26-08-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சம்பாதிக்கிறோமோ இல்லையோ..? வருமான வரியை மட்டும் கரெக்ட்டா கட்ட வேண்டியிருக்கு..! 2013-ல வரியான எடுத்துக்கிட்டதை ரீபண்ட் கேட்டு இந்த வருஷம் மனு தாக்கல் செஞ்சாச்சு.. அது ஒரு பார்ம்ல மெயில்ல வந்துச்சு.. அதை பிரிண்ட் அவுட் எடுத்து பெங்களூர் இன்கம்டாக்ஸ் ஆபீஸுக்கு அனுப்பிருங்கன்னு ஆடிட்டர் சொன்னார்.. மறந்தே போச்சு.. ஒரு மாசம் போய் இப்போ திரும்பவும் ஞாபகப்படுத்தினாரு ஆடிட்டர்..
அச்சச்சோன்னு ஓடிப் போய் பிரிண்ட் அவுட் எடுத்திட்டேன். அதே கடைல புரொபஷனல் கூரியர்ஸும் இருந்துச்சு.. அதுலயே அனுப்பிரலாமேன்னு சொல்லி 45 ரூபாயை கட்டி ரசீதையும் வாங்கிட்டு கடைக்கு வெளில வந்து நின்னு ஆடிட்டருக்கு போன் அடிச்சு சொன்னா.. அவர் குண்டை தூக்கி போடுறாரு..
"அதை போஸ்ட் ஆபீஸ் மூலமா ஸ்பீட் போஸ்ட் இல்லாட்டி ஆர்டினரி போஸ்ட் மூலமாத்தான் அனுப்பணும். தனியார் கூரியர்ன்னா வாங்க மாட்டாங்க.. அந்த மெயில்லேயே போட்டிருந்துச்சே பாக்கலையா?"ன்னாரு.. என்னடா இது கொடுமைன்னு மெயிலை திரும்பவும் ஓப்பன் செஞ்சா ஆடிட்டர் சொன்னதுதான் இருந்துச்சு..
திரும்பவும் கடைக்குள்ள போயி “அதைத் திருப்பிக் கொடுத்திருங்க.. நான் போஸ்ட் ஆபீஸ் மூலமாத்தான் இதைக் கொடுக்கணுமாம்.. இப்பத்தான் ஆடிட்டர் சொன்னாரு...” என்றேன்.. கோபத்துடன் முறைத்த அந்த பெண் என்னுடைய கடிதத்தை எடுத்து அதில் ஸ்டேப்ளர் பின் போட்டிருந்த கூரியர் பில்லை எடுத்துக் கொண்டு.. ஒட்டியிருந்த ஸ்டிக்கரையும் எடுத்துவிட்டு தொப்பென்று டேபிளில் அந்த கவரை போட்டார்.
“காசு..” என்றேன்.. “அதெல்லாம் முடியாது ஸார்.. பில்லெல்லாம் போட்டாச்சு. திரும்பவும் கேன்ஸல் பண்ண முடியாது...” என்றார் படபடவென்று.. “பில்லை கேன்ஸல் பண்றதுல உங்களுக்கென்ன சிரம்ம்..? அந்த பில் மேலேயே நடுவுல கோட்டை கிழிச்சு கேன்ஸல்ன்னு எழுதிட்டா போச்சு.. ஒண்ணுமே செய்யாம நான் எதுக்கு 45 ரூபாயை உங்களுக்குக் கொடுக்கணும்..?” என்றேன்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது ஸார்.. யார் கேன்ஸல் செஞ்சாலும் பணம் திருப்பித் தரக் கூடாதுன்னு ஓனர்தான் சொல்லியிருக்கார்.. “ என்றார். “ஓனருக்கு போன் போடுங்க. நான் பேசுறேன்...” என்றேன்.. 5 நிமிட காத்திருப்புக்கு பின் சலிப்புடன் ஓனருக்கு போன் செய்தார் அந்த பெண். “ஸார்.. இங்க ஒருத்தர் பில் போட்டுட்டு கேன்சல்ன்னு சொல்லிட்டாரு. லெட்டரையும் திருப்பிக் கொடுத்திட்டேன். காசை கேக்குறாரு..” என்றார். அவர் என்ன பதில் சொன்னாரோ தெரியவில்லை.. “சரி ஸார்.. சரி ஸார்...” என்று சொல்லி போனை வைத்துவிட்டு 30 ரூபாயை எடுத்து நீட்டினார்.
நான் வாங்க மறுத்து, “எனக்கு முழு பணமும் திரும்ப வேணும்..” என்றேன். “ஓனர் 30 ரூபாதான் கொடுக்கச் சொன்னார்..” என்றார். “அவருக்கு திரும்பவும் போன் போடுங்க. நான் பேசுறேன்..” என்றேன். திரும்பவும் போன் போட்டு “அவர் வாங்க மாட்டேன்றார் ஸார்..” என்றார் பெண். போன் என் கைக்கு வந்த்து.
எடுத்த எடுப்பிலேயே, “இந்தாப்பா.. நீ பாட்டுக்கு பில் போட்டுட்டு ரசீதையும் வாங்கிப்புட்டு இப்போ கேன்ஸல்ன்னு சொன்னா என்ன அர்த்தம்..? எனக்கு அந்த பில்லு வேஸ்ட்டாகுதுல்ல.. அதுக்குத்தான் 15 ரூபா..?” என்றார். “அப்படீன்னு உங்க கம்பெனில ரூல்ஸ் இருக்கா..?” என்றேன். “ரூல்ஸெல்லாம் நாமளே வைச்சுக்குறதுதாம்பா..” என்றார். “சரி.. அதை உங்க கடைல போர்டுல எழுதி வைச்சிருக்கலாம்ல.. ஏன் வைக்கலை..?” என்றேன். “சரி.. இனிமே வைச்சுக்குறேன்..” என்றேன். “அப்போ நான் அடுத்தத் தடவை வரும்போது இதே மாதிரி கேன்ஸல் செஞ்சா, 15 ரூபாயை விட்டுக் கொடுக்குறேன்..” என்றேன்.
“இல்லப்பா.. முடியாதுப்பா.. தர முடியாதுப்பா..” என்றார். “நீங்க தரலேன்னா நான் உங்க கூரியர்ஸ் ஹெட் ஆபீஸ்ல இது பத்தி கம்ப்ளையிண்ட் செய்வேன்.. உங்க லைசென்ஸை கேன்ஸல் செய்யச் சொல்லி சொல்லுவேன்..” என்றேன் கோபத்துடன். “அட என்னப்பா நீயி.. புரிஞ்சுக்காத தம்பியா இருக்குற..? இப்போ என்னான்ற.. 10 ரூபா வேணும்ன்னு சொல்ற.. அவ்ளோதான..?” என்றார். “10 இல்ல 15...” என்றேன்.. “சரி... போனை அந்த பொண்ணுகிட்ட கொடு...” என்றார். கொடுத்தேன். ஏதோ சொல்ல.. போனை வைத்துவிட்டு 45 ரூபாயையும் திருப்பிக் கொடுத்தார் அந்தப் பெண்.
கிளம்பும்போது “கேன்ஸல் செய்தால் 5 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்னு போர்டு எழுதி வைங்க.. 15 ரூபாயெல்லாம் ரொம்ப டூ மச்..” என்று சொல்லிவிட்டு வந்தேன்..!
பொதுவாக கூரியர் அனுப்பவர்கள் கேன்ஸல் செய்வது அரிதிலும் அரிதுதான்.. கேன்ஸல் செய்யாமல் அதில் எதையாவது மாற்றி வைத்துவிட்டோம். அல்லது வைக்க மறந்துவிட்டோம் என்று சொல்லி வாங்கி அதை சரி செய்து கொடுப்பார்கள். இதைத்தான் பார்த்திருக்கிறோம்..
அனுப்ப தேவையில்லாதது என்றால் போஸ்ட் ஆபீஸில்கூட வாங்க முடியாது.. கூரியரில் வாங்கும் வசதி இருப்பதால் 5 ரூபாய் எடுத்துக் கொள்ளலாம். தப்பில்லை. 15 என்பது கொள்ளையில்லையா..?
இத்தனைக்கும் புரொபஷனல் கூரியர்ஸ் அலுவலக நடைமுறையில் இது போல எதுவும் சொல்லப்படவில்லையாம்.. லோக்கல் ஏஜெண்ட்டுகள் இவர்களாகவே வைத்துக் கொள்கிறார்கள் விதிமுறைகளை..! எதையும் தயங்காமல் தைரியமாக உறுதியுடன் கேட்டால் கிடைக்கும்தான்..!
|
Tweet |
6 comments:
One more thing, neenga adichu pidichu post anupa venam. IT dept has given 120 days to send that post. :) last year I missed the 120 days cutoff. They again want to file for late and again asked to send in 120 days.
அண்ணே! ஒரு நிறுவன ஊழியரின் உழைப்பின் நேரம்,கேன்சல் செய்த ரசீதுக்கான செலவு என 15 ரூபாய் பிடித்தம் செய்தது சரியே.
கூடவே தபால் மூலமாகத்தான் அனுப்ப வேண்டும் என்ற உங்களின் அறியாமைக்கும் சேர்த்து 10 ரூபாய் தண்டனை கொடுக்க வேண்டும்.
courier job kastam' theriyuma ;'nee ' seis-thu, 'thppu' nee oru dubukkoore; courier job; no man power youth don't like it
***courier job kastam' theriyuma ;'nee ' seis-thu, 'thppu' nee oru dubukkoore; courier job; no man power youth don't like it***
What are you trying to say?? Courier job might be hard but understanding your "taminglish" response is certainly harder than that! lol
அண்ணாச்சி!
அதென்ன 5 ரூபாய்தான் உங்க தவறுக்கு சரியான அபதாரத் தொகைனு சொல்றீங்க? யாரு அதை நிர்ணயித்தது? உங்கப்பன் முருகனா??? இல்ல அவன் அண்ணன் கணேசனா???
ஒரு 10 ரூபாயவது கொடுத்துட்டு வந்திருந்தா உங்களை கொஞ்சமாவது மதிக்கலாம்! :)))
அஞ்சி ரூபாயைக் கொடுத்துட்டு வந்துட்டு பஞ்சாயத்தைக் கூட்டிக்கிட்டு..
Post a Comment