொன்னால்தான் மனதில் நிற்கும்.. விமல், சூரி மாதிரியான காமெடி கதாநாயகர்களை வைத்துக் கொண்டு காமெடியாக கதையை நகர்த்தி சொன்னால் எப்படி..? அப்படியும் இடையிடையே நகைச்சுவையுடன் காட்சிகள் மெதுவாக நகர்வதால் சுவாரஸ்யமான காட்சிகளும் வராததால் இடைவேளைக்கு பின்பு மிகவும் போரடிக்கிறது.
விமல் இந்த முறை தலையை மட்டும் ஆட்டாமல் கொஞ்சம் சிரிப்போடு காதல் காட்சிகளில் நடித்திருக்கிறார். சீரியஸ் காட்சிகளான கோர்ட்டில் இன்னும் கொஞ்சம் நடிக்க வைத்திருக்கலாம்.. சூரிதான் படத்தின் முன்பாதியை காப்பாற்றியிருக்கிறார். ஆனாலும் இவரும் வர வர, சந்தானம் போலவே 4 வரி காமெடி டயலாக்குகளை பேசுகிறார். இது வேலைக்கு ஆவாதுண்ணா..!
பிரியா ஆனந்த்.. திரையில் மின்னியிருக்கிறார். சிறுத்த இடையை சிதறு தேங்காயாகக் காட்டியிருக்கிறார். பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவை கவனிப்பதா, பிரியாவை கவனிப்பதா என்கிற குழப்பத்தில் கொண்டு வந்துவிட்டுவிட்டார். நடிகைகளுக்கு கவர்ச்சி முக்கியமில்லை.. ரசிகனுக்குத்தான் முக்கியம்.. பிரியா ஆனந்த் அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியை குறைத்து, நடிப்பை மிகைப்படுத்தினால் நல்லது..
இன்னொரு ஹீரோயினாக விசாகா சிங். கொட்டுகிற மழையில் இவர் ஆடுகின்ற ஆட்டமே ரசிக்க வைக்கிறது.. படபட கேரக்டருக்கு பொருத்தமானவர் போலத்தான் தெரிகிறது.
பல படங்களில் பார்த்தும் நாசரை பார்க்க, பார்க்க பிடிக்கிறது. அதிலும் தூத்துக்குடி ஸ்லாங் தவறாமல் பேசும்போது ரசிக்க வைக்கிறார். இவரது மனைவியாக அனுபமா குமார். வில்லியாக்கிவிட்டார்கள்.. நாசர் ‘கீப்’பிடம் பேசுகிறார் என்பதையறிந்து “நீ இவ்ளோ நேரம் அவகிட்டதான் பேசினேன்னு எனக்குத் தெரியும். என் பேக்டரியை பத்திரமா திருப்பிக் கொடுத்ததுக்கு, கிப்ட்டா வைச்சுக்க..” என்று சொல்லி போவதற்கு பெர்மிஷன் கொடுக்கும் காட்சியில் அழுத்தமான உச்சரிப்பு. இது மாதிரியே எல்லா மனைவிகளும் இருக்கணும்னு ஆம்பளைங்க நினைச்சுட்டா என்ன ஆவுறது..?
தம்பி ராமையா, சிங்கமுத்து இருவரையும் வைத்தும் காமெடியை உருப்படியாகச் செய்யாதது இயக்குநரின் தவறு. ஆனாலும் அன்னப்பறவை போல தண்ணியில் கலந்த சரக்கை தனியாக உறிஞ்சி குடிக்கும் சிங்கமுத்துவும், நாய்க்கு பயந்து நடுக்கத்துடன் நிற்கும் தம்பி ராமையாவும் கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
பி.ஜி.முத்தையாவின் கேமிரா காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன. ஹெலிகாப்டர் வியூவில் டிரெயின் செல்லும் காட்சிகளை அடிக்கடி காட்டினாலும் தூத்துக்குடி பகுதிகளை ரசிக்க வைத்திருக்கிறார். மழையில் நனைந்தபடியே ஆடும் காட்சியில் கேமிராவின் கை வண்ணம் தனியே தெரிகிறது.. சூப்பரப்பூ..!
இமான் அண்ணனின் இசையில் மீண்டும கேட்கத் தூண்டும் பாடல்கள்தான்.. ‘குக்குரு குக்குரூ’ பாடலும், பாடியவரின் குரலும், பாடலுக்கு ஆடிய இனியாவின் இனிமையான நடனமும் அசத்தல்தான்.. லட்சுமி மேனனின் குரலுக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது.. பாடல்களை மீண்டும் கேட்க தூண்டுகிறது இசை..!
சில, பல லாஜிக் மீறல்களை வைத்துக் கொண்டிருந்தாலும் காமெடியோடு கலந்திருப்பதால் சீரியஸ் காட்சிகள் மனதில் ஒட்டாத்தால் இந்தப் படத்தை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது என்று தெரியவில்லை.
ஆனால் தொழிலாளர்களின் உரிமை, தொழிற்சாலைகள் சட்டம், அரசு அதிகாரிகளின் கண்டு கொள்ளாமலை, லஞ்ச லாவண்யம், கோர்ட் நடைமுறையில் உள்ள சிக்கல்கள் எல்லாவற்றையும் சொல்லியிருப்பதால் இயக்குநர் கண்ணனுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள்..!
|
Tweet |
0 comments:
Post a Comment