இன்னார்க்கு இன்னாரென்று - சினிமா விமர்சனம்

29-07-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சினிமா துறையில் நுழைந்து தங்களது திறமையை வைத்து சாதிக்க வேண்டும் என்று நினைத்து படமெடுப்பவர்கள் ஒரு பக்கம்.. தங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து நாமளும் ஒரு ஹீரோவா நடிச்சுக் காட்டிரணும் என்கிற ஒரு அம்சத் திட்டத்தோட கோடம்பாக்கத்துல கால் வைக்குறவங்களும் இன்னொரு பக்கம் நிறைய வந்துக்கிட்டேயிருக்காங்க. அதுல ஒருத்தர்தான் இந்தப் படத்தோட ஹீரோன்னு நினைக்கிறேன்..!

சொந்தக் கிராமத்தில் ஹோட்டல் தொழில் செய்து வருகிறார் ஹீரோ. அதே ஊரில் இருக்கும் தன் மாமன் மகளை சிறு வயதிலிருந்தே காதலித்தும் வருகிறார்.  ஹீரோயினும் இவரை காதலிக்கிறார். மாமன் அந்த ஊரின் பண்ணையார்(எத்தனை வருஷமாச்சு இப்படியொரு டயலாக்கை கேட்டு?)
இவர்களின் காதல் ஹீரோவின் அப்பாவுக்கு தெரிஞ்சு வேண்டாம் என்று சொல்லி தடுக்கிறார். ஆனால் ஹீரோ கேட்கவில்லை.. ஹீரோயினின் அண்ணன் ஹீரோவை தேடி வந்தவன், வந்த இடத்தில் ஹீரோவின் அப்பாவை ஆத்திரத்தில் அடித்து உதைத்து விடுகிறான். இந்த அதிர்ச்சியிலேயே ஹீரோவின் அப்பா விஜய் கிருஷ்ணராஜ் இறந்துவிடுகிறார்.
இதற்கு நீதி கேட்டு பண்ணையாரிடம் செல்கிறார் ஹீரோ. பண்ணையாரோ முப்பது நாள்ல ஒரு கோடி ரூபாயை சம்பாதிச்சி கொண்டு வா.. என் பொண்ணை தரேன் என்கிறார். அப்பாவை கொலை செய்ததெல்லாம் இப்போது நினைவுக்கு வராமல் போய், இதோ ஒரு மாசத்துல ஒரு கோடியோட வரேன் மாமா என்று சொல்லி பட்டணத்துக்கு வண்டியேறுகிறார் ஹீரோ.
சென்னையில் ஈசிஆர் ரோட்டில் ஹோட்டல் வைத்திருக்கும் தனது சித்தப்பா அனுமோகனிடம் வந்து சரணடைகிறார் ஹீரோ. சித்தப்பனுக்கே அவரோட அண்ணன் செத்தது தெரியாதாம்.. ஹீரோ சொல்லித்தான் தெரியுதாம்.. கதை இப்படி போகுது..!
கடையில் தங்கியிருக்கும் நேரத்தில் சூப்பரா இட்லி சுடுகிறார் ஹீரோ. இதை சாப்பிட்டுவிட்டு போகும் இன்னொரு ஹீரோயின் தனது அப்பாவிடம் வந்து சொல்ல அவரும் வந்து சாப்பிட்டுவிட்டு ஹீரோவை தான் துவக்கவிருக்கும் புதிய கடையில் மாஸ்டராக வந்து வேலைக்கு சேரும்படி கேட்கிறார். ஹீரோவும் சரி என்று சம்மதிக்க..
அண்ணாமலை படக் கதையாக 20 நாட்களில் ஹோட்டல் பெரிசாகி.. வசூல் கொட்டோ கொட்டோவென்று கொட்டி.. ஒரு கோடி ரூபாயை அந்த ஹோட்டல் முதலாளியிடமிருந்து பரிசாக பெறுகிறார் ஹீரோ.. அதை வாங்கிக் கொண்டு சித்தப்பாவை அழைத்துக் கொண்டு ஊருக்கு ஓடுகிறார் ஹீரோ.
ஆனால் அங்கே ஹீரோயினுக்கு கல்யாணமாகி சென்னைக்கு போய்விட்ட தகவல் கிடைக்க சென்னைக்கே ஓடி வருகிறார்கள். வந்த இடத்தில் இன்னொரு டிவிஸ்ட்டு.. புது மாப்பிள்ளையை யாரோ கொலை செய்துவிட்டார்கள் என்பது.. தனது காதலி விதவைக் கோலத்தில் இருப்பதை பார்த்து வருத்தப்படுகிறார் ஹீரோ.
இப்போது ஹோட்டல்கார்ரின் மகளான ஹீரோயின் ஹீரோவை தான் மணக்க விரும்புவதாக தனது தந்தையிடம் கூற அவரும் சித்தப்பாவிடம சொல்லி ஹீரோவிடம் பேச்ச் சொல்கிறார். ஹீரோவோ தான் பழைய காதலியையே மணக்கவிருப்பதாகச் சொல்ல கதை திசை மாறுகிறது..
அடுத்தடுத்த காட்சிகளில் யார், யாரை கல்யாணம் செய்யப் போகிறார்கள் என்பதை சஸ்பென்ஸோடு சொல்ல நினைத்து குழப்பு, குழப்பென்று குழப்பியெடுத்து கிளைமாக்ஸை முடித்திருக்கிறார்கள்.
அறிமுக நாயகனின் பெயர் சிலம்பரசன். ஒருத்தரையே சமாளிக்க முடியலை.. அதுக்குள்ள இன்னொருத்தர் அதே பெயர்ல.(போட்டோவையும் நல்லா பார்த்துக்குங்க..) தன்னால் முடிந்த அளவுக்கு கஷ்டப்பட்டு நடிச்சிருக்காரு. சொந்தப் படம் போலிருக்கு. அதான் ஹீரோயிஸத்தை ஓரளவுக்கு மேல விளக்க முடியாத அளவுக்கு அவரோட நடிப்பு இருக்கிறதால எமோஷனல் காட்சிகளையெல்லாம் அதிகமா வைக்காம முடிச்சிருக்காங்க.. ஆனாலும் வசனம்தான் ஒட்டாமலேயே தனி ரூட்ல போய்க்கிட்டேயிருக்கு..
பண்ணையாரின் மகளாக நாயகி அஞ்சனா நடித்திருக்கிறார். கிராமத்து பெண் வேடத்துக்கு ஓகே.. ஏதோ சுமாருக்கு நடிப்பு வருகிறது.. இன்னொரு ஹீரோயின் ஸ்டெபி.. குளோஸப்பில் பார்க்கவே முடியவில்லை.. ஆனாலும் கேமிராமேன் அண்ணனின் உதவியுடன் கொஞ்சம் பயமுறுத்தாமல் காட்டியிருக்கிறார்கள்.. இந்தப் பெண்ணின் நடிப்பும் பரவாயில்லை ரகம்..
அப்பாவாக விஜய் கிருஷ்ணராஜ்.. பண்ணையாராக சந்தானபாரதி..  சித்தப்பாவாக அனுமோகன்…  சென்னை ஹோட்டல் அதிபராக ஆர்.என்.ஆர். மனோகர் என்று இயக்குநர்களாக பிடித்துப் போட்டு வேலை வாங்கியிருக்கிறார். இதில் அனுமோகனின் பங்களிப்பு பெரிது.. இடைவேளைக்கு பின்பு அவரால்தான் கொஞ்ச நேரமாவது உட்கார முடிந்தது.. இதுவே மிகப் பெரிய சாதனைதான்..
தைரியம் இருந்தால் முழு படத்தையும் பார்த்துவிட்டு வந்து பின்னூட்டம் போடுங்கள்..!

0 comments: