21-08-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இந்தப் படத்துக்கு ஏன் இத்தனை எதிர்ப்பு..? இத்தனை கிண்டல்கள்.. நக்கல்கள் என்று தெரியவில்லை..!
இதற்கு முன் இதேபோல் எத்தனையோ கமர்ஷியல் கம்மர் கட்டுகள் வந்து போய்க் கொண்டுதான் இருந்தன. அப்போதெல்லாம் பேசாமடந்தையாக இருந்தவர்களெல்லாம் இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் பொங்கி எழுந்ததை பார்த்தபோது அண்ணன் சூர்யா நிறைய பேர் கண்களில் திருஷ்டியாக பட்டிருக்கிறார் என்பது புரிகிறது..!
வழக்கமான கமர்ஷியல் படம்தான்.. இது போன்ற படங்களின் வரிசையில் ஒவ்வொரு படத்திற்கும் அடுத்து வரும் படத்தில் ஏதாவது ஒரு வித்தியாசமான விஷயம் இருக்கும். இருக்க வேண்டும். இதுதான் கமர்ஷியல் உலகத்தின் அடிப்படை. அதுபோல் இதில் 2 முக்கிய விஷயங்கள்.. சமந்தாவின் அளவு கடந்த கவர்ச்சியும், வித்யூஜ் ஜம்வாலின் நல்ல டான் என்கிற இரண்டும்தான்..!
டான் கதை என்று வந்தால் அதை சென்னையில் வைத்து எடுக்க முடியாது. அப்படியெடுத்தால் தமிழ்நாடு இப்படியா இருக்கு என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்து அரசியலுக்குள் இழுத்துவிட்டுவிடுவார்கள் என்கிற முன் ஜாக்கிரதையினால் மும்பைக்கே தாவிவிட்டார் இயக்குநர் லிங்குசாமி.
‘பாட்ஷா’ ஸ்டைலில் மும்பையின் டான் வேலையை வஞ்சகமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் வித்யூத்தும், ராஜூ பாயும்.. ‘தளபதி’ ஸ்டைலில் பாசத்துடனும் இருக்கிறார்கள். இவர்கள் ஒரு நாள் இவர்களைவிட அதிக செல்வாக்குள்ள மனோஜ் பாஜ்பாயுடன் மோதிவிட.. மனோஜ் தனது செல்வாக்கால் வித்யூத்தை போட்டுத் தள்ளிவிடுகிறார். ராஜு பாயும் தாக்கப்பட்டுவிடுகிறார்.. உயிர் பிழைக்கும் ராஜு பாய், தனது உயிர் நண்பனை கொன்றவர்களை எப்படி பழி தீர்க்கிறார் என்பதுதான் இந்த ‘அஞ்சானி’ன் கதை. இதில் இன்னொரு சஸ்பென்ஸ் உள்ளது. அதைச் சொன்னால் நன்றாக இருக்காது என்பதால் விட்டுவிடுவோம்..!
சூர்யாவுக்கு இரட்டை வேடம்.. ஒன்றில் முரட்டு ராஜூபாயாக.. இன்னொன்றில் சாப்ட்வேர் கம்பெனி ஸ்டாஃப் மாதிரி கிருஷ்ணா.. இரண்டுக்கும் இரண்டு வித்தியாசங்கள்தான்… ஒன்று பல் குச்சியும், இடது புருவத்தின் நடுவில் காணாமல் போயிருக்கும் இத்தூணுண்டு முடியும்தான்..! கஷ்டமே படாமல் வேஷம் போட்டிருக்காருப்பா நம்ம அண்ணன்..!
டானாக நடித்துக் காட்டுவது ரொம்ப ஈஸிதான்.. இதில் ராஜூ பாய்.. அதே ஸ்டைலில் வருகிறார்.. நடக்கிறார்.. கொலைகளைச் செய்கிறார்.. சமந்தாவை மிரட்டுகிறார்.. மும்பை கமிஷனர் பொண்ணையே தூக்குகிறார்.. இத்தனையும் செய்துவிட்டு சமர்த்தாக மும்பையை வலம் வருகிறார்.. பாடல் காட்சிகளில் சமந்தாவுக்கு ஈடு கொடுத்து ஆடியிருக்கிறார்.. ‘சில்க் ஸ்மிதா கம்யூனிட்டி’ பாடல் காட்சியில் தெலுங்கு ரசிகர்களுக்கு வேண்டி தனி ஆவர்த்தனமே செய்து காட்டியிருக்கிறார் சூர்யா. ‘சிங்கம்’ படத்தின் காட்சிகளில் ஒன்றிரண்டு வரும்படியான அளவுக்கு, ஆக்சன் காட்சிகளில் நடிப்பையும் கொட்டியிருக்கிறார்.
இவரைவிடவும் அழுத்தமாக, அமைதியாக நடித்திருக்கிறார் ‘கிருஷ்ணா’ என்ற சூர்யா. கன்னியாகுமரியில் இருந்து கிளம்புவதில் இருந்து இறுதிவரையிலும் இந்த கிருஷ்ணா கேரக்டர் அடக்கமாக இருப்பதாலேயே படத்தில் சில இடங்களில் அமைதி பிறக்கிறது.. இந்த சஸ்பென்ஸினால்தான் படத்தை ரசிக்கவும் முடிந்தது.
சமந்தாவுக்கு தோல் நோய் எதுவுமில்லை என்பதை இந்த ஒரு படத்தை பார்த்தாவது அகில இந்தியாவும் தெரிந்து கொள்ளும் என்று நம்புகிறோம்.. ‘நான் ஈ’ படத்தில்தான் இவரது அழகை வெளிச்சம் போட்டுக் காட்டினார்கள். அதன் பின்பு தெலுங்கு படவுலகில் இவரது ஆட்டமும், அழகும் வெளிப்பட.. இப்போது தமிழிலும் ஸ்கிரினில் மிளிர்கிறார்.. ரசிக்க வைக்கிறார்..
அதற்காக இந்த அளவுக்கு ‘காண்பிக்க’ வேண்டுமா..? கவர்ச்சியைக் குறைக்கலாம்.. ‘எல்லாத்தையும்’ காட்டிட்டா, அப்புறம் அடுத்தடுத்த படங்கள்ல என்னத்த செய்வாராம்..? ஒரு துள்ளலோடு அந்தப் பாடல் காட்சியின் துவக்கத்தில் ஓடி வரும் சமந்தாவை பிடிக்காமலா போய்விடும்..?
'துப்பாக்கி' படத்தின் வில்லன் வித்யூத் ஜம்வால் இந்தப் படத்தில் இரண்டாவது ஹீரோவை போல வருகிறார்.. டப்பிங் வாய்ஸ் மட்டுமே ஒட்டவில்லை.. வேறு கனமான குரலை பேச வைத்திருக்கலாம். ஹோட்டல் அறையில் மனோஜ் பாஜ்பாய் ஆட்களுடன் மோதி வீழ்ந்த நேரத்தில், அவர் பேசும் வசனமும் அவரது கேரக்டருக்கு நல்லதொரு அழுத்தத்தைக் கொடுத்தது..
மனோஜ் பாஜ்பாய் வந்த சில காட்சிகளிலும் அழுத்தமாகத் தனது பெயரை பதிவு செய்திருக்கிறார். வித்யூத்தை முடித்து வைக்க வரும் காட்சியில் சோபாவில் அமர்ந்து கொண்டு அவர் காட்டும் அந்த ஒன் மேன் ஷோ.. அசத்தல் பாய்.. வெல்டன் பாய்..!
நட்புக்காக சூரி.. பெரிய நடிப்பில்லை.. ச்சும்மா காரில் வைத்து அப்படி போக.. இப்படி போக.. கதை முடிந்தது..
எப்போதும் லிங்குசாமியின் படங்களில் திரைக்கதையில் ஒரு உண்மைத்தனமும், வேகமும் இருக்கும். இதில் இந்த இரண்டுமே மிஸ்ஸிங்.. கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு வருவதற்கு 2 நாட்களாகும்.. அந்த 2 நாட்களும் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்தே வருகிறாராம் கிருஷ்ணா.. அதுவும் கன்னியாகுமரி ரயில்வே ஸ்டேஷனிலேயே குச்சியை ஊன்றிக் கொண்டு வருகிறார்.. யாரை நம்ப வைக்க.? எதற்கு இந்த குச்சி டிராமா..? மும்பை வந்தவுடன் செய்திருக்கலாமே..?
ராஜூ பாய் என்றவுடன் பலரும் பேதியான நிலையில் பேசுவது போல காட்சிகள்தான்.. ஆனால் ராஜூ பாய் செய்யும் காட்சிகளெல்லாம் ச்சும்மா உதார்தான்.. அதில் டேலண்ட்டுகள் இல்லை.. பயங்கரமில்லை.. தப்பித்தல்கள்தான் இருக்கின்றன.. கிருஷ்ணா தனது முகத்திரையைக் கிழிக்கும் காட்சியில்தான் சரி அடுத்த்து என்ன என்று கேட்கத் தோன்றியது.. மறுபடியும் கிருஷ்ணா “யார்ரா அவன்..?” என்று தேட ஆரம்பிக்க நமக்கு உஷ் என்றாகிவிட்டது..
மனோஜ் பாஜ்பாயை கடத்தி வந்தியாகிவிட்டது.. மிரட்டியாச்சு.. “பன்னி மாதிரி சுட்டுத் தள்ளிருவோம்…” என்று சவாலும் விட்டாச்சு.. இதுக்கப்புறமும் யார் வித்யூத்தை காலி செய்திருப்பார்கள் என்பதை மிகப் பெரிய டானாக இருக்கும் சூர்யாவின் மூளைக்குத் தெரிய வேண்டாமா..? இதையெல்லாம் கன்னியாகுமரி தியேட்டரில் படம் பார்ப்பவனே சொல்லிவிடுவானே..?
மூன்று பாடல்களுமே அப்போதைக்கு தாளம் போட வைத்தன.. ‘ஏக் தோ தீன்’ ஹிட்டுதான்.. ஆனால் அதை மியூஸிக் கச்சேரிகளில்கூட பாட மாட்டார்களே.. வேறு வார்த்தைகளா சிக்கவில்லை..? பின்னணி இசையில் ராஜூ பாயின் தீம் மியூஸிக் பரவாயில்லை ரகம்.. டானுக்கேற்ற இசை முழுமையாக இல்லை என்பதே உண்மை..
இத்தனையிருந்தும் படத்தில் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஒரு சின்ன தலைவலிகூட வரவில்லை என்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு. இது எப்படி சாத்தியமானது என்றே தெரியவில்லை.. லிங்குசாமிக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டே இதுதான்..
இந்தப் படத்தை பார்க்காதவர்கள்கூட படம் நல்லாயில்லை என்று கமெண்ட் போட்டு படத்திற்கு விளம்பரம் தேடிக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எமது நன்றி..!
தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒரு நடிகரையும், அவரது படத்தையும் விமர்சிப்பது எந்தவிதத்திலும் ஏற்கக்கூடியதில்லை.. அதற்குப் பதிலாக இதுபோல அவரவர் கருத்தை விமர்சனமாக எழுதுவதுகூட சரியானதுதான்..!
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் டியூப்லைட் அளவுக்கான ஒளியை எதிர்பார்க்கக் கூடாது.. அது அது, அது அது வேலையைத்தான் செய்யும்..!
|
Tweet |
2 comments:
நடுநிலையான விமர்சனம் .நன்றி .
"இந்தப் படத்தை பார்க்காதவர்கள்கூட படம் நல்லாயில்லை என்று கமெண்ட் போட்டு படத்திற்கு விளம்பரம் தேடிக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எமது நன்றி..!"
----அருமை ...அதிகமான வசூல் பெற்றுக்கொண்டிருக்கிறது என்று கூட வரும் ...ஆச்சரியம் இல்லை
துப்பாக்கி ,பில்லா 2 படத்தின் வில்லன் வித்யூத் ஜம்வால்....
(‘தலைவா’ படத்தின் வில்லன் வித்யூத் ஜம்வால் இந்தப் படத்தில் இரண்டாவது ஹீரோவை போல வருகிறார்.. டப்பிங் வாய்ஸ் மட்டுமே ஒட்டவில்லை.. வேறு கனமான குரலை பேச வைத்திருக்கலாம். ஹோட்டல் அறையில் மனோஜ் பாஜ்பாய் ஆட்களுடன் மோதி வீழ்ந்த நேரத்தில், அவர் பேசும் வசனமும் அவரது கேரக்டருக்கு நல்லதொரு அழுத்தத்தைக் கொடுத்தது..)
இதில் இன்னொரு சஸ்பென்ஸ் உள்ளது. அதைச் சொன்னால் நன்றாக இருக்காது என்பதால் விட்டுவிடுவோம்..! ///// தலைவா.. அந்த புதுமையான, யாராலயும் யூகிக்கவே முடியாத(?) சஸ்பென்ஸை எல்லாரும் முகநூல்ல எழுதி கிழிச்சு அறுந்து போயாச்சு. இப்ப நிதானமா ரகசியம் காக்கறீங்களே.. ஹா.. ஹா... ஹா..
Post a Comment