சரபம் சினிமா விமர்சனம்

02-08-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2003-ம்   ஆண்டு   ‘GAME’   என்ற   பெயரில்   வெளிவந்த   ஜப்பானிய படத்தின் முறையான அனுமதியில்லாமல் செய்யப்பட்ட தமிழ் ரீமேக்குதான் இந்தப் படம்..!


திருடுவது எப்படி..? கொள்ளையடிப்பது எப்படி..? மாட்டிக் கொள்ளாமல் கொலை செய்வது எப்படி..? இப்படி எல்லாவிதமான திருட்டுத்தனங்களையும் இப்போதைய சினிமாக்கள் சஸ்பென்ஸ், திரில்லர் என்ற போர்வையில் மக்களுக்குச் சொல்லிக் கொடுப்பதாக சமீபத்தில் பல எதிர்ப்புக் குரல்கள் மாநிலம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.. இந்தப் படத்தை அவர்கள் பார்த்தால் தங்களது குரலை மேலும் உயர்த்துவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் பிராஜெக்ட் லீடராக இருக்கிறார் ஹீரோ. 2 வருடங்கள் கம்பெனி நடத்த போதுமான பணம் கிடைக்கும் அளவுக்கு ஒரு பிராஜெக்ட் கிடைக்கவிருக்கிறது. அதற்கான டிஸைனிங்கை ஹீரோதான் பொறுப்பாக செய்திருக்கிறார். அதனை சம்பந்தப்பட்ட கஸ்டமர் கம்பெனியில் சப்மிட் செய்யப் போன நேரத்தில் அந்த நிறுவனத்தின் தலைவரான ‘ஆடுகளம்’ நரேனுக்கு ஒரு சொந்த பிரச்சினை. இதனால் மூட் அவுட்டானவர் ‘இந்த பிராஜெக்ட் கேன்ஸல்’ என்று சொல்லிவிடுகிறார்.
அன்றைய இரவில் மது அருந்திவிட்டு வாழ்க்கையின் சோகங்களை ஆபீஸ் நண்பனுடன் பகிர்கையில் உள்ளே போன மது கிராக்காக வேலை செய்ய.. நரேனின் வீட்டிற்கு தன் எதிர்ப்பை காட்டச் செல்கிறார் ஹீரோ. அப்போது எதிர்பாராதவிதமாக ஹீரோயினினான நரேனின் மகள் அந்த வீட்டில் இருந்து வாக் அவுட் செய்ய.. ஹீரோ அவளை பின் தொடர்கிறார்.
ஹீரோயினுக்கும், ஹீரோவுக்கும் பேச்சுவார்த்தை தொடர.. ஹீரோயினை வைத்து நரேனை மடக்க ஹீரோ பிளான் போடுகிறார்.. ஹீரோயின் அதற்கு உடந்தையாக இருக்க.. கடைசியில் என்னாகிறது என்பதுதான் படம்..
எப்போதும் திரைக்கதை முழுவதையும் சொல்லிவிடும் பழக்கம் உள்ளவன் நான். ஆனால் இதில் சொல்ல முடியவில்லை.. சஸ்பென்ஸ் இங்கேயே உடைந்தால் ரசிகர்களுக்கு கஷ்டம்தான்.. படத்தில் நிறைய டிவிஸ்ட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வருவதால் முழு கதையை சொன்னாலும் பிரச்சினைதான்.. ஆனால் திரைக்கதையை மிக அழகாக கோர்த்திருக்கிறார் இயக்குநர்.

ஹீரோ நவீன் சந்திரா.. ஏற்கெனவே சில படங்களில் நடித்த அனுபவத்துடன் நன்றாகவே நடித்திருக்கிறார்.  தண்ணியடித்த நிலையில்தான் நிறைய நடிகர்கள் யதார்த்தமாக நடிக்கிறார்கள் போலிருக்கிறது. இதிலும் இவர் இப்படித்தான்.. மாரியட் ஹோட்டலில் ஹீரோயினுடன் தண்ணியடித்த நிலையில் பேசும் காட்சிகளும், வீட்டில் உளறிக் கொட்டுகின்ற காட்சியிலும் வசனத்தையும் மீறி ரசிக்க வைக்கிறார்.

ஹீரோயின் சலோனி லூத்ரா.. எங்கே பிடித்தார்கள் இந்த அரேபிய குதிரையை..? நேரில் பார்த்தால் நிச்சயமாக துணை நடிகையாகக்கூட யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் ஸ்கிரினில் பிரெஷ்னெஸ்ஸாக ஜொலிக்கிறார். அதிலும் இவர் அறிமுகமாகும் முதல் காட்சியில் அவருடைய பெர்பார்மென்ஸ் அசர வைக்கிறது.. மாடர்ன் கேர்ள் கேரக்டரில் டிரவுசருடன் அப்பாவின் ஆபீஸ் அறைக்குள் வந்து பணம் கேட்கும் அந்தத் திமிரில்கூட ஒரு அழகு ஒட்டிக் கொண்டிருக்கிறது.. ஆர்ப்பாட்டமில்லாத அழகில் ஒரு நடிப்பையும், திமிர்த்தனமான வேறொரு நடிப்பையும் கச்சிதமாகக் கொடுத்திருக்கிறார். பாராட்டுக்கள் மேடம்..
ஆடுகளம் நரேனுக்கு பொருத்தமான அப்பா வேடம்.. மகளின் நடத்தையைக் கண்டு பொங்கியழும் கேரக்டர்.. அதே சமயம் மகளைத் தேடும் பாசமான அப்பாவாகவும் சூழ்ச்சிகளின் சூத்திரதாரராகவும் இவரது வேடம் கச்சிதமாகப் பொருந்துகிறது..
பிரிட்டோ மைக்கேலின் இசை பல இடங்களில் பல்லிளிக்க.. மேடை நாடகம் போல பாவனை செய்திருப்பது ஏனோ..? ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த் பல காட்சிகளில் குறிப்பிட வைத்திருக்கிறார்.  இயக்குநருக்கு பிறகு பாராட்டுக்குரியவர் எடிட்டர் லியோஜான்பால். இது போன்ற சஸ்பென்ஸ் திரில்லர் படங்களுக்கேற்றவகையில் கத்திரியை போட்டிருக்கிறார். இடைவேளைக்கு பின்பு வந்து கொண்டேயிருக்கும் டிவிஸ்ட்டுகளை கொஞ்சமும் போரடிக்காத வண்ணம் கொண்டு செல்ல உதவியிருக்கிறார் எடிட்டர்..
இது போன்ற கடத்தல் கதைகளை நிறையவே பார்த்தாகிவிட்டது. அதுவும் இப்போது வரும் படங்களில் மாதத்துக்கு 5 படங்களின் கதை கடத்தல்தான். அதிலேயே கொஞ்சம் சலிப்பு வந்தாகிவிட்டது.. அதற்குப் பிறகு இரண்டு பிளாஷ்பேக் கதைகளை கொண்டு வந்ததில் கொஞ்சம் இழுவை போலவே தோன்றியது.. இரண்டாவது பிளாஷ்பேக்கை கொஞ்சம் நறுக்கியிருக்கலாம்.
இத்தனை பெரிய பணக்காரர் ஒரு சாதாரண இன்ஸ்பெக்டருக்கு பயப்படுவாரா..? இத்தனை அடியாட்களை வைத்திருப்பவர் எத்தனை போலீஸ் உயரதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பார்..? பணத்தை அள்ளி வீசினால் சட்டம் தானாக வளையப் போகிறது..?  இப்படியா அப்பாவியாய் வந்து மாட்டிக் கொள்வார்..?
கொள்ளை.. கொலை.. என்று அனைத்தையும் நியாயப்படுத்துவதுபோல காட்சிகளும், வசனங்களும் இருப்பதுதான் படத்தின் தன்மையை மாற்றிவிட்டது.. அதிலும் கிளைமாக்ஸ் காட்சியை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.
இருந்தாலும் ஒரு முறை பார்க்கலாம் என்கிறவகையில்தான் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர். அது மட்டுக்கும் அவருக்கு நமது பாராட்டுக்கள்..!

அடிப்பது அட்டர் காப்பி என்று தெரிந்தே செய்கிறீர்களே..! டைட்டிலில் அந்த ஜப்பானிய கதாசிரியருக்கும், இயக்குநருக்கும் ஒரு நன்றி கூடவா போடக் கூடாது..? என்ன உலகம்டா இது..?

3 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தங்களின் பார்வையில் விமர்சனம் நன்று பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

நீண்ட நாளுக்கு பிறகு வருகிறேன்! உங்க விமர்சன ஸ்டைல் கொஞ்சம் மாறியிருக்கிற மாதிரி தோணுது! சிறப்பான விமர்சனம்! வாழ்த்துக்கள்!

துளசி கோபால் said...

நேத்துதான் பார்த்தேன்.


படம் பார்ப்பவனை முட்டாளாக்கணும் என்ற ஐடியா போல இருக்கு.

இதுவா இல்லை அதுவான்னு ரசிகர்களைக் குழப்பும்விதமா ஃப்ளாஷ் பேக்களால் கதை போகுது.

போகட்டும். மச்சத்துக்குப் பதிலா பச்சை:-)