எல்லாம் நன்மைக்கே..!

11-08-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



இன்று மதியம் அருமைத் தம்பி செந்தில்குமார் என்னைப் பார்ப்பதற்காக அலைந்து திரிந்து வீடு வந்து சேர்ந்தான். என்னுடைய 20 வருட சென்னை வாழ்க்கையில் 10 வருடங்கள் என்னுடன் இருந்தவன்.. மாம்பலம் மேன்ஷன், வேம்புலியம்மன் கோவில் தெரு பார்கவி அபார்ட்மெண்ட், சீனிவாசன் தெரு வீடு... இவைகளில் நான் குடியிருந்தபோது என்னுடன் இருந்த தம்பி..

இப்போது அமெரிக்காவில் டெக்சாஸில் ஒரு நிறுவனத்தில் நெட்வொர்க் என்ஜீனியராகப் பணியாற்றுகிறான். 15 நாட்கள் விடுமுறையில் மூன்று வருட கால இடைவெளிக்குப் பின்பு வந்திருக்கிறான். ஊருக்குப் போகும் அவசரத்திலும் “உங்களை பார்த்தே ஆகணும்னே...” என்று சொல்லி கால்டாக்சி பிடித்து வீட்டுக்கு வந்தான். 

அவனை நினைக்கையில் பெரிதும் சந்தோஷமாக இருக்கிறது. ஈரோடு பக்கம் கிராமம்.. வீட்டுக்கு ஒரே பிள்ளை.. அப்பா விவசாயம்தான்.. பிளஸ் டூ தேர்வில் குறைவான மார்க் எடுத்ததால்,  மறுபடியும் அடுத்த ஆறு மாதத்தில் இன்னொரு தேர்வு எழுதி கூடுதல் மதிப்பெண்கள் பெற்று அதன் மூலம் அரசு கோட்டாவில் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படித்தவன்..

படித்து முடித்து வேலை தேடி சென்னைக்கு வந்தவுடன் மெக்கபி ஆண்ட்டி வைரஸ் நிறுவனத்திற்காக வீதி, வீதியாக அலைந்து அந்த சாப்ட்வேரை விற்பனை செய்தான். அப்போதெல்லாம் பஸ்ஸில் செல்வதற்குக்கூட அவனிடம் பணமிருக்காது. வீட்டில் அப்பாவை தொந்திரவு செய்யக் கூடாது என்று சொல்லி சென்னையில் அவனது தேவைகளை வெகுவாக குறைத்துக் கொண்டான்.

அடுத்தடுத்து வேறு, வேறு நிறுவனங்களில் சேர்ந்து கொஞ்சம் சம்பளம் உயர்ந்த பின்புதான் காலை உணவையே சாப்பிட ஆரம்பித்தான்.. அப்படியொரு வைராக்கியமானவன். எனக்கு ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயம்.. அவனது டிரெஸ் செலக்சன். எப்படித்தான்.. எங்கிருந்துதான் இப்படி சட்டைகளை வாங்கி வருவானோ தெரியாது.. அப்படியொரு டிப்டாப்பாக இருக்கும்..  சினிமா ஹீரோ மாதிரியே இருப்பான்.. அப்படியேதான் அவனது உடை, நடை பாவனையும்.. அவனுடன் இருந்த 10 ஆண்டுகளில் அவன்தான் என்னைத் தாங்கிக் கொண்டிருந்தான். ஹைதராபாத்தில் சத்யம் கம்ப்யூட்டரில் அவனுக்கு வேலை கிடைத்து சென்றபோதுதான் நான் தனி மரமானேன்.

என்னுடைய உண்மைத்தமிழன் வலைத்தளத்திற்கும் தீவிர ரசிகன். நான் எழுதிய ஒவ்வொரு விமர்சனத்தையும் படித்துவிட்டு விமர்சனம் செய்வான். "உனக்கு ரசிக்கவே தெரியலை.. நல்ல படத்தையெல்லாம் மொக்கைன்னு எழுதுற.." என்று கண்டிப்பான்.. என்னுடைய அரசியல் விமர்சனங்களைக் கண்டு அதிகம் பயந்து போனான்.. "கொஞ்சம் காரத்தைக் குறைண்ணே.." என்பான்.. தன்னுடைய பணியிடத்து நண்பர்கள் பலருக்கும் எனது வலைத்தளத்தை அறிமுகப்படுத்தி வைத்து புண்ணியத்தையும் கட்டிக் கொண்டான். 

எத்தனையோ இரவுகளில் போன் செய்து ஆறுதல் சொல்வான்.. “அண்ணே கல்யாணத்தை பண்ணுண்ணே.. பண்ணுண்ணே..” என்று தினமும் போன் டார்ச்சர் செய்து கொன்றவன்.. இந்த போனில் வந்த அன்புத் தொல்லைகூட அவன் அமெரிக்கா சென்றதோடு முடிந்தது..

அவன் கல்யாணம் சென்னிமலை முருகன் கோவிலில் நடந்தது. அதற்காக சென்னிமலை செல்ல எல்லாம் தயாரான நிலையில் மாலை 6 மணிக்கு திடீரென்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டு என் அப்பன் முருகன் சோதனையைக் கொடுத்துவிட்டான். அந்தக் கோவிலுக்கு வரக் கூடாது என்று நினைத்துவிட்டான் போலிருக்கு..

“தம்பி.. வர முடியலடா.. கோச்சுக்காதடா...” என்று போனில் சொல்லிவிட்டு வருத்தப்பட்டேன். அமெரிக்கா சென்ற பின்பு அங்கேயிருந்து 2 மாதங்களுக்கு ஒரு முறை போனில் பேசுவான்.. இப்போது அவனுக்கு 2 குழந்தைகள்.. ஒரு பொண்ணு.. ஒரு பையன்.. செல்போனில் ஸ்கிரீன் சேவராகவே வைத்திருந்தான். காட்டினான்.. பொண்ணு இந்தியாவில் பிறந்து.. பையன் அமெரிக்காவிலேயே பிறந்திருக்கிறான்.. வாழ்த்துகள் சொன்னேன்.

அவனுக்கு பொதுவில் முகம் காட்ட பிடிக்காதாம்.. அதனால் எந்தவொரு சமூக வலைத்தளத்திலும் அவன் இல்லை.. ஆச்சரியமாக இருந்தது எனக்கு..! “வேண்டாம்ன்னு ஒரே நாள்ல முடிவெடுத்து எல்லாத்துலேயும் இருந்த அக்கவுண்ட்டுகளை ஒரே நாள்ல டெலீட் பண்ணிட்டேண்ணே.. இப்பத்தான் நிம்மதியா இருக்கேன். இப்போ என் பெயரை போட்டு சர்ச் பண்ணிப் பாருங்களேன்.. போட்டோ, டீடெயில்ஸ் ஒண்ணுமே வராது...” என்றான் சிரிப்புடன்..

அமெரிக்காவில் சத்யம் கம்யூட்டரில் இருந்து விலகி வேறொரு நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றுகிறானாம்.. எத்தனையோ நாட்கள் எனக்காக ஹோட்டல் டிபனை வாங்கி வைத்திருக்கிறான்.. வாங்கி வந்து கொடுத்திருக்கிறான்.. பண உதவி செய்திருக்கிறான்.. அவனுடைய சட்டையை நான் போட்டுக் கொள்ள அனுமதியளித்திருக்கிறான்.. என் மன அமைதிக்காக தன் உழைப்பை கொடுத்திருக்கிறான்..

இன்று திடீரென்று வந்த அந்தத் தம்பிக்கு கொடுப்பதற்கு பச்சைத் தண்ணியைத் தவிர வேறு எதுவும் என் வீட்டில் இல்லை.. முறையான வாழ்க்கையை வாழலையே என்று இன்றைக்குத்தான்.. அந்த நேரத்தில்தான் பெரிதும் உணர்ந்தேன்.. 1 மணி நேர பேச்சில் முடிந்த அளவுக்கு பழையவைகளை அசை போட்டு.. என் வாழ்க்கையையும் கொஞ்சம் அலசிப் போட்டுவிட்டு நிரம்ப சந்தோஷத்துடன் விடைபெற்றுச் சென்றான் தம்பி..

எனக்குத்தான் மனம்கொள்ளா வருத்தம்..! ஒரு ஷெல்பி புகைப்படம்கூட எடுக்கலையே என்று அவனது கார் தெருவைத் தாண்டியவுடன்தான் ஞாபகம் வந்தது..! இதுவும் நன்மைக்கே என்று பின்பு புரிந்தது..! எல்லாம் நன்மைக்கே..!

10 comments:

? said...

ஏன் இப்படி ஒரு தலைப்பு கொடுத்து நல்ல விடயத்தையும் ஏதோ தப்பு நடந்துடுச்சா என எண்ணத்துடன் படிக்க வைத்துள்ளீர்கள்?

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

உங்க நண்பன்( தம்பியா??) படம் (அதா புகைப்படம்) போடமுடியாதுனு செந்தில்நாதன் படத்தை போட்டுட்டீங்களாக்கும்! ரெண்டு பேருக்கும் முகஜாடையில் க்ளோஸ் ரிசெம்ப்லெண்ஸ் இருக்குமோ? :)))

"எல்லாம் நன்மைக்கே" என்பதை என்னத்துக்குனாலும் "முடிவுரையா, பஞ்ச் டயலாக்கா" சொல்லலாம்தான்.

ஆனால், இங்கே எதை "எல்லாம் நன்மைக்கேன்"னு அண்ணன் சரவணன் சொல்றாருனு விள்ங்கவில்லை?

சினிமா விமர்சனமா எழுதி எழுதி இதுமாரி சொந்த அனுபவத்தை எப்படி பகிர்ந்துகொள்ளுவதுனு தெரியாமலே போச்சுபோல உங்களுக்கு, பாவம்!

உங்க தம்பி அமெரிக்காவிலிருந்து வந்துருக்காரு, சரி. கையை வீசிக்கிட்டு வந்தாரா? இல்லை எழை அண்ணனுக்கு ஒரு ஐ-பேட் அல்லது ஐ-ஃபோன் வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தாரா?

அதையெல்லாம் எங்ககிட்ட சொன்னா நாங்க என்ன வயித்தெரிச்சலா படப்போறோம்??!

ஆமா ஆமா, எல்லாம் நன்மைக்குத்தான் போங்க! :)))

Arvinth said...

"நான் எழுதிய ஒவ்வொரு விமர்சனத்தையும் படித்துவிட்டு விமர்சனம் செய்வான்."

hahahaha, நல்லா காமெடி பண்ணுராப்ல...

நீர் இது மாதிரி matters மட்டும் எழுதுவீராம், புண்ணியமா போகும், விமர்சனம் பண்ணுறேன்னு கெளவிக மாதிரி கதை சொல்ற மாதிரி காமெடி பண்ணுமா இரும்

Arvinth said...

"நான் எழுதிய ஒவ்வொரு விமர்சனத்தையும் படித்துவிட்டு விமர்சனம் செய்வான்."

hahahaha, நல்லா காமெடி பண்ணுராப்ல...

நீர் இது மாதிரி matters மட்டும் எழுதுவீராம், புண்ணியமா போகும், விமர்சனம் பண்ணுறேன்னு கெளவிக மாதிரி கதை சொல்ற மாதிரி காமெடி பண்ணாம இரும்

துளசி கோபால் said...

அட..... இது என்ன ஆண்டியின் படம் என்று பார்த்தேன்!

சரி. இப்ப நாங்க எல்லோரும் சொல்றோம்.... சீக்கிரம் கல்யாணத்தைப் பண்ணிக்குங்க. வீடு சரியாகும்.

Nondavan said...

உங்க நண்பருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்...

சிலர் வீண் வம்பு செய்யும் கமெண்டுகளை மேலே பதிந்துள்ளார்கள்..

அதை பொறுப்பதடுத்த வேண்டாம்.. அண்ணே..

உங்க வலி புரிகிறது

நண்பா said...

கல்யாணம் பண்ணுங்க நண்பரே..
வாழ்க்கை நல்லா இருக்க..
நாங்கள் நண்பர்கள் எல்லாரும் வேண்டுவோம், வாழுத்துவோம்!!

puduvaisiva said...

“அண்ணே கல்யாணத்தை பண்ணுண்ணே.. பண்ணுண்ணே..” என்று தினமும் போன் டார்ச்சர் செய்து கொன்றவன்"

"தனிமையிலே, வெறுமையிலே,
எத்தனை நாளடி இள மயிலே?
கெட்டன இரவுகள்! சுட்டன கனவுகள்!
இமைகளும் சுமையடி இளமையிலே!

அந்தி மழை பொழிகிறது,
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது!"

தல இந்த பாடல் கேட்கும் போது அல்லது பார்க்கும் போது உங்கள் நாபகம் வருது

please சீக்கிரம் கல்யாணத்தைப் பண்ணிக்குங்க...

Anonymous said...

மனது வலிக்கிறது நண்பரே கட்டுரை படித்து
வேறு என்ன சொல்ல
இரண்டு முறை உங்களிடம் தொலை பேசியில் உங்களை தொல்லை செய்து உள்ளேன்