17-11=2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
திராட்சை
தோட்டத்து கணக்கு... வழக்கு!
ஜெயலலிதாவின்
திராட்சைத் தோட்ட வருவாய் பற்றி நீதிபதி குன்ஹா தெரிவித்த கருத்துகள் இவை :
"1991-96
காலகட்டத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வாங்கிக் குவித்தார் என்பது அரசுத்
தரப்புக் குற்றச்சாட்டு. அதற்கு ஆதாரமாகப் பல ஆவணங்களை அரசுத் தரப்பு, நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஜெயலலிதா இந்தக் குற்றச்சாட்டுகளை
மறுத்து, தன்னிடம் இருக்கும் சொத்துகள் தனக்கு முறையான வருமானங்கள்
மூலம் சேர்ந்தவை என்று பல ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அந்த
வகையில் அவர் ஆந்திர மாநிலம், ஹைதராபாத்,
ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஜே.டி.மெட்லா திராட்சைத்
தோட்டத்தில் இருந்து தனக்கு 52 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்தது என்று குறிப்பிடுகிறார். இதை மறுக்கும்
அரசுத் தரப்பு, திராட்சைத் தோட்டத்தில் இருந்து, ஜெயலலிதாவுக்கு 1991-96 காலகட்டத்தில் கிடைத்த மொத்த
வருமானம் வெறும் 5 லட்சத்து 78 ஆயிரத்து
340 ரூபாய் மட்டுமே என்று ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளது.
அரசுத் தரப்பின் இந்த வாதத்துக்கு வலுச்சேர்க்க அவர்கள் சார்பில் மூன்று சாட்சிகள்
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உள்ளனர்.
அதில்
முதல் சாட்சி கே.ஆர்.லதா. இவர் ஆந்திர மாநிலம், ரெங்கா
ரெட்டி மாவட்டத்தில் தோட்டக் கலைத் துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய
சாட்சியத்தின் மூலம் நீதிமன்றத்துக்கு தெரியவருவது, 1996-ம்
ஆண்டு டிசம்பர் மாதம் லதாவும் மற்றொரு தோட்டக் கலைத் துறை அதிகாரி சஞ்சய் குமாரும்
சேர்ந்து ஜெயலலிதாவின் திராட்சைத் தோட்டத்தில் ஆய்வு நடத்தி உள்ளனர் என்பது
அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் சூப்பிரண்டென்ட்
கதிரேசனும் இவர்களுடன் இருந்துள்ளார்.
அடுத்த
அரசுத் தரப்பு சாட்சி கொண்டா ரெட்டி. இவர் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநர்.
லதாவும், சஞ்சய் குமாரும் ஆய்வறிக்கை அளித்த பின் கொண்டாரெட்டி திராட்சைத்
தோட்டத்துக்குச் சென்றுள்ளார். இவர் ஆய்வு செய்த பின்,
லதா மற்றும் சஞ்சய் குமார் அளித்த ஆய்வறிக்கையை அடிப்படையாக
வைத்தும் இவர் திராட்சைத் தோட்ட வருமானத்தை மதிப்பீடு செய்துள்ளார். திராட்சைச்
செடிகளின் வயது, அவற்றின் வளர்ச்சி ஆகியவற்றை இவருடைய
மதிப்பீட்டுக்கு அடிப்படையாக வைத்து வருமானத்தைக் கணக்கிட்டுள்ளார்.
இவருடைய
மதிப்புப்படி அங்கிருந்த 'அனாப் இ சாகி’ திராட்சைச்
செடிகளின் வயது 15. விதையற்ற திராட்சைகளின் வயது நான்கு.
இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில், 1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு 6 லட்சத்து ஆயிரத்து 380
ரூபாய் கிடைத்திருக்கும் என்று மதிப்பிட்டுள்ளார்.
இந்த
சாட்சிகளை எல்லாம் தன்னுடைய வாதத்தில் கடுமையாக எதிர்க்கும் ஜெயலலிதாவின்
வழக்கறிஞர் பி.குமார், 'அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள
அறிக்கையில், அடிப்படையிலேயே பல தவறுகள் உள்ளன. அதைத் தயாரித்த சாட்சிகள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி
உள்ளனர். தோட்டக் கலைத் துறை உதவி
இயக்குநர் கொண்டா ரெட்டி, தன்னுடைய அறிக்கையை சொந்தக்
கணிப்பில் செய்துள்ளார். அதுவும் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முதல் நாள்தான்
தன்னுடைய அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
மேலும்,
ஜெயலலிதா தன்னுடைய திராட்சைத் தோட்டத்தில் இருந்து கிடைத்த வருமானம்
பற்றி, 1987 முதல் 1993 வரை அவர்
தாக்கல் செய்துள்ள வருமானவரிக் கணக்கில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த
அடிப்படையில் 1992-93-ம் ஆண்டிலேயே ஜெயலலிதாவுக்கு
திராட்சைத் தோட்டத்தின் மூலம் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதை வருமானவரித் துறை மதிப்பீட்டு
அதிகாரியும் ஏற்றுக் கொண்டுள்ளார். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் ஜெயலலிதா தன்னுடைய
வருமானவரிக் கணக்கில் திராட்சைத் தோட்ட வருமானத்தைத் தெளிவாகக்
குறிப்பிட்டுள்ளார். அதன்படி அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவருக்கு
திராட்சைத் தோட்டத்தில் இருந்து கிடைத்த வருமானம் 52 லட்சத்து
50 ஆயிரம் ரூபாய் என்பது தெளிவாகிறது’ என்று
தன்னுடைய வாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த
இரண்டு வாதங்களையும் கவனமாகப் பரிசீலித்து இவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களின்
அடிப்படையில் நாம் வருமானத்தைக் கணக்கிடலாம். ஜெயலலிதா தன்னுடைய திராட்சைத் தோட்ட
வருமானமாக, 1987-88-ல் 4 லட்சத்து 80
ஆயிரம் ரூபாய். 1988-89-ல் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். 1989-90-ல் ஏழு லட்சம். இந்த விகிதத்தில் அந்த வருமானத்தை ஆண்டுக்கு ஆண்டு
உயர்த்தி 1992-93-ம் ஆண்டில் 9 லட்சத்து
50 ஆயிரம் ரூபாய் என்று காட்டி உள்ளார். இதை மதிப்பீட்டு
அதிகாரி ஏற்றுக் கொண்டு சான்றிதழ் அளித்துள்ளார்.
ஆனால்,
வருமானவரித் துறை இந்த வருமானம் உண்மையானதாக இருக்க முடியாது என்று,
ஜெயலலிதாவின் வருமானவரிக் கணக்கை 1998-ம்
ஆண்டில் மறு ஆய்வுக்காகத் திறந்துள்ளது. அதற்கு வருமானவரித் துறை சொல்லும் காரணம்,
ஜெயலலிதா திராட்சைத் தோட்ட வருமானமாகக் காட்டியிருக்கும்
மதிப்புக்கு அவர், எந்தவிதமான ஆவணங்களையும் காட்டவில்லை.
வெறும் கணிப்பில் மட்டுமே தாக்கல் செய்துள்ளார். அதனால், அந்தக்
கணக்கை மறு ஆய்வுக்கு உட்படுத்தினோம் என்று சொல்லி உள்ளார்.
ஏனென்றால்,
1993-ல் ஜெயலலிதாவின் திராட்சைத் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டபோது,
ஒரு வருடத்துக்கு அதில் வருமானமாக 12 ஆயிரம்
ரூபாய் மட்டுமே வந்துள்ளது. காய்கறிகள் மூலம் ரூ.5,000-ல்
இருந்து 6,000 ரூபாய்வரை கிடைக்க வாய்ப்பிருந்ததாகத்
தெரிவித்துள்ளார்.
மேலும்.
இந்தக் கணக்கை ஹைதராபாத் வேளாண்மைக் கல்லூரியில் உள்ள ஆய்வுப் பிரிவில்
சமர்ப்பித்து, திராட்சைகள் மூலம் எவ்வளவு வருமானம் வரும் என்று
கணக்கிடப்பட்டு அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி
பார்த்தால், அந்தத் தோட்டத்தில் இருந்து வருடத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் வருவாய்கூட தாண்டாது.
அப்படியிருக்கும்போது, அவர் 1986-ம்
ஆண்டிலேயே தனக்கு திராட்சைத் தோட்டத்தின் மூலம் 4 லட்சத்து 80
ஆயிரம் ரூபாய் கிடைத்திருப்பதாகக் கூறியதை ஏற்க முடியவில்லை.
அதனால்,
ஜெயலலிதா தாக்கல் செய்த வருமானவரிக் கணக்கை மீண்டும் மறு ஆய்வுக்கு
உட்படுத்த, வருமானவரிச் சட்டம், 1961 பிரிவு
147-ன்படி அதில் வழி உள்ளது. அதன்படி ஜெயலலிதாவின் கணக்கு
மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது என்று சொல்லி உள்ளார்.
வருமானவரித்
துறையின் இந்த மறு ஆய்வை ஜெயலலிதா எதிர்த்து தீர்ப்பாயத்தில் முறையிட்டு,
அதில் வெற்றியும் பெற்றுள்ளார். தீர்ப்பாயம் வருமானவரித் துறையின்
நடவடிக்கையை ரத்து செய்துவிட்டது. அத்துடன் ஜெயலலிதாவின் வருமானம் 1992-93-ம் ஆண்டிலேயே ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் என்றும் உறுதிப்படுத்தி உள்ளது.
ஜெயலலிதாவின்
வழக்கறிஞர் பி.குமார், இதைத்தான் முழுமையாக நம்பி தன்னுடைய வாதத்தை
எடுத்து வைத்துள்ளார். ஆனால், கிரிமினல் வழக்கைப்
பொறுத்தவரையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள்
மூலம்தான் தீர்ப்பளிக்கப்படுமே தவிர, வருமானவரித் துறை
அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்க முடியாது. எனவே, இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் திராட்சைத்
தோட்டத்தின் வருமானத்தைக் கணக்கிடலாம்.
ஜெயலலிதாவின்
திராட்சைத் தோட்டம் 15 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. அதில் 50 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் மட்டும்தான் வேளாண்மை
செய்யப்பட்டுள்ளது. மீதி உள்ள இடத்தில், பண்ணை வீடு, ஊழியர்களின் குடியிருப்பு, சாலைகள், பாதைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக
திராட்சைத் தோட்டம் அமைந்துள்ள இடம் மிகவும் சிறிய பகுதி. மற்ற பகுதிகளில்
தர்பூசணி, கத்தரிக்காய் போன்றவை பயிரிடப்பட்டு உள்ளன. இந்த
நிலத்தில் இருந்து தனக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது என்று சொல்லும்
ஜெயலலிதா, அதற்கு ஆதாரமாக எந்தவிதமான கணக்கு வழக்குகளையும்
சமர்ப்பிக்கவில்லை. அப்படி ஒரு கணக்கு வழக்கை அவர் பராமரிக்கிறார் என்பதற்கே எந்த
ஆதாரமும் நீதிமன்றத்தில் வைக்கப்படவில்லை. வருமானவரித் துறையிடம் தாக்கல் செய்த
ஆதாரங்களை மட்டுமே இந்தக் கோர்ட்டில் முன் வைத்திருக்கிறார். அதைத்தான் வருமானவரித் துறையே கேள்வி எழுப்பி இருக்கிறதே..?
ஆவணங்களாக
சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில், ஜெயலலிதாவின்
பதினான்கரை ஏக்கர் திராட்சைத் தோட்டத்தில் 10 ஏக்கரில்
மட்டுமே விவசாயம் நடைபெற்றது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் 10 ஏக்கரை மட்டும் இந்த நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்கிறது.
1991-96 காலகட்டத்தில் திராட்சை மூலம் கிடைத்த வருமானம் ஓர் ஏக்கருக்கு 20,000
ரூபாய் என அப்போதிருந்த விலை மதிப்பின் மூலம் தெரியவருகிறது. அதையே
நீதிமன்றமும் எடுத்துக்கொள்கிறது. ஓர் ஏக்கருக்கு 20,000 என்றால்,
10 ஏக்கருக்கு இரண்டு லட்சம் ரூபாய். ஆக, ஐந்து
ஆண்டுகளுக்கு 10 லட்சம் ரூபாய் வருகிறது. இதையே
ஐந்தாண்டுகளில் ஜெயலலிதாவுக்கு திராட்சைத் தோட்டம் மூலம் கிடைத்த வருமானமாக இந்த
நீதிமன்றம் எடுத்துக்கொள்கிறது. ஜெயலலிதா தரப்பு சொன்ன 52 லட்ச
ரூபாய் வருவாய் என்பதையும் அரசுத் தரப்பு சொன்ன 5 லட்சம்
வருவாய் என்பதையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.''
தீர்ப்பின்
விவரம் தொடர்கிறது.
-
ஜோ.ஸ்டாலின்
நன்றி
: ஜூனியர்விகடன்
|
Tweet |
0 comments:
Post a Comment