சிநேகாவின் காதலர்கள் சினிமா விமர்சனம்

21-08-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
பிரமாண்டமும், பெரிய நடிகர்களும்தான் படத்தின் வெற்றிகளுக்குக் காரணமோ என்று நினைத்து மருகிக் கொண்டிருந்த வருங்கால இயக்குநர்களுக்கு, இந்தப் படத்தின் மூலமாக ஒரு நம்பிக்கையை ஊட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அண்ணன் முத்துராமலிங்கன்.
முதற்கண் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான கலைக்கோட்டுதயம் அவர்களுக்கு நமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வோம்.. முத்துராமலிங்கன் என்கிற ஒரு மனிதரை மட்டுமே நம்பி துணிந்து ஒரு படத்தைத் தயாரித்து.. அதையும் பேர் சொல்லும் படமாக உருவாக்கியிருக்கிறார் என்றால் நிச்சயம் இவரது முயற்சி பாராட்டுக்குரியது..
கதையை மட்டுமே நம்பி முத்தண்ணன் களத்தில் இறங்கி சாதித்திருக்கிறார்.. இதுவரையில் அவர் எழுதிய சினிமா விமர்சனங்களுக்கெல்லாம் சேர்த்து வைத்து பதிலடி கொடுக்கவே ஒரு டீம் இங்கே தயாராக இருந்தது. அது அத்தனைக்கும் வேலையே இல்லாமல் செய்துவிட்டார் முத்தண்ணன். சாதாரண ஒரு கதைதான்.. அதை விரிவுபடுத்தியவிதம் ஒரு திரில்லர் படம்போல விறுவிறுப்பாக ரசிக்கும்படியாக இருந்தது..!


சிநேகா என்ற ஹீரோயினின் ‘ஆட்டோகிராப்’தான் படத்தின் கதை.. இதுவரையில் ஆண்களுக்கான ‘ஆட்டோகிராபை’த்தான் நிறைய படங்களில் பார்த்திருக்கிறோம். இது பெண் ‘ஆட்டோகிராப்’. பல ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபிரியா நடிப்பில், ருத்ரையாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘அவள் அப்படித்தான்’ படத்திற்கு பின்பு ‘பெண்ணிய பார்வையில் காதல்’ என்கிற தலைப்பு இந்தப் படத்திற்குத்தான் பொருந்தும். இத்தனைக்கும் அண்ணன் முத்தண்ணன் இலக்கியவியாதி அல்ல..
சிநேகா என்கிற பெண் திருமண வயதில் இருந்தும் அதற்குத் தயாராக இல்லாத நிலையிலும், தனது குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்காக பெண் பார்க்கும் படலத்தில் தலையைக் காட்டுகிறாள். வந்த மாப்பிள்ளையிடம் தனக்குத் திருமணத்தில் இஷ்டமில்லை என்று சொன்னாலும் அந்த மாப்பிள்ளையால் அவளை மறக்க முடியவில்லை.
அவர்கள் சந்தித்துப் பேசி நண்பர்களாகிறார்கள். அவனிடமே தனது வாழ்க்கையில் முன்பு நடந்த முதலிரண்டு காதல்களை பற்றிச் சொல்லிவிட்டு தற்போது அவள் வயிற்றில் கருவுடன் இருப்பதையும் சொல்லிவிட்டு அவனுடன் கொடைக்கானலுக்கு செல்கிறாள் அவளது மூன்றாவது காதலை உறுதி செய்ய..!!! அது உறுதியானதா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ்..
எந்தப் படத்தையும் காப்பி செய்யாத கதைதான்... சிநேகாவின் முதல் கல்லூரி காதல்.. அது உருவாகும்விதம்.. உருவாக்கிய பின் அது சிதறும் இடம்.. அதற்கான காரணங்களை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். இங்கே பெருமளவிலான காதல்கள் ஆண்களால் உருவாக்கப்பட்டு பெண்களால் வளர்க்கப்பட்டு ஆண்களாலேயே அழிக்கப்படுகிறது.
காதலிக்கிறோம் என்பதாலேயே பெண் தனது சுயத்தை இழந்து இப்போது தனது காதலனுக்காக வாழ வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதே ஒருவகை ஆணாதிக்கத்தனம்தான்.. ஆனால் இதை எந்தக் காதலனும் உணர்வதில்லை என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் அண்ணன்.
முதல் காதல் ஆணின் அடிமைத்தனத்தால் முறிந்தது எனில் இரண்டாவது காதல் அதற்கு நேரெதிராக ஒரு ஆணின் தோல்வியால் என்று காட்சிப்படுத்தியிருக்கிறார். இதையும் கடந்து மூன்றாவது காதலையும் தொட்டு சிநேகா அதில் வெற்றி பெறுவதென்பது ஆண்மையத்தன்மையுடைய தமிழ்ச் சினிமாவில் நிச்சயம் புதிதுதான்..
இரண்டாவது காதலின் தோல்வி இவளால் அல்ல.. ஆனால் அந்த காதலன் ஒரு சிறு தோல்வியைக்கூட தாங்கிக் கொள்ள முடியாத பக்குவத்தில் இருக்கிறான் என்பதை ‘நச்’ என்று காட்டியிருக்கிறார். இந்த எபிஸோடில், எத்தனையோ கதைகளை கைகளில் வைத்துக் கொண்டு ‘அது சரியில்லை.. இது சரியில்லை.. வேற கதை சொல்லுங்க’ என்ற தயாரிப்பாளர்களின் ரெடிமேட் பதில்களை எதிர்நோக்கி வருடக்கணக்கில் தங்களது எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டு காத்திருக்கும் துணை இயக்குநர்களின் அன்றாட அவல வாழ்க்கையையும் கொஞ்சம் தொட்டுப் பேசியிருக்கிறார் இயக்குநர்.
மூன்றாவது காதலை தைரியமாக சமீபத்தில் நடந்த தர்மபுரி இளவரசன் கதையோடு சம்பந்தப்படுத்தி எடுத்திருக்கிறார். மூன்றுவித காதல்களிலேயே இந்தக் காதல் எபிஸோடுதான் அருமை.. செருப்பு தைக்கும் இடத்திலேயே வந்து நின்று கொண்டு எங்கோ பார்த்தபடி காதல் வசனம் பேசுவதும்.. பதிலுக்கு செருப்பை தைத்துக் கொண்டே இளவரசன் பயந்து பயந்து பேசுவதுமான அந்தக் காட்சி ரம்மியமாக படமாக்கப்பட்டுள்ளது. இந்தக் காதல் எப்படி நடந்தேறிகிறது.. ஜாதி வெறியர்களால் முறியடிக்கப்படுகிறது என்பதையும் உண்மைத்தன்மையுடன் நம்பும்படியாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
ஹீரோயின் கீர்த்தி ரெட்டியின் மூக்கில் அந்த வளையம் போட்டாலும் அழகுதான்.. போடாவிட்டாலும் அழகுதான்.. முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் நடித்திருக்கிறார். அதிலும் அழகு வசனத்தை அதன் வீரியம் குறையாமல் வீசியிருக்கிறார். குருவி பாடல் காட்சியில் இவரது கொள்ளை அழகு தென்படுகிறது. உண்மையாகவே சிநேகாவுக்கு தங்கை போலத்தான் இருக்கிறார். இந்தப் படத்திற்கு பின் நிறைய படங்கள் கிடைக்கப் பெற்று தனது திறமையை இங்கே பறைசாற்றுவார் என்று நம்புகிறோம்..
காதலர்கள் மூவருக்கு சம அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்களும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள். இளவரசனாக வந்தவர் அதிக பாராட்டை பெறுகிறார்.. இவருக்கான காதல் காட்சி அழகாக இருப்பதால் இவரும் அதிகம் கவனப்படுகிறார்.. இயக்குநர் பாண்டியனாக நடித்தவர் மிக யதார்த்தமாக எதுவும் செய்யாமல் இயல்பாகவே வந்து போயிருக்கிறார்..
இவர்களையும்விட அதிகம் கவர்கிறார் பூங்காவில் அமர்ந்து கதை சொல்லும் மிமிக்ரி நடிகர் கணேஷ். அற்புதமான, கம்பீரமான குரல் வளம்.. அந்தக் கதையைச் சொல்லி முடித்தவுடன் ‘இதையும் எடுத்திட்டாங்களா?’ என்ற ஏமாற்றத்துடன் கேட்கும் அந்தக் கேள்வியில் எத்தனை, எத்தனை உதவி இயக்குநர்களை அடையாளம் காட்டுகிறார்..? அவருடைய இப்போதைய பரிதாப வாழ்க்கையையும், கடைசியில் காட்டியிருப்பதுகூட சினிமாவுலகத்தின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது..!
இனிமேல் இயக்குநர் கரு.பழனியப்பனுக்கு போட்டி நம்ம முத்தண்ணன்தான் என்று நினைக்கிறேன். பொதுவாக கரு.பழனியப்பனின் படத்தில்தான் அவரது வசனங்கள் படத்தையும் தாண்டி ரசிகனுக்காகவும் சொல்லப்படும் வசனங்களாக இருக்கும்.. இந்தப் படத்தின் வசனங்களும் அதேபோல் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.  பாராட்டுக்கள்ண்ணே..!
இரா.பிரபாகரின் இசையில் மூன்று பாடல்கள் முத்தானவை. ‘குருவி குருவி’ பாடல் ஏ ஒன்.. ‘மதுரை’ பாடலும் ரசிக்க வைத்தது..  ஏமாற்றமளித்தது பின்னணி இசைதான்.. இளவரசனின் மனைவி எரிக்கப்படும் அந்தக் காட்சியில்கூட பின்னணி இசை எங்களை எழுப்பவில்லை என்பதுதான் உண்மை. கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்தான்..!
குறைகள் இல்லாமல் இல்லை. இருக்கத்தான் செய்கிறது.. டிஜிட்டலில் படமாக்கியிருக்கிறார்கள் என்பதே தெரியாமல் எடுப்பதுதான் ஒளிப்பதிவு.. இங்கே முதல் ஷாட்டில் இருந்தே இது டிஜிட்டல் ஒளிப்பதிவு என்பதை பறைசாற்றிவிட்டது.. மற்ற டிஜிட்டல் படங்களெல்லாம் இப்படியில்லையே..? ஏன்..?
பட் பட்டென்று டிரெஸ் மாற்றுவது போல காதலர்களை மாற்றிக் கொண்டே செல்வது போல காட்சிகள் வந்து போவது ஹீரோயின் கேரக்டர் மீதான பெருமையைக் குலைப்பதாக இருக்கிறது.. சென்னையில் ஒரு பேட்டிக்காக வந்த இடத்தில் துணை இயக்குநருடன் காதல்.. கொடைக்கானலில் ஒரு பேட்டிக்கா போன இடத்தில் அங்கேயும் ஒரு காதல்.. என்று தொடர்வதுதான் ஹீரோயினின் கேரக்டர் ஸ்கெட்ச் மீதான தவறாகப்படுகிறது.
எப்படியும் சராசரி சினிமா போல முடிவாகிவிடும் என்று நினைத்த நேரத்தில் கடைசி 15 நிமிடங்களில் வெறுமனே இசையை மட்டுமே வைத்து நகர்த்தியிருக்கும் அந்த சஸ்பென்ஸ் முடிவு ரசிக்கும்படித்தான் இருக்கிறது. ஆனால் இளவரசன் செய்யும் அந்தக் கொலைக்குப் பின்பு என்ன நடக்கும்..? காதலர்கள் சேரலாம்.. ஆனால் காவல்துறை விடுமா..? என்ற கேள்வியும் எழுத்தான் செய்கிறது.
ஒரு சின்ன பட்ஜெட்டுக்குள் ஒரு வித்தியாசமான காதல் கதையை.. ஒரு பெண் சார்ந்த காதல் வாழ்க்கையை.. மிக சுவாரசியமாகச் சொல்லியிருக்கும்விதத்தில் புதுமுக இயக்குநர் அண்ணன் முத்துராமலிங்கன் தமிழ்ச் சினிமாவில் தனது வருகையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்..
இனியெல்லாம் அவருக்கு சுகமாக இருக்கட்டும்..!

0 comments: