ஜெய்ஹிந்த்-2 சினிமா விமர்சனம்

இவரது சமகால நடிகர்களான சத்யராஜ், பிரபு, விஜயகாந்தில் முதல் இருவர் மட்டுமே இப்போதும் நடித்து வருகின்றனர். அதுவும் அப்பா கேரக்டரில். மூன்றாமவர் பீல்டிலேயே இல்லை. அரசியல் பீல்டில் பல்லாங்குழி ஆடிக் கொண்டிருக்கிறார். இதில் எந்தப் பக்கமும் போக முடியாமல் தவிக்கிறார் நடிகர் அர்ஜூன்.

முன்பு போல ரசிகர் மன்றம் என்ற பெயரில் போஸ்டர் ஒட்டவும், தியேட்டர்களில் தோரணங்கள் கட்டவும் ஆளில்லை.. ரசிகர் மன்றத்தினர் எங்கே போனார்கள் என்றும் தெரியவில்லை. தன்னுடைய மகளை வாரிசாக களமிறக்கினாலும் அது போணியாகாததால் எதையாவது செய்து தனது இருப்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அர்ஜூனுக்கு..
புதிய கதைகளையும், புதிய இயக்குநர்களையும் தன் பக்கம் திருப்புவது கஷ்டம்தான் என்பதால் முன்பு ஓஹோவென ஓடிய தனது பழைய கதையையே ‘பழைய மொந்தை, புதிய கள்’ பாணியில் கொடுக்க முயன்றிருக்கிறார் அர்ஜூன்.  கொட்டும் மழையில் ‘என் சேலைக்குள்ள கட்டெறும்பு நுழைஞ்சிருக்கு’ என்ற பாடலில் ரஞ்சிதா காட்டியிருந்த கவர்ச்சியை வைத்தே ஒரு மாதம் ஓடிய ‘ஜெய்ஹிந்த்’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படத்தை காண்பித்திருக்கிறார் இயக்குநர் அர்ஜூன்.
நாட்டில் இருக்கும் அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசே ஏற்க வேண்டும். தனியார் பள்ளிகளே இருக்கக் கூடாது.. நாட்டில் எங்குமே கல்விக்காக கட்டணம் வசூலிக்கக் கூடாது.. கல்வி அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதே படத்தின் கதையின் கரு..!
கராத்தே பள்ளி ஆசிரியராக இருக்கிறார் அர்ஜூன். அவரிடம் கராத்தே பயிலும் மாணவனின் சகோதரியுடன் துணைக்கு வரும் ஹீரோயின் சுர்வீன் சாவ்லா, அர்ஜூனை பார்த்தவுடன்.. அவரது கட்டுடலை பார்த்து மயங்கி காதல் கொள்கிறார். இதே ஹீரோயின் தன் வீட்டு பால்கனியில் காயப்போட்டிருந்த துணியை எடுக்க வந்தவர் கொடி அறுந்து அந்தரத்தில் தொங்குகிறார். தற்செயலாக அந்தப் பக்கமாக வரும் அர்ஜூன் ஓடோடிச் சென்று ஹீரோயினை காப்பாற்றுகிறார். அடுத்தது..? வேறென்ன.. காதல் ஸ்டார்ட்டிங்தான்..!
இந்த நேரத்தில் அதே பகுதியில் வசிக்கும் ஒரு ஏழை ஆட்டோ டிரைவர் தனது பெண் குழந்தையை ஒரு பெரிய கான்வென்ட் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பிற்கு சேர்க்கிறார். அங்கே கல்விக் கட்டணம் அதிகம் என்று தெரிந்தும் எப்படியாவது அப்படி, இப்படி புரட்டி கட்டிவிடலாம் என்கிற நினைப்பில் கடன் வாங்க ஆரம்பிக்கிறார். முடியவில்லை. பள்ளியில் நெருக்கடி அதிகரித்து குழந்தையை வெளியில் உட்கார வைக்கிறார்கள்.
என்ன செய்வது என்கிற குழப்பத்தில் தனது கிட்னியை விற்றுக் கிடைத்த பணத்தில் பள்ளிக்கு வருகிறார். அந்தப் பணத்துடன் இன்னமும் கூடுதலாக 1 லட்சம் கட்ட வேண்டியிருக்கிறது. தாளாளர் தரக்குறைவாகப் பேசி அனுப்பிவிட.. நொந்து போய் தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அம்மாவும், அப்பாவும்.
இந்தக் குழந்தையை நன்கு அறிந்த அர்ஜூன் இதைப் பார்த்து பதைபதைக்கிறார். அவருக்குள் இதற்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்ற தவிப்பு ஏற்படுகிறது. உடனேயே மீடியாக்களை அழைத்து நாடு முழுவதிலும் இருக்கும் தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.
அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் இது ஒளிபரப்பாகி ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்களின் ஆதரவைப் பெற்றதும் தனியார் பள்ளி முதலாளிகள் முழித்துக் கொள்கிறார்கள். மக்களின் போராட்டத்தினால் அரசு இவர்களது கோரிக்கைக்கு செவிமடுக்க துவங்கியதும் இனியும் தாமதிக்கக் கூடாது என்று நினைத்து அர்ஜூனை தீர்த்துக் கட்ட நினைக்கிறார்கள் தனியார் பள்ளி முதலாளிகள்.
ஹீரோவான அர்ஜூன் அவர்களது அதிகார பலத்தை, தனது மூளை பலத்தை வைத்து எப்படி சமாளித்து ஜெயிக்கிறார் என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!
அர்ஜூன்.. அப்படியேதான் இருக்கிறார். அவருடைய கச்சிதமான உடல்கட்டு சண்டை காட்சிகளில் இன்னமும் வேகம் குறையாமல் இருப்பதைக் காட்டுகிறது. சண்டை காட்சிகளில் குறையில்லாமல் செய்திருக்கிறார். வீர வசனங்களை உச்சரிக்க வேண்டிய விதத்தில் உச்சரித்து, அந்த வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து கேட்க வைத்திருக்கிறார். வசனங்கள் சில இடங்களில் மின்னியிருக்கின்றன. பல இடங்களில் பின்னியிருக்கின்றன. வசனகர்த்தா ஜி.கே.கோபிநாத்திற்கு நமது வாழ்த்துகள்..!
ஹீரோயின் சுர்வீன் சாவ்லா. அழகாக இருக்கிறார். இது மட்டும் போதுமா..? பாடல் காட்சிகளில் நடனமாடியிருக்கிறார். சில வசனங்களை உதட்டசைவு ஒட்டாத அளவுக்கு பேசியிருக்கிறார். இன்னமும் 2, 3 படங்களில் நடித்து தமிழைக் கற்றுக் கொண்டால் ஷேமம். இன்னொரு ஹீரோயின் ப்ளோரா. வில்லனின் மகள். அப்பாவின் வில்லத்தனத்தை கடைசியில் திருத்தும் அப்பாவிப் பெண்.. இவருக்கும் ஒரு பாடல் காட்சியில் இடம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அர்ஜூன்.
படத்தின் மிகப் பெரிய காமெடியே.. இந்தப் படத்தில் காமெடி சீன்ஸ் என்று சொல்லி எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள்தான்.. பிரமானந்தத்தை வைத்து இப்படி மொக்கையாகவா எடுத்துத் தொலைப்பது..?
லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டிருக்கிறார்கள்.. விசாரணை கைதிக்கு எந்த ஊர் ஜெயிலில் வெள்ளை சீருடை கொடுத்து நம்பரையும் கொடுக்கிறார்கள்..? இந்த மாதம் நாம் பார்த்த இன்னும் 2 படங்களில்கூட இதேபோன்ற கொடுமைகள் இடம் பெற்றிருந்தன. இந்த 2014-ம் ஆண்டிலும் இப்படியே படம் எடுத்தால் எப்படி..? இணை இயக்குநர்களெல்லாம் என்னதான் செய்கிறார்கள்..?
லண்டனில் படிக்கும் தனியார் பள்ளி உரிமையாளர்களின் பிள்ளைகளை லண்டனுக்கே சென்று கடத்தி வைக்கிறாராம் அர்ஜூன். உலகத்திலேயே சிறந்த காவல்துறையான ஸ்காட்லாண்டு யார்டு போலீஸுக்கு இதைவிட பெரிய அவமானம் வேறு இருக்க முடியாது.. அங்கேயே இன்னொரு லோக்கல் ரவுடி இவர்களை கடத்திச் செல்ல.. லண்டனுக்குள்ளேயே துப்பாக்கிச் சண்டையெல்லாம் போட்டு, அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருகிறாராம்.
வந்தவர்கள் அத்தனையாண்டுகள் தங்கள வளர்த்து, எல்லாவித வசதிகளையும் செய்து கொடுத்த தத்தமது தகப்பன்களை எதிர்த்து பேசுகிறார்களாம். அப்பாமார்களுக்கே அறிவுரை சொல்லித் திருத்துகிறார்களாம்.. பிள்ளைகளின் அட்வைஸை கேட்டதும் தனியார் பள்ளி முதலாளிகளான அப்பன்மார்களும் உடனேயே திருந்திவிடுகிறார்களாம். 1965-ன் ஏதோவொரு எம்.ஜி.ஆர். படம் பார்த்த மாதிரியிருந்தது.
இன்னொரு பக்கம் கல்வித் துறை பற்றி அரைகுறை புரிதல்களுடன் எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம்.
அவரவர் சம்பாத்தியம், வசதி, வாய்ப்புகளுக்கேற்பதான் பிள்ளைகளை படிக்க வைக்க முடியும். மாதம் 4000 சம்பளம் வாங்கிக் கொண்டு, மாதம் 10000 பீஸ் கட்ட வேண்டிய பள்ளியில் பிள்ளையை படிக்க வைக்க நினைப்பது யார் குற்றம்..?
படத்தில் இதை அந்தத் தாளாளர் சுட்டிக் காட்டுகிறார். எதிர் வசனம் ஒன்றுகூட இல்லை. அந்த தகப்பன் ஆசைப்படுகிறான் என்பதாகவே திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இது முட்டாள்தனமான ஆசையாக இருக்கிறது. இது எப்படி நிஜமாகும்..?
அரசு தொடக்கப் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புகள் இல்லை. அதுவரையில் லோக்கலில் சிறிய பள்ளியில் சேர்த்திருக்கலாமே..? எதற்கு எடுத்த எடுப்பிலேயே பெரிய பள்ளிக்குப் போக வேண்டும்..?
அனைவருக்கும் இலவசக் கல்வி.. அனைத்து பள்ளிகளும் அரசுடமை என்றால் இது போன்ற சிக்கல்கள் வராது என்கிறார் அர்ஜூன்.. இதன் முதல் சிக்கலே பள்ளிகளில் இல்லை.. கல்வி வழங்கல் முறையில்தான் இருக்கிறது..
நாட்டில் இப்போதிருக்கும் கல்வி வழங்கல் முறையில் பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. இந்தியா ஒரு தேசமென்று வெளியில் சொல்லிக் கொண்டாலும் உள்ளுக்குள் ஊருக்கு ஆயிரத்தெட்டு அம்மன் கோவில்களை போல மாநிலத்திற்கு மாநிலம் கல்வி முறை மாறித்தான் இருக்கிறது..!
தமிழகம் முழுவதிலும் அரசுப் பள்ளிகளிலும், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் பாடத்திட்டம் சமச்சீராக இருக்க வேண்டும் என்று இப்போதுதான் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் இது மத்திய அரசு ஊழியர்களின் பள்ளிகளில் கிடையாது.. வைக்கவும் முடியாது.. இப்படியொரு குழப்பமான சூழல் இந்தியாவில் இருக்கிறது..!
பள்ளிகளையெல்லாம் அரசுடமையாக்கினால் இப்போது ஒவ்வொரு மாநில அரசுக்கும் வருகின்ற வரியில் 95 சதவிகிதம் ஆசிரியர்களின் சம்பளத்திற்கே போய்விடும். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் எவ்வளவு என்பதை இயக்குநர் அர்ஜூன் விசாரித்துத் தெரிந்து கொண்டால் நல்லது..!
மிச்சம் 5 சதவிகித சம்பளத்தை வைத்துக் கொண்டுதான் மற்ற துறைகளை கவனிக்க வேண்டியிருக்கும். இது நடக்கிற காரியமா..? அனைத்தையும் அரசுடமையாக்கினால் இப்போதைய அரசு அலுவலகங்களை போல.. இப்போதைய அரசு பள்ளிகளை போலத்தான் அனைத்து பள்ளிகளும் நடத்தப்படும். காலப்போக்கில் அனைத்தும் தரம்கெட்டு போய் நிற்கும் என்பது உறுதி..!
என் பிள்ளை படிக்கும் அதே பள்ளியில்தான் என் முதலாளியின் பிள்ளையும் படிக்க வேண்டும் என்பது பள்ளிகளில் மட்டும் சாத்தியமில்லை. ஆனால் கல்லூரிகளில் இப்போது அது சாத்தியமாகிவிட்டது. வேறு வழியே இல்லாமல் நடுத்தர வர்க்கமும், பணக்கார வர்க்கமும், ஏழை பங்காளன்களோடு பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் ஒன்றாகத்தான் படித்து வருகிறது..! இது பள்ளியில் இருந்து துவங்க வேண்டுமெனில் மத்திய, மாநில அரசுகள் மனம் வைத்து, அரசுகளிடமும் பணம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
கசப்பு மாத்திரைகளை தேன் கலந்து கொடுத்தால்தான் நமது ரசிகர்கள் முழுங்குவார்கள். அதை எண்ணியே 3 பாடல் காட்சிகள், 3 சண்டை காட்சிகள், சில மொக்கை காமெடிகள் என்று அனைத்தையும் கலந்திருந்து கொடுத்தாலும் கதையில் உண்மைத் தன்மையில்லை என்பதால் ‘ஜெய்ஹந்தி’ற்கு ‘ஜெய்ஹிந்த்’ போட முடியவில்லை.
என்னதான் சொல்லுங்க.. ரஞ்சிதா இல்லாமல் என்னங்க ‘ஜெய்ஹிந்த்’..?

1 comments:

சு.கி.ஞானம் said...

///என்னதான் சொல்லுங்க.. ரஞ்சிதா இல்லாமல் என்னங்க ‘ஜெய்ஹிந்த்’..//